புலம் பெயர் நாடுகளில் தமிழ் பேசும் மக்களின் ஆதரவைக் கோரும் நோக்குடன் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஆட்சியிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன தமது பிரச்சார முன்னெடுப்புகளை ஆரம்பித்துள்ளன. புலிகளின் அழிவிற்குப் பின்னான அரசியல் வெற்றித்தை நிரப்பும் முயற்சியில் பேரின வாதக் கட்சிகளும் கூட ஈடுபட்டுள்ளமை என்பது ஆச்சரியமானதே.

ஐக்கிய தேசியக் கட்சியில் இங்கிலாந்துக் கிளையின் அமைப்பாளராக தமிழர் ஒருவர் தெரிவாகியிருக்கிறார்.இந்நோக்கங்களுக்காக இங்கிலாந்திற்கு வருகை தந்துள்ள வைத்தியக் கலாநிதி ஜயலத் ஜயவர்தனயை நேர்காணலுக்காக அணுகினோம். ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரான கலாநிதி ஜயவர்தனவின் நேர்காணலின் முதன்மைப் பகுதி இங்கே தரப்படுகிறது.

 

இனியொரு: ஐக்கிய தேசியக் கட்சி என்பது இலங்கையில் இருபெரும் பேரினவாத அரசியல் கட்சிகளில் ஒன்றாகும் இலங்கையில் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தையும், சோவனிசத்தையும் முன்வைத்து அரசியல் நடத்தும் ஒரு கட்சியாகும். மனித உரிமை வாதி எனக் கூறும் நீங்கள் உங்களது அரசியல் வரலாறு முழுவதும் ஐக்கியதேசியக் கட்சியோடு இணைந்து அரசியல் செய்வது மட்டுமல்ல அதன் மூத்த உறுப்பினராகவும் செயற்படுவது எவ்வாறு சாத்தியமாகிறது?

நான் இளம் வயதில் அரசியலுக்கு வந்த போது சிறீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டிற்கும் இடையில் ஒரு கட்சியைத் தெரிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியைத் தெரிவு செய்ய வெண்டிய நிலைகுத் தள்ளப்பட்டேன்.

இனியொரு: ஐக்கிய தேசியக் கட்சி பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவது தொடர்பாகச் செய்திகள் வெளியாகின்றன. ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்துவது குறித்தும் பேசப்படுகிறது?

உத்தியோக பூர்Jayalath_Jayawardenaவமாக பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை தெரிவித்தது இல்லை. எமது கட்சி பொது அணியொன்றை அமைப்பதற்கான தலைமைத்துவத்தை வழங்குகிறது. மக்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க, மனித உரிமைகளைப் பாதுகாக்க, சீரழிவை அழிக்க, ஊழலையும், மக்கள் பணத்தைச் சூறையாடுவதைத் தடுக்க ஒரு நல்லாட்சி தேவைப்படுகிறது. தவிர, தமிழ் மக்கள் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வும் தேவையானதாக உள்ளது. இவ்வாறான விழுமியங்களைப் பாதுகாக்கவும் அவற்றிற்கான ஜனநாயக உள்ளீடுகளை வழங்கவும் புதிய ஆட்சி தேவைப்படுகிறது. பல அரசியல் கட்சிகள் தமது அடையாளங்களைப் பேணியவாரே ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அணியில் இணைந்து கொள்ளத் தயாராய் உள்ளதை எமக்குத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளரைப் பொறுத்தவரை, யார் வேட்பாளர் என்பதை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே எமது கட்சி அறிவிக்கும். அதற்கான தேவை இப்போதைக்கு இல்லை. ஜெனரல் சரத் பொன்சேகாவைப் பொறுத்தவரை முடிவெடுப்பது என்பது அவரைப் பொறுத்த விடயம். இன்று வரை அவர் எமது கட்சியில் உறுப்பினர் அல்ல. மனித உரிமையையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்காக் ஐக்கிய தேசியக் கட்சி பொதுவான அணியொன்றை உருவாக்கி அதனூடாகத் தேர்தலை அணுகுவது குறித்தே சிந்திக்கிறது.

