Sat01182020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் செருப்பின் செய்தி !! – அல் ஜய்தி!

செருப்பின் செய்தி !! – அல் ஜய்தி!

  • PDF

குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த குற்றத்திற்காக ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

 

 

நான் விடுதலையடைந்து விட்டேன்.
ஆனால், எனது நாடு இன்னமும்
போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது.
செயல் குறித்தும்,
செயல்பட்டவர் குறித்தும்,
நாயகனைக் குறித்தும்,
நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும்,
குறியீடு குறித்தும்,
குறியீடான செயல் குறித்தும்
நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
ஆனால், எனது எளிமையான பதில் இதுதான்.

என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும்,
எனது தாயகத்தை
ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால்
நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான்,
என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.

கடந்த சில ஆண்டுகளில்,
ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி
பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள்
தமது இன்னுயிரை இழந்தார்கள்.
கணவனை இழந்த பத்து இலட்சம் பெண்களும்,
ஐம்பது லட்சம் அனாதைகளும்,
உடல் உறுப்புகளை இழந்த லட்சக்கணக்கான மக்களும்
நிறைந்து கிடக்கும் தேசம்தான்
இன்றைய இராக்.

நாட்டுக்குள்ளும், வெளியிலும் இலட்சக்கணக்கானவர்கள்
அகதிகளாய் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

துருக்கியர், அசிரியர், சபியர், யாசித்
அனைவரோடும் தனது அன்றாட உணவை
அரபு இனத்தவன் பகிர்ந்துண்ட ஒரு தேசமாக
நாங்கள் வாழ்ந்திருந்தோம்.

சன்னியுடன் ஷியா
ஒரே வரிசையில் நின்று வழிபட்ட காலமது.
கிறிஸ்துவின் பிறந்தநாளை
கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள் அவை.
இவையனைத்தும்
பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே,
பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட
நீடித்திருந்தன.

எமது பொறுமையும், ஒற்றுமையும்
ஏவப்பட்ட ஒடுக்குமுறையை மறக்கவிடாமல் தடுத்தன.
ஆனால்,
ஆக்கிரமிப்போ
சகோதரர்களையும், நெருக்கமானவர்களையும்
பிரித்துத் துண்டாடியது.
எங்கள் வீடுகளை சுடுகாடுகளாக்கியது.

நான் நாயகனல்ல.
ஆனால் எனக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு.
ஒரு நிலைப்பாடு உண்டு.
எனது நாடு இழிவுபடுத்தப்படுவதைக் கண்ட பொழுது,
எனது பாக்தாத் நகரம் தீயில் கருகிய பொழுது,
எனது மக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது,
நான் இழிவுபடுத்தப்பட்டவனாக உணர்ந்தேன்.
ஆயிரக்கணக்கான துயரம் தோய்ந்த காட்சிகள்
எனது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன.
என்னை போரிடத் தூண்டின.

இழிவுபடுத்தப்பட்ட
அபுகிரைப்…பலூஜா, நஜாஃப், ஹடிதா, சதர் நகரம்,
பஸ்ரா, தியாலா, மொசூல், தல் அஃபர்
என ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற படுகொலைகள்…
ஒரு அங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடு…
எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து,
நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக்
கண்ணால் கண்டேன்.

துயருற்றவர்களின் ஓலத்தை,
அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன்.
ஒரு அவமானம் என்னை அழுத்தி வாட்டியது.
நான் பலவீனனாக உணர்ந்தேன்.

அன்றாடம் நிகழ்ந்த துயரங்களை தெரிவிக்கும்
ஒரு தொலைக்காட்சி நிருபராக,
எனது தொழில்சார்ந்த கடமைகளை முடித்த பின்னால்,
தரைமட்டமாக்கப்பட்ட இராக்கிய வீடுகளின்
இடிபாடுகளின்
தூசியையோ
அல்லது
ஆடைகளில் படிந்த இரத்தக் கறைகளையோ,
நான் தண்ணீரால் கழுவிய பொழுதுகளில்,
பற்கள் நெறுநெறுக்க,
பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களின் பேரால்
பழிக்குப் பழி வாங்குவேனென
நான் உறுதிமொழி எடுத்துக் கொள்வேன்.

வாய்ப்பு வழிதேடி வந்தது.
நான் அதனைக் கைப்பற்றிக் கொண்டேன்.

ஆக்கிரமிப்பினூடாகவும்,
ஆக்கிரமிப்பின் விளைவாகவும்
சிந்தப்பட்ட அப்பாவிகளின்
ஒவ்வொரு இரத்தத் துளிக்கும்,
வேதனையில் கதறிய ஒவ்வொரு தாயின் ஒலத்திற்கும்,
துயரத்தில் முனகிய ஒவ்வொரு அனாதையின் கண்ணீருக்கும்,
பாலியல் வன்புணர்ச்சியால் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலுக்கும்,
நான் செய்ய வேண்டிய கடமையாகக்  கருதியதனால்தான்
அச்செயலை செய்தேன்.

என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது:
நான் வீசியெறிந்த காலணி, 
உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று
 
உங்களுக்குத் தெரியுமா
? 
பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து
 வந்திருக்கிறதென்று
உங்களுக்குத் தெரியுமா
? 
எல்லா மதிப்பீடுகளும்
 மீறப்படும்பொழுது
செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.

குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது
செருப்பை வீசியெறிந்த பொழுது,
எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை,
எனது மக்களைப் படுகொலை செய்ததை,
எனது நாட்டின் வளத்தை கொள்ளையடித்ததை,
அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை,
அதன் குழந்தைகளை அகதிகளாக்கியதை,
நான் ஏற்க மறுக்கிறேன்
என்பதையே தெரிவிக்க விரும்பினேன்.

ஒரு தொலைக்காட்சி நிருபராக,
நிர்வாகத்திற்கு தொழில்ரீதியாக ஏற்பட்ட சங்கடத்திற்கும்,
ஒருவேளை நான் பத்திரிக்கை தருமத்திற்கும்
ஊறு விளைவித்திருப்பதாகக் கருதினால்,
அத்தகைய நோக்கம் எனக்கு இல்லாத போதும்,
எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒட்டுமொத்தத்தில்,
ஒவ்வொரு நாளும்
தனது தாயகம் இழிவுபடுத்தப்படுவதைக்
காணச் சகியாத ஒரு குடிமகனின்
அணையாத மனசாட்சியை
வெளிப்படுத்தவே நான் விரும்பினேன்.

ஆக்கிரமிப்பின் அரவணைப்பிற்குள்ளிருந்து
தொழில் தர்மம குறித்து முனகுவோரின் குரல்
நாட்டுப்பற்றின் குரலை விடவும் ஓங்கி ஒலிக்கக் கூடாது.
நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது,
அதனோடு தொழில் தர்மம இணைந்து கொள்ள வேண்டும்.

எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ,
காசு, பணம் கிடைக்குமென்றோ,
இதனைச் செய்யவில்லை.
நான் எனது நாட்டைக் காக்க மட்டுமே விரும்பினேன்.

செருப்பின் செய்தி !! – அல் ஜய்தி!

-நன்றி, போராட்டம்.

http://www.vinavu.com/2009/09/28/al-zaidi/

Last Updated on Monday, 28 September 2009 21:40