கடந்த 11.10.2009 ஞாயிற்றுக் கிழமையன்று இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணிவரை நடந்த இந்தக் கலந்துரையாடலில் சுமார் 60 க்கு மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர். இக் கலந்துரையாடலுக்கான முக்கிய புள்ளியாக,
இலங்கை இனமுரண்பாடு: அதன் வெளிக் காரணிகளும் உள்ளகக் காரணிகளும் தமிழ்மக்களின் எதிர்காலமும்"
என்ற தலைப்பில், சுனந்த தேசப் பிரிய அவர்கள் உரையாற்றினார்.
இவர் 1971 ஜே.வி.பி கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவரும், அதனால் சிறைத் தண்டனை பெற்றவரும், பின்னால் ஜே.வி.பியினால் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளானவருமாவார். அவர் மனித உரிமை அமைப்புகளிலும், ஊடகவியலாளருமாக பணியாற்றுபவர். இன்று பேரினவாதப் பாசிசத்தின் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி நாடு கடந்து வாழ்கின்றார்.
பேரினவாதப் பாசிசம் புலிகளின் பெயரில் தமிழ் மக்களை ஒடுக்கியதுடன், சிங்கள புத்திஜீவிகளையும் ஒடுக்கியது. தம்மை விமர்சிக்கும் சிங்கள ஊடகவியலாளர்களை குறிவைத்து தாக்கியதுடன், அவர்களை படுகொலை செய்தது. இந்த வகையில் சுனந்த தேசப்பிரிய நாட்டில் உயிர்வாழ முடியாத நிலையில், கடந்த 6 மாதமாக நாட்டுக்கு வெளியில் வாழ்கின்றார்.
முதன்முதலாக 'புகலிடச் சிந்தனை மையம்" சுவிஸ்சில் நடத்திய திறந்த கலந்துரையாடல் இது. இதில் சுனந்த தேசப்பிரிய ஆய்வுரை வழங்கினார். சிங்கள புத்திஜீவிகள் எப்படி இன்றைய இலங்கை நிலைமையை அணுகுகின்றனர் என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள இந்த உரை உதவுகின்றது.
ஆங்கிலம் மூலமான அவரின் உரை, உடனுக்குடன் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டது. அவரின் உரை இலங்கை பற்றிய புகலிடச் சிந்தனை மையத்தின் அரசியல் நிலையுடன் மிக இணக்கமாக இருப்பதை நாம் காண்கிறோம்.
அரச பாசிசம் சிங்கள மக்களையும் தன் சொந்த எதிரியாக்கி நிற்பதையும், தமிழ்மக்களை மட்டும் அது ஒடுக்கவில்லை என்பதையும் இது எடுத்துக் காட்டுகின்றது. காலாகாலமாக சிங்கள மக்களை எதிரியாக காட்டிய புலித்தேசிய அரசியல், சுனந்த தேசப்பிரிய போன்றவர்களின் நிலைப்பாடுகள் மூலம் தகர்ந்து போகின்றது. தமிழ் சிங்கள மக்களின் பொது எதிரி இந்த அரசுதான் என்பதையும், சுனந்த தேசப்பிரிய உரை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. ஒரு சிங்கள ஊடகவியலாளராகவும், புத்திஜீவியாகவும் நின்று இதைக் கூறுவது, எமது அரசியல் கடமையை மேலும் தெளிவுபடுத்துகின்றது. மக்களின் எதிரிக்கு எதிராக, அனைவரும் ஒன்றிணைவதன் அவசியத்தை இந்த உரை தெளிவுபடுத்துவதுடன், அதை செய்யுமாறு உங்களை அழைக்கின்றது.
- ரவி - புகலிட சிந்தனை மையம் சார்பாக
சுனந்த தேசப்பரியவின் உரை...
வணக்கம்! ஆய்பவன்! அஸ்லாம் அலைக்கும்!
நான் சுனந்த தேசப்பிரிய. ஏற்கனவே என்னை அறிமுகப்படுத்தியதுபோல நான் மனித உரிமைகள் அமைப்புகளில் செயற்பட்டு வந்திருக்கிறேன். கடந்த காலத்திலே ஒரு ஊடகவியலாளனாக விமர்சனக் கண்ணோட்டத்தோடு பல கட்டுரைகளை எழுதியிருக்கிறேன்;. என்னுடைய கட்டுரைகள் சிங்களத்தில் ராவய என அழைக்கப்படும் மாற்றுப் பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது. இதன் தமிழ் மொழிபெயர்ப்புகள் குளோபல் தமிழ் நியூஸ் இணையத்தளத்திலும் உதயன், தினக்குரல் பத்திரிகையிலும் வெளிவந்திருக்கிறது. உண்மையிலே இந்த அரசாங்கத்தினுடைய போக்கையும் அவர்களுடைய நடவடிக்கைகளையும் விமர்சித்ததின் காரணமாக நான் அரசால் அச்சுறுத்தப்பட்ட ஒரு நபரானேன். என்னால் தென்னிலங்கையில் தொடர்ந்தும் வாழமுடியாத ஒரு சூழ்நிலையில் 2009 ஜனவரி நான் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஜரோப்பிய நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். 1991ம் ஆண்டின்பின்பு நான் மனித உரிமை ஆர்வலராகவும் ஜனநாயக விரும்பியாகவும் அதே நேரத்தில் ஒரு ஊடகவியலாளராகவும் செயற்பட்டிருக்கிறேன். ஆனால் ஒரு அரசியல் செயற்பாட்டாளராக நான் 1991ம் ஆண்டின்பின் செயற்படவில்லை என்பதை நான் உங்களிடம் குறிப்பிட வேண்டும்.
இலங்கை இனப்பிரச்சனையின் உள்ளக, வெளியக காரணிகளும் தமிழ் மக்களின் எதிர்காலமும் என்ற தலைப்பின் கீழ் உரையாற்ற பணிக்கப்பட்டிருக்கின்றேன். இந்த தலைப்பின்கீழ் நாங்கள் உரையாற்றுவதாக இருந்தால் ஒரு தனி மனிதனால் இந்த விடயத்தின் சகல அம்சங்களையும் உள்ளடக்கி உரையாற்ற முடியாது. இதை ஒரு கூட்டுவேலையால்தான் செய்யமுடியும். ஆனால் இங்கு என்னிடம் இந்தப் பணி தரப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையினுடைய எதிர்காலம் பற்றியும் இனமுரண்பாடு பற்றியும் உரையாற்றுவதாக இருந்தால் அது ஒரு பரந்து விரிந்த பிரச்சினையாக அமையும். அதுமட்டுமல்ல இலங்கையின் எதிhகாலம் இந்தப் பிரச்சினையில்தான் தங்கியிருக்கிறது என்பதையும் கூறியாக வேண்டும். நான் இந்த சபையிலே ஆற்றப்போகிற உரையில் நான் குறிப்பிடுகின்ற விடயங்கள் கலந்துரையாடலுக்கும் குறிப்பாக விவாதத்துக்கும் உரியவை. நான் கூறுகின்ற கருத்துக்கள் இறுதிமுடிவானவை என ஒருபோதும் கருதமாட்டேன். எனவே நாம் எல்லொரும் ஒன்றிணைந்து எதிர்கால இலங்கையை ஒரு சமாதானமான நாடாகவும், ஒரு ஜனநாயக நாடாகவும் எவ்வாறு மாற்ற முடியும் என்பதைப் பற்றி கலந்தாலோசிப்பதற்கு என்னுடைய கருத்துக்கள் உதவியாக இருக்கும் என நான் நினைக்கின்றேன். இங்கு மிகவும் முக்கியமான குறிப்புகளை மாத்திரம் உங்கள்முன் வைக்கிறேன்.