இனியொரு: சரத் பொன்சேகா என்பவர் குறித்த போர்க் குற்றச்சாட்டுக்கள் ஒரு புறம் இருக்க, மறு புறத்தில், சிங்கள சோவனிச தத்துவத்தின் தந்தையான அனகாரிக்க தர்மபால க்குப் பின்னதாக மிகவும் வெளிப்படையாகவே இலங்கை என்பது சிங்கள பௌத்தர்களின் நாடு என்பதைக் கூறியிருப்பவர், இதன் பின்னரும் சரத் பொன்சேகவுடனான இணைவைப் பற்றி எவ்வாறு ஜனநாயகத்தை ஏற்படுத்த முனைவதாகக் கூறும் உங்கள் கட்சி கருத முடியும்?

இக்கேள்வியை ஆரம்பிப்பதற்கு முன்னர் சரத் பொன்சேகாவை ஜனாதிபதித் தேர்தலில் ஏற்றுக்கொள்வது குறித்து நாம் இதுவரை பேசவில்லையே! ஐக்கிய தேசியக் கட்சி ஒரு வெளிப்படையான ஜனநாயகக் கட்சி அது யாருடனும் பேசும்.

இனியொரு: சரத் பொன்சேகா போன்ற போர்க் குற்றவாளிகளுடனும், இனவாதிகளுடனும் கூடவா?

ஜனநாயகத்தை விரும்பும் கட்சி என்ற வகையில் யாருடனும் பேசலாம்.

இனியொரு: ராஜபக்ஷ ஆட்சியினரும் சரத் பொன்சேகா போன்றோரும் போர்க் குற்றங்களுக்காகவும் இனப் படுகொலைக்காகவும் தண்டிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

 

இது ஒரு சிக்கலான விடயம். சர்வதேசச் சமூகத்திலிருந்து மிகப் பெரிய அளவிலான அழுத்தங்கள் பிரயோகிக்ப்படுகின்றன; மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஐரோப்பிய ஒன்றியம், அமரிக்கா போன்ற நாடுகளிலிருந்து மிகப்பெரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட வண்ணமே உள்ளன. நாங்கள் மிக sarathஅவதனாமாகவும் பொறுமையுடனும் இலங்கை அரசின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். நாங்கள் இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை.

இனியொரு: கேள்வி அதுவல்ல, நீங்கள் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கருதுகிறீர்களா இல்லையா?

நான் அவர்களுக்குத் தீர்ப்பு வழங்க முடியாது. அதை நான் செய்யவும் கூடாது. சர்வதேச சமூகத்தினதும், ஐக்கிய நாடுகளதும், மேற்கினதும் குற்றச்சாட்டுக்கள் குறித்து அரசாங்கம் தான் அவர்களது நிலை குறித்து முடிபுக்கு வரவேண்டும். இப்போது இது குறித்து கருத்துக்கள் கூறுவதற்கு சரியான காலகட்டமல்ல. நாங்கள் பொறுத்திருந்து பார்க்கவேண்டும் அரசு என்ன செய்யப்போகிறது என்று.

இனியொரு: நீங்களே பல தடைவை கூறியிருக்கிறீர்கள் இலங்கை அரசு மனித உரிமை மீறல்களிலும், போர்க் குற்றங்களிலும் ஈடுப்பட்டுள்ளது என்று, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமா இல்லையா?

நான் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குரல் கொடுத்திருக்கிறேன். இப்போது மட்டுமல்ல 1994 இலிருந்தே பேசி வந்திருக்கிறேன். எனது அரசியல் வரலாறு முழுவதுமே நான் மனித உரிமைகளுக்காகவும் அரசியல் உரிமைகளுக்காகவும் பேசிவந்திருக்கிறேன். இதில் நான் இப்போது மட்டும் ஈடுபடவில்லை. இப்போது நாங்கள் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். நாங்கள் மனித உரிமை மீறல்களுக்கும், சட்டவரை முறையற்ற கொலைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள்.

இனியொரு: கேள்வி அரசு அதற்காகத் தண்டனை அனுபவிக்க வேண்டுமா என்பதே?

