கொழும்பு நகர சாலை அன்றும் வழக்கம் போல வாகன நெரிசல்களுக்குள் சிக்கித் திணறிக் கொண்டிருந்தது. சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்த வாகனங்களுக்கு முன்னால் ஒரு வெள்ளை நிற 'வான்' பாதையை மறித்த படி நிற்கின்றது. வானில் இருந்து முகமூடியணிந்த நபர்கள் துப்பாக்கிகளுடன் குதிக்கின்றனர்.

பின்னால் நிற்கும் கார் சாரதியை பலவந்தமாக பிடித்திழுத்து வானுக்குள் திணிக்கின்றனர். "நீங்கெல்லாம் போங்க..." பிற வாகன ஓட்டுனர்களுக்கு உத்தரவிடுகின்றனர். கடத்தப்பட்ட நபருடன் வெள்ளை வான் அங்கிருந்து ஓடி மறைகின்றது. இவையெல்லாம் கண்ணிமைக்கும் பொழுதில் நடந்து முடிந்து விட்ட சம்பவங்கள். கடத்தப்பட்டவர் ஒரு பொலிஸ் அதிகாரியின் உறவினர் என்பதால், அந்த நபரின் அடையாளம் பின்னர் தெரிய வந்தது. வெள்ளை வானில் வந்தவர்கள் யார்?


வன்னியில் போர் ஓய்ந்து மாதக் கணக்கு கூட ஆகியிருக்கவில்லை. தென்னிலங்கையில் வேறொரு போர் ஆரம்பமாகியிருந்தது. "பாதாள உலகத்திற்கு" எதிரான போர் என்று ஊடகங்கள் பெயரிட்டிருந்தன. ஜூலை மாதம் மட்டும் கொழும்பு நகரின் பல பகுதிகளில் ஐந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. கொல்லப்பட்டவர்கள் யாரும் சாதாரணர்கள் அல்ல. எந்த சக்தியாலும் நெருங்க முடியாது எனக் கருதப்பட்ட கிரிமினல் பாதாள உலக குழுக்களின் தலைவர்கள். சட்டவிரோத சாராய விற்பனை, போதைவஸ்து கடத்தல், விபச்சார விடுதிகள் போன்ற சமூகவிரோத செயல்களால் செல்வம் சேர்த்துக் கொண்டிருந்த மாபியாக்களை நீண்ட காலமாக யாராலும் அசைக்க முடியவில்லை. சாதாரண மக்கள் நிலம் வாங்குவதற்கு கூட அந்த ஏரியா தாதாவுக்கு கப்பம் கட்ட வேண்டியிருந்தது. அவர்களை எதிர்க்க முடியாது. "கேட்பதைக் கொடுத்து விட்டு போங்கள்" என்ற அறிவுரை காவல்துறை தரப்பில் இருந்தும் வழங்கப்பட்டது.

 

"குடு லால்" என்ற பெயர் தசாப்தகாலமாக தென்னிலங்கையில் பிரபல்யம். சிங்கள மொழியில் குடு என்றால் போதைவஸ்து என்று அர்த்தம். போதைவஸ்து கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த குடுலாலுக்கு அரசியல் செல்வாக்கும் இருந்தது. இதனால் "வியாபாரம்" எந்தத் தடையுமின்றி கொடிகட்டிப் பறந்தது. கொழும்பு வாழ் மக்களுக்கு பரிச்சயமான வேறு பல தாதாக்களும் இருந்தனர். நிறுவனமயப்பட்ட கிரிமினல் குழுக்கள் "பாதாள உலக கோஷ்டி" என்று அழைக்கப்பட்டது. இத்தாலி மாபியாக்களைப் பற்றிய தகவல்கள் இலங்கையை வந்தடையாத காலம் அது. அதனால் ஊடகங்களும் அப்படியே அழைக்கவாரம்பித்தன.

 

எழுபதுகளின் இறுதியில் ஆட்சிக்கு வந்த யு.என்.பி. கட்சி தாராள பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இந்த நவ-லிபரலிச கொள்கையானது ஒரு புறம் சட்டபூர்வமாக கொள்ளையடிக்கும் பெரு முதலாளிகளுக்கும், மறுபுறம் சட்டவிரோதமாக கொள்ளையடிக்க மாபியாக் குழுக்களுக்கும் வழி திறந்து விட்டது. அன்றைய மேற்குலக சார்பு ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, இலங்கை சந்தையை சர்வதேச முதலீட்டாளருக்கு திறந்து விடுவதையே குறிக்கோளாக கொண்டவர். பொருளாதார சீர்திருத்தத்தின் பக்கவிளைவான பாதாள உலகங்களின் வளர்ச்சி குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால், பாதாள உலக கோஷ்டிகளின் உதவி யு.என்.பி. அரசுக்கு இன்றியமையாததாக இருந்தது. எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்களை மிரட்டுவது, பணியமறுத்தால் கொலை செய்வது போன்ற சட்டவிரோத செயல்களுக்கு பாதாள உலகக் கோஷ்டி தேவைப்பட்டது.