போர் இலங்கையில் முடிவுக்கு வந்திருக்கின்றது. உங்கள் எல்லோருக்கும் தெரியும் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது. இப்படியான ஒரு சூழ்நிலையில் நாம் இலங்கையினுடைய பிரச்சினைகளையும் இலங்கையினுடைய எதிர்காலத்தையும் நாம் நோக்குகின்றபோது தமிழ்த்தேசியம் மிகவும் பலவீனமடைந்த ஒரு நிலையில் இருக்கிறது என சொல்ல முடியும். அதேநேரத்தில் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒரு கட்டமைப்புக்கு உள்ளான ஒரு உறுதியான சிவில் சமூகத்தை நாம் காணமுடியாது உள்ளது. அதற்குக் காரணம் விடுதலைப் புலிகள் இப் பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டுக்குக் கீழ் வைத்திருந்த காலத்தில் எந்த ஒரு சிவில் அமைப்பையும் தளிர்விடவோ வளர்ச்சியடையவோ செயற்படவோ இடம் கொடுக்கவில்லை. இப்படியான ஒரு சூழலில் இலங்கையில் எந்த ஒரு அரசியல் கட்சியும் குறிப்பாக தமிழர்களது அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய எந்தவொரு அரசியல் அமைப்பையும் நாம் காணமுடியாத ஒரு சூழ்நிலையில் இருக்கின்றோம். சிவில் சமூக அமைப்பும் கிடையாது அரசியல் அமைப்பும் கிடையாது. இப்படியான இக்கட்டான ஒரு நிலையில்தான் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து மாற்றத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
தென்னிலங்கையினுடைய நிலைமையைப் பிரதிபலிப்பதற்கு சிறந்த அம்சம்தான் நேற்று நடந்து முடிந்த தென் மாகாணசபைத் தேர்தல். இந்தத் தேர்தலில் சிங்களத் தேசியம் மிகவும் உக்கிரமான முறையிலே வளர்ச்சியடைந்திருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. சிங்களத் தேசிய சக்திகள் மிகவும் பலம்வாய்ந்த முறையிலே செயற்படுகின்றன. இந்தத் தேர்தலின்போது மகிந்த ராஜபக்ச 68 வீதமான வாக்குகளை தென்மாகாணத்திலே பெற்றிருக்கின்றார். அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சி 25 வீதமான வாக்களைப் பெற்றிருக்கின்றன. 8 வீதமான வாக்குகளை மக்கள் விடுதலை முன்னணி பெற்றிருக்கின்றது. ஆகவே ஆசனங்கள் என்ற வகையில் நாம் பார்க்கும்போது 38 ஆசனங்களை மகிந்த ராஜபக்சவின் ஐக்கிய முன்னணி பெற்றிருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சி 14 ஆசனங்களையும், ஜேவிபி 3 ஆசனங்களையும் பெற்றிருக்கின்றன.
தென்மாகாண தேர்தலை ஏன் நான் எடுத்துக்காட்டுகிறேன் என்றால் இந்த மாகாணசபைத் தேர்தலின்போது அந்தத் தேர்தல் மேடைகளில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றியோ, தமிழ்மக்களின் அபிலாசைகள் பற்றியோ, இடம்பெயர்ந்த முகாம்களில் 3 இலட்சம் தமிழ் மக்கள் எப்படி அவதியுறுகிறார்கள்; என்பது பற்றியோ எதுவித பிரச்சாரங்களோ உரையாடல்களோ இடம்பெறவில்லை என்பதை சுட்டவே. இதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அங்கு இடம்பெற்ற ஒரே கருத்து என்ன? விடுதலைப் புலிகளை மகிந்த ராஜபக்ச இராணுவ ரீதியில் தோற்கடித்துவிட்டார்... இனிமேல் விடுதலைப் புலிகள் தலைதூக்காத வண்ணம் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்... எமது நாடு ஒரு ஒற்றையாட்சி நாடு... அந்த நாட்டை ஒரு ஒருமைப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம் என்பவைதான் முக்கியமான கருத்துகளாக முன்வைக்கப்பட்டன. அதே நேரத்தில் ஐதேகட்சி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் விடுதலைப் புலிகள் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்பட்டுவிடும் என்ற விவாதம்தான் முக்கியமாக முன்வைக்கப்பட்டது:
ஏன் இதைக் கூறுகிறேன் என்றால் புரையோடிப்போயிருக்கின்ற ஒரு முக்கிய பிரச்சினையான தேசிய இனப் பிரச்சினை பற்றி தென்னிலங்கையில் எதுவித கலந்துரையாடலோ விவாதமோ இடம்பெறவில்லை என்பதைக் காட்டவே. ஆகவே எதிர்காலத்தில் தமிழர்களுக்கு எப்படி அவர்களது அபிலாசைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய வகையில் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்வது, எப்படி அரசியலமைப்பினூடாக அதை முன்னெடுத்துச் செல்வது, இதன்மூலம் தமிழர்களின் பிரச்சினைக்கு நாம் எவ்வாறு தீர்வு காண்பது என்பது பற்றி தென்மாகாணத் தேர்தலில் எதுவிதமான கருத்தாடல்களும் இடம்பெறவில்லை. அதேசமயத்தில் 1994ம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்க அவர்கள் முதலமைச்சராக மேல்மாகாணத்தில் போட்டியிட்டபோதும் அதன்பின்னர் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் போட்டியிட்டபோதும் தமிழர்களின் பிரச்சினை ஒரு முக்கியமான பிரச்சினையாக கலந்துரையாடப்பட்டது. அதேசமயம் ரணில் விக்கிரமசிங்க அடுத்ததாக பதவிக்கு வந்தபோதுகூட தமிழர்களுக்கு சமஷ்டி முறையிலான ஒரு அமைப்புமுறை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இப்படியாக 1994 இல் இருந்த கலந்துரையாடல் எதுவுமே இந்த தென்மாகாணத் தேர்தலின்போது இடம்பெறவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்ததாக இந்த அரசியல் கட்சிகளிடையே விவாதங்களின்போது முன்வைக்கப்பட்ட முக்கியமான ஒரு கருத்தை நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும் மங்கள சமரவீரவின் கட்சியாக இருந்தாலும் இந்தக் கட்சிகளெல்லாம் கூறியது என்ன? எங்களுடைய நாட்டில் இராணுவம் வெற்றிகொண்டிருக்கிறது... எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவத்தை நாம் சிக்கலுக்கு உள்ளாக்கமாட்டோம்... குறிப்பாக போர்க்குற்றம் என்ற வகையில் குற்றங்களைச் சுமத்துவதற்கு அல்லது அதையொட்டிய விசாரணைகளை நடத்துவதற்கு சர்வதேச சமூகத்துக்கோ அல்லது சர்வதேச நீதிமன்றத்துக்கோ நாம் இடமளிக்க மாட்டோம் என்ற கருத்தைத்தான் அனைத்துக் கட்சிகளும் முன்வைத்தன.
