ஹிட்லரின் வீழ்ச்சிக்குச் சற்றுப் பின்னதாக உலகம் முழுவதும் நாஸி இராணுவத்துடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்து செயற்பட்ட பலருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. ஜேர்மனியில் நூரம்பேர்க்கிலும், பிரான்சில் பியேர் லாவாலிலும் என்று ஒவ்வொரு நாடுகளிலும் குற்றவியல் நீதிமன்றங்கள் மனிதத்திற்கு எதிரான குற்றங்களுக்காகத் தண்டனை வழங்கின.
இந்த விசாரணைகளிலிருந்தெல்லாம் தப்பித்துக்கொண்ட சிறப்புரிமை கொண்ட மேல் மத்தியதர வர்க்கத்தின் பிரதிநிதிகளில் பலர் ஐம்பது நீண்ட ஆண்டுகளின் பின்னரும் கைது செய்யப்பட்டுத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
நாசிப் படைகளின் மனிதப் படுகொலைகளோடும், ஆக்கிரமிப்போடும் தம்மை இணைத்துச் செயற்பட்ட பலர் முன்வைத்த நியாயங்களிலெல்லாம் ஒரு பொதுத் தன்மை காணப்பட்டது. இவர்களில் பெரும்பான்மையானோர் ஹிட்லரோடு இணைந்து மட்டும்தான் மக்களுக்குச் சேவையாற்று சூழல் அமைந்திருந்ததாகவும் மக்கள் சேவை என்பதன் அடிப்படையிலேயே நாசிப்படைகளுடன் இணைந்து செயற்பட்டதாகவும் தம்மை நியாயப்படுத்திக் கொள்ள முனைந்தனர்.
அண்மைய வரலாற்றில் மொரிஸ் பப்போன் என்ற பிரஞ்சுக் காரர் நாசிக் காலப் போர்க்குற்றங்களுக்காகத் சிறைத் தண்டனை பெற்றவர்களூள் குறிப்பிடத் தக்கவர்.
1970 இலிருந்து 1980 வரையான காலப்பகுதியில், அமச்சர், மேயர், பாராளுமன்ற உறுப்பினர் என்று பல அரச உயர் பதவிகளை வகித்திருக்கிறார் மொரிஸ் பப்போன். 1981 ஆம் ஆண்டு இறுதிப்பகுதிகளில், பிரஞ் பத்திரிகையொன்று மொரிஸ் பப்போன் இற்கும் யூதர்களின் சித்திரவதை முகாம்களிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக செய்தி தெரிவிக்க இவர் குறித்த நீதிமன்ற விசாரணை ஆரம்பமாகிறது.
நாஸிப் படைகளுடனான பப்போனின் தொடர்புகள் நிருபணமான பின்னர், அவர் அதற்கு வழங்கியிருந்த விளக்கவுரையே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. “ஏனைய பிரஞ்சு அதிகாரிகள் எல்லம் மௌனமாயிருந்த போது என்னைப் போல ஒரு சிலர் மட்டும் தான் அடைத்து வைக்கப்பட யூதர்களுக்கு உதவிபுரிய முன்வந்தோம். வெளியே இருந்த படி எந்த உதவிகளையும் வழங்க முடியாத நிலையில் நாஸிப் படைகளின் நிர்வாக அமைப்புகளுடன் இணைந்து, தடுத்து வைக்கப்பட்டோரிற்கு தேவையான உணவு, இருப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள் போன்றவற்றை உறுதி செய்வதே எனது நோக்கமாக இருந்தது.” என்றார். இறுதியாக 1998 இல் மொரிஸ் பப்போன் சிறைப்பிடிக்கப்பட்டார்.
வரலாறின் காலச் சுழற்சி பப்போனோடு நின்று போகவில்லை. எங்கெல்லாம், மானுட விரோதிகளும், சமூக விரோதிகளும் மக்களின் மரணங்களின் மீது தமது ஆதிக்கத்தை நிறுவிக்கொள்ள எத்தனிக்கிறார்களோ அங்கெல்லாம்,அவர்களின் பின்னால் ஆயிரம் மொரிஸ் பப்போன்கள் அதே கருத்து வடிவங்களோடு உருவாகிவிடுகிறார்கள்.
பப்போனின் நியாயப்படுத்தலில் பின்வரும் புள்ளிகள் பிரதானமானவை.
1. ஏனையோர் செயற்பாடற்றிருந்தனர்.
2. நான் அதிகாரத்திற்கு அதாவது நாஸிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டேன்.
3. நாஸிகளிற்கு ஆதரவாகச் செயற்பட்டதன் காரணம் யூதர்களுக்கு உதவி புரிவதே.
