Language Selection

கலையரசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் சிறந்த தரமுள்ள (தமிழ்) கல்வி நிலையங்கள் யாழ் குடாநாட்டிலேயே அமைந்திருந்தன. சில பாடசாலைகள் பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்டவை. அதிகளவில் சித்தி பெறும் மாணவர்களை உருவாக்கும் பெருமையை பெற்றவை.

 

சிறந்த ஆசிரியர்களையும் அங்கே தான் காணலாம். இதனால் மட்டக்களப்பில் இருந்து கூட (வசதி படைத்த) மாணவர்கள் வந்து யாழ் பாடசாலைகளில் கல்வி கற்றுவந்தனர். யாழ் குடாநாடு ஆறுகளற்ற வறண்ட நிலத்தை கொண்டிருப்பதால், யாழ்ப்பாணத்தவர்கள் காலனிய காலத்திலேயே விவசாயத்தை விட்டு விட்டு உத்தியோகம் பார்க்க கிளம்பியவர்கள். கிழக்கு மாகாணத்திலும், சிங்களப் பகுதிகளிலும் நிலைமை வேறுவிதமாக இருந்தது. பெரும்போகம், சிறுபோகம் என்று வருடம் முழுவதும் நெல் விளையும் பூமி அது. அங்குள்ளவர்களின் வாழ்க்கை விவசாயத்தால் வளம் பெற்றதால், படிப்பில் அதிக நாட்டம் கொள்ளவில்லை.

 

யாழ் மத்திய தர வர்க்க குடும்பங்களில் தமது பிள்ளைகள் பொதுத் தராதரப் பரீட்சைகளில் திறமைச் சித்தி பெற்று பல்கலைக்கழகம் சென்றதை பெருமையோடு பேசிக் கொள்வார்கள். அந்தப் பெருமையில் அரசின் தரப்படுத்தல் கொள்கை மண் அள்ளிப் போட்டது. சிறி லங்கா அரசு தமிழரை அடக்குவதென்றால், அவர்களுக்கு பதவி வழங்கும் கல்வியை தடை செய்ய வேண்டும் என நினைத்தது. பட்டப்படிப்பு, உத்தியோகம், கைநிறைய சம்பளம் என்ற சுழற்சியிலே சிந்தித்துக் கொண்டிருந்த மத்தியதர வர்க்கம், தமது கனவுகள் நொறுங்குவதாக உணர்ந்தனர். யாழ் நடுத்தர வர்க்க பிரச்சினை அனைத்துத் தமிழரின் பிரச்சினையாக்கப்பட்டது. விரக்தியடைந்த இளைஞர்கள் தமிழ் தேசியவாத அலையில் இலகுவாக உள்வாங்கப்பட்டனர். தமிழரின் உயர் கல்வியை மறுத்த அதே அரசாங்கம், மறுபக்கத்தில் ஏழை மாணவர்களை கருத்தில் கொண்டு இலவச பாடநூல்களை வழங்கிக் கொண்டிருந்தது. இனப்பிரச்சினை தூண்டி விடப்பட்டு, வர்க்கப் பிரச்சினை மழுங்கடிக்கப்பட்டது.

 

இதற்கிடையே மித மிஞ்சிய செல்வம் படைத்த உயர் மத்தியதரத்தை சேர்ந்த பிள்ளைகள், அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் உயர்கல்வி கற்க சென்றனர். இவர்களில் அநேகமானோர் அங்கேயே தங்கி விட்டனர். முன்னொரு காலத்தில் பிரிட்டனில் பெற்ற கல்வியை கொண்டு, இலங்கையில் அரச உத்தியோகங்களை இலகுவில் பெற்ற தமிழர்கள், தற்போது முன்னாள் காலனியாதிக்க எஜமானர்களிடம் சேவையை தொடர்ந்தனர். இதே நேரம், யாழ்ப்பாணத்தில் இருந்த அனைவருக்கும் பவுன்களை, டாலர்களை கொட்டி வெளிநாட்டில் உயர்கல்வி கற்கும் வாய்ப்பு இருக்கவில்லை. கீழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த இந்த இளைஞர்களே பிற்காலத்தில் ஆயுதமேந்திய எழுச்சியில் தம்மை இணைத்துக் கொண்டனர். ஆயுதமேந்த விரும்பாதவர்கள் அகதிகளாக மேற்குலக நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

