சுவிஸில் நிகழ்ந்த புகலிடச் சிந்தனை மையத்தின் முதற் செயற்பாடும் துண்டுப்பிரசுர விநியோகமும்

24. 10. 09 சனியன்று சுவிஸ் தலைநகர் பேர்ண் நாடாளுமன்ற முன்றலில் இடம்பெற்ற இளையோர் அமைப்பின் உண்மைக்காய் எழுவோம் நிகழ்வு பி. ப. 3மணிக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மக்களின் உற்சாகமற்ற வருகையில் ஏற்பட்ட  தாமதத்தினால் வழமைக்கு மாறாக சுமார் ஒரு மணிநேரம் தாமதித்தே நிகழ்வும் ஆரம்பமானது.  வெவ்வேறு மாநிலங்களிலும் இருந்தும் வருகை தந்திருந்த இளையோர்கள் ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி ஆகிய மொழிகளில் நாட்டின் இன்றைய அவலநிலைகளை வெளிப்படுத்தினர். அறியப்பட்ட சுவிஸ் நபர்கள் எவரும் இம்முறை உரையாற்றியிருக்கவில்லை. ப்பீல் நகரைச் சேர்ந்த சுவிஸ் அம்மையார் (ஓர் ஆசிரியை) மட்டும் சில நிமிடங்கள் உரை ஆற்றினார்.

கூட்டத்தை வழி நடத்திய தலைமை இளைஞர் “போராட்டம் தோற்றுப் போகவில்லை, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கிறது“ என்ற வகையில் தொடர்ந்து ஆவேசமாகவும் ஆதங்கத்துடனும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தார். ஆனால் மக்களின் முஷ்டிகளோ உறக்கத்தில் இருந்து விடுபட்டிருக்கவில்லை. இந்நிலையில் போராட்டத்தில் ஏற்பட்ட தோல்வி பற்றியோ அதற்காக வருந்துவது பற்றிய வெளிப்பாடுகளோ இவ் ஒன்றுகூடலில்  தென்பட்டிருக்கவில்லை. இடையே தமிழ்நாட்டில் இருந்து பெறப்பட்ட கவிஞர் புகழேந்தியின் சிற்றுரை ஒன்றும் ஒலிக்க விடப்பட்டிருந்தது. சாராம்சத்தில் இந் நிகழ்வு வரப்போகும் மாவீரர் தினத்துக்கான ஒத்திகையாக மட்டுமே வெளிப்பட்டதை நோக்கக் கூடியதாக இருந்தது.

இந் நிகழ்வின் முடிவில் புகலிடச் சிந்தனை மையத்தின் “இளையோர் அமைப்பினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து..“ எனும் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. “தோல்வியில் முடிந்த யுத்தத்துக்கான உண்மைக் காரணங்களை முன்வைத்து, பகிரங்க சுயவிமர்சனத்தை முன்வைக்கக் கோரியதுடன், இளையோர்களை பொதுப் புத்தியில் இயங்குவதைத் தவிர்த்து, சுயசிந்தையில் பல்வித தேடல்களின் அடிப்படையில் செயற்படும்படி கோரியது“ இப்பிரசுரம். இளையோர் பலரும் சுவிஸின் ஜனநாயகப் பண்புகளுக்கேற்ப பிரசுரத்தின் சாராம்சத்தை விளங்கிக்கொண்டு அமைதியாக இருந்தனர். ஆனால் கிழப் புலிகள் சில தமது வழமையான ஜனநாயக விரோதச் செயலில் ஈடுபடத் தவறவில்லை.

சுமார் 150 பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில் விநியோகத்தை நிறுத்தும்படி எச்சரிக்கைத் தொனிகளை எழுப்பினர். செவிகளை  அழுத்திய இத் தொனிகளைப் பொருட்படுத்தாது விநியோகம் தொடர்ந்தது. ஆத்திரம் தாங்காத கிழப்புலி ஒன்று கையிலிருந்த சில பிரசுரங்களைப் பறித்துச் சென்றது. ஆனால் “இனியாவது ஜனநாயகப் பண்புகளைக் காப்பாற்றப் பழகிக்கொள்ளுங்கள்“ என்று உரத்த தொனியில் எச்சரித்த விநியோகஸ்தர், முதுகுப் பையில் இருந்த மீதிப் பிரசுரங்கள் அனைத்தையும் துணிச்சலுடன் விநியோகித்து முடிக்கும்வரை பார்த்துக்கொண்டிருந்த கிழப்புலிகள், விநியோகிக்கப்பட்ட சில பிரசுரங்களை மீளப் பெற்று கிழித்தெறிந்ததன் மூலம் தமது ஜனநாயக விரோதப் பண்பை மீண்டும் ஒருமுறை நிலைநாட்டிக் கொண்டனர். இதைப் பார்த்துக்கொண்டிருந்த நண்பர் ஒருவர் கூறினார் “பசித்தாலும் புலி புசிக்காது (அரசியல்) புல்லை“ என்று.

http://www.psminaiyam.com/?p=101