நாங்கள் மனித உரிமைக்கான பாராளுமன்றக் குழு என்பதை உருவாக்கியுள்ளோம். எதிர்க்கட்சியைச் சேர்ந்த 37 உறுப்பினர்கள் அதில் உறுப்பினர்களாக உள்ளனர். சர்வதேச மனித் உரிமைச் மற்றும் சிவில் சட்டங்களை அமுல் படுத்துவதற்கான குழு. இதை நாம் வெளிப்படையாகவே செய்கிறோம். இதில் நாம் ஒளித்து விளையாடவில்லை. நான் அதில் செயலாளராகவும், மனோ கணேசன் தலைவராகவும் உள்ளோம். நான் பல சிறைச் சாலைகளுக்குச் சென்று வந்துள்ளேன்.

உங்களுக்குத் தெரியும் பல தமிழ் அரசியல் கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். சிலர் பத்து வருடங்களுக்கு மேலாக விசாரணையோ குற்றங்களுக்கான காரணமோ இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் அவர்களுக்காகவும் போராடிவருகிறோம். நாங்கல் பரந்த அளவில் மனித உரிமை குறித்து பொதுவான போராட்டத்தை முன்னெடுக்கிறோம். இப்போது அரசாங்கத்திற்கு எதிரான குற்றச் சாட்டுகளுகள் தொடர்பாக நாங்கள் காத்திருக்கிறோம். இப்போது பந்து உங்களது கையில். என்ன சொல்கிறீர்கள்? இது தான் நாங்கள் சொல்கிறோம்.

இனியொரு: இறுதியாக நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? மகிந்த ராஜபக்ஷவும் சரத் பொன்சேகாவும் குற்றங்களுக்காகத் தண்டிகப்பட வேண்டும் என்று சொல்வது காலத்திற்கு முந்திய முடிபு என்றா?

இல்லை. இது காலத்திற்கு முந்திய முடிபல்ல. ஆனால் நாங்கள் கருத்துக் கூறுவது காலத்திற்கு முந்தியதாகும்.

ஏனென்றால் இப்போது சர்வதேச அழுத்தங்கள் கட்டமைக்ப்பப்பட்டு வருகின்றது. இன்று வரைக்கும் ஐ.நா செயலாளர் நாயகம் எதுவும் கருத்துச் சொல்லவில்லை. அவர் ஒரு முடிபு எடுத்திருக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி ஒரு அரசியல் கட்சி மட்டுமே. பிரதான எதிர்க்கட்சி மட்டுமே. நாங்கள் காத்திருக்கிறோம். இவ்வாறு கூறுவதால் நாங்கள் மனித உரிமை மீறல்கள் பற்றி கருத்தில் கொள்ளவில்லை என்பதல்ல.

எதிர்க் கட்சியும் அரசியல் கட்சியும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கருதவில்லையா?
நான் மறுபடி மறுபடி கூறுவது போல, சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு அரசு என்ன செய்யப் போகிறது என்று காத்திருக்கிறோம். ஆனல், நாங்கள் முகாம்களில் எவ்வளவு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று அரசைக் கேட்கிறோம் அவர்கள் சொல்கிறார்கள் இல்லை. முகாம்களுக்குப் போவதற்கு எங்களுக்கு அனுமதி வழங்குகிறார்கள் இல்லை. அவர்களுக்கு நாம் தான் அழுத்தங்களைக் கொடுக்கிறோம்.

இனியொரு: சரி இந்தக் கேள்வியை முடித்துக்கொள்வோம். வன்னியில் மகிந்த அரசு இனப்படுகொலை நிகழ்த்தியதாகக் கருதவில்லையா?

இப்போது அதுவல்லப் பிரச்சனை.

முகாம்களில் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். 3 லட்சம் என்று நாங்கள் கணக்கிடுகிறோம் அரசு சொல்கிறது 2 லட்சத்து 50 ஆயிரம் என்று. அவர்கள் எந்த விபரங்களையும் வெளியிட மறுக்கிறார்கள். தன்னார்வ அமைப்புகளுக்கு அங்கு அனுமதியில்லை. 13 பேரைக் காணவில்லை என்று அரசே சொல்கிறது. அவர்கள் எங்கே? என்ன நடந்தது?

