கீழ்க்காணும் துண்டுப்பிரசுரம். பாரிசில் நடந்த கலைநிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் கொடுக்கவும் உள்ளோம். அண்மையில் சுவிஸ்சில் கொடுத்த துண்டுப்பிரசுரம் உட்பட பலவற்றை தொடர்ந்து மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல உள்ளோம். இதன் பி.டி.எவ் பிரதி தனியாக இணைப்பில் இணைக்க உள்ளோம். அதை பல மட்டத்தில் எடுத்துச் செல்லுமாறு கோருகின்றோம்.
மனித உணர்வுக்கு நாங்கள் மதிப்பளிக்காத வரை………
தமிழ் மக்களுக்கு தொடர்ந்து நாங்கள் சவக்குழியைத்தான் வெட்ட முடியும். கடந்த காலத்தில் அதை செய்து முடித்த பெருமை எங்களைச் சாரும். மனித உணர்வுகளை மறுத்து, அவற்றை சவக்குழிகளில் தோண்டிப் புதைத்தவர்கள் நாங்கள். இதுவே எம் கடந்தகால வரலாறாகிவிட்டது.
நாங்களோ மந்தைகளாக இருந்தோம். இதனால் எம்மினம் இன்று அடிமைகளாக்கப்பட்டுள்ளனர். இன்னமும் எம்மால் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை.
ஆம்… எம்மிடம் வீரம் இருந்தது. தீரம் இருந்தது. ஆயுதம் இருந்தது. ஆட்படை இருந்தது. தரைப் படை, கடற்படை, ஏன் வான்படை கூட… இருந்தது! போதிய அளவுக்கு பொருள் செல்வம் இருந்தது. புகலிட மக்களின் கண்மூடித்தனமான வழிபாட்டு ஆதரவும் இருந்தது. அவர்கள் சொட்டிய இரத்தத் துளிகளோ பாரிய ஆயுதக் குவியல்களாக மிதந்தன! பெருமைப்பட்டுக் கொண்டோம். அனைத்தையும் மீறியும் இருந்தது தியாகம். சில பத்தாயிரம் இளைஞர் யுவதிகளின் தியாகம்! இலட்சக்கணக்கில் எமது மக்களை! நாங்கள் தியாகிகள் ஆக்கியிருக்கின்றோம்!
இருந்தும் இன்று ஏதுமற்ற ஏதிலிகள் ஆக்கப்பட்டிருக்கிறோம். சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாகிவிட்டது எமது வாழ்வு! நதிகள் ஒருபோதும் பின்நோக்கிப் பாய்வதில்லை. வரலாறு ஒருபோதும் பின்நோக்கி நகர்வதில்லை! இருப்பினும் எமது வரலாறு பல பத்தாண்டுகள் பின்நோக்கிச் சென்றுவிட்டதே! ஏன்..?
சிந்திக்க வேண்டிய நேரமிது! ஆழமாக…. மிகக் கடுமையாக!
மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தவறினோம்! சக மனிதரின் கருத்துக்களை மறுதலித்தது மட்டுமல்ல, மறுதலித்தவனுக்கு சவுக்கடியும் கொடுத்தோம்! சவக்குழியும் தோண்டினோம்! நண்பர்களை! எதிரிகள் ஆக்கினோம்! ஒட்டுமொத்தமாக ஜனநாயகத்தையும்; குழிதோண்டிப் புதைத்தோம்!
இதை யார் செய்தார் எவர் செய்தார் என்பதல்ல இன்றைய பிரச்சனை. தனி மனிதனோ அல்லது குழுவோ யார் செய்திருந்தாலும் சமூகம் என்ற வகையில் தட்டிக்கேட்கத் திராணியற்று இருந்தோம். அதையே பேர் விருட்சமாக வளர அனுமதித்தோம்! அந்த வகையில் இன்றைய விளைவுகள் அனைத்துக்கும் சமூகமாகிய நாங்களே முழுமையான பொறுப்பு!
