திருச்சியில் கள்ளர் சாதியைச் சேர்ந்த ஸ்ரீபிரியா பி.எட் படிக்கும் போது அறிமுகமான தலித் இளைஞரான பத்ரகாளியை காதலிக்கிறார். பின்னர் செப்டம்பர் 29ஆம் நாள் இருவரும் சேலத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் பத்ரகாளியின் சகோதரி வசிக்கும் மடத்துக்குளம் என்ற உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள ஊரில் வாழ்கின்றனர்.

கடந்த 4.11.09 புதன்கிழமை அன்று ஸ்ரீபிரியாவின் தந்தையான சீனிவாசனும், அவரது இரண்டு உறவினர்களும் மடத்துக்குளம் வருகின்றனர். மகளிடம் அவளது அம்மா நோய்வாய்ப்பட்டிருப்பதால் திருச்சிக்கு வந்து பார்க்குமாறு சீனிவாசன் கேட்டிருக்கிறார். இந்த சென்டிமென்டுக்கு பின்னால் சாதிவெறி இருக்கும் என்பதை யூகிக்க முடியாத அந்த அப்பாவிப் பெண் தனது கணவன் வந்ததும் முடிவு செய்வதாக கூறியிருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு தனது தந்தையின் சாதிவெறி மாறியிருக்கும் என்று அந்த பெண் மகிழ்ச்சியடைந்திருக்கலாம்.

பத்ரகாளியின் சகோதரி கணவர் சந்திரசேகர் கூறியபடி மகளை பார்க்க வந்த தந்தையும் இரண்டு உறவினர்களும் வெளியேறினர். சிறிது நேரம் கழித்து அந்த இரண்டு உறவினர்கள் மட்டும் திரும்பி வந்தனர். “எதற்கு திரும்ப வந்து தொந்தரவு செய்கிறீர்கள்” என்று சந்திரசேகரனது மனைவி ராணியும் பக்கத்துவீட்டுகாரரும் கேட்டிருக்கின்றனர். அந்த இரண்டு உறவினர்களில் ஒருவர் கத்தியைக்காட்டி மிரட்ட மற்றொருவர் ஸ்ரீபிரியாவைக் குத்திக் கொன்றார். கழுத்திலும், மார்பகத்திலும், வயிற்றிலும் குத்திக் கிழிக்கப்பட்ட ஸ்ரீபிரியா அங்கேயே துடி துடித்துக் கொல்லப்பட்டார்.

தற்போது சீனிவாசனும், அவரது உறவினர்களான ஆசைத்தம்பி, பண்ணாடி முதலியோர் கைது செய்யப்பட்டு 302 கொலை செய்தல் பிரிவின்படி வழக்கு பதியப்பட்டிருக்கிறது. தீண்டாமை வன்கொடுமையின் கீழ் போலிசார் வழக்குபதியவில்லை. (செய்தி: டைம்ஸ் ஆஃப் இந்தியா, 6.11.09)

திருமணம் முடிந்த உடனேயே ஸ்ரீபிரியாவின் பெற்றோர், உறவினர்கள் எல்லாம் சேர்ந்து இந்த புதுமணத்தம்பதியினரை மிரட்டி வந்தனர். இதற்காக பத்ராகாளியன் உறவினர்கள் போலிசிடம் சிலமுறை புகார் கொடுத்திருந்தனர். ஆனால் வழக்கம் போல போலிசு நடவடிக்கை எடுக்காமல் ஸ்ரீபிரியாவை அவரது தந்தையுடன் அனுப்ப பஞ்சாயத்து செய்தது. அதை அந்த பெண் மறுக்கவே அவரது தந்தையும், உறவினர்களும் ஆத்திரத்துடன் சென்றிருக்கின்றனர்.

முதலில் அவர்களுடைய திட்டம் பத்ரகாளியைக் கொல்வதுதான். ஆனால் அவர்கள் சென்ற  நேரத்தில் பத்ரகாளி இல்லாததால்  ஸ்ரீபிரியாவை மட்டும் கொடூரமாக கொன்றிருக்கின்றனர். அதுவும் மார்பகங்களை குத்தி கிழிக்குமளவுக்கு சாதிவெறி முத்தியிருந்தது.

