தமிழ் அரங்கத்தால் நடாத்தப்பட்ட இச் சந்திப்பு என்பது ஒரு மிக முக்கியமானதாகவே கருதுகின்றேன். இன்றைய சூழலில் மக்களை புலிகளின் பெயரால் ஏமாற்றிப் பிழைப்பை நடத்தும் பிழைப்புவாதக்கோஸ்டி ஒருபுறமிருக்க தம்மை புலி எதிர்பாளர்கள் என்றும் தற்போது புலிகள் இல்லாது ஒழிக்கப்பட்டதனால் தாமே இன்றைய சமூக சிந்தனையாளர்கள் என்றும் தம்மை காட்டியபடி இலங்கை அரசுக்குப் பின்னால் நிற்கும் மாற்றுக்கருத்தைக் கொண்ட கோஸ்டி என்பவர்கள் மறுபுறமிருக்க மக்களை தனித்தனியாக ஏமாற்றி மக்களின் கருத்துக்களையும், மனங்களையும் மாற்றி அலையவிடும் ஒரு சில சாரார்களுக்கிடையே தொடர்ந்தும் எந்தவித விட்டுக் கொடுப்பும் இல்லாமல் தவறை தவறு என்று விமர்சித்து, ஒரு கருத்தை அடையக்கூடியவர்களை ஒன்றிணைத்து அவர்களை ஒரு மேடைக்கு அழைத்தது என்பது தமிழரங்கத்தின் வெற்றி என்றே கூறவேண்டும்.

ஒரு கட்டத்தில் றயா என்ற தனிமனிதன் தான் அக்கருத்தை கொண்டுள்ளான் என்ற நிலையில் இருந்து மாற்றி கருத்தின் பின் திரள பலர் அவ்வாறே உள்ளனர் என்பதை நீண்ட பயணத்தின் ஊடாக வந்தடைந்துள்ளோம். இதற்காக மீண்டும் ஒருமுறை தமிழரங்கத்திற்கு நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

 

அடுத்து கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்தவர்களைப் பொறுத்தவரையில் தமது கடமைகளை விட்டு பல சிரமங்களுக்கு மத்தியில் கலந்து கொண்டது என்பது மீண்டும் மக்கள் ஏமாற்றப்படக்கூடாது என்பதையும் சரியான தகவலை சரியான காலத்தில் வழங்க வேண்டும் என்ற எண்ணக்கருவோடும் அதற்கான வேலைகளை எவ்வாறு ஆரம்பிப்பது என்ற கேள்விக்கான விடையை கண்டுபிடிக்கும் நோக்கத்தோடும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கும் எனது நன்றிகள்.

 

எமது சந்திப்பின் ஆரம்பமே மிகவும் வியக்கத்தக்கதாக இருந்தது. காரணம் எந்த ஒரு சந்திப்பிலும் தம்மை பற்றிய அறிமுகம் என்றதும் தான் இது செய்தோம் அது செய்தோம் என்று தமது புகழை மையமாகக் கொண்டு ஆரம்பிப்பார்கள். அதற்கு மாறாக இங்கு தனது கடந்தகால நடவடிக்கையை இலங்கையில் இருந்து ஆரம்பித்து சந்திப்பிற்கு வரும் வரையிலான ஒரு சுயவிமர்சனத்தை செய்தார்கள். அங்கேயே சந்திப்பு ஒரு வித்தியாசமாக செல்லப் போகின்றது என்பதை உணர்ந்தேன்.


அடுத்து தமிழரங்கத்தால் முன்வைக்கப்பட்ட முன்னணிக்கான திட்டத்துடன் அங்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் உடன்பாடாக இருந்தது என்பது மிக ஆச்சரியத்துக்கான விடையமாகவே இருந்தது.

 

ஆனால் எவ்வாறு வேலைகளை முன் எடுப்பது என்பதில் தான் சிலர் மத்தியில் மாற்றுக்கருத்து இருந்தாலும் அதற்கான காரணங்கள் றயாவால் முன்வைத்ததும் அதை அவர்கள் எற்றுக் கொண்டனர்.

 

ஒரு சிலரின் கட்சிக்கான  அவசியத்தையும் அதை நகர்த்துவது தொடர்பான கருத்துக்களையும் முன்வைத்த போது அது எவ்வாறு சாத்தியமற்றது என்றும் நாம் கூடியது கட்சிக்கான சந்திப்பல்ல, மாறாக தற்போதைய நிலவரத்தினை கருத்தில் கொண்டு ஒரு முன்னணிக்கான சந்திப்பே என கூறப்பட்டது.


இலங்கையின் இன்றைய நிலவரம் தொடர்பில் எல்லோரிடமும் ஒரே கருத்துக் காணப்பட்டது. 

 

வெளிவரும் தரமான கட்டுரைகளை இணைத்து கட்டுரைத் தொகுப்பாக வெளிவிடுவது எனவும், மொழிபெயர்ப்புகள் செய்வது என்றும் அது சிங்கள் மொழியிலும் இருத்தல் அவசியம் எனவும் கருதப்பட்டது. அதைவிட புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள இளைய சமுதாயத்தினரை வென்றெடுக்கும் விழிப்புற வைக்கும் வகையில் பல மொழிகளிலும் மொழிபெயர்ப்பது அவசியம் எனக் கருதப்பட்டது.


முதல் நாளில் எல்லோராலும் முன் வைக்கப்பட்ட விடையம் எமது சந்திப்பிற்கு வந்தவர்கள், வராதவர்கள் முன்னணிக்கான திட்டத்துடன் இணைந்து இயங்குவதற்கு என ஒரு பெயர் தேவை என வலியுறுத்தப்பட்டது.


அடுத்து றயாவால் இதில் உதிரிகளாக இருப்பவர்கள் எல்லோரும் இணைக்கப்பட வேண்டும் என்ற வாதம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரணம் இது றயாவா என்ற கேள்வியை எழுப்பியது. மிகவும் வரவேற்கத்தக்க விடையம். ஒருவரும் எதிர்க்காவிட்டாலும் பலர் தனிப்பட்டவர்கள் தொடர்பாக தமது விமர்சனங்களை முன்வைத்தனர். இது காலத்தின் அவசியமா இல்லையா என்பதற்கு மேலாக ஒரு முன்னணிக்கான திட்டத்தில் இவர்களையும் இணைக்கமுடியும் என்ற வாதத்தால் அவர்கள் விரும்பும் பட்சத்தில் அவர்களையும் இணைத்து வேலை செய்ய முடியும் என்ற கருத்திற்கு எல்லோரும் வந்தனர்.

 

அடுத்து எம்மிடையே ஒரு கூட்டு வேலைமுறையை ஆரம்பிக்கவேண்டும் என்றும் அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்றும் விரிவாக விவாதிக்கப்பட்டதுடன் எவ்வாறு செயற்படுவது என்றும் கலந்துரையாடப்பட்டது. இதன் ஒரு வடிவமாக இணையத்தளங்கள் வெளியீடுகள் போன்றவற்றை அமைப்பது தொடர்பாக விவாதம் ஆரம்பிக்கப்பட்டாலும் ஆது முழுமையாக முற்றுப்பெற்றதா என்பது எனக்குத் தெரியவில்லை. காரணம் மறுநாள் எனது உடல் உபாதை காரணமாக நான் கலந்து கொள்ள முடியவில்லை. 


முதல் நாள் நடைபெற்றது தொடர்பான எனது பார்வையை மட்டும் நான் இங்கு முன் வைத்துள்ளேன்.

 

சீலன்