இப்படி பொறுப்பற்ற எமது 30 வருட செயல்களால், மக்களின் உணர்வுகள் மறுதளிக்கப்பட்டது. இதன் விளைவையே இன்று எம் இனம் சந்திக்கின்றது. தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட ஆயிரம் புறக்காரணங்கள் இருந்தன என்பது உண்மை. இருந்தும், இவை மட்டும் எம்மினத்தை தோற்கடிக்கவில்லை. தமிழ் மக்களை போராட்டத்தின் பெயரில் நாங்களே தோற்கடித்ததன் விளைவுதான், புறநிலையான ஆயிரம் காரணங்களும்; இலகுவாக வெல்ல முடிந்தது. நாங்களோ மந்தைகளாக இருந்தோம் என்றால், மந்தைகளாக வாழ நிர்ப்பந்திக்கவும் பட்டோம்.
உனது கருத்தையும், எனது கருத்தையும் கேட்க யாரும் இருக்கவில்லை. இதைச் சொல்லும் உரிமை உனக்கும் எனக்கும் மறுக்கப்பட்டு இருந்தது. தமிழ் மக்களின் இந்தத் தோல்வியை தடுக்க, ஆயிரம் சிறப்பான மாற்று ஆலோசனைகள் உன்னிடம் என்னிடம் இருந்தது அல்லவா! இதை யார் கேட்டார்! யாரிடம் தான் சொல்ல முடிந்தது!
இதனால் தான், எம் இனம் அழிக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டு விட்டது. இது இன்று உனக்கும் எனக்கும் தெரிந்த ஒரு உண்மையல்லவா. இதை தடுக்கும் ஆற்றலும், அறிவும் உன்னிடம் இருக்கவில்லையா!? அதைச் சொல்லவும், செய்யவும், எது உன்னையும் என்னையும் தடுத்தது!? இதை இன்று நீ மாற்றிவிட்டாயா?
இந்த நிலைமை ஏற்பட்டதற்கு, உனக்கும் எனக்கும் கூட தார்மீகப் பொறுப்பு உண்டு. எங்களை மந்தைகளாக நடத்தியவர்கள் ஒருபுறம். மறுபக்கத்தில் மந்தைகளாக நடந்தவர்கள் நாங்கள்.
இப்படி நாம் எம்மினம் அடிமையாக, நாங்களும் ஒரு விதத்தில் காரணமாகிவிட்டோம்.
இனி என்ன செய்வது!?
ஐயோ என்று ஓப்பாரியா! எதுவும் செய்ய முடியாது என்று விரக்தியா! தொடர்ந்து மந்தைகளாக நடப்பதா!
இப்படி எண்ணும் உன் எண்ணத்தை மாற்று. இதில் இருந்தும் சுதந்திரமான ஒரு மனிதனாக வாழக் கற்றுக்கொள். அப்படி வாழ்ந்தபடி, எம் மக்களுக்கு நடந்தது என்ன என்பதைப் பற்றி ஒருகணம் சிந்தி.
நீயோ, நானோ, மிருகங்களல்ல. பகுத்தறிவுள்ள மனிதன். தனி மனிதர்கள் அல்ல. கூட்டாக கூடி இயங்கும் ஆற்றல் உள்ளவர்கள்.
உன் உணர்வும், என் உணர்வும் எம்மக்களைச் சார்ந்து ஒன்று தான். மற்றவன் உரிமைக்கு எதிராக நாம் இருக்காத வரை, நானும் நீயும் எதிரியல்ல. குறைந்தபட்சம் நாங்கள் மனிதர்கள்.
இன்றைய எமது கடமை
மனிதன் மீதான அரக்கத்தனங்கள் மீண்டும் ஒருமுறை மீள் உயிர்ப்புப் பெறுவதைத் தடுப்பதே!
முதலில், எனதும் உனதும் உணர்வையும் உணர்ச்சியையும் மதிக்கும் ஜனநாயகத்தை நேசி! இதன் மூலம் எமக்கிடையில் ஐக்கியத்தை உருவாக்கு! மக்களுக்காக ஒன்றுபட்டு நில்!
இதற்கு எதிரான அனைத்துப் போக்குகளையும் நிராகரித்து நில்! இதுதான் மாற்றத்திற்கான முதற்காலடி.
புகலிடச் சிந்தனை மையம்
01.11.2009
தொடர்புக்கு :