செப் 26-27ம் திகதியில் பாரிஸ் புறநகர் பகுதி ஒன்றில் தமிழரங்கத்தின் முயற்சியில் கூட்டு விவாதம் ஒன்று நடை பெற்றது. கடந்தகால அரசியல் சூழலை மாற்றியமைக்க, முதலில் தன்னைத் தான் அது கோரியது. எதிர்காலத்தில் நடைமுறையில் நாம் செய்யவேண்டிய அரசியல் பணிகளை, ஒரு அரசியல் திட்டத்தின் மூலம் வரையறுத்;து. அத்துடன் திட்டத்தை செயலூக்கத்துடன் நடைமுறைப்படுத்த, கூட்டு உழைப்பைக் கோரியது. தனித்துவமான செயல்களை, கூட்டான அரசியல் திட்ட செயல்முறைக்கூடாக முன்னெடுக்கவும் கோரியது.
கூட்டு விவாதம் இன்றைய அரசியல் சூழலை மதிப்பீடு செய்தது. இனவொடுக்குமுறையால் கடந்த 30 வருடமாக இலங்கையில் நடைபெற்ற பல்வேறு தொடர் நிகழ்ச்சிகளால், மக்கள் சொல்லொணாத் துயரத்தையும் துன்பத்தையும் அனுபவித்து வருகின்றனர்.
மக்களோ தங்கள் வாழ்வை இழந்து அநாதைகளாகி விட்டனர். அரசியல் உரிமைகளை இழந்து நடைப்பிணமாகி உள்ளனர். அடிப்படை உரிமைகளை இழந்து அடிமைகளாகி நிற்கின்றனர். இலங்கையின் சிவில் சட்ட ஆட்சிக்கு வெளியில், இராணுவ ஆட்சியின் கீழ் மீண்டும் மீண்டும் தமிழ்மக்கள் சொல்லொணாத் துன்பத்தையும் துயரத்தையும் அனுபவித்து வருக்கின்றனர். மக்களை இந்த நிலைக்கு ஆளாக்கியது, ஒரு தவறான குறுந்தேசிய அரசியல் தான். இனவொடுக்குமுறைக்கு எதிரான புரட்சிகரமான அரசியல் போராட்டத்துக்குப் பதில், எதிர்ப்புரட்சிகர போராட்டம் தான் இந்த நிலையை உருவாக்கியது. இப்படி எதிர்ப்புரட்சிகர அரசியல் கூறுகளால் இனவொடுக்குமுறைக்கு எதிரான தேசிய போராட்டம், இனவாதமாகியது. இது குறுந்தேசிய போராட்டமாகி, இனவழிவாகியது.
இது இனப் பிளவுகளையும், பிரதேச பிளவுகளையும், சமூகப் பிளவுகளையும் ஆழப்படுத்தி விரிவாக்கியது. இன ஐக்கியத்துக்கு பதில் இனப் பிளவுகளை விதைத்தது. சொந்த இனத்தின் அழிவை, சமூக விளைவாக்கியது. இப்படி இனங்களை மட்டுமல்ல, இனத்துக்குள்ளும் பாரிய சமூக முரண்பாடுகளையும் சமூகச் சிதைவுகளையும் உருவாக்கியது. இது இனங்களுக்கிடையே ஐக்கியத்தை வளர்த்தெடுப்பதற்கு மாறாக இனங்களுக்கிடையேயான முரண்பாட்டை ஊக்குவித்தது. இதன் விளைவாக சிங்களச் சமூகத்தை, அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்த உதவியது.
சமூகத்தில் நிலவிய சாதிய, ஆணாதிக்கம், வர்க்கம் என்ற, அனைத்து சமூக முரண்பாடுகளையும், குறுகிய நோக்கில் கையாண்டதால் அது வீங்கி வெம்பியது. இப்படி எதிர்ப்புரட்சிகர அரசியல் கூறுகள் ஆதிக்கம் செய்த சமூக அமைப்பில், பெண்கள், குழந்தைகள் என்றுமில்லாதளவில் வாழ்வில் கடுமையான அவலத்தைச் சந்தித்தனர், சந்தித்தும் வருகின்றனர். சமூகமே பெருமளவிலான அங்கவீனர்கள், விதவைகள், மனநோயாளிகளைக் கொண்டதாக மாறி, அது சமூகத்தின் ஒரு பகுதியாகிவிட்டது. தங்கள் வாழ்வை நடத்த முடியாத அளவுக்கு, சொந்த வாழ்வாதாரங்களை மக்கள் இழந்து விட்டனர். வாழ்ந்த மண்ணை இழந்து, அகதிவாழ்வு ஒரு பகுதி மக்களின் இழிவான வாழ்வாகிவிட்டது.