இனியொரு: ஆக, இனப்படுகொலை குறித்து என்னதான் சொல்கிறீர்கள்?

கடந்த காலம் குறித்து திரும்பத் திரும்பப் பேசிக் கொள்ளாமல் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்போம். இனியொரு என்ற உங்கள் இணையப் பெயரைப் போல.

இனியொரு: இலங்கை அரசு சிறுபான்மை இன மக்களின் அடையாளத்தை அழிக்கும் வகையில் குடியேற்றங்களை மேற்கொள்கிறது. இதற்கு எப்போதவது எதிர்திருகிறீர்களா?

நான் எப்போதுமே குழு வாதத்திற்கு எதிரானவனாக இருந்திருக்கிறேன். இன்னொரு இன வாதத்திற்கு வழிசமைக்கும் மக்கள் துருவங்களாகப் பிரிந்திருப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. மனித உரிமை மீறினால் குரல் கொடுப்போம்.

இனியொரு: ஆக, குடியேற்றங்களை ஆதரிக்கிறீர்கள?

அதுவல்லப் பிரச்சனை. தனித்தனியான துருவங்களாக மக்கள் இணையாமல் பிரிந்திருபதே ஆபத்தானது.

இனியொரு: இலங்கை சிங்கள நாடு, அங்கு சிறுபான்மையினருக்கு உரிமையில்லை என்று அனகாரிக தர்மபால, சிங்களப் பேரின வாதத்தின் தந்தை, கூறினார் ஆனல் இன்றுவரை பாடப்புத்தகங்களிலும், அரச வைபவங்களிலும் இலங்கையில் கதாநாயகனாகக் கருதப்படுகிறார். என்ன கூறுகிறீர்கள்?

வணக்கத்திற்குரிய அனகாரிக தர்மபால என்ன சொன்னார் என்பதை விட, சிங்கள மக்களின் மதிப்பிற்குரிய அந்தத் தலைவரை விடவும், மிக முக்கியமானது அரசியல் வாதிகளின் இனவாதக் கருத்துக்களே. இனவாத அரசியல் வாதிகள் தான் பிரச்சனைகளைச் சிக்கலாக்குகிறார்கள். சிங்கள மக்கள் இனவாதிகளல்லர். அவர்கள் இனவாதிகளாக இருந்தால் தமிழ் மக்களை இதுவரை அழித்திருக்கலாம். தென்பகுதியைப் பாருங்கள், சிங்கள மக்களோடு எவ்வளவு தமிழர்கள் வாழ்கிறார்கள்.

இவ்வாறன இனவாத அரசிலை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்துவரும் இடது சாரித் தலைவர்களை நான் தலைவணங்குகின்றேன்.

இனியொரு: இலங்கையில் இனவாதம் குறித்துப் பேசும் போது ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர்க்க முடியாது. டீ.எஸ். சேனாநாயக்கவில் ஆரம்பித்து 83ம் ஆண்டு ஜெயவர்தன அரசு முன்னின்று நடத்திய இனப்படுகொலை ஈறாக இன்று சரத் பொன்சேகாவைப் பற்றிப் பேசும் உங்கள் கட்சிக்குத் தமிழ் பேசும் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

சில தவறுகள் தலைவர்களுடைய முடிபுகளால் நடந்திருந்தாலும், பொதுவாக ஐக்கிய தேசியக் கட்சி ஒரு மிகப்பெரிய ஜனநாயகக் கட்சி. மக்களின் உரிமைக்காக எப்போதுமே குரல் கொடுத்து வந்துள்ளது. எனது தொகுதியில் தமிழர்கள் புறக்கணிக்கத்தக்க அளவில் இருந்தும் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கிறேன். இது வாக்கு வேட்டைக்காக அல்ல. மனித உரிமைக்காகவே. ரனில் விக்ரமசிங்க எப்போதுமே தமிழ் மக்களுக்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் குரலெழுப்பியவர். பிரேமதாச காலத்திற்குப் பிறகு அவரின் அரசியல் கருத்துக்களால் ஆட்கொள்ளப்பட்டு அரசியலில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தவன் நான். அப்போதிருந்தே மனித உரிமைக்காகவும் குரல் கொடுக்கிறேன்.

