Language Selection

தேவன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுயநலம் மனிதனோடு பிறந்தது. ஏதோ ஒருவகையில் எல்லோருடைய சிந்தனையிலும் சுயநலம் இருக்கத்தான் செய்கிறது. நான், எனது, என் குடும்பம், என் உறவுகள் என்ற எண்ணமும் செயற்பாடும் மனித சிந்தனையோடு மேலோங்கி நிற்கின்றது.

இன்றைய அதிவேகமான வாழ்க்கைச் சூழ்நிலை, தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாளாந்த மனிதனின் வாழ்க்கையில் பல தாக்கங்களையும், பல மாறுதல்களையும் நாளுக்குநாள் ஏற்படுத்திய வண்ணமுள்ளது. தம்மை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் பல மாறுபட்ட புதியபுதிய வழிகளில் தினமும் போராட வேண்டியுள்ளது.


தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டிய தேவையும் கடமையும் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. மற்றவனை ஏமாற்றாமல் நேர்மையோடு தன் கடுமையான உழைப்பால் முன்னேறும் மனிதனால் தான் சமூகத்தையும் பாதுகாக்க முடியும். அவனால் தான் இன்னொரு மனிதனுடைய உழைப்பையும், அவன் வாழ்க்கைச் சிரமத்தினையும் புரிந்து கொள்ள முடியும். வேலையெதுவும் இன்றி தொலைபேசியிலும், கம்பியூட்டரிலும், தொலைகாட்சி பார்ப்பதிலும் நேரத்தை கழித்துக் கொண்டு முற்போக்கு பேசிக் கொண்டு சந்தர்ப்பத்துக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்தைக் கூறி மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடாத்திக்; கொண்டிருக்கும் கூட்டம் புலம் பெயர் சமூகத்திலே அதிகரித்துள்ளது.


இவர்கள் தங்களுடைய கடந்த கால தவறுகளை தவறென்று ஏற்றுக் கொள்ளாது பல காரணங்களை கூறி தங்களை நியாயப்படுத்திக் கொண்டு மக்கள் மத்தியில் நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள். புலிகள் செய்த அதே தவறு ஆயுதமின்றி சிரிப்பிலும், மேடைப் பேச்சிலும் தங்களை தூய்மையானவர்களாக அடையாயம் காட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடாத்துகின்றார்கள்.


எனது நண்பன்...எனது குடும்பத்தவன்… எனது உறவினன்.. எனது ஊர்க்காரன்… என்பதை விட்டுவிட்டு இவர்களுக்கு துணை போவதை உடனடியாக நிறுத்த வேண்டியது எங்கள் ஓவ்வொருவருடைய இன்றைய கடமையாகும். இன்னொரு மக்கள் விரோதக் கும்பலை வளர்த்தெடுப்பது நாங்கள் எங்கள் அப்பாவி மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும். எங்களோடு இருக்கும் எதிரிகளை நாங்களே அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.


தங்கள் ஏமாற்று வித்தைகள் முன்தலைமுறையினரான பெற்றோர்கள் மத்தியில் பலிக்காது என்ற இன்றைய சூழலைப் புரிந்து கொண்டவர்கள் சிலர், இளையோர்கள்… இளம் சமூகம் என்று கூறிக் கொண்டு தங்கள் பெயரையும் புகழையும்…தங்கள் நலன் சார்ந்த நன்மைகளைக் கருத்தில் கொண்ட நவீன அரசியல்வாதிகள் பலர் இளைஞர்களை ஏமாற்றிப் பிழைப்பு நாடாத்த ஆரம்பித்துள்ளார்கள்.


எங்கள் முன்னோரையும், எங்களையும் படுகுழிக்குள்ளே தள்ளிவிட்ட அன்றைய அரசியல்... இத்தனை ஆயிரம் மக்கள் அழிவு ஏற்பட புலிகளுக்கு அத்திவாரம் அமைத்துக் கொடுத்த அந்த வெள்ளை வேட்டி அரசியல் தான் இன்று புலம்பெயர் சமூகத்தில் கொள்கையிலே எந்த மாறுதலும் இல்லாமல் நவீன பிற்போக்கு அரசியலை தொடங்கியுள்ளது.


இளைய சமூகத்தினரின் எதிர்காலத்தை சீரழிவுக்கு இட்டுச் செல்லும் இந்த தவறான
அரசியலில் இருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உண்டு.


எனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பும்… மற்றவர்களுடைய கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளாத தன்மையும்… எங்கள் தவறுகளை உணர்ந்து கொள்ளாததும், அதை நியாயப்படுத்த முனைவதும்… நாங்கள் எங்களுக்கே தோண்டும் படுகுழியாகும்.
தனிமனிதனுடைய வாழ்வில் மட்டுமல்லாது, மக்கள் நலன் சார்ந்து அமைக்கப்படும் அமைப்புக்களும் இதை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். ஓவ்வொரு நாட்டிலும், ஒருவர் வாழும் நகரத்திலே அந்த சமூகத்தோடு அவர் எப்படி இருந்தார் என்பதை அறிந்து கொண்டு அவரை இணைத்துக் கொள்ள வேண்டும். அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் என்பதற்காக தவறான ஒருவரை உள்வாங்கிக்கொள்வதால் பல மக்களுடைய ஆதரவை இழப்பதோடு அமைப்பையும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடிய நிலைமை உருவாகிவிடும். எதிரிகளை நாங்களே அப்பாவி மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடக் கூடாது. மிகவும் ஆழமான பார்வை கொண்டு கடந்தகாலத்தை புரிந்து செயற்பட வேண்டிய கடமை மக்கள் நலன் சார்ந்து செயற்படும் ஒவ்வொருவருக்கும் உண்டு.


11.10.2009