இன்று திறந்தவெளி தடுப்பு முகாங்களுக்குள்ளும், இராணுவத்தின் சிவில் கட்டமைப்பிலும், தமிழ் இனத்தை கண்காணிக்கின்றது சிங்களப் பேரினவாதம். இதன் மூலம் தமிழினத்தை என்றுமில்லாத வண்ணம் ஒடுக்குகின்றது. தமிழினத்தின் மேலான இந்த ஒடுக்குமுறையைக் கூட, அது மிக நுட்பமாக பிரித்துக் கையாளுகின்றது. யாழ் மக்களுக்கு சீரழிவுடன் கூடிய சலுகை மூலமும், கிழக்கு மக்களுக்கு கையேந்தி பிச்சை எடுக்க வைத்தும், வன்னி மக்களை திறந்தவெளி தடுப்பு முகாங்களில் அடைத்தும் வைத்து ஓடுக்கின்றது. இதையே ஜனநாயகம், தீர்வு என்கின்றது. இதையே வடக்கின் “வசந்தமும்’, கிழக்கின் “உதயமும்” என்கின்றது.
பேரினவாத யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களின் சொந்த நிலத்தை கைப்பற்றி, அதை அன்னிய மூலதனத்துக்கு தாரை வார்க்கின்றது. சம்பூர் முதல் வன்னி நிலம் வரை, “பயங்கரவாத ஓழிப்பு” இப்படித் தான் வேஷம் போடுகின்றது. பேரினவாதம் தமிழர் மீதான தன் ஆக்கிரமிப்பு மூலம், நிலத்தையும் பொருளாதார வளங்களையும் கைப்பற்றி அதை உலகமயமாக்குகின்றது. இப்படி உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலையே, பேரினவாத யுத்தம் மூலம் இன்று அமுல் செய்கின்றது. இப்படி தமிழ் மக்களின் நிலத்தையும், மூலவளங்களையும், உற்பத்தி மையங்களையும் கைப்பற்றி, அன்னிய மூலதனத்துக்கு கொடுத்து வருகின்றது.
யுத்தத்தையும் அதன் வெற்றியையும் சிங்கள மக்களுக்கு காட்டி விட்டு, தமிழர் அல்லாத பிரதேசங்களைக் கூட உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தாரைவார்க்கின்றது.இதனால் இலங்கை மக்களுக்கு துரோகம் விளைவிப்பதுடன் உள்நாட்டு உற்பத்திகளை திட்டமிட்டபடி அழித்து, வெளிநாட்டு உற்பத்தியை உள்வாங்கி நாட்டை அடிமைப்படுத்தி வருகின்றது. இலங்கைத் தேசியத்துக்கு எதிராக, உலகமயமாதலுக்கு ஏற்ப நாட்டை விற்று வருகின்றது. இப்படி அன்னிய மூலதனமோ விரிவாக இலங்கையில் புகுந்து வருகின்றது. யுத்தத்தின் மூலமான பொருளாதார நெருக்கடி ஒருபுறம், மறுபக்கத்தில் அன்னிய மூலதனத்தின் மூலமான நெருக்கடி, மொத்த இலங்கை வாழ் மக்கள் அனைவர் மேலும் பாரிய வாழ்வியல் சமூக சிதைவுகளை உருவாக்கி வருகின்றது.
இதனால் எழும் மக்களின் எதிர்ப்புகளை அடக்கியொடுக்க, இலங்கை அரசு மேலும் மேலும் தன்னைப் பாசிசமயமாக்கி வருகின்றது. இதன் மூலம் மக்கள் அற்ப சொற்ப உரிமைகளைக் கூட இழந்து வருகின்றனர். இதைச் சுற்றி ஒரு குடும்ப சர்வாதிகாரமும், ஒரு கும்பல் ஆட்சியும் மிக வேகமாக மையப்பட்டு வருகின்றது.
இலங்கையில் இன்றைய இந்த குறிப்பான நிலைமையை நாம் எதிர்கொள்ள வேண்டியது, உடனடி இன்றைய அரசியல் பணியாக உள்ளது.
