முற்பிறவியில் செய்த சில தீவினைகள் காரணமாக எனக்கு முதுகுவலியும் சைனஸ் பிரச்சினையும் இருக்கிறது. எல்லா உடல் உபாதைகளுக்கும் யோகாவில் தீர்வு இருப்பதாக சொல்லும் நண்பர்களும் இருக்கிறார்கள், இதற்கும் முற்பிறவியின் தீவினைகள்தான் காரணமா என்பதை உறுதியாக சொல்ல  முடியவில்லை.

தானாகவே சாகப்போன அருணகிரிநாதரை தடுத்தாட்கொண்ட சிவபெருமானைப்போல நாம் சிகிச்சைக்கு போகும்போதெல்லாம் குறுக்கிட்டு யோகாலோசனை வழங்குகிறார்கள். நான் முதுகுவலி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு போய்வந்ததை அறிந்த “வாழ்க வளமுடன்” நண்பர், இதுக்குப்போயா டாக்டர்கிட்ட போவீங்க?  நம்ம அறிவுத்திருக்கோயிலுக்கு வாங்க, எல்லா வியாதியையும் ஆசனத்தாலயே சரிபண்ணிடலாம் என்றார். அங்க போனதுக்குபிறகு எனக்கு உடம்புக்கு எதுவுமே வர்றது இல்லை என்றார் மூக்கை உறிஞ்சியபடியே.  கேள்விப்பட்டவரையில் இவர்கள்தான் சகாய விலையில் இந்த சேவையை தருகிறார்கள்,

அங்கு நடந்த உபன்யாசங்கள் நமக்கு அநாவசியமானவை. ஒரு ஆசனம் சொல்லித்தருகிறார்கள், அதுதான் இவர்களின் பிரதான ஆசனமாம். இதை தினமும் செய்தால் லாட்டரியில் பணம் விழுவதைத்தவிர்த்த சகல சௌபாக்கியங்களும் கிடைகும் என்றார்கள். இந்த ஆசனத்தை சுலபமானதா அல்லது கடினமானதா என்று வகைபடுத்த முடியவில்லை, அதாவது ஆசனவாயை ஐந்து முறை உள்ளிழுத்து வெளியேவிட வேண்டும் அவ்வளவுதான். இந்த ஆசனத்தை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பது இதைவிட அதிர்ச்சிகரமானது, குதிரைகள் மேற்கூறிய செயலை அடிக்கடி செய்வதால்தான் அவை எப்போதும் துடிப்புடன் இருக்கின்றன என்பதுதான் அந்த கண்டுபிடிப்பு. மகரிஷி குதிரைகள் எனும் அளவில் மட்டும் ஆரய்ச்சியை முடித்துக்கொண்டதை நினைத்து ஆனந்தப்பட்ட வேளையில் பக்கத்திலிருப்பவர் சொன்னார், அடுத்தடுத்த நிலைகளை கற்றால் இந்திரியத்தை முதுகுத்தண்டு வழியே மூளைக்கு பை-பாஸ் சாலையில் அனுப்பும் வித்தையை தெரிந்துகொள்ளலாம் என்று. எனக்கு ஏற்கனவே முதுகுப்பிரச்சனை இருப்பதால், முதுகுக்கு கூடுதல் வேலை கொடுக்க விரும்பவிலை. என்வே இந்த அளவோடு என்னுடைய அமர்வை அங்கே முடித்துக்கொண்டேன்.

முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்!