இவ்வாறாக அவர்கள் முன்வைத்த முக்கியமான ஒரு விடயத்தை நாம் இங்கு கவனிக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்க தன் தேர்தல் பிரச்சாரங்களின்போது கூறினார், ~~ரணில் விக்கிரமசிங்க ஆகிய நான்தான் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அங்கத்துவம் பெறவேண்டும் என்பதை எதிர்த்து நின்றேன். அதில் கையெழுத்திடவில்லை. அதன்காரணமாகத்தான் எம்மீது சர்வதேச சமூகம் போர்க்குற்றத்தைச் சுமத்த முடியாத ஒரு நிலை எற்பட்டிருக்கின்றது||. மங்கள சமரவீரவும் அதே கருத்தைத்தான் சொன்னார். தான் அரசாங்கத்தில் இருந்தபோது இதில் கையெழுத்திடவில்லை. எனவேதான் நாம் இராணுவத்தை காப்பாற்ற முடிந்திருக்கிறது. எந்தவகையிலும் இலங்கையின் இராணுவத்தை, வெற்றியீட்டிய இராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்துக்குமுன் கொண்டுசெல்ல இடமளிக்க மாட்டோம் என்றார். இதுதான்; அவர்களது பிரச்சார கருப்பொருளாக இருந்தது.
நான் இவற்றையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் தென்னிலங்கையில் வாழும் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களின் உரிமைப் பிரச்சினை பற்றியோ அவர்களது அபிலாசைகள் பற்றியோ, அகதிகள் முகாம்களிலே துன்பப்படுகின்றதைப் பற்றியோ பெரும்பான்மை இனம் எந்தவிதமான அக்கறையும் கொண்டிருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டவே.
அதேநேரத்தில் தமிழ்மக்களின் எதிர்காலம் தமிழ்மக்களின் அபிலாசைகள் அல்லது சிந்தனைகள் பற்றி இன்னொரு கோணத்தில் நாம் பார்க்க முடியும். இந்த சூழ்நிலையில் நாம் கவனம் செலுத்தவேண்டிய முக்கியமான விடயங்கள் இருக்கின்றன. தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக உடனடித் தேவைகள், இடைக்காலத் தேவைகள் நீண்டகாலத் தேவைகள் என்பவற்றை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை நாம் பார்க்க முடியும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களுக்கு எந்த அரசியல் தீர்வு அமைய வேண்டும், எப்படியாக நாம் சர்வதேச சமூகத்தை அணிதிரட்ட வேண்டும், அரசியல் தீர்வு நோக்கி செல்வதற்கு உள்நாட்டில் உள்ள மக்களை எவ்வாறு நாம் அணிதிரட்ட வேண்டும் என்பன பற்றி சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். குறிப்பாக இந்த விடயத்தை நான் கூறுகின்றபோது ஒரு திறந்த மனதுடன்தான் குறிப்பிடுகின்றேன். இந்த விடயங்களைப் பொறுத்தவரையில் எனது கருத்துகள்தான் இறுதியான முடிவு என நான் சொல்ல வரவில்லை. நான் கூறுகின்ற கருத்துகள் விவாதத்துக்கு உரியவை. உங்களுடைய கருத்துகளையும் உள்வாங்கிக் கொண்டு ஒரு சிறந்த வழிமுறையை நாம் முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்பதுதான் எனது அவா.
குறுகிய காலப் பிரச்சினை என நாம் அணுகுகிறபோது அதில் ஒன்று மனித உரிமைப் பிரச்சினை. உங்கள் எல்லோருக்கும் தெரியும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இடம்பெறுகிறது. அவற்றில் முக்கியமானது 3 இலட்சம் மக்கள் முகாம்களில் அடைக்கபட்டிருக்கும் விடயம். அதை நலன்புரி முகாம் அல்லது அகதி முகாம் என்ற பெயரில் நாம் அழைக்க முடியாது. இடைத்தங்கல் முகாம் என்கிறார்கள், ஆனால் அது ஒரு சிறைக்கூடம் போன்றது. முட்கம்பி வேலிகளால் சுற்றிவளைக்கப்பட்டு இராணுவம் தொடர்ச்சியாக பாதுகாப்பு வழங்குகின்ற முகாமாக அது அமைந்திருக்கின்றது. முகாமிலுள்ள மக்கள் எந்தவகையிலும் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத ஒரு இக்கட்டான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். ஆகவே நாம் எதிர்நோக்குகின்ற பாரிய பிரச்சினையாக இந்த மனித உரிமைப் பிரச்சினை உள்ளது. குறுகியகால அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாக இது இருக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அதேநேரத்தில் போர் காரணமாக மிகவும் மோசமான முறையில் மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன. இதற்கு அரசை மாத்திரம் நாம் குற்றம் சுமத்தவில்லை அரசும் சகல போராளிக் குழுக்களும் இந்த மனித உரிமை மீறல்களைச் செய்திருக்கின்றன. இந்த மனித உரிமை மீறல்கள் தமிழ்மக்களுக்கு எதிராகச் செய்யப்பட்டிருக்கின்றன... சிங்கள மக்களுக்கு எதிராகச் செய்யப்பட்டிருக்கின்றன... முஸ்லிம் மக்களுக்கு எதிராகச் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தக் காயங்களை நாம் குணப்படுத்தாமல் ஒரு மீள் இணக்கத்தை எமது சமூகத்தில் உருவாக்குவது மிகமிகக் கடினமான காரியம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நாங்கள் உடனடியாக செய்யவேண்டிய அடுத்த நடவடிக்கை என்னவென்றால் இராணுவ மயமாக்கலை எதிர்ப்பது அதாவது இல்லாமல் செய்வது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுமையாக இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளன. எல்லா இடங்களிலும் சோதனைச் சாவடிகள் -போர் முடிந்த பின்னும்- இருக்கின்றன. அதே நேரத்தில் இலங்கையின் ஆயுதப்படைகளை 2 இலட்சமாக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த இரண்டு இலட்சம் இராணுவத்தினர் என்ன செய்யப் போகின்றார்கள். வடக்கு கிழக்கு மாகாணத்திலும் வன்னிப் பிரதேசத்திலும் அவர்கள் நிலைகொண்ட இராணுவமாக இருக்கப்போகின்றார்கள். சோதனைச் சாவடிகள் தொடர்ச்சியாக இருக்கப் போகின்றன. அப்படி இருந்தால் வடக்கு கிழக்கு மகாணத்தில் ஜனநாயகத்தையோ ஒரு அரசியல் தீர்வுக்கான சூழலையோ நாம் காணமுடியாது போய்விடும். எனவே இதற்கு எதிராகவும் நாம் செயற்பட வேண்டியிருக்கின்றது. அந்தப் பிரதேசத்தில் ஜனநாயகத்தையும் வேரூன்றச் செய்ய வேண்டியிருக்கிறது. இதனூடாகத்தான் ஒரு மீள் இணக்கத்தை நாம் இலங்கையில் ஏற்படுத்த முடியும். தென்னிலங்கையிலுள்ள ஜனநாயக உரிமைகளை வடக்கு கிழக்கு மக்களும் அனுபவிப்பதற்கான செயற்பாடுகளை நோக்கி நாம் முன்னேற முடியும்.