ஆனால் எம்மைச் சுற்றி கடந்தகாலம், எதிர்ப்புரட்சிகர அரசியல் கூறுகளின் பாசிச மயமாக்கமாக இருந்துள்ளது. கடந்த 30 வருடமாக இலங்கையில் நிலவிய தேசிய முரண்பாடும், அதனால் எழுந்த போராட்டமும் குறுந்தேசியமாகியது. இது பாசிசமாக தன்னை வெளிப்படுத்தியது. இப்படி குறுந்தேசிய அரசியல் உருவாக்கிய பாசிசத்தின் விளைவால், அரசுடன் இணைந்து வளர்ச்சியுற்ற எதிர்ப்புரட்சிகரக் கூறும் உருவானது. இப்படி தேசியத்தின் பெயரில் ஜனநாயகத்தை மறுத்து எதிர்ப்புரட்சிகர பாசிசமும், ஜனநாயகத்தின் பெயரில் தேசியத்தை மறுத்த எதிர்ப்புரட்சி கூறும் வளர்ச்சியுற்றது.
இதன் விளைவால் போராட்டமும் ஓரு குறுகிய பார்வையுடையதாகியது. தமது கருத்துக்கு மாறான மாற்றுக் கருத்தை அழித்தொழிப்பதே, முக்கிய அரசியல் செயற்பாடாக மாறியிருந்தது. இவ்நடவடிக்கையே அரசுடனான ஒட்டுக்குழுக்களை முழுவேகத்துடன் உருவாவதற்கும், செயற்படுவதற்கும் தூண்டியது. இப்படி இருசாராரும் மக்கள் நலனைக் கருதாது, தமக்கிடையிலான குரூரத்தை கொலைவெறியுடன் மக்கள் மேல் திணித்தனர்.
தமிழ் சமூகத்தின் முழுக் கட்டமைப்பையும், இவ்விரண்டு எதிர்ப்புரட்சிக் கூறும் ஆக்கிரமித்து நின்றது. புலித் தலைமையின் அழிவின் பின்பாக, தேசியத்தின் பெயரில் நிலவிய புலிப்பாசிசம் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் புலத்தில் அது கொண்டிருந்த சொத்துரிமை சார்ந்தும், அதிகாரக் கட்டமைப்பு சார்ந்தும், இன்னமும் தன்னையும் தனது பாசிசத்தையும் நிலைநிறுத்த முனைகின்றது. மறுபக்கத்தில் ஜனநாயகத்தின் பேரில் நிலவிய புலியெதிர்ப்பு எதிர்ப்புரட்சிக் கூறுகள், அரச பாசிசமாக மாறி நிற்கின்றது. அது பல வேஷங்களைப் போடுகின்றது. மக்களை சிறை வைத்திருக்கின்ற அரசைச் சார்ந்து நின்று, மக்களுக்கு உதவி, தீர்வு என்று தனக்குத்தானே வேஷம் போடுகின்றது.
இப்படி மாறிவிட்ட இந்தச் சூழல், எம்மை விரைவாக அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்க கோருகின்றது. தனிமனித செயலுக்கு பதில் கூட்டு வேலைமுறையின் அவசியத்தை அது கோருகின்றது. 1980 களில் புரட்சிகர பிரிவுகள் நடத்திய அரசியல் போராட்டத்தினதும், 1990 களில் புலத்தில் உருவான சிறு சஞ்சிகைகளை சுற்றி நிலவிய புரட்;சிகர கூறையும், இதன் பின் நிலவிய தனிமனித புரட்;சிகர சிந்தனையினை உள்வாங்கிய இந்தச் சந்திப்பு, தன்னை அரசியல் ரீதியாக ஒருங்கிணைத்திருக்கின்றது. இது தன்னை “புகலிடச் சிந்தனை மையம்” என்று பெயரிட்டுக் கொண்டுள்ளது. புரட்சிகர அரசியல் நடைமுறையை உருவாக்குவதன் மூலம், எதிர்கால செயலுக்குரிய ஒரு அரசியல் அடிப்படையை உருவாக்க முனைகின்றது.
இங்கு இக் கூட்டம் எமக்கு வெளியிலும் எமது இந்த முன்னணிக்கான திட்டத்தை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் இருப்பதை அங்கீகரித்தது. அவர்களை இணைத்து முன்னேறுவது என்று முடிவையும், தன் சொந்த நடைமுறை ஊடாக இதைச் செய்யக் கோரியது.
