தனிப்பட்ட கூட்ட அழைப்புக்கு ஏற்ப, 26-27 செப்டம்பர் மாதம் பாரிசில், புலி – அரசு அல்லாதவர்கள் கூடினர்.

அக்கூட்டம் இன்றைய நிலைமையை மதிப்பிட்டதுடன், எதிர்கால செயல் திட்டங்களையும் வகுத்துக் கொண்டது. தனது செயலுக்குரிய ஒரு அரசியல் திட்டத்தை ஏற்றுக்கொண்டது.

 

 

கடந்தகாலத்தில் தேசியம் என்ற பெயரில் நீடித்த புலிப் பாசிசம், இன்று தன்னைத்தானே பிணமாக்கியுள்ளது. அதன் எச்சசொச்சம், தன் இறுதி மூச்சுடன் சேடம் இழுகின்றது. மறுபுறத்தில் ஜனநாயகம் என்ற பெயரில் இருந்த புலியெதிர்ப்பு, அரச பாசிசமாக மாறி நிற்கின்றது. "ஜனநாயக" வேஷம் இன்று அரச பாசிசமாகி நடுரோட்டில் அம்மணமாகிக் கிடக்கின்றது.

 

இப்படி மாறிய சூழலை தன் கருத்தில் எடுத்த கூட்டம், மக்களை நோக்கி செயல்பட வேண்டியது அனைவரினதும் மையக்கடமை என்பதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. இதை மதிப்பிட்ட கூட்டம் அரசுடனும் புலியுடனும் இல்லாத அனைவரையும், கடந்தகால முரண்பாடுகளைக் கடந்து இந்தத் திட்டத்தில் இணைக்கும் வண்ணம் தான் செயலாற்றவும் உறுதிபூண்டது. அதாவது அனைவரையும் ஒன்றிணைக்கும் வண்ணம், கடந்தகால அனைத்து முரண்பாட்டையும், திட்டத்துக்கு ஊடாக கூட்டு வேலைமுறையூடாக அணுகக் கோரியது.

 

இக் கூட்டம் தனது கூட்ட அறிக்கை ஒன்றையும், திருத்தப்பட்ட திட்டம் ஒன்றையும், தனக்கான பெயர் ஒன்றையும் தாங்கி, தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் என்று அறிவித்துக் கொண்டது. அது பலரும் விவாதிக்கும் ஒரு விவாதத்தளம் ஒன்றையும், சொந்த வெளியீடுகளையும், சிங்களம் முதல் அனைத்து ஜரோப்பிய மொழிகளிலும் கருத்துகளை பிரச்சாரம் செய்வது என்று முடிவையும் எடுத்தது.

 

இப்படி பல்வேறு முடிவுகளை எடுத்ததுடன், நடைமுறை வேலை ஊடாக மாற்றத்தை உருவாக்க உறுதிகொண்டது. இந்த வகையில் கூட்டு வேலை முறையில் முக்கியத்துவதை மையப்படுத்தி, தன்னை ஒருங்கிணைத்துள்ளது. விரிந்த தளத்தில் எதிரிக்கு எதிரான அனைவரையும் உள்ளடக்கிய செயலையும், இது போன்ற கூட்டத்தையும் நடத்த கூட்டம் உறுதிபூண்டது.

 

பி.இரயாகரன்
11.10.2009