 

சைக்கிள் செயின்கள் சகிதம் ஏரியாக்களை கட்டுப்படுத்திய தாதாக்களுக்கு அஞ்சிய மக்கள் வாய் திறப்பதில்லை. ஒரு தடவை, கண்டி நகர் மத்தியில், பட்டப்பகலில் இனந்தெரியாத நபர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டது. அந்த சம்பவத்தை நேரே பார்த்த மக்கள் யாரும் சாட்சி சொல்ல முன்வரவில்லை. ஏனெனில் "இது பாதாள உலக கோஷ்டி விவகாரம்" என்று மக்கள் ஒதுங்கிக் கொண்டனர். பாதாள உலக கோஷ்டிகளுக்கு அரச மட்டத்தில் செல்வாக்கு இருந்ததால் யாரும் எதுவும் செய்ய முடியாத நிலை. இலங்கையில் மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கும் இரு பெரும் கட்சிகளுக்கும் பாதாள உலக தொடர்புண்டு. பாதாள உலக கோஷ்டிகளோடு தொடர்பு வைத்திருந்த அரசியல் பிரமுகர்கள் சிலர் அரச உயர்பதவிகளை வகித்துள்ளனர். காலஞ்சென்ற ஜனாதிபதி பிரேமதாச, இன்றைய ராஜபக்ஷ அரசில் அமைச்சராக இருந்த மேர்வின் சில்வா வரை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இவர்களுக்கும், பாதாள உலகத்திற்கும் இடையிலான தொடர்பு ஊரறிந்த இரகசியம்.

 

இலங்கையின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்றிய ஜே.ஆர். ஜெயவர்த்தன, தனது கட்சியில் தனக்குப் பின்னான வாரிசை அறிவிக்க சிரமப்பட்டார். மேலை நாட்டு கல்வி கற்ற மூத்த அரசியல்வாதிகளான காமினி திசாநாயக்க, லலித் அத்துலத்முதலி ஆகியோரால், பிரேமதாசாவுடன் வாரிசு உரிமைக்காக போட்டியிட்டனர். இரண்டாந்தரப் பாடசாலைக் கல்வியைக் கூட பூர்த்தி செய்யாத பிரேமதாசா, கட்சிக்குள் முதலாவது இடத்திற்கு வருவதற்கு பாதாள உலக தொடர்பு காரணம் என்றால் அது மிகையாகாது. பாதாள உலக அடியாட்படை வைத்துக்கொண்டு அரசியல் நடத்திய ஜே.ஆருக்கும் பிரேமதாச இன்றியமையாத சிஷ்யனாக தோன்றினார். பிரேமதாசா ஆட்சிக்கு வந்த பின்னர், லலித் அத்துலத்முதலி மர்மான முறையில் சுடப்பட்டு இறந்தார். அந்த அரசியல் படுகொலைக்கு பிரேமதாசாவே காரணம் என்று மக்கள் பேசிக் கொண்டனர். சில வருடங்களுக்கு பின்னர் மற்றொரு போட்டியாளரான காமினி திசாநாயக்க ஒரு தற்கொலைக் குண்டுதாரியினால் கொல்லப்பட்டார்.

 

