அரசனின் நகரம் இரவு முழுவதும் சிரித்துக்கொண்டிருக்கிறது.
நண்பனே, உரையாடலின் பின்னர்
கடற்கரையில் வெகு நேரமாய் காத்திருந்தேன்.
அங்கிருந்து அகற்றப்பட்டு
தங்கியிருந்த வாடி வீட்டிற்கு முன்னால் கடற்கரையுடன்
முடிந்தவற்றை உனக்கு சொல்லியனுப்பிக்கொண்டிருக்கிறேன்.
நான் இனி என்ன செய்வது
என்பதை உன்னால் கூற முடியுமா?

கடற்கரை எதையோ செல்லிக்கொண்டிருக்கிறது.
அதிகாரத்தின் பெருஞ்சிரிப்பு கடலை கடந்து
எல்லாத் திசைகளுக்கும் சென்று கொண்டிருக்கிறது.
கடல் மகிழ்ச்சியடையவில்லை.
அது எல்லாப் பக்கங்களுக்கும் அலையை தள்ளி
எதையோ பேசிக்கொண்டிருந்தது.
விண்ணப்பங்கள் நிரம்பிய எல்லாக் கடிதங்களையும்
கடல்தான் முழுமையாக வாசித்துக்கொண்டிருந்தது.

கொண்டு சொல்லப்பட்ட நிரூபங்கள்
மிதித்தெறியப்பட்டதை எப்படி? வெளிக்கொணர முடியும்?
நாம் அவமானப்பட்டதை யாரிடம் பகிர முடியும்?
அதிகாரம் நாளுக்கு நாள் தீணியிட்டு
வளர்க்கப்படும் அந்த மாளிகை
எங்களை சிறிய தகரப்பேணியில் அடைத்துக்கொண்டிருக்கிறது.
காய்ந்துவிடாத எங்கள் குருதியை எங்கும் அப்பி வைத்திருக்கிறது.
அரசன் எப்பொழுதும் சிரித்துக்கொண்டேயிருக்கிறான்.

அரசனின் பெரு மகிழ்ச்சியால் மாளிகை
எப்பொழுதும் அதிர்ந்துகொண்டேயிருக்கிறது.
கனவுகள் கிழித்து மறுபுறத்தில் உள்ள தெருவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்
கடற்கரையிலிருந்து என்னதான் சொல்ல முடியும்?
திரும்பும் பக்கங்கள் எல்லாம் தோற்கடிக்கப்பட்ட
எமது மண்மேடுகளது புகைப்படங்களின் மீதிருந்து
அரசன் சிரித்துக்கொண்டிருக்கிறான்.
அவர்களது நகரம் வெற்றியை இன்னும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
நமது வாழ்வை தின்று ஒளிர்ந்துகொண்டிருக்கிறது.

அரசனின் அன்றைய வார்த்தைகள் எவ்வளவு குரூரமானவை என்பதை
உனக்கு உணர்த்த வேண்டியுள்ளது.
எனினும் அவற்றை மீளவும்
என்னால் உச்சரிக்க முடியவில்லை.
முகம் இறுகி நாங்கள் வார்த்தைகளற்று தவித்தோம்.
நாங்கள் அரசனுக்காக சிரித்து
கைகளை தட்ட வேண்டும் என்று மந்திரி சொன்னான்.
முடியுமானவரை சிலர் அரசனை மகிழ்ச்சிப் படுத்தினார்கள்.

எல்லோரும் கடற்கரையை பார்த்து புன்னகையையும் கைகளையும்
இழந்ததாக சொல்லிக்கொண்டு நின்றனர்.
அரசன் தனது வீட்டுக்குச் சென்று உணவருந்திய பின்னர்தான்
நாம் வாடி வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டோம்.
எல்லாவற்றின் பிறகும், சில நாட்கள் கழிந்தும்
உன்னுடன் எதையும் பகிர முடியவில்லை.
நாம் தொடர்ந்து ஏமாந்துகொண்டிருக்கிறோம்.
நமது தேசம் போலன்றி இங்கு இரவுகள் முழுமையாக கிடைக்கின்றன.

இரவிரவாக எல்லாரது
புன்னகையும் கைகளும் கடல் வழியாக எங்கோ எடுத்துச் செல்லப்பட்டன.
அரசனின் நகரமும் இரவிரவாக சிரித்துக்கொண்டிருக்கிறது.
நன் கடற்கரையில் இருந்து முழு இரவையும் கடந்து கொண்டிருந்தேன்.
__________________________
(12.10.2009 இலங்கை ஜனாதிபதி, மகிந்த ராஜபக்ஷ, சந்திப்பு, கொழும்பு, பழைய பாராள மன்ற கட்டிடம், கடற்கரை)

-தீபச்செல்வன்


http://www.vinavu.com/2009/10/24/saturday-poems-9/