அடுத்த உடனடிப் பிரச்சினை விடுதலைப்புலிகளின் போராளிகளாக இருந்து தற்போது புனர்வாழ்வு முகாம்களில் இருப்பவர்கள் பற்றியது. சில அறிக்கைகள் 10 ஆயிரம் பேர் என குறிப்பிடுகிறது. சில அறிக்கைகள் 20 ஆயிரம் பேர் என சொல்கின்றன. இவர்களின் புனர்வாழ்வை எப்படி நாம் கையாளப் போகிறோம் என்பது அடுத்த பிரச்சினையாக வருகிறது. 3 இலட்சம் மக்களை திரும்ப குடியேற்றினாலும், பின் வரப்போகிற முக்கியமான பிரச்சினை இது. ஏனெனில் இந்தப் போராளிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற மக்களின் பிள்ளைகளாக, உறவினர்களாக இருக்கின்றனர். எனவே இவர்களுக்கு எப்படி புனர்வாழ்வு அளிப்பது என்பது பற்றியும் முக்கியமாக சிந்திக்க வேண்டியிருக்கின்றது.
இடைக்கால நடவடிக்கை என்ற வகையில் நான் கருதுவதில் முக்கியமானது ஒரு ஜனநாயக சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது. அதேபோல தமிழ்மக்களின் அபிலாசைகளை முழுமையாக தீர்க்க முடியாத நிலைமை இருந்தாலும், குறைந்தபட்சம் 13வது சட்டத் திருத்தம் அல்லது அதற்கும் அப்பால் செல்லக்கூடிய வகையிலான திருத்தங்களை நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. அந்த திருத்தங்களின் அடிப்படையிலே வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதனூடாக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட வேண்டும். அதை இடைநிலைப் பிரச்சினையாக நான் கருதுகிறேன்.
அடுத்தது நீண்டகால திட்டம். இதை நான் சொல்கிறபோது தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கக்கூடிய ஒரு திட்டத்தை, குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகாரப் பகிர்வை ஏற்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். அதை நாங்கள் உடனடியாகச் செய்ய முடியும் என நான் சொல்லவில்லை. அது நீண்டகாலம் எடுக்கும். இந்த அதிகாரப் பகிர்வை மையமாக வைத்து, அபிவிருத்தியாக இருக்கலாம் அல்லது சமூக அரசியல் பிரச்சினைகளாக இருக்கலாம், இவற்றை நாம் எப்படி தீர்ப்பது என்பது பற்றி அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இது ஓரிரண்டு ஆண்டுகளில் செய்யக்கூடியது அல்ல. அதற்கு நீண்ட காலம் எடுக்கும்.
இப்போ மீண்டும் உடனடிப் பிரச்சினைக்கு வருகிறேன். உடனடிப் பிரச்சினை என ஏற்கனவே நான் குறிப்பிட்ட விடயம் உங்களுக்குத் தெரியும். மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைதான் அது. முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் மக்களின் விடுதலை சம்பந்தமான பிரச்சினைதான் அது. இந்தப் பிரச்சினையில், ஜேவிபி ஒரு தேசியவாதக் கட்சியாக இருந்தாலும், அவர்கள் கொள்கை ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் ஒரு முடிவை எடுத்திருக்கின்றார்கள். இந்த 3 இலட்சம் மக்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே அது. அது ஒரு சிங்கள தேசிய கட்சியாக இருந்தாலும் போராளிகள் சம்பந்தமான பிரச்சினையில் அரசு புனர்வாழ்வளிக்க தடுத்துவைத்திருக்கும் பத்தாயிரம் போராளிகளினதும் பெயர்களை ஆவணப்படுத்தி பாராளுமன்றத்தில் வெளியிடும்படி கோரியுள்ளது.
அடுத்ததாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிறுவப்பட்டுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயம் சம்பந்தமான பிரச்சினை. இந்தப் பிரச்சினையை படிப்படியாகத் தீர்க்க வேண்டும் என்பதையும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதை அவர்கள் தமது இணையத்தளங்களிலும் வெளியிட்டுள்ளார்கள். அதை ஆங்கிலத்தில் வெளிவரும் "லங்கா ற்றுத்" இல் பார்க்கலாம். கொள்ளை ரீதியாக இந்த நிலைப்பாட்டை அவர்கள் எடுத்திருக்கிறார்கள். மற்றுமொரு அரசியல் கட்சியான மங்கள சமரவீரவின் கட்சியும் இதே நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. அதேநேரம் தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்த தமது பிரகடனத்தில், எவ்வளவு துரிதமாக முடியுமோ அவ்வளவு துரிதமாக இந்த மூன்று இலட்சம் மக்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வெளியிட்டிருக்கிறார்கள்
இடைத்தங்கல் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக சர்வதேச அழுத்தங்கள் எப்படியிருக்கின்றன என்பதை நாம் பார்க்க முடியும். இந்த வகையிலே நாமும் எம்மாலியன்ற அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து. குறிப்பாக இந்தியா பல்வேறு அழுத்தங்களை மேற்கொண்டிருக்கின்றது. ஐநா சபை மேற்கொண்டிருக்கின்றது. அதேபோல் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் மேற்கொண்டிருக்கின்றன. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதி ஒருவர் 30 நாட்களாக அங்கு தங்கியிருந்து தகவல்களை சேகரித்தள்ளார். அந்த மக்களோடு கலந்துரையாடி மக்களின் சாட்சியங்களையம் அவர் பெற்றிருக்கின்றார். சர்வதேச மனித உரிமைகள் அமைப்பும் இந்தியாவில் இருந்துகொண்டு பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்திருக்கின்றன.
மழைக்காலம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது. அதற்குமுன் முழுமையாக அவர்களை மீள்குடியேற்றம் செய்ய முடியாவிட்டாலும் மழையால் பாதிக்கப்படக்கூடிய முகாம்களில் இருப்பவர்களை உடனடியாக வேறு முகாம்களுக்காவது இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது முக்கியமானது. இந்தப் போரில் வெற்றிபெற்றபின் ஜனாதிபதி 180 நாட்களுக்குள் இந்த மக்களில் 80 வீதமானோர் விடுவிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழியை வழங்கியிருந்தார். அந்த உறுதிமொழி முடிவடைவதற்கு இன்னும் 45 நாட்கள்தான் இருக்கின்றன. உருப்படியாக எதுவும் நடைபெற்றதாக இல்லை. அகதிகள் மழையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே நாம் இதுகுறித்தான அழுத்தங்களை எம்மாலியன்ற வழிகளில் கொடுத்தாக வேண்டும்.