பாதாள உலக கோஷ்டிகளை, அரசு எந்த அளவு திறனோடு கையாளலாம் என்பதை, பிரேமதாசா ஆட்சிக்காலம் நிரூபித்தது. அதுவரை ஒரு சில தென்னமெரிக்க நாடுகளில் மட்டுமே காணப்பட்ட, அரச அங்கீகாரம் பெற்ற கொலைப்படைகள் அமைக்கப்பட்டன. காவல்துறையை சேர்ந்த கொலைக்கு அஞ்சாத சிலரும், பாதாள உலக கிரிமினல்களையும் சேர்த்து துணைப்படை ஒன்று அமைக்கப்பட்டது. அதற்கு "பச்சைப் புலிகள்" என்று நாமம் சூட்டப்பட்டது. யு.என்.பி. கட்சியின் வர்ணம் பச்சை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய பச்சைப்புலிகளின் தலையாய கடமை, அரசின் எதிரிகளை தேடி அழிப்பது. அன்று ஜே.வி.பி. தலைமறைவு இயக்கமாக இயங்கிக் கொண்டிருந்தது. அரசுக்கெதிரான ஆயுதமேந்திய கிளர்ச்சியை நடத்திக் கொண்டிருந்தது. அரசாங்க அதிகாரிகள், ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்கள் பலருக்கு ஜே.வி.பி. "புரட்சியின் பெயரால்" மரண தண்டனை நிறைவேற்றிக் கொண்டிருந்த காலம் அது.

 

ஜே.வி.பி.யின் தாக்குதல்களால் அரச இயந்திரம் நிலைகுலைந்தது. கொலைப்பயமுறுத்தல் காரணமாக ஆளும்கட்சியில் இருந்து பலர் பதவியை இராஜினாமா செய்து கொண்டிருந்தனர். பல அரசியல் கொலைகளுக்கு ஜே.வி.பி. நேரடியாக உரிமை கோரவில்லை. "தேசபக்தர்கள்" என்ற பெயரில் உரிமை கோரும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. "பயங்கரவாதத்தை பயங்கரவாதத்தால் அழிப்பது" என்று கொள்கை வகுத்துக் கொண்ட பிரேமதாச அரசு, பச்சைப் புலிகள் என்ற இரகசிய கூலிப்படையை ஏவி விட்டது. ஜே.வி.பி. உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் எல்லோரும் பச்சைப் புலிகளின் கொலைவெறியாட்டத்திற்கு தப்பவில்லை. தலைமறைவு ஜே.வி.பி. உறுப்பினரான நண்பரோடு வீதியில் பேசிக் கொண்டிருந்த அப்பாவிகளும் கொலை செய்யப்பட்டனர். வீதிகளில் உரிமை கோரப்படாத சடலங்கள் டயர் போட்டு எரிக்கப்பட்டன. ஒரு சில அரசியல் கொலைகளுக்கு, ஜே.வி.பி. பாணியில் பச்சைப் புலிகளும் உரிமை கோரும் துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர்.

 

மனித உரிமை நிறுவனங்களின் செயற்பாடுகள் அதிகம் அறியப்படாத காலம் அது. பச்சைப் புலிகளின் கொலைவெறிக்கு இலக்கான ரிச்சார்ட் டி சொயிசாவின் மரணத்துடன் அந்த நிலைமை மாறியது. ஜே.வி.பி. ஆதரவாளரான ரிச்சார்ட் டி சொய்சா மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த வழக்கறிஞர். சமூகத்தில் மேல் மட்டத்தில் இருந்ததால், ரிச்சார்ட்டின் தாயாருக்கு மனித உரிமை ஸ்தாபனங்களின் உதவியைப் பெற முடிந்தது. வெளிநாட்டு தலையீட்டால் நடத்தப்பட்ட விசாரணையில், அரசு, பச்சைப் புலிகள், பாதாள உலகம் இந்த மூன்றிற்கும் இடையிலான முக்கோண கூட்டு பற்றிய தகவல்கள் வெளியாகின. இருப்பினும் என்ன? ஆயிரக்கணக்கான மக்களின் கொலைகளுக்கு காரணமான யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. ஜே.வி.பி. கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட பின்னர், பாதாள உலக கோஷ்டிகள் “வழக்கமான தொழிலுக்கு" திரும்பி விட்டன.

 

அடுத்து வந்த ஈழப்போர் காலத்தில் அரசின் கவனம் முழுவதும் வட-கிழக்கு போர்க்களத்தில் குவிந்திருந்தது. பொதுத் தேர்தலில் யு.என்.பி.தோற்கடிக்கப்பட்டு சந்திரிகா தலைமையில் சுதந்திரக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. மேற்கத்திய நாடுகளுக்கு வளைந்து கொடுத்துக் கொண்டிருந்த சந்திரிகா ஜனாதிபதியாக வீற்றிருந்த காலத்திலும், தாராள பொருளாதார கொள்கை தொடர்ந்தது. அதனால் மாபியா கோஷ்டிகளினால் கட்டுப்படுத்தப்பட்ட பாதாள உலக பொருளாதாரமும் தொடர்ந்தது. வட-கிழக்கு மக்கள் அரச படைகளின் மூர்க்கத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்த நேரம், தென்னிலங்கை மக்கள் பாதாள உலக கோஷ்டிகளால் பந்தாடப்பட்டுக் கொண்டிருந்தனர். அரசைப் பொறுத்த வரை, மக்களின் மற்றெல்லாப் பிரச்சினைகளையும் விட தேசப் பாதுகாப்பு மேலானதாகப் பட்டது. இதனால் பாதாள உலகக் காட்டில் மழை பெய்து கொண்டிருந்தது.