முதல் இரண்டு மூன்று என்ற தொடர்ச்சியான நியாயப்படுத்தல்கள் வரலாற்றின் ஒவ்வொரு சிக்கலான காலப்பகுதியிலும் அதிகாரம் சார்ந்த சக்திகளால் முன்வைக்கப்ப்டுகின்ற தர்க்கீக நியாயப்படுத்தலாகும்.
திட்டமிட்ட அதிகாரத்தின் சார்பில் இயங்கும் தத்துவார்த்தத் தளத்தில் முன்வைக்கப்படுகின்ற இவ்வாறான கருதியலை ஒரு குறித்த மனித, நேயம் மிக்க பிரிவினரும் பின்பற்றுகின்றனர். காலவோட்டத்தில் இதன் வளர்ச்சியானது, சோவனிசம், பாசிசம் போன்ற சமூகவிரோதக் கருத்துக்களாக உருப் பெறுகின்றது. இன்னொரு வகையில் தன்னார்வ நிறுவனங்கள் கூட இதே தொடர் நியாயத்தின் அடிப்படையில் தான் உருவாக்கப்படுகின்றன.
முதலில் செயற்பாடற்றிருக்கும் மக்களின் அடையாளங்களை இனம் காணல், பின்னர் அதிகாரம் சார்ந்து அவர்களின் அடையாளம் குறித்த பிரச்சனைகளை அணுகுதல், இறுதியாக அந்த மக்கள் பிரிவினருக்கு வழங்கும் தற்காலிக உதவிகளூடாக பிரதான பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்புதல் என்ற ஒழுங்கு பொதுவாகவே பிரயோகிக்கப்படுகின்றது. புலிகளின் அழிவின் பின்னதாக, இலங்கை அரசு சார்ந்து இயங்குகின்ற புலம் பெயர் தமிழர்களால் உருவாக்கப்பட்ட தன்னார்வ அமைப்புக்களும், இந்திய அரசு சார்ந்து இயங்குகின்ற சில அமைப்புக்களும் இதே கருத்தியலையே முன்வைக்கின்றன.
புலம் பெயர் நாடுகளிலிருந்து இருபத்தியொரு நபர்களைக் கொண்ட குழுவொன்று இலங்கை அரசின் உயர்மட்ட அரசியல் வாதிகளை சந்தித்துத் திரும்பிய நாளிலிருந்து முதல் தடவையாக தமிழர்கள் மத்தியிலிருந்து வெளிப்படையாகவே அரச சார் செயற்பாடுகள் “உதவி” என்ற தலையங்கத்தில் ஆரம்பிக்கிறது.
இந்த நூற்றாண்டின் மனித குலமே வெட்கித் தலைகுனியும் மனிதப்படுகொலையை நிகழ்த்தியிருக்கும் இலங்கை – இந்திய அரசுகளை உலகமே பார்த்துக்கொண்டிருந்த கேவலத்தைக் கண்டிருக்கிறோம். கொலையின் கோரத்திலிருந்து மீண்டவர்களை ஒரு சிறிய நிலப்பரப்பில் அடைத்து வைத்திருப்பதை உலகமே “அங்கீகரிக்கும்” அருவருப்பையும் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறோம்.
இதே அங்கீகாரத்தைத் தமிழ் பேசும் புலம் பெயர்ந்தவர்களிடமும், முன்னர் தேசிய அரசியலில் முனைப்புடன் வினையாற்றியவர்களிடமிருந்தும், இடது சாரிகளிடமிருந்தும் இந்த அளவில் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
மொரிஸ் பப்போனின் அதே நிகழ்சித் திட்டம் தான் இவர்கள் முன்வைப்பது கூட! திட்டமிட்ட இனப்படுகொலையையும் இனச்சுத்திகரிப்பையும் நிகழ்த்துகின்ற இலங்கை அரசிற்கு எதிராக, குறைந்த படசம் அதன் துணைப்படைகள் தவிர்ந்த அனைத்துத் தமிழ் பேசும் மக்களின் குரலும் ஒருங்கு சேர்ந்து ஒலிக்கும் என எதிர்பார்த்தவர்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள்.
புலியெதிர்ப்பு, ஜனநாயக மீட்பு அதன் தொடர்ச்சியான அபிவிருத்தி, அகதிகளுக்கான உதவி என்று ஒரு திட்டமிட்ட வலைப்பின்னலே உருவாகிவிட்டது. இவற்றுள், இந்திய இலங்கை அரசுகளின் நேரடி, மறைமுகக் கட்டுப்பாடுகள் தவிர, இன்னும் அவற்றின் தத்துவார்த்தப் பகுதிகளும் இணைந்து கொண்டுள்ளன. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பின்நவீனத்துவ, தலித்திய வாதிகள் போன்றோர் தவிர பல முன்னாள் புலி ஆதரவாளர்கள் கூட இந்த வலைப்பின்னலோடு தம்மையும் இணைத்துக் கொண்டுள்ளனர்.