கடந்த இருவருடங்களில் இதுபோல ஏழு கொலைகள் கலப்பு மணத்திற்காக நடந்திருக்கின்றன. தஞ்சை, திருச்சி முதலான மத்திய தமிழகத்தில் வாழும் கள்ளர் சாதியினர் தேவர் சாதி பிரிவில் ஒருவராவார்கள். பொதுவில் கடும் சாதிவெறி கொண்டதாகவே இந்த சாதியினர் நடந்து கொள்வார்கள். இந்த பகுதிகளில் எல்லா அரசியல் கட்சிகளிலும், ஏன் ரவுடிகளிலும் கூட இந்த சாதி மட்டுமே இருக்கும். தலித் மக்களை புழு பூச்சிகளாக பார்க்கும் மனோபாவம் இந்த சாதியின் இரத்தித்திலேயே கலந்திருக்கும் என்று கூட சொல்லலாம்

மற்ற எல்லாவற்றையும் விட தனது சாதிப்பெண்கள் தலித்துக்களை மணம் செய்வதை இந்த உலகத்திலேயே மிகவும் இழிவான செயலாக ஆதிக்க சாதி வெறியர்கள் கருதுகின்றனர். இதனாலேயே மகள் தாலியறுத்தாலும் பரவாயில்லை என தலித் மருமகன்களை கொல்கின்றனர். தனது சாதி பெண் கலப்பு மணத்தில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் அவளையும் கொல்வதற்கு அவர்கள் தயங்குவதில்லை.

சில ஆண்டுகளுக்கும் முன் விருத்தாசலத்தில் ஒரு வன்னிய பெண் தலித் ஆண் தம்பதியினர் கட்டிவைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். சென்ற ஆண்டு திருவாரூரைச் சேர்ந்த ஒருதலித் இளைஞன் கள்ளர் சாதி பெண்ணை மணந்ததற்காக அவளது அண்ணன்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இன்னும் வெளிச்சத்திற்கும், ஊடகங்களுக்கும் வராத செய்திகள் பல இருக்கும். இந்த பிரச்சினைகள் போலிசு தரப்பிற்கு வரும்போது அவர்கள் சமரசம்பேசி அந்த  திருமணங்களை ரத்து செய்து ஆதிக்க சாதியினரின் மனங்களை குளிர்விக்கவே முயல்கின்றனர். மாறாக அப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு பாதுகாப்பு தருவதில்லை. சமூகத்திலேயே ஆதிக்க சாதி கோலேச்சும் போது போலிசு மட்டும் விதிவிலக்கா என்ன?

இதுதான் தமிழகத்தின் உண்மையான முகம். இதுதான் தமிழக காதலர்களுக்கு உள்ள ஜீவாதாரமான பிரச்சினை. இதை வைத்தோ, அம்பலப்படுத்தியோ, ஆதிக்க சாதியினரை இடித்துரைத்தோ கதைகளோ, சினிமாவோ, தொலைக்காட்சி உரையாடல்களோ வருவதில்லை. மற்றபடி நடை, உடை, பாவனைகளை வைத்து எப்படி காதலிப்பது, கவருவது, கடலை போடுவது என்பதையே ஊடகங்கள் கற்றுத்தரும் பாடம்.

ஆதிக்க சாதி வெறி கிராமத்தில் மட்டும்தான் இருக்கும் நகரத்தில் இல்லை என்பதெல்லாம் மேம்போக்கான மதிப்பீடு மட்டுமே. இங்கே ஸ்ரீபிரியாவின் பெற்றோர் திருச்சியில்தான் வசிக்கின்றனர். கிராமங்கள் சூழ வாழும் நகரத்தில் மட்டும் சாதி புனிதமடைந்து விடுமா என்ன?