 

வெளிநாடு செல்வதென்பது ஒரு காலத்தில் பணக்காரருக்கு மட்டுமே சாத்தியமான விடயமாக இருந்தது. யு.என்.பி.யின் நவ-லிபரல் அரசு கடவுச் சீட்டு எடுப்பதற்கான கட்டுப்பட்டுகளை பெருமளவு தளர்த்தி இருந்தது. அப்போதும் கூட, சாதாரணமாக எடுக்கும் பாஸ்போர்ட் இந்தியாவுக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் மட்டும் செல்லவே அனுமதி அளித்தது. அனைத்து நாடுகளுக்கும் செல்லும் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க, அதிக சம்பளம் பெறும் பதவியில் இருக்கும் ஒருவரின் கையொப்பம் தேவைப்பட்டது. உழைக்கும் வர்க்க மக்கள் மத்திய கிழக்கில் தமது உழைப்பை விற்பதற்கும், மத்திய தர மக்கள் உலகம் முழுவதும் தமது மூளை உழைப்பை விற்பதுக்கும் என பொருளாதார பாகுபாட்டை இந்த நடைமுறை உறுதிப்படுத்தியது.

 

உழைக்கும் வர்க்க மக்கள் சிறு தொகையுடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று, "பணக்காரர்களாக" திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். வடக்கே பருத்தித்துறை முதல் தெற்கே அம்பாந்தோட்டை வரையுள்ள இலங்கையின் கிராமங்கள் எங்கும், "மத்திய கிழக்குப் பணம்" ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. பொது மக்கள் மெல்ல மெல்ல தம் மீது நடந்த நவ-லிபரல் தாக்குதல்களை மறந்து, ஆளும் யு.என்.பி.யின் ஆதரவாளர்களாக மாறத் தொடங்கிய காலம் அது. உலகமயமாக்கல் பொருளாதாரத்தில் இலங்கை 1977 ம் ஆண்டே (அதாவது இனக்கலவரம் நடந்த ஆண்டு) இணைந்து கொண்டது. இதனால் அயல்நாடான இந்தியாவை கூட திரைப்படங்களாலும், சஞ்சிகைகளாலும் மட்டுமே அறிந்திருந்த தமிழ் மக்களும், உலக நாடுகளை ஆராய கிளம்பினர்.

 

தமிழ் இளைஞர்கள், தீவிரவாதிகளாக இனங்காணப்பட்ட காலம் அது. எங்கிருந்தோ வரும் சில இளைஞர்கள் அரச படைகளை சேர்ந்தவர்களையும், ஆளும் கட்சிகளை சேர்ந்தவர்களையும் குறி பார்த்து சுட்டு விடு ஓடி விடுவார்கள். இத்தகைய தாக்குதல் எல்லாம் முதலில் யாழ் குடாநாட்டுக்குள், அல்லது வட மாகாணத்திலேயே நடந்து கொண்டிருந்தது. தாக்கியது யார் என்று இனம் காணமுடியாத காவல்துறை (அதில் தமிழர்களும் இருந்தனர்) சந்தேகத்தின் பேரில் அப்பாவி இளைஞர்களையும் கைது செய்தது. அவ்வாறு கைது செய்யப்படுவோர் சித்திரவதைக்குள்ளாவது சகஜம்.

 

யாழ் குடாநாட்டில் இருந்து ஈழநாடு, சுதந்திரன் என்ற இரு பிராந்திய பத்திரிகைகள் வெளி வந்து கொண்டிருந்தன. எந்த தமிழ் இளைஞர், எந்த சம்பவத்தில், எப்போது கைது செய்யப்பட்டார், விடுதலையாகும் போது எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டிருந்தார், போன்ற செய்திகளை தமிழ் பத்திரிகைகள் வெளியிட்டுக் கொண்டிருந்தன. இந்த பத்திரிக்கை செய்திகள் பல தடவை அரசால் தணிக்கை செய்யப்பட்டன. இதனால் வதந்திகள் பரவுவது அதிகரித்தது. எங்காவது துப்பாக்கிச் சூட்டு, அல்லது குண்டுவெடிப்பு சம்பவம் நடக்கும் பட்சத்தில், மக்கள் மத்தியில் பதற்றம் தோன்றினாலும் பின்னர் தணிந்து விடும். வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கவே காவல்துறையால் சமாளிக்கமுடியாமல் போனது. இதனால் இராணுவம் வடக்கு நோக்கி அனுப்பப்பட்டது.