மற்றைய பிரச்சினை மனித உரிமை மீறல்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. குறிப்பாக போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை பற்றி முடிவுக்கு வருவது அவ்வளவு இலகுவல்ல. இந்தப் போரின்போது ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி ஒரு சுதந்திரமான விசாரணைக் குழுவை அமைப்பதாக ஜனாதிபதி அவர்களும் ஐநா சபையின் செயலாளர் நாயகமும் கூட்டாக ஒரு உடன்படிக்கையில் கைச்சாந்திட்டார்கள். ஆனால் இந்த உடன்படிக்கை அமுல்படுத்தப்படும் அறிகுறி இன்றுவரை தென்படவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
தென்னிலங்கையில் மொரட்டுவப் பிரதேசத்தில் அண்மையில் இரண்டு இளைஞர்கள் பொலிசாரால் சுடப்பட்டார்கள். அவ்வாறாகக் கொலையுண்டவர்களின் குடும்பத்துக்கு 5 இலட்ச ரூபா வீதம் ஜனாதிபதி நட்டஈடு வழங்கினார். சிங்களவர்களுக்கு இது உண்டென்றால் தமிழர்களுக்கும் இதே நியாயம் வழங்கப்பட வேண்டும். போரின்போது இராணுவத்தினால் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். கொலையுண்டவர்களை அடையாளம் கண்டு அவர்களின் உறவினர்களுக்கு தகுந்த முறையில் நட்டஈடு வழங்கப்பட வேண்டும். 1989,90 களில் சுமார் 60 ஆயிரம் சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் கொல்லப்பட்டார்கள். 1994 இலே இதை விசாரிப்பதற்கான ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்த ஆணைக்குழுக்களின் விசாரணைக்குப் பின்பு அந்தந்தக் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டது. ஒருவரின் மரணத்துக்கு நிதிமூலம் நட்டஈடு வழங்கி ஈடுசெய்ய முடியும் என நான் சொல்ல வரவில்லை. ஆனால் குறைந்தபட்சம் அந்த நட்டஈட்டை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனூடாகத்தான் இந்த மீள் இணக்கத்தின்மீது ஒரு நம்பிக்கையை உண்டாக்க முடியும். ஆகவே இந்த வகையிலும் நாம் செயற்பட வேண்டியிருக்கிறது. இது எம்மத்தியில் உள்ள ஒரு பாரிய சவாலாகும்:
1989,90 களில் கிளர்ச்சியின்போது இளைஞர்களும் யுவதிகளும் இதே இராணுத்தால்தான் கொல்லப்பட்டார்கள். இன்றைய ஜனாதிபதி அன்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர். அவரும் மங்கள சமரவீர மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்றவர்களும் ஜெனீவாவுக்கு வந்து ஐநாவில் இந்த விடயங்களைப் பற்றி எடுத்துக் கூறினார்கள். படையினருக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்தார்கள். தொடர்ச்சியாக 1990 இலிருந்து 1993 வரை இதுபற்றிய ஒரு பரந்து விரிந்த கலந்துரையாடல்கள் தென்னிலங்கையில் நடைபெற்றன. இதன்காரணமாக 3 ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டது. கொலையுண்ட இளைஞர் யுவதிகளின் பெற்றோர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டது.
ஆனால் இன்றைய சூழலை எடுத்துப் பார்க்கின்றபோது இவ்வாறாகக் கொலைசெய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் யுவதிகளுக்கான இந்த நட்டஈடு பற்றி எதுவிதமான குரல்களையும் விவாதங்களையும் நாம் காணமுடியாதுள்ளது. எந்த ஒரு அரசியல் கட்சியும் இதுதொடர்பான சரியான ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுக்கவில்லை. சர்வதேச சமூகம் சிற்சில சந்தர்ப்பங்களில் இதுபற்றிப் பேசினாலும் அழுத்தங்களைக் கொடுத்தாலும் உள்நாட்டில் இந்த விவகாரத்தில் ஒரு மக்கள் செயற்பாடு அல்லது ஒரு அலை எள்ளளவும் காணப்படவில்லை. உங்கள் எல்லோருக்கும் தெரியும், ஒரு பிரச்சினை மீது உள்நாட்டில் சமூகம் திரண்டு எழுந்தால்தான் சர்வதேச சமூகமும் அதுபற்றிக் கவனிக்கும். அதாவது உள்நாட்டில் ஒரு பிரச்சினை முக்கியப்படுத்தப் படாமல் விட்டுவிட்டால் சர்வதேச சமூகமும் அதைக் கவனிக்காமல் விட்டுவிடும். எனவே இதுவிவகாரமாகவும் உள்நாட்டில் ஒரு பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்தாடல்களை உருவாக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
அடுத்ததாக ஜனநாயக சூழலை ஏற்படுத்துவது பற்றி நாம் பேசுவதாக இருந்தால், இராணுவ மயமாக்கலை எவ்வாறு படிப்படியாக நீக்கிவிடுவது என்பது மிகவும் முக்கியமான பிரச்சினை. உங்களுக்குத் தெரியும் வடக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் இருக்கின்றன. தொடர்ந்தும் செயற்படுகின்றன. அதேபோல் வாகரையிலும் இப்படியான பாதுகாப்பு வலயப் பிரதேசங்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, பரந்தன் போன்ற பிரதேசங்களில் பாரிய இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதற்கான திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. கிளிநொச்சியில் வடபகுதியின் முக்கிய பாரிய முகாம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு எதிரான ஒரு மக்கள் இயக்கத்தை இலங்கையில் நாம் காணமுடியாதுள்ளது. சர்வதேச அளவிலும் இதற்கெதிரான அழுத்தத்தை காணமுடியாதுள்ளது. விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் வேரறுக்கப்பட்டுள்ள நிலையில் ஏன் வடமாகாணத்துக்கு 50 ஆயிரம் இராணுவம் தேவைப்படுகிறது என்பதை விளங்கிக்கொள்ள முடியாதிருக்கிறது. எனவே இந்தப் பிரச்சினை தொடர்பாகவும் நாம் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டியுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இராணுவ தளபதிகளாகத்தான் இருக்கிறார்கள். சந்திரசிறீ என்பவர் வடக்கு மாகாணத்துக்குப் பொறுப்பாக இருக்கின்றார். மொகான் என்பவர் கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பாக இருக்கின்றார். அண்மையில் இந்தியாவிலிருந்து வந்திருந்த தூதுக் குழுவிற்கு இராணுவத் தளபதி மொகான் இராப்போசன விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் இந்த விருந்துக்கு அந்த மாகாணத்தின் அமைச்சர்களோ முதலமைச்சரோகூட அழைக்கப்படவில்லை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை புறந்தள்ளிவிட்டு இராணுவ மேலாதிக்கம் எழுகின்ற ஒரு நிலைமையைத்தான் நாம் இதனூடாகக் காண்கின்றோம். தெற்கிலுள்ள மாகாணசபைகளில் ஆளுநர் ஒரு சம்பிரதாயபூர்வமாகத்தான் செயற்படுகின்றார். ஆனால் வடக்கு கிழக்கிலுள்ள ஆளுநர்கள் அதிகாரம் படைத்த ஆளுநர்களாக செயற்படுகின்றார்கள். மாகாணசபையின் முதலமைச்சரையோ அமைச்சர்களையோ பொருட்படுத்தாத ஆளுநர்களாகத்தான் இவர்கள் இருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் எல்லோரும் கூட்டாக கையெழுத்திட்டு இந்த ஆளுநர் வேண்டாம் என மறுப்பைத் தெரிவித்துள்ளார்கள். இந்தியாவில் காஷ்மீர் எவ்வாறாக இராணுவ அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகின்றதோ அவ்வாறான நிலைமையைத்தான் இலங்கையில் எதிர்காலத்தில் வடக்குக் கிழக்கிலும் எதிர்பார்க்க முடியும்.