 

மே மாதம் ஈழப்போருக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக அறிவித்த இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போது, "தற்போது பாதாள உலகக் கோஷ்டியினருக்கு எதிராக போர்" நடப்பதாக தெரிவித்தார். தென்னிலங்கையில் நான்கு கொலைகள் நடந்ததாகவும். கொலைசெய்யப்பட்டவர்கள் பாதாள உலகக் கோஷ்டியை சேர்ந்தவர்கள் என்ற தகவலை மட்டும் தெரிவித்தார். இருப்பினும் அந்தக் கொலைகளை செய்தவர்கள் காவல்துறையை சேர்ந்த சிறப்புப் படையணி என்பதையும், ஜனாதிபதி அலுவலகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதையும் குறிப்பிடாமல் மறைத்தார். சுருக்கமாக சொன்னால், யாரோ "இனந்தெரியாதவர்கள்" செய்த கொலைகளை ஜனாதிபதி வரவேற்கிறார். ஆனால் தனக்கு அந்தக் கொலைகளுடன் சம்பந்தம் இல்லையென்கிறார்.

 

தென்னிலங்கையில் பாதாள உலகக் கோஷ்டிகளுக்கு எதிரான போர் நடப்பது உண்மை தான். கிழக்கு மாகாணத்தில் நிலை கொண்டிருந்த விசேட அதிரடிப்படையை சேர்ந்த பிரிவொன்று இதற்கென கொழும்பு வந்துள்ளது. இவர்களுடன் காவல்துறையின் பிரிவொன்றும் சேர்ந்து கொண்டு பாதாள உலகக் கோஷ்டியினரை குறி வைக்கின்றது. கிரிமினல் கோஷ்டித் தலைவர்களை கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளுகின்றனர். வெள்ளை வானில் வரும் இந்த விசேஷ படையணி, பாதாள உலகத்துடன் சம்பந்தமானவர்களை கடத்திச் செல்கின்றது. அத்தகைய சம்பவம் ஒன்றைத் தான், இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

 

ராஜபக்ச அரசு ஈழப்போர் முடிந்த கையோடு, பாதாள உலக கோஷ்டிகள் மீது போர் தொடங்கியத்திற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தலைநகரத்தில் புலிகளின் ஊடுருவல். யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் கொழும்பு நகரினுள் ஆயுதங்களை கடத்தி வந்து பதுக்கி வைக்கவும், தற்கொலைக் குண்டுதாரிகளை மறைத்து வைப்பதற்கும் பாதாள உலக கோஷ்டியினரின் உதவி நாடப்பட்டிருக்கலாம் என்பது அரச புலனாய்வுத்துறையின் குற்றச்சாட்டு. இதற்கென கோடிக்கணக்கான பணம் பாதாள உலகக் கோஷ்டியினர் ஊடாக கைமாறப்பட்டதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்தன. மேற்படி குற்றச்சாட்டின் கீழ் சில இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் கூட கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் புலிகளின் ஊடுருவலுக்கு வழிவகுத்த அரச மட்ட ஊழலின் பரம்பல் இன்னும் அதிகமாகமாக இருக்கலாம். தென்னிலங்கையில் அரசால் "தேசத் துரோகிகள்" என்று அழைக்கப்படும் சிங்கள நபர்கள் பலர் தினசரி கைது செய்யப்பட்டு வருகின்றனர். இத்தகைய செய்திகள் பல ஊடகங்களில் வருவதில்லை.

