மாணவிகள் போராட்டம்:
சென்னை கிண்டி அருகேயுள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ம் தேதி ரமாராணி என்பவர் முதல்வராக நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே 10 மாதங்களுக்கு முன்பாக இதே கல்லூரியில் முதல்வராக இருந்தவர். முன்பு முதல்வராக இருந்த பொழுது மாணவிகளிடம் நன்கொடை என்ற பெயரில் கட்டில், மெத்தை, பீரோ, மின்விசிறி போன்ற பொருட்களை வாங்கியுள்ளார். எதற்கு எடுத்தாலும் மாணவிகளிடம் பணம் பறிப்பார்.
இதனை எதிர்க்கும் மாணவிகள் மிரட்டப்பட்டனர்; பழிவாங்கப்பட்டனர். இப்படிபட்டவர் மீண்டும் தங்கள் கல்லூரிக்கு முதல்வராக பணியமர்த்தப்பட்டதை எதிர்த்து இக்கல்லூரி மாணவிகள் கடந்த ஆகஸ்ட் 26 ம் தேதியில் இருந்து வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
பு.மா.இ.மு தலைமையில் மாணவிகள் ஆர்ப்பாட்டம்:
தொடர்ந்து 7 நாட்களாக உறுதியுடன் மாணவிகள் போராடியும் நிர்வாகம் எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை. போராட்டம் குறித்த செய்தியும் வெளியே தெரியாமலிருந்தது. இந்நிலையில் இக்கல்லூரி மாணவிகள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடம் தங்கள் போராட்டம் பற்றி கூறியுள்ளனர். இதன் மூலம் இப்போராட்டம் பு.மா.இ.மு- விற்கு தெரிய வந்தது. பு.மா.இ.மு இக்கல்லூரி மாணவிகளிடம் பிரச்சாரம் செய்து போராட்டத்தை எப்படி முன்னெடுத்து செல்வது என்னும் வழிகாட்டுதலைக் கொடுத்தது. செல்லம்மாள் கல்லூரி மாணவிகளின் இப்போராட்டத்திற்கு பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி நாய்டு கல்லூரி போன்ற கல்லூரிகளிலும் ஆதரவு திரட்டியது. இதனையடுத்து இப்போராட்டத்திற்கு ஆதரவாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பு.மா.இ.மு தலைமையில் மறியல் செய்து கைதாகினர். இக்கைது நடவடிக்கை மாணவிகள் மத்தியில் உணர்வூட்டி போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு இட்டு சென்றது.
பின்னர் மாணவிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரிக் கல்வி இயக்குனரிடம் சென்று மனு கொடுத்தனர். ஆனால் இதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து, தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேன்டும் என்று வலியுறுத்தி மாணவிகள் செப்டம்பர் 26 ம் தேதி அன்று மெமோரியல் ஹால் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாணவிகளை அணிதிரட்டுவதிலும், கலந்துகொள்வதிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. அனைத்து மாணவிகளுமே பலவிதமான எதிர்ப்புகளையும், மிரட்டல்களையும் சந்தித்தனர். ஆனால் அவற்றையும் மீறி, சுமார் 800 மாணவிகள் அணிதிரட்டப்பட்டனர். அவர்கள் ரயில் நிலையத்திலிருந்து மெமோரியல் ஹால் - க்கு பேரணி போன்று சென்றனர். இது அங்கு கூடியிருந்த பத்திரிக்கையாளர்களையும், பொதுமக்களையும் வியக்க வைத்தது.
800 மாணவிகளும், பிற கல்லூரி மாணவர்களும், பு.மா.இ.மு தோழர்களுமாக சுமார் 1000 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
“கல்லூரி முதல்வர் ரமாராணியை
வேலை நீக்கம் செய்!!!
15 நாட்களாக போராடும் மாணவிகளின்
கோரிக்கையை நிறைவேற்று!!!”
என்ற முழக்கங்கள் எழுப்பபட்டன. கல்லூரி பெண்களின் இந்த ஆர்ப்பாட்டமும், அவர்களது போராட்ட உணர்வும் அங்கு கூடியிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கல்லூரிக்கல்வி இயக்குனருக்கு மனு கொடுத்தது போன்று, உயர்கல்வித்துறை செயலாளர், உயர்கல்வித்துறை அமைச்சர், தலைமை செயலாளர், தமிழக முதலமைச்சர் ஆகியோருக்கும் மாணவிகளின் கோரிக்கை மனு அனுப்பபட்டது. ஆயினும், அதிகாரிகளும், அமைச்சர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாய் உள்ளனர். மனு கொடுப்பது போன்ற அறவழி போராட்டங்களால் எவ்வித பலனும் ஏற்படாது என்பதை மாணவிகள் உணர்ந்துள்ளனர். எனவே போராட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையில் உறுதியுடன் இறங்கி, தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையுமே தனியார்மயம், தாராளமயம் போன்ற அரசின் கொள்கைகளாலும் பாதிக்கப்படும் பொழுதும் அவர்களுள் பலர் போராட வருவதற்கு தயங்குகின்றனர். ஆனால் செல்லம்மாள் கல்லூரி பெண்களோ, கல்வி தனியார்மயத்தின் கொடுமையை உணரத்துவங்கியதுமே தைரியத்துடன் போராட்டக்களத்தில் இறங்கி போராடுவது எல்லோருக்கும் முன்னுதாரணமாக உள்ளது.
http://rsyf.wordpress.com/2009/10/06/ஊழல்-குற்றச்சாட்டுக்கு-ஆ/