கடந்தகாலங்களில் நிலவிய முரண்பாடுகளையும், தனி மனிதத் தவறுகளையும், அரசியல் திசை விலகல்களையும், மக்களை நோக்கி புரட்சிகர அரசியல் மாற்றத்துக்காக உண்மையாக நேர்மையாக செயல்படுவதன் மூலம் தன்னைத்தான் சுயவிமர்சனம் செய்யக்கோரியது. அனைத்தையும் அரசியல் திட்டத்துக்கு உட்படுத்தி அணுகக் கோரியது. அரசியல் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் அனைவரையும், விமர்சனம் சுயவிமர்சனம் ஊடாக தம்மைத் தாம் சுயமாக புடம்போடக் கோரியது. புற அரசியல் சூழலில் நடந்த மாற்றம், மொத்த அரசியல் சூழலையும் இன்று மாற்றி அமைக்கின்றது. இதை அடிப்படையாக கொண்டு எம்மை மாற்ற “புகலிடச் சிந்தனை மையம்” முன்மாதிரியாக செயல்பட உறுதிபூண்டுள்ளது.
“புகலிடச் சிந்தனை மையம்” தன் திட்டத்துக்காக, அனைத்து ஜனநாயக வடிவங்களையும் பயன்படுத்தி கிளர்ச்சி, பிரச்சாரத்தை செய்ய அறைகூவல் விடுத்துள்ளது. ஜனநாயகத்தின் பெயரில் இயங்கும் அரசு, புலி ஊடகங்கள் முதல் அனைத்துவிதமான செயல்தளத்திலும் “புகலிடச் சிந்தனை மையம்” தன் கிளர்ச்சியையும், பிரச்சாரத்தையும் செய்ய கோருகின்றது. “புகலிடச் சிந்தனை மையம்” ஒருமித்த குரலில், மக்கள் அரசியலை முன்னிறுத்திச் செல்ல அறைகூவல் விடுத்தது.
தமிழை வாசிக்கத் தெரியாத, தமிழை புரிந்து கொள்ள முடியாத புகலிட இளம் தலைமுறையினருக்கு, எம் மக்களின் வரலாற்றை சரியாக எடுத்துக் கூற அனைத்து மொழியிலும் அதற்கான ஒருங்கிணைந்த முயற்சியில் பிரச்சாரத்தையும் கிளர்ச்சியையும் செய்ய “புகலிடச் சிந்தனை மையம்” உறுதி பூண்டுள்ளது.
பெரும்பான்மை சிங்கள மக்களுடன் உரையாட சிங்கள மொழி மூலமான ஒரு பிரச்சாரத்தை கிளர்ச்சியை முன்னிறுத்தி போராடவும் அது உறுதி பூண்டுள்ளது.
பரந்த விவாதத்தில் பங்காற்றும் வண்ணம், ஒரு விவாத அரங்கை உருவாக்குவதன் மூலம், சமகால நிகழ்வுகள் மேல் விவாதங்களை ஒருங்கிணைத்து, முனைப்பாக செயல்பட எண்ணுகின்றது.
தனக்கான வெளியிட்டு பிரிவை உருவாக்கியுள்ளது. எம் மண்ணில் புரட்சிகர பிரிவை இனம் காணவும், தொடர்புகளை பேணவும், முனைப்பாக செயல்பட முனைகின்றது.
கடந்கால முழு ஆவணங்களையும் ஆவணப்படுத்த முனைகின்றது.
தனக்கான இணையம் ஒன்றை பல்மொழியில் இயக்கவும், அதில் சிறப்பாக விவாதக்களம் ஒன்றையும் உருவாக்கி உள்ளது.
திருத்தபட்ட திட்டம் மிக விரையில் வெளியிடப்படும். அதுவரை திருத்தப்படாத திட்டத்தை நீங்கள் பார்க்க முடியும். இப்படி பல முடிவுகளை அரசியல் ரீதியாக எடுத்துள்ள “புகலிடச் சிந்தனை மையம்” எம் திட்டத்துடன் இணைந்து வேலைசெய்யுமாறு பகிரங்க வேண்டுகோளை உங்களை நோக்கி விடுக்கின்றது. கூட்டாக செயலாற்ற முன்வருமாறு அனைவரையும் “புகலிடச் சிந்தனை மையம்” அழைக்கின்றது.
புகலிடச் சிந்தனை மையம்
26.10.2009
http://www.psminaiyam.com/2009/10/26/பாரிஸ்-கூட்ட-முடிவுகள்-ம/