அடுத்து ஜனநாயகமயப்படுத்தல் என நாம் சொல்கின்றபோது தமிழர்களுடைய அபிலாசைகள் அவர்களது பிரதிநிதித்துவம் என்பன உரியமுறையில் கிடைக்க வழிவகை செய்யப்படவேண்டும். வடமாகாண தேர்தலைப் பார்க்கின்றபோது 20 வீதமான மக்கள்தான் அங்கு வாக்களித்தார்கள். வவுனியாவில் 40 வீதமானவர்கள் வாக்களித்திருந்தார்கள். சித்தார்த்தன் தலைமையில் இயங்கும் புளொட் அமைப்பு சுதந்திர அமைப்பாக போட்டியிட்டதால் கணிசமான ஆசனங்களைப் பெறக்கூடியதாக இருந்தது. இதை சித்தார்த்தன் வெளிப்படையாகச் சொல்லியிருந்தார். ஈபிடிபி; இன் சின்னம் வீணை. ஆனால் டக்ளஸ் வீணைச் சின்னத்தில் போட்டியிட்டால் அமைச்சர் பதவி இல்லாமல் போய்விடும் என அரசு சொல்லிவைத்தது. வெற்றிலைச் சின்னத்தின்கீழ் போட்டியிட அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். அதனால்தான் தேர்தலின்பின் அவர் கூறுகையில் இதை தான் மகிழ்ச்சியோடு ஏற்கவில்லை என்றார். வேறு தேர்வுகள் இல்லாத நிலையில் தான் இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டேன் எனக் கூறினார். தமிழ்மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்க் கட்சிகள் அமைப்புகள் சுதந்திரமாக இயங்குவதற்கான ஜனநாயகம் இருக்க வேண்டும். அந்தக் கட்சிகளின் கொள்கைகள் சரியா பிழையா என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்கள்தானேயொழிய பெரும்பான்மையின அரசியல்வாதிகள் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஜனநாயகமயப்படுத்தல் நிகழும் பட்சத்தில் தேர்தல்கள் இடம்பெறுகின்றபோது இலங்கையின் ஏனைய அரசியல் கட்சிகளும் சிவில்சமூகமும் இந்தத் தேர்தலானது நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலாகவும் அதேபோல வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தலாகவும் அமையவேண்டும் என்பதற்கான அழுத்தங்களைக் கொடுப்பார்கள். அவர்கள் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் அந்த அழுத்தங்களைக் கொடுப்பார்கள். அதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
1971ம் ஆண்டு கிளர்ச்சி உங்களுக்குத் தெரியும். இந்தக் கிளர்ச்சியில் நானும் தலைமை மட்டத்தில் இருந்த ஒருவன். இதன்போது 20 ஆயிரம் இளைஞர் யுவதிகள் கைதுசெய்யப்பட்டார்கள். ஆனால் 18 ஆயிரம் இளைஞர்கள் ஒரு ஆண்டுக்குள் விடுவிக்கப்பட்டார்கள். 2000 கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத்தான் வழக்கு தொடரப்பட்டது. இவ் வழக்கு தொடரப்பட்டபோது இப்போதிருக்கின்ற பயங்கரவாதத் தடைச் சட்டம் அன்று இருக்கவில்லை. எனவே குற்றவியல் நீதி ஆணைக்குழு என்ற விசேட ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு முன்னிலையில் இந்த 2000 பேருக்கு எதிரான குற்றப் பத்திரிகைகள் சமர்ப்பிக்கப்பட்டு விசாரிக்கப்பபட்டார்கள். எனக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. விஜயவீரவுக்கு 20 ஆண்டுகள் விதிக்கப்பட்டது.
1977 இல் ஜேஆர் ஜெயவர்த்தன பதவிக்கு வந்தார். அவர் குற்றவியல் ஆணைக்குழுவை வாபஸ் பெற்றார். அதனால் சிறையிடப்பட்ட நானும் விஜயவீரவும் ஏனைய தோழர்களும் விடுவிக்கப்பட்டோம். அந்த நாட்களில் எமது அரசாங்கம் எமது நாட்டில் அரசியல் கைதிகள் இல்லை என்றுதான் சொன்னார்கள். ஆனால் மக்கள் மத்தியில் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான இயக்கம் என ஒரு இயக்கம் உருவாக்கப்பட்டது. ஏனெனில் தென்னிலங்கையில் வாழ்ந்த பெரும்பான்மை இளைஞர் யுவதிகள் இந்த கிளர்ச்சியிலே பங்குபற்றியிருந்தார்கள். அந்த இயக்கத்தின் அழுத்தத்தால்தான் அரசாங்கமும் தனது நிலையில் சில மாற்றத்தை ஏற்படுத்தியது. சர்வதேச சமூகமும் தலையிட்டது.
அதேபோல் 1989 இல் இடம்பெற்ற கிளர்ச்சியின்போது அந்தக் கிளர்ச்சிக்கு தலைமைதாங்கிய முக்கிய தலைவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டார்கள். ஜேவிபி தலைவர் ரோகண விஜயவீரவும் இராணுவத்தினரால் கொல்லப்பட்டார். அதேநேரத்தில் இன்றைய பாராளுமன்றத்தில் உள்ள ஜேவிபி உறுப்பினர்கள் அன்று பல கொலைகளுக்கு பொறுப்பானவர்கள். கொலைகளைச் செய்வதற்கு திட்டங்களைத் தீட்டியவர்கள். அப்படியிருந்தும்கூட அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். 1989 இல் விசேட சட்டம் எதுவும் கொண்டுவரப்படவில்லை. இந்த நிலைமைகளை நாம் எடுத்துப் பார்க்கின்றபோது வடக்கிலும் கிழக்கிலும் உள்ள இளைஞர் யுவதிகள் அரசுக்கு எதிராக கிளர்ச்சியைச் செய்திருக்கிறார்கள் 1971 இல் நாமும் அரசுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியைத்தான் செய்தோம்.
எனவே தடுப்புக் காவலில் உள்ள போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும். தலைமைக்கு எதிராக வழக்குத் தொடரப்படலாம். ஆனால் சாதாரணமாக இந்த இயக்கத்தில் இணைந்தவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைக்கு சமூகத்தில் ஒரு கருத்தாடல் இடம்பெற வேண்டும். ஆனால் துரதிஸ்டவசமாக சிங்களப் பகுதியிலோ அல்லது தமிழ்ப் பகுதிலோ அல்லது சர்வதேச ரீதியாகவோ இதுசம்பந்தமான எதுவித கருத்துகளையோ கலந்துரையாடல்களையோ நாம் காண முடியவில்லை.