தலித் பெண்களை ஆதிக்கசாதி ஆண்கள் மிரட்டி பெண்டாளுவதெல்லாம் பிரச்சினை இல்லை. ஒரு ஆதிக்க சாதியின் திமிரான அந்த காமவெறியினால் சாதியின் புனிதம் கெட்டுவிடுவதில்லை. சொல்லப்போனால் அது பெருமையாக பார்க்கப்படுகிறது. தலித் பெண்களெல்லாம் அவர்களுக்கு படைக்கப்பட்ட சதைப்பிண்டங்களாக கருதப்படுகின்றனர். ஏனைய வேலைகளில் தலித் மக்களின் இலவச சேவைகளை பயன்படுத்தும் ஆதிக்க சாதி இந்த பெண்டாளுவதையும் ஒரு சேவையாக அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் திமிரில் செய்கிறது.

ஆனால் ஒரு ஆதிக்க சாதி பெண் மட்டும் ஒரு தலித்தை மணந்தால் அது சாதியின் கௌரவம் குலைந்த ஒன்றாக கருதப்படுகிறது. இவ்வளவு சமூக மாற்றத்திற்குப் பிறகும் ஆதிக்க சாதி வெறியர்கள் இந்த ‘கௌரவத்தை’ குலைக்கும் மணங்களை வாழவிடுவதில்லை. தமிழகம் முழுவதும் இதுதான் நீக்கமற நிரம்பியிருக்கும் சமூக யதார்த்தம். இதில் எந்தப்பகுதியும் விதிவிலக்கல்ல.

கல்வியும், வேலைகளும் சமூகமயமாகி வரும் வேளையில் இப்படி இருசாதிகளைச் சேர்ந்தோர் பழகுவதற்கும் காதல் வயப்படுவதற்கும் நிறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் எல்லா நவீன நுகர்பொருட்களோடும் வாழும் ஆதிக்க சாதி வெறியர்கள் இதை மட்டும் அனுமதிப்பதில்லை.

தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடும் டி.வி தொடர்களில் எதாவது இந்த உயிராதராமான பிரச்சினையை பேசுகிறதா?. வெற்றி பெற்ற காதல்படங்கள் இந்த வாழ்வா சாவா போராட்டத்தை பிரதிபலித்திருக்கிறதா? திறமை வாய்ந்த எழுத்தாளர்கள் எவராவது இதை நாவலாக எழுதியிருக்கிறார்களா? கேள்விகளை நிறைய இருக்கின்றன. ஆனால் பதிலென்னவோ ஒன்றுதான்.

நீங்க, வாங்க என்று பேசப்படும் கோவைத்தமிழின் உயர்ந்தபண்பாடு  குறித்தெல்லாம் அந்தப் பகுதியைச் சேர்ந்த பதிவர்கள் உயர்வாக பேசுகின்றனர். ஆனால் அங்குதான் அருந்ததி மக்களை நாயை விட கேவலாமாக நடத்தும் கொங்கு வேளாளக் கவுண்டர்களின் சாதி வெறி கோலேச்சுகிறது. தங்களது ஊரின் பழமைகளை மண்மணக்க பேசும் அந்த பதிவர்கள் எவரும் தமது பகுதிகளின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஏனென்றால் இவர்களும்  கூட சமூகயதர்த்தத்தின் உண்மைகளுக்கு முகங்கொடுப்பதாக இல்லை.

இப்படித்தான் ” இப்பெல்லாம் யாரு சார் சாதியை பார்க்குறாங்க” என்று நாகரீக நியாயம் பேசுபவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறோம். மார்பகங்கள் கிழித்து கொல்லப்பட்ட ஸ்ரீபிரியாவை இழந்து கதறிக்கொண்டிருக்கும் பத்ரகாளி ஊரோடு ஒத்து வாழ்ந்திருந்தால் இந்தப் பிரச்சினை இருக்காது என்று கூட அந்த நியாயவான்கள் பேசக்கூடும். அப்படி என்றால் இனி தலித் ஆண்கள் எந்த ஆதிக்க சாதி பெண்களையும் காதலிக்க கூடாது மீறீனால் மரணதண்டனை என்று ஒரு சட்டத்தை இயற்றிவிடலாம். அப்படி நடந்தால் தமிழகம் எந்த சாதி ‘மோதல்களும்’ இல்லாமல் அமைதிப்பூங்காவக திகழும்.

 

http://www.vinavu.com/2009/11/06/caste-killing/