வேறுபட்ட அரசியற் தளங்களில் இயங்கு கின்ற இலங்கை இந்திய அரசுசார் இந்தக் குழுக்கள் இரண்டு பிரதான பிரிவுகளாக இயங்குகின்றன.
1. நேரடியாகவே இலங்கை அரசை ஆதரிக்கும் குழுவினர்.
2. அரசு தவறிழைத்தாலும் அதனைச் சார்ந்து நின்றே தடுப்பு முகாம்களில் வாழும் மக்களுக்கு உதவ முடியும் என்கிற பிரிவினர்.
இந்த இரண்டாம் வகையினர் தான் மொரிஸ் பப்போன் முன்வைக்கும் பாசிச ஆதரவுத் தளத்தில் இயங்குகின்ற ஆபத்தான பிரிவினர். பல்வேறு காரணங்களின் பால் சர்வதேச தன்னார்வ பல இலங்கைத் தடுப்பு முகாம்களுக்கு உதவி புரியக் காத்திருக்கின்றன.
மேற்கு நாடுகள் சார்ந்த நிதி வழங்கல் மையங்களைச் சார்ந்து செயற்படும் இவ்வாறான நிறுவனமயப்பட்ட அமைப்புக்களான, Save The Children, Action Aid, Redcross போன்ற பல அமைப்புக்களை இலங்கை அரசு தடுப்பு முகாம்களிலிருந்து தடை செய்து வைத்திருக்கிறது. MSF என்ற பிரஞ்சு தன்னார்வ நிறுவனம் முகாம்களுக்கு வெளியில் நிலை கொண்டு மருத்துவ வசதிகளை மேற்கொள்கிறது. சேவா லங்கா என்ற சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தன்னார்வ அமைப்புக்கூட அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. ஆக, இலங்கை அரசைப் பொறுத்த வரை தனது இனவழிப்பு அரசியலுக்குத் துணைபோகிற எந்த நிறுவனத்தையும் அங்கீகரிகத் தயாராகவே இருக்கின்றது.
தெற்காசியாவில் கடந்த பத்தாண்டுகளாக உருவாகியிருக்கின்ற பொருளாதாரச் சுரண்டலும் இதன் பின்புலத்தில் பெருகிவரும் வறிய மக்களின் தொகையும் உருவாக்கவல்ல எதிர்ப்பரசியலை உலகளாவிய வகையில் எதிர்கொள்ளும் ஒரு பகுதியே இலங்கையில் உருவாகும் எதிர்ப்பரசியலின் அனைத்துச் சாத்தியங்களையும் அழித்தொழித்தல் என்பதாகும்.
கடந்த மாதம் பாதுகாப்புப் படைகளுக்கு மத்தியில் உரையாற்றிய இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், புலம் பெயர் நாடுகளிலிருந்து புலிகள் மறுபடி புத்துயிர் பெறலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புலிகளினதும் பிரபாகரனதும் புத்துயிர்ப்பு என்பது வெறுமனே மறுதலையான கற்பனையாக மாறிவிட்ட நிலையில், புதிய கருத்துக்களும், அமைப்புக்களும், அரசியல் இணைவுகளும் உருப்பொறுவதற்கான வாய்ப்புகள் குறித்தே இலங்கை இந்திய அரசுகள் துயர் கொள்கின்றன என்பது வெளித்தெரிய ஆரம்பித்துள்ளது. புலிகள் என்று அடையாளப்படுத்தி அழிப்பு நடத்துவதென்பது புதிய தந்திரோபயமே தவிர வேறில்லை.
திஸ்ஸநாயகமோ, லசந்தவோ, போதல ஜெயந்தவோ, பாக்கியசோதியோ புலிகளில்லை. புலம்பெயர் தேசங்களில் உருவாகும் தன்னார்வ அமைப்புக்கள், அவை சார்ந்த ஊடகங்கள், அனைத்தும் இங்கெல்லாம் குறைந்த பட்சம் தெற்காசிய எதிர்ப்பியக்கங்களின் உந்து சக்தியாக அமையவல்ல, கருத்துக்களையும் குழுக்களையும் குறிவைக்க ஆரம்பித்துவிட்டன.