 

கிரிமினல்கள் சட்டத்திற்கு புறம்பான வகையில் சுட்டுக் கொல்லப்படுவதில், சாதாரண பொதுமக்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இருப்பதாக தெரியவில்லை. இந்தியாவில் நடக்கும் பொலிசின் "என்கவுண்டர் கொலைகளைப்" போல தோன்றினாலும், அந்தக் கொலைகளுக்கு பதில் கூற பொலிஸ் நிர்வாகம் கடமைப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையில் நிலைமை வேறு. வெள்ளை நிற வண்டியில் சிவில் உடையில் வரும், "இனந்தெரியாதவர்கள்" செய்யும் கொலைகளுக்கு யாரும் பொறுப்பு எடுப்பதில்லை. கொல்லப்படுபவர்கள் பாதாள உலகை சேர்ந்த கிரிமினல்கள் என்பதால், மக்களும், அரசியல்வாதிகளும், ஊடகங்களும் கவலைப்படுவதில்லை. எதிர்க்கட்சி பிரமுகர் மங்கள சமரவீரவை தவிர வேறெந்த அரசியல்வாதியும் "சட்டத்திற்கு புறம்பான கொலைகளை" கண்டிக்கவில்லை. தேசியவாத “ஐலன்ட்” பத்திரிகை கொலைகளை ஆதரித்தும், மேற்குலக சார்பு “சண்டே டைம்ஸ்” பத்திரிகை கண்டித்தும் எழுதி வருகின்றன.

 

பொதுவாக கிரிமினல்களுக்கு இன, மத அடையாளங்கள் தேவையாக இருப்பதில்லை. அரசின் சிறப்புப் படையணியால் சுட்டுக் கொல்லப்பட்டும் பாதாள உலக கோஷ்டிகளில் பெரும்பான்மை சிங்கள இனத்தை சேர்ந்தவர்களும், கணிசமான அளவு முஸ்லிம்களும் அங்கம் வகிக்கின்றனர். வியாபாரப் போட்டியின் நிமித்தம் அடிக்கடி கோஷ்டி மோதல்கள் இடம்பெற்றாலும், எந்தக் கோஷ்டியும் இனஃமத அடிப்படையில் பிரிந்திருக்கவில்லை. அது போல இவர்களின் அரசியல் விசுவாசமும் நிரந்தரமானதல்ல. இருப்பினும் ராஜபக்ச அரசு, யு.என்.பி. சார்பான பாதாள உலக கிரிமினல்களையே வேட்டையாடுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதனால் ஆளும் சுதந்திரக்கட்சிக்கு விசுவாசமான கோஷ்டிகள் தப்பிப்பிழைக்க வாய்ப்புண்டு. இதே நேரம் சட்டத்திற்கு புறம்பான கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் மனித உரிமை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

 

ஆகஸ்ட் மாதம் கொழும்பு நகரில் இருந்து தெற்கே சில மைல் தூரத்தில், யுபெரடயயெ என்னுமிடத்தில், பொலிசுக்கு எதிரான மக்களின் தன்னெழுச்சியான போராட்டம் ஒன்று நடந்தது. மக்களின் கொந்தளிப்புக்கு காரணம் இரண்டு வாலிபர்களின் படுகொலை. காவல்துறையினரால் பிடித்துச் செல்லப்பட்ட இருவரும், பின்னர் உயிர் பிரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். பொலிசின் அட்டூழியத்தால் ஆத்திரமுற்ற அந்த ஊர் மக்கள், பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு அடித்துடைத்தனர். பிரதான ரயில்பாதையில் படுத்திருந்து மறியல் செய்தனர். காவல்துறையினால் கொலைகளை நியாயப்படுத்த முடியவில்லை. மக்கள் போராட்டத்திற்கு விட்டுக் கொடுத்த அரசு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கியது. "பொலிஸ் பிடித்துச் சென்று மரணமுற்ற அவ்விரண்டு இளைஞர்களும் பாதாள உலகை சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் கவலைப்பட்டிருக்க மாட்டோம், ஆனால் அவர்கள் அப்பாவிகள். நாங்கள் ஏழைகள் என்பதால் பொலிஸ் எங்களை கிரிமினல்களுடன் சம்பந்தப்படுத்தி துன்புறுத்துகிறது. நடந்த கொலைகள் பொலிஸ் அராஜகத்தின் உச்சம்." என ஊர் மக்கள் தொலைக்காட்சிக்கு முன்னால் தெரிவித்தனர். மேற்படி சம்பவத்தால் விழித்துக் கொண்ட ஊடகங்கள் பின்வரும் கேள்வியை எழுப்பின. காவல்துறையில் இருக்கும் கிரிமினல்களை யார் தண்டிப்பது? அரச ஸ்தாபனம் ஏகபோக பாதாள உலக உரிமை எடுப்பதை தடுப்பது யார்?

 

http://kalaiy.blogspot.com/2009/11/blog-post.html