இனியொரு: ஒரு லட்சம் சிங்கள இளைஞர்கள் தெருத்தெருவாகக் கொல்லப்பட்ட பிரமதாச காலகட்டம் என்பது மனித premadasaஉரிமைகளிற்குச் சாபக்கேடான காலம். அவரின் அரசியலால் ஆட்கொள்ளப்பட்டு அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு மனித உரிமை பேசுவதாகக் கூறுகிறீர்களே?

யார் தவறு செய்யவில்லை? எல்லாத் தலைவர்களும் நூறுவீதம் தூய்மையானவர்கள் இல்லை. நாங்கள் பொதுவாக நாட்டிற்கு என்ன செய்தார்கள் என்று தான் பார்க்க வேண்டும் சிறு சிறு தவறுகளை அல்ல.

இனியொரு: ஒரு லட்சம் இளைஞர்களைக் கொலைசெய்து துவம்சம் செய்ததை சிறு தவறு என்றா சொல்கிறீர்கள்?

அந்தக் காலகட்டத்தில் ஜே.வீ.பி நடந்து கொண்ட முறை பற்றியும் பார்க்க வேண்டும். எத்தனை அப்பாவிகளைப் போராட்டம் என்ற பெயரில் கொலை செய்துள்ளார்கள். அது பற்றியும் பேச வேண்டும். அது ஒரு இக்கட்டான சூழல். அது தொடர்பாகவும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இனியொரு: நீங்கள் சொல்வதைத் தானே இப்போது மகிந்த ராஜபக்ஷவும் சொல்கிறார்.

அது வேறு இது வேறு. ஜே.வீ.பீ ஐ ஒரு போதும் சிங்கள மக்கள் ஏற்றுக்கொண்டதில்லை. அது ஒரு பாசிச அமைப்பாக ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பல அப்பாவிகளைக் கொலைசெய்திருக்கிறது. மக்கள் அதை வெறுத்தனர். அதே ஜே.வீ.பீ ஜனநாயக வழிக்குத் திரும்பியதும் மக்கள் அதற்கு வாக்களிக்க ஆரம்பித்தனர்.

இனியொரு: வெளிப்படையாக இனவாதம் பேசி இனப்படுகொலையை முன்னின்று நிகழ்த்திய ஜே,ஆர்.ஜெயவர்தன காலத்தில் நீங்கள் கட்சி உறுப்பினராக இருந்தீர்கள் தானே?அது மனித உரிமை மீறல் இல்லையா?

ஜே.ஆர் காலகட்டம் ஒரு இக்கட்டான காலம். தெற்கில் தமிழர்களுக்கு எதிராக நடந்த தாக்குதல்களில், சிங்கள தாதாக்கள், jrதிருடர்கள், ஏனைய அரசியல் சக்திகள், அடிப்படை வாதிகள் என்று பலரும் ஈடுபட்டிருந்தனர்.

இனியொரு: ஐக்கிய தேசியக் கட்சி பற்றிப் பேசும் போதெல்லாம் தமிழ் பேசும் மக்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருவதெல்லாம் 83 இனப்படுகொலை தான்.

கடந்த காலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருபதை மறந்து எதிர்காலத்தைப்பற்றிச் சிந்திப்போம். திஸ்ஸ விதாரண மகிந்த அரசின் பிரச்சாரத்திற்காக இந்த மாதம் லண்டன் வந்த போது என்ன சொன்னார்? தேர்தலின் பின் தான் அரசியல் தீர்வு பற்றிப் பேசப்போகிறார்களாம். 13 ம் திருத்தச் சட்டம் அமுல் படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம்.ஐக்கிய தேசியக் கட்சி தான் தமிழ் மக்கள் பிரச்சனை பற்றி உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

http://inioru.com/?p=7109