உடனடியாகச் செய்யப்பட வேண்டிய விடயத்தில் முக்கியமான அம்சமாக இருக்கும் மீள்குடியேற்றத்தை நாம் ஏற்படுத்துகிறபோது தமிழ்மக்கள் கௌரவமாக நடத்தப்பட வேண்டும். மற்றைய விடயங்களைப் பொறுத்தவரையில் சாதகமான நிலைமை இப்போதைக்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் நினைக்கிறேன் குறைந்தபட்சம் அரசியலை ஜனநாயகப்படுத்துவதற்கான வழிமுறைகளிலாவது நாம் செயற்பட வேண்டியுள்ளது. மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் செயற்பட வேண்டியுள்ளது. இந்த விடயத்தில் இலங்கைக்கு உள்ளும் வெளியிலும் சில சக்திகள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் பொறுப்பிருக்கின்றது. அதற்கான ஒரு தளத்தை நாம் ஏற்படுத்தி செயற்பட வேண்டியிருக்கிறது.
இந்த விடயத்தில் பல நடவடிக்கைகளை ஆக்கபூர்வமாகச் செய்யவேண்டியிருக்கின்ற அதே நேரத்தில் நீண்டகாலத் திட்டம் என்கிறபோது அதிகாரப் பகிர்வு விடயத்தை நாம் சட்டரீதியாக உருவாக்க வேண்டும் என்பது கவனிக்கப்பட வேண்டியது. அதேநேரத்தில் ஒரு நீதியான நியாயமான தேர்தலை நடத்தவேண்டும். தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து தம்மைத் தாமே ஆட்சிசெய்யக்கூடிய உள்ளகக் கட்டுமானத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்கான கருத்தாடல்களோ விவாதங்களோ இன்னும் தென்னிலங்கையில் உருவாகவில்லை. ஆனாலும் சிற்சில இடங்களில் ஒருசில சக்திகள் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் சொல்லமுடியும்.
மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வமான நிலைப்பாடு என்பது தமிழ்மக்களுக்கென்று விசேடமான பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதே. அவர் ஐநா சபையில் உரையாற்றும்போதும் சொன்னார், “சிங்கள மக்களுக்கு இருக்கும் பிரச்சினைதான் தமிழ் மக்களுக்கும்; இருக்கிறது. இலங்கையில் தமிழர்களுக்கு தேசிய இனப் பிரச்சினை என்ற ஒன்று இல்லை. அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று மொழிப் பிரச்சினை. மொழிப் பிரச்சினையை நாம் தீர்த்திருக்கின்றோம். அவர்களுக்கான வீதிகளையும் வீடுகளையும் கட்டிவிட்டால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்”. இதுதான் அவரது நிலைப்பாடு.
கடந்த 30 ஆண்டுகாலமாக இடதுசாரிகளாக இருக்கலாம் அல்லது சமூக அக்கறை கொண்டவர்களாக இருக்கலாம் அவர்கள் எல்லோருமே "தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக்கிறது. அதற்கு நாம் முகங்கொடுக்க வேண்டும். அதற்கு தீர்வுகாண வேண்டும்" என்பதைப் பற்றித்தான் விவாதித்திருக்கிறோம். அதுமட்டுமல்ல 1977 இல் ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலே தமிழ் மக்களுக்கு இருக்கும் நான்கு முக்கிய பிரச்சினைகள் பற்றி எடுத்துக் கூறினார்கள். நிலம், மொழி, தொழில்வாய்ப்பு, பாதுகாப்பு என நான்கு விடயங்களில் பிரச்சினைகள் இருக்கின்றன என ஒப்புக்கொண்டார்கள். அதன்பின்பு பதவியேற்ற ஏனைய பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் எல்லோராலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
ஆனால் இன்று நாம் எதிர்நோக்கும் சிக்கலான நிலைமை என்னவென்றால் இன்றைய அரசின் உத்தியோகப+ர்வமான நிலைப்பாடு என்ற வகையில் "தமிழர்களுக்கென்று ஒரு விசேடமான பிரச்சினை இல்லை... அதனால் அவர்களுக்கென்று விசேடமான தீர்வு என்று எதுவுமில்லை" என்பதே. இது மீண்டும் 30 வருடங்கள் பின்னோக்கிச் செல்வதாக இருக்கிறது. இதன்மூலம் கடந்த 30 வருடகாலமாக சிவில் சமூகத்துள் கலந்துரையாடப்பட்ட அல்லது முன்னெடுக்கப்பட்ட தமிழர்களின் பிரச்சினை அநாதரவாக கைவிடப்பட்டிருக்கிறது. சிவில் சமூகத்துள்; முன்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த அரசியல் நிலை இப்போது முற்றாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் அதிகாரப் பகிர்வு பற்றி பேசுவதில் நாம் மிகவும் சிக்கலான நிலையைத்தான் எதிர்நோக்கியிருக்கின்றோம்.
"இலங்கை என்பது சிங்கள பௌத்தர்களுக்கு உரிய நாடு. அதைக் காப்பாற்றுவதற்குத்தான் நான் போராடுகின்றேன்... இந்த நாட்டில் சிறுபான்மை இனங்கள் வாழலாம். ஆனால் அவர்கள் தேவையற்ற கோரிக்கைகளை முன்வைக்கக்கூடாது" என்று இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் சொல்லியிருந்தார். அரசு இந்தக் கூற்று சம்பந்தமாக அவர் தவறிழைக்கிறார் என்ற விடயத்தை சொல்லிவைக்கவில்லை. அதை அவர் வாபஸ் பெறும்படி கேட்கவுமில்லை. சில நாட்களுக்கு முன் ஐதேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொன்னார், ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் எல்லோரும் சேர்ந்து சரத் பொன்சேகாவை போட்டியிட வைக்க வேண்டும் என்றார். சரத் பொன்சேகா எதிர்க்கட்சியினர்pன் பொது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவது பற்றி பெரியளவில் கருத்தாடல்கள் நிகழ்கின்றன. இலங்கையின் அரசியல் போக்கை இது காட்டுகிறது.