அடுத்து வேறொரு நண்பரை சந்தித்தேன், அங்கேயெல்லாம் போகும்போது நம்ம ஈஷாவுக்கு ஒருதரம் வரக்கூடாதா என்றார், “இவ்வளவு தூரம் வந்துட்டு நம்ம வீட்டுக்கு வராம போனா எப்படி?” என்று நம் நண்பர்கள் கேட்பார்கள் இல்லையா அப்படிக்கேட்டார். சரி என்று விசாரித்தால், அவர்கள் அறுநூறு ரூபாய் கேட்கிறார்கள். அதுவும் ஒருவார தொடர் வகுப்பு, இரண்டு நாட்கள் முழுநாள் பயிற்சி வேறு, ஜேம்ஸ் பாண்ட் மாதிரி விதவிதமான ஆடை அணிந்து விதவிதமான கார் பைக்குகளில் போஸ் கொடுப்பதால் ஜக்கி ரொம்பவும் மாடர்ன் சாமியாரோ எனும் எண்ணம் வந்தாலும், அடிக்கடி காட்டுக்குப்போய் பாம்பையும் மிருகங்களையும் பார்ப்பவர் என்பதால் கொஞ்சம் பயமாகவும் இருந்தது ( வீட்டுப்பிராணி குதிரையை பார்த்த மகரிஷியின் யோகா அதிர்ச்சியே இன்னும் விலகவில்லை ). மேலும் அவர் உங்களிடம் உள்ள ‘நான்’ என்கிற ஈகோவை எடுத்துவிடுவார் என்றார்கள் ( நல்லவேளை சிக்மண்ட் பிராய்டு உயிரோடு இல்லை). கடைசியாக ஒரு தகவல் சொன்னார்கள், சாப்பாட்டில் பூண்டு வெங்காயம் சேர்க்கக்கூடாது என்று. தப்பிப்பதற்கு இதைவிட ஒரு நல்ல காரணம் தேவையில்லை என்பதால், இத்தோடு விசாரணையை முடித்துக்கொண்டேன்.

ஆலோசனைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை, இன்னொரு ஸ்பெஷலிஸ்ட் ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ ( எத்தனை ஸ்ரீ என்று சரியாக தெரியவில்லை. ஒரு குத்து மதிப்பாக எழுதியிருக்கிறேன் ) ரவிஷங்கர் யோகாவை முயற்சி செய்யலாமே என்றார்கள். ஒரு விளம்பரத்தில் கட்டணம் நாலாயிரத்து சொச்சம் என்று குறிப்பிட்டிருந்தது. அயோடெக்ஸ் ஐம்பது ரூபாய்க்கே கிடைக்கும்போது இது கொஞ்சம் அதிகம் என்று விட்டுவிட்டேன்.

இங்குதான் சாமியார், யோகா தொல்லை என்று இணையத்தை திறந்தால், சாருநிவேதிதா என்று ஒருவர் தன் மனைவி ஒரு சாமியாரை வணங்கத்துவங்கிய பிறகு நடக்கப்போவதை முன்கூட்டியே தன் டைரியில் எழுதி வைப்பதாகவும், இரவில் தூங்கும்போது அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுவதாகவும் எழுதியிருக்கிறார்(இயல்பில் அவருக்கு அமெரிக்க ஆங்கில உச்சரிப்பு வரவே வராதாம்) . இது தெரியாமல் தெருவுக்கு தெரு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு எடுக்கும் அறிவிலிகளை என்னவென்று சொல்வது? இன்னொரு செய்தி இன்னும் பயங்கரமானது, அதாவது ‘பிரேக்ஷா’ எனும் தியானம் மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்கும் ஆரய்ச்சியை குஜராத் ஜெயின் பல்கலைக்கழகம் செய்திருக்கிறதாம்.

அடுத்த முறை உங்கள் வீட்டு கழிவறை அடைத்துக்கொண்டால், அவசரப்படாதீர்கள். ஒருமுறை உங்கள் ஆசன நண்பர்களிடம் கலந்து ஆலோசனை செய்யுங்கள். யார் கண்டது அதற்கும் அவர்களிடம் யோகா மூலமான ஒரு தீர்வு இருக்கக்கூடும்.

நன்றி: வில்லவன்

http://www.vinavu.com/2009/10/21/yoga-scam/