இனப்படுகொலையையும், இனச்சுத்திகரிப்பையும் அம்பலப்படுத்த முனையும் அனைத்து இடதுசாரிகளும், ஜனநாயக சக்திகளும், மனிதாபிமானிகளும் தடுப்பு முகாம்களின் நிலைமைகளை முன்னேற்ற அரசுடன் இணைந்து தொழிற்படாத துரோகிகளாகச் இவ்வமைப்புக்களால் சித்தரிக்கப்படுகின்றனர்.
எதிப்பரசியலின் புதிய பரிணமங்களையும், எதிர்ப்பியக்கங்களையும் குறித்துப் பேச முனைவோரையும், மக்கள் குறித்து அக்கறையற்றவற்றர்கள் என்ற பிம்பத்தைக் கட்டமைக்க முனைகின்றனர். புலிகள் மாற்று அரசியல் குறித்துச் சிந்திப்போரை ஒடுக்கியதன் விளைவு இன்று கால் மில்லியன் மக்கள் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அரசு சார் பாசிசத்தை முன்நிறுத்தும் புலம் பெயர் புதிய புலிகள் தெற்காசியா முழுவதையும் அதிகாரத்தின் சிறைக்குள் அடைப்பதற்கு இன்று ஒத்திகை பார்க்கிறார்கள். சாராம்சத்தில் இவர்கள் கோருவதெல்லாம், நாங்கள் வன்னி மக்களுக்கு உதவுகிறோம் நீங்கள் எம்மைபற்றி விமர்சிக்காமல் இலங்கை அரசுடன் இணைந்து எம்மைப்போல் உதவி செய்யுங்கள் என்பது தான். இவர்கள் புலம் பெயர் நாடுகளிலிருந்து வன்னி மக்களுக்கு வீசியெறியும் எலும்புத் துண்டுகளுக்கெல்லாம் இலங்கை அரசு எதிர்பார்க்கும் விலையைப் பற்றிப் பேசுவதில்லை. இவர்கள் எங்காவது ஒரு மூலையில் இலங்கை அரசுடன் கைகோர்த்துக்கொண்டு உலாவருவதைப் பற்றி வன்னிமக்கள் கூடக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
மக்கள் கேட்பதெல்லாம் அந்தச் சிறைகளிலிருந்து விடுதலை மட்டும்தான். முகாம்களிலிருந்து தப்பியவர்கள், இலங்கை அரச கெடுபிடிகளை மீறிச் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள், அரசு சாரா ஊடகங்கள் எல்லாமே மக்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் பிரதிபலிக்கின்றன. இலங்கை அரசு சார்ந்த துணைப்படை ஊடகங்கள், அரசு சார் தொண்டு நிறுவனங்கள், தூதராலயச் செய்திகள் போன்றன மட்டுமே மக்கள் முகாம்களில் மகிழ்வுடன் உலாவருகிறார்கள் என்றும், அவர்களுக்கு விடுதலை எல்லாம் தேவையில்லை சாப்பாடுதான் தேவை என்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.
இவர்களுக்கெல்லம் திடீரென உதயமான “மக்கள்பற்றின்” உந்துதலில் வன்னிக்கு ஒடோடிச் சென்று உதவிபுரிவதை யாரும் மறுக்கவில்லை ஆனால் உதவி என்ற பெயரில், இதுவரை காலமும் செத்துப் போன ஆயியமாயிரம் மக்களின் இழப்புக்களையும், எரிந்து கொண்டிருக்கும் உணர்வுகளையும், சில்லறை உதவிகளுக்காக விலைபேசுவதையுமே நிராகரிக்கிறோம்.
அவர்கள் உதவி என்ற பெயரில் அரசின் பாரிய இன அழிப்பை நியாயப்படுத்துவதை மௌனிகளாய் நியாயப்படுத்துவதை மட்டுமல்ல, அரசை விமர்சிப்பவர்களையும், புதிய எதிர்ப்பரசியலை முன்னிறுத்துபவர்களைக் காட்டிக்கொடுப்பதையும் தான் நிராகரிக்கிறோம்.
அறிவியலில் கருத்தாக்கங்களுக்கு எதிராகவும் , புதிய விவாதத் தளங்களுக்கு எதிராகவும், எதிர்ப்பியக்கங்களிற்கு எதிராகவும் இவர்கள் தாக்கல் செய்யும் அதிகாரம் சார்ந்த குற்றப்பத்திரிகையைத் தான் நிராகரிக்கிறோம்.
பிரஞ்சுக்காரன் மொரிஸ் பப்போன் ஒரு உதாரணம் மட்டுமே, ஆயிரம் பப்போன்களை நேரடியாகப் பார்த்தவர்களின் தமிழ் சமூகத்தில் வாழ்பவர்கள் நாங்கள்.