கடந்த ஆண்டுகளில் இலங்கையின் இன்னொரு போக்கையும் நாம் கண்டுகொள்ளலாம். பிள்ளையான் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர். அவர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்களை அவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதுபற்றி அவர் வாய்திறந்து பேசியபோது அதற்கெதிரான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. அவருடைய பல போராளிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில் அவர் சுதந்திரமான மனிதனாக நடமாட முடியாது. இன்றைய நிலையில் ஒருவித வீட்டுக்காவல் நிலையில் அவர் அகப்பட்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
ஒரு மாகாணத்தின் முதலமைச்சர் தனது மாகாணசபை அதிகாரத்தில் காணி அதிகாரங்களை அல்லது பொலிஸ் அதிகாரங்களைக் கேட்கிறபோது அல்லது கூடிய அதிகாரங்கள் பற்றிப் பேசுகிறபோது அவரது குரல் நசுக்கப்படுகின்றது. அவருக்கு எதிர்நிலையில் உள்ள கருணா அவர்கள் போற்றிப் புகழப்படுகிறார். அதேபோல ஆனந்த சங்கரி அவர்களையும் டக்ளஸ் அவர்களையும் எடுத்துப் பார்க்கின்றபோது ஆனந்தசங்கரியை விடவும் டக்ளஸ் போற்றப்படுகிறார். இப்படியாக தமிழ்த் தலைவர்களை பகடைக் காய்களாக பாவிப்பதைத்தான் இலங்கையின் ஆட்சியாளர்களிடம் நாம் காண்கிறோம். சர்வதேச சமூகத்துக்கு இந்த ஆட்சியாளர்கள் என்ன சொல்ல விளைகிறார்கள்? "எங்கள் அரசில் தமிழ் அமைச்சர்கள் இருக்கிறார்கள்... தமிழ் அதிகாரிகள் இருக்கிறார்கள்" என்று சொல்லி சாக்குப்போக்குக் காட்ட முற்படுகிறார்களே ஒழிய நேர்மையான விதத்தில் அதிகாரப் பகிர்வை இலங்கையில் அமுல்படுத்துவதற்கு எந்தவிதமான ஆர்வத்தையும் அவர்கள் காட்டவில்லை.
பேராசிரியர் திஸ்ஸவிதாரண அவர்களை தலைவராகக் கொண்ட சர்வகட்சி மாநாட்டினது உத்தியோப+ர்வமான இறுதி அறிக்கையை எடுப்போம். அவர் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார், "எமது இறுதி அறிக்கையை உத்தியோகப+ர்வமாக ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைத்துவிட்டோம்” என்று. ஆனால் ஜனாதிபதி செயலகம் சொல்கிறது, "எங்களுக்கு அப்படி ஒரு அறிக்கை கிடைக்கவில்லை” என்று. எனவே இதுசம்பந்தமான கலந்துரையாடல் இல்லாமல் போய்விட்டது. 200 தடவைகளுக்கு மேல் சர்வகட்சி மாநாடு கூடியிருக்கிறது. பல ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று எதுவிதமான பயனோ கருத்தாடலோ அங்கு இடம்பெறவில்லை. திஸ்ஸவிதாரணவின் இறுதி அறிக்கையின்படி 13வது அரசியல் யாப்புக்கான திருத்தத்தில் மாகாணசபைகள் தொடர்பான சட்டவாக்கம் 3 நிரல்கள் இருக்கின்றன. ஒருங்கிய நிரல், மூடிய நிரல், பாராளுமன்றம் மட்டும் சட்டம் இயற்றக்கூடிய நிரல் என 3 நிரல்கள் இருக்கின்றன. ஒருங்கிய நிரலை இல்லாமல் செய்ய வேண்டும். இரண்டாவது சபையை அதாவது செனற் சபையை உருவாக்க வேண்டும் என்ற பரிந்துரைகள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இன்றைய நிலையில் இவை நல்ல பரிந்துரைகள். அதிகாரப் பரவலாக்கத்துக்கான நல்ல ஆரம்பமாக இது அமையும். ஆனால் அதைப்பற்றி கருத்துத் தெரிவிப்பதற்கோ விவாதிப்பதற்கோ எதுவிதமான சுதந்திரமும் இல்லாத நிலை அல்லது ஒரு உறைநிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஜனாதிபதி அவர்கள் இந்தியாவுக்கு உறுதிமொழி கூறியிருக்கின்றார், "13வது திருத்தத்துக்கு அப்பால் நாம் செல்வோம்" என்று. ஆனால் ஜனாதிபதியின் இன்றைய நிலைப்பாட்டைப் பார்க்கின்றபோது அவர் இந்தியாவைக் கையாள சீனாவையும் ஈரானையும் லிபியாவையும் கூடுதலாக அரவணைத்துக்கொள்ள முற்படுகிறார். அதனால் இந்தியா தனது அழுத்தத்தை எந்தளவில் கொடுக்க முடியும் என்பது கேள்வியாகிறது. இந்தத் தந்திரோபாயத்தைத்தான் ஜனாதிபதி கையாண்டுகொண்டிருக்கின்றார்.
அரசை நாம் எடுத்துப் பார்க்கின்றபோது 13வது அரசியல் யாப்புக்கான திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு எதிராகத்தான் ஜனதா விமுக்திப் பெரமுன அல்லது ஜாதிக கெல உறுமய, மகாஜன எக்சத் பெரமுன போன்ற அமைப்புகள் தொடர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. அரசு அல்லது ஆட்சியிலுள்ள கட்சிகள் இந்த 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கான எந்தக் கருத்தாடலையும் மேற்கொள்ளவில்லை. அல்லது அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மாறாக அதை தட்டிக் கழிக்கின்றன அல்லது எதிர்க்கின்றன. ஆகவே இப்படியான சூழ்நிலையில் இலங்கையைப் பொறுத்தவரையில் சரியான அரசியல் கலாச்சாரத்தை நாம் காணமுடியாது. அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தமாக கடந்த 20 ஆண்டு கால வரலாற்றை நாம் எடுத்துப் பார்க்கும்போது இன்னுமின்னும் பல பாடசாலைகள் வைத்தியசாலைகள் என்பன தேசியப் பாடசாலைகளாகவும் தேசிய வைத்தியசாலைகளாகவும் உருமாற்றப்படுகின்ற நிலையைத்தான் நாம் காண்கின்றோம். மத்தியில்அமைச்சரவை பெரிதாக விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது. அதிகாரம் மையத்திலேயே குவிக்கப்படுவதை இவை காட்டுகின்றன. ஆகவே மாகாணசபைகளுக்கான இந்த அதிகாரப் பரவலாக்கல் கலாச்சாரம் கடந்த 20 ஆண்டுகளிலும் அமுல்படுத்தப்படவில்லை என்பதை நாம் கூறமுடியும். இந்தக் கலாச்சாரம் உடனடியாக மாறும் என நான் நினைக்கவில்லை. இதற்கு காலம் பிடிக்கும் என்றே சொல்லமுடியும்.
மலேசியாவில் மலாயர்கள் அரசியல் அதிகாரங்களை தமது கையில் வைத்துக்கொண்டுள்ளார்கள். அங்கு சீனர்களும் ஏனைய இனத்தவர்களும் வாழலாம், அரசியல் அதிகாரமின்றி. அதாவது மலேசியாவில் மலாயர்களுக்குத்தான் பிரதான இடம் இருக்கிறது. இதேபோலத்தான் இலங்கையிலும் சிங்கள பௌத்தர்கள் அதிகாரத்தில்; இருப்பார்கள்;... ஏனைய சிறுபான்மையினங்கள் வாழலாம்... ஆனால் அரசியல் அதிகாரங்கள் இருக்காது என்ற நிலையை நோக்கி செல்வதாகவே படுகிறது. இவ்வாறான நிலை உருவாகுமானால் அதிகாரப் பரவலாக்கல் நிகழ்வதற்கு அல்லது தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைப்பதற்கு நீண்டதூரம் பயணிக்கவேண்டியிருக்கும்.
நன்றி. வணக்கம்!