இரண்டு அல்லது மூன்று நாள் விடுமுறையின் சிக்கல்கள் இரண்டு, ஒன்று சொந்த ஊருக்குப்போவதற்கு பேருந்தை பிடிப்பது. திருப்பூரில் விடுமுறை நாட்களிலும் திருமண நாட்களிலும் பேருந்தில் இடம் பிடிப்பதை விட ரேஷனில் சீமெண்னை வாங்குவது சுலபமானது.

இரண்டாவது பிரச்சினை ஊரில் உள்ள தொலைக்காட்சிப்பெட்டி. தோராயமாக ஒரு நாளில் ஆறு மணி நேரம் சீரியல் ஓடுகிறது எல்லா வீடுகளிலும். அவ்வப்போது பார்த்த வகையில் எல்லா நெடுந்தொடரிலும் ஒரே கதைதான் ஓடுவதாக தெரிகிறது. கதை என்கிற சமாச்சாரத்தில் யாரும் அவ்வளவு கவனம் செலுத்துவதில்லை என்பது வேறு விஷயம், ஆனாலும் ஒரே மாதிரியான காட்சிகளின் தொகுப்பாகத்தான் எல்லா தொடர்களும் இருக்கின்றன. ஒரே நடிகர் வெவ்வேறு தொடர்களில் ஒரே மாதிரி பாத்திரத்தில் நடிக்கிறார். நம் வீட்டு ஆட்கள் எப்படி அவர் பாத்திரத்தின் பெயர்களை சரியாக நினைவு வைத்திருக்கிறார்கள் என்பது ஆராயப்படவேண்டிய அதிசயம்.

தொடர்களும் இரண்டு வகையாக காணக்கிடைக்கின்றன. சிவனே என இருக்கும் கதாநாயகியை ஊரில் இருக்கும் பாதி பேர் பாடாய்ப்படுத்தி கதையை வளர்த்துவார்கள். இன்னோர் வகை கதாநாயகி கொஞ்சம் அதிரடி நாயகி, இவர்கள் ஊரில் உள்ள ஆட்கள் பாதி பேரின் பிரச்சனைகளை கவனிப்பதன் மூலம் கதையை கொண்டு செல்வார்கள். தன் அப்பா வயது கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடிக்க விருப்பமில்லாத முன்னாள் கதாநாயகிகளின் முதல் தேர்வு நெடுந்தொடர்தான் என்பது எல்லோரும் அறிந்ததுதான். அதிலும் தன் மகன் வயது ஆளுக்கு ஜோடியாக நடித்து தன் பழைய கதாநாயகர்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் தரும் பாக்கியம் சிலருக்குத்தான் கிடைக்கிறது.  ரம்யா கிருஷ்ணன்  தன் அத்தையை ‘அத்தை’ என விளிக்காவிட்டால் யார் யாருக்கு அத்தை என நமக்கு குழப்பம் வந்துவிடும்.

குழந்தைகளின் கொலைக்காட்சிசீரியல் கதாநாயகிகளை ஒரு சூப்பர்வுமனாக சித்தரிப்பதில் பெரும் வெற்றி கண்டவர் ராதிகா. அவரது சமீபத்து தொடர் ஒன்றில் அதன் அதிகபட்ச எல்லையை தொடுவதுபோல தெரிகிறது. காபிக்கு சர்க்கரை போடுவதில் தொடங்கி கல்யாணத்தை நிறுத்துவது வரை சகல விஷயங்களிலும் ராதிகாவின் கருத்தை எல்லோரும் பயபக்தியோடு ஆதரிக்கிறார்கள். முன்பு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான புராணத்தொடர்களில் வரும் கடவுளரைப்போல ஒரு மர்மமான புன்னகையோடு தொடர் முழுக்க வலம்வருகிறார் ராதிகா, தலைக்கு பின்னால் ஒரு ஒளி வட்டமும் ஆசீர்வாதம் செய்வது போல கைகளையும் வைத்திருந்தால் செல்லம்மா ஒரு அவதாரமாகத்தான் காட்சியளிப்பார்.

கதாநாயகி மற்றும் வில்லனை தவிர்த்து நெடுந்தொடரில் வரும் கதாபாத்திரங்களையும் இரு பிரிவுக்குள் அடக்கிவிடமுடியும். ஒன்று கொஞ்சம் வில்லன் சாயலில் இருக்கும் குரூப், கோள் மூட்டுவதும் கழுத்தை வெட்டி ஜாடை பேசுவதும் இவர்கள் அன்றாடப்பணி. செய்வினை வைப்பது மற்றும் சாப்பாட்டில் விஷம் வைப்பது மாதிரியான பணிகளையும் அவசியம் ஏற்படின் இவர்கள் மேற்கொள்வார்கள். இன்னொரு குழு கொஞ்சம் அப்பிராணி உறுப்பினர்களைக்கொண்டது. இவர்கள் எந்நேரமும் கதாநாயகியோடோ அல்லது கதாநாயகிக்காகவோ ஒப்பாரி வைத்தவண்ணமிருப்பார்கள். ஒப்பாரி வைத்த நேரம் போக மீதமிருக்கும் நேரத்தில் கதாநாயகியின் கஷ்டங்களையோ அல்லது பராக்கிரமங்களையோ மற்றவர்களுக்கு மறு ஒளிபரப்பு செய்வார்கள். நாயகியின் கணவனும் இந்த இரு பிரிவுகளின் ஒன்றின் கீழ்தான் அடங்குவார், எனவே கதாநாயகன் என ஒரு பாத்திரம் இங்கு கிடையாது.