 

பொலிஸ் நிலையங்கள் அடிக்கடி தாக்கப்பட்டதால், சிறியதும், பெரியதுமாக புதிய இராணுவ முகாம்கள் உருவாகின. வேட்டைத்துப்பாக்கி வைத்திருந்த பொலிசிற்கு பதிலாக, தானியங்கி துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் தெருக்களில் நடமாடினர். இராணுவத்தில் இருந்தவர்கள் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் என்பதும், மக்கள் தொடர்பற்றவர்கள் என்பதும் நிலைமையை மோசமாக்கியது. தென்னிலங்கையில் இருந்து வந்த சிங்கள இளைஞர்கள் பலர் அதுவரை தமிழரையே பார்த்திராதவர்கள். தமிழர் பற்றிய எதிர்மறையான கதைகளை மட்டுமே கேள்விப்பட்டவர்கள். இதிலே மொழிப்பிரச்சினை வேறு நிலைமையை மோசமாக்கியது. சிங்களம் தெரியாத தமிழர்களும், தமிழ் தெரியாத சிங்களவர்களுமாக ஒருவரை ஒருவர் எதிரிகளாக கருதிக்கொண்டனர்.

 

எப்போதாவது இராணுவம், அல்லது போலிஸ் மீது தாக்குதல் நடந்தால், அவ்விடத்தில் வருவோர் போவோரை எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு சுட்டுக் கொல்வது வழமையாகி விட்டது. மரணிப்பது தமிழ்ப் பொதுமக்கள் என்பதால் அரச மட்டத்திலும் அக்கறை இருக்கவில்லை. அன்றைய ஜனாதிபதி ஜெயவர்த்தன "போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்" என்று முழுத் தமிழர்களை எதிரிகளாக காட்டிக் கொண்டிருந்தார். பகிரங்கமாக இனவாதம் பேசிய ழுஒகழசன பட்டதாரியின் ஆட்சிக்கு அமெரிக்காவும், பிரிட்டனும், இஸ்ரேலும் உதவி வழங்கின. இலங்கை பாதுகாப்புப்படைகளுக்கு பயிற்சி வழங்கின. இருப்பினும் அதற்கு முதல் ஒரு நாளும் போரியல் அனுபவம் பெற்றிராத இலங்கை இராணுவம் கெரில்லா யுத்தத்தை சமாளிக்க முடியாமல் திணறியது.

 

நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருந்த சில தமிழருக்கு, நாட்டின் பிரச்சினைகளை சொன்னால் மேற்குலக நாடுகளில் அகதித் தஞ்சம் கோரலாம் என்ற தகவல் கிடைத்தது. அநேகமாக பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு படிக்க சென்றவர்களே அந்த தகவல்களை கொடுத்திருக்க வேண்டும். முன்னாள் காலனிய நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகளில் இருந்து பலர் அகதிகளாக வந்து கொண்டிருந்த காலம் அது. கல்வி கற்க சென்ற மாணவர்கள், மேற்குலகில் அகதியாக பதிந்து கொள்வதென்பது எளிமையான விடயம் எனக் கண்டுகொண்டனர். அந்தக் காலத்தில் அகதியாகப் பதிந்து கொள்வதற்கு கடவுச் சீட்டு, அடையாள அட்டை எதுவும் தேவையில்லை. அனைத்தையும் இழந்தவன் அகதி என்ற யதார்த்தத்தை மேற்குலக நாடுகள் ஏற்றுக்கொண்ட காலம் அது.

 

http://kalaiy.blogspot.com/2009/10/blog-post_08.html