தொடரின் கதைகளுக்கென்று சில விதிமுறைகள் உண்டு. அதாவது தொடரில் வரும் ஒரு குடும்பம் கூட மகிழ்ச்சியாக இருக்கக்கூடாது. ஒரு அதிர்ச்சிகரமான செய்திக்கு வீட்டில் உள்ள எல்லோரையும் குளோசப்பில் காட்ட வேண்டும். உதாரணமாக பாத்ரூம் குழாயில் தண்ணீர் வரவில்லை என்ற வசனம் சொல்லப்பட்ட பிறகு வீட்டு நாய்க்குட்டி உள்ளிட்ட சகல உறுப்பினர்களின் முகத்தையும் மாற்றி மாற்றி காட்டுவது அவசியம். கூடுதல் அதிர்ச்சியைக்காட்டும் காட்சிகளில் கேமராவை மேலிருந்து கீழ், கீழிருந்து மேல், இடமிருந்து வலம் மற்றும் வலமிருந்து இடமென நடிகரின் அல்லது நடிகையின் முகத்தை நோக்கி நான்கு திசைகளிலிருந்தும் வேகமாக திருப்பவேண்டும் ( ‘என்னது இரண்டு நாள் தண்ணீர் வராதா’ என்ற டயலாக்கிற்கு இந்த நுட்பத்தை பயன்படுத்தலாம் ).

சாதாரண  நிகழ்வுகளையும் உணர்வுபூர்வமாகத்தான் காட்ட வேண்டும், உடம்பு சரியில்லாத நபருக்கு சாப்பாடு ஊட்டுவதை நைட்டிங்கேல் அம்மையாரின் சேவைக்கு நிகரானதென நம்பும்படிக்கு காட்சி நீளமாக இருப்பதும் முக்கியம். கல்யாணமானவர்கள் ஆறு மாதத்திற்குமேல் சேர்ந்திருப்பது எந்த சீரியலுக்கும் அடுக்காது.

சித்தி தொடர் ஓடிய நேரத்தில் சென்னை ரங்கநாதன் தெருவில் கூட்டம் கணிசமாகக் குறைந்திருந்தது. மெட்டிஒலி தொடர் ஒளிபரப்பாகும் பொழுது வீட்டில் சேனல் மாற்றுவது கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டது. இப்போது நிலைமை அப்படி இல்லை என்றாலும் நெடுந்தொடர்கள் ஓயாமல் வீட்டில் ஓடியவண்ணமிருக்கின்றன. அடுத்து வரப்போகும் காட்சிகளை அனுமானிக்கும் அளவு வல்லமை பெற்ற பிறகும்கூட யாரும் நெடுந்தொடர் பார்ப்பதை நிறுத்தக்காணோம்.

என் கவலை பெரியவர்களின் சீரியல் மோகம் பற்றியதல்ல. வீட்டு குழந்தைகள் நம்முடன் சேர்ந்து தொடர்களைப்பார்க்கும் நிர்பந்தத்திற்க்கு ஆளாகிறார்கள். நான் பார்த்த பல சிறார்கள் தொடர்களின் கதையையும் பாத்திரங்களின் பெயர்களையும் நினைவு வைத்திருக்கிறார்கள். நயவஞ்சகம், முறைகேடான உறவு, ஆள் கடத்தல்,கொலை, பழி வாங்குவது என சமூகத்திற்க்கு ஆகாத செயல்கள் விதிவிலக்கில்லாமல் எல்லா நெடுந்தொடர்களிலும் நிரம்பிவழிகிறது. எல்லா வீடுகளிலும் நடக்கும் சம்பவங்களாக இவை தொடர்களில் காட்டப்படுகின்றன. குழந்தைகள் அடுத்தவர்களை பார்த்து அதேபோல செய்வதன் மூலம்தான் (இமிடேஷன் ) பெரும்பாலானவற்றை கற்கின்றன. ஐந்து வயது வரை டிவியில் வருவது நாடகம் என்பது அவர்களுக்கு தெரியாது, கண்ணில் தெரிவது எல்லாம் அவர்களுக்கு ஒரே மாதிரியானவைதான்.

எனவே சமூகம் பற்றிய  குழந்தைகளின் மதிப்பீடு சீரியலையும் உள்ளடக்கியதாகத்தான் இருக்கும்.குழந்தைகள் தங்கள் சுற்றத்தைப் பற்றி பெருமளவு கற்பது  முன்பள்ளிப்பருவம் வரையிலான காலம்தான். இப்படி இபிகோ வின் எல்லா சட்டப்பிரிவுகளின் கீழ் அடங்கும் அனைத்துக்குற்றங்களும் நிரம்பிய தொடர்களைப் பார்த்துக்கொண்டுதான் நம் குழந்தைகளின் ஆளுமை இப்போது வளர்கிறது. இது எதிர்காலத்தில் அவர்களின் வாழ்க்கை முறையில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனாலும் இது தொடர்பில் எந்த ஒரு ஆய்வும் இதுவரை செய்யப்படவில்லை.

நாம் எப்படி ? டிவியை நிறுத்திவைக்கப்போகிறோமா அல்லது ஆராய்சி முடிவுகள் வரும் வரை காத்திருக்கப்போகிறோமா ??

- வில்லவன்

http://www.vinavu.com/2009/11/05/massacre-of-childhood/