அதிர்ச்சியாகத்தான்
இருந்தது!
இருக்காதா பின்னே,
பகத்சிங் பிறந்த நாளன்று
அரசு விடுமுறை!

எப்படி சாத்தியம் இது?
அவனென்ன,
காந்தியா?
கதராடை உடுத்தி,
மக்களின்
கோவணம் உருவ!
வெள்ளைக்காரன்,
கால் நக்கி
மெடல் வாங்க!

என்னதான் நடந்தது,
நடந்தபடியே யோசித்த போது
ஞாபகம் வந்தது,
நேற்று
ஆட்டோக்கார “காம்ரேடு”
கடலை பொரி கொடுத்தாரே!
அடடே!
ஆயுத பூசை!

என்ன பொருத்தம்?

தூக்கிய
துப்பாக்கியை மட்டுமல்ல,
தன்
வார்த்தைகளையே தோட்டாக்களாக்கி,
வாரிசுகளிடம்
வழங்கியவனின்
பிறந்தநாளில்
வாழத்துடிக்கிறோம்
வற்றாத,
அவன் நினைவுகளைப் போல!

இன்னும்,
தெரிந்து சிலரும்
தெரியாமல் பலரும்
கொண்டாடுகிறார்கள்
ஆயுத பூசை!

யாருக்கான ஆயுதம்
யாருக்கான பூசை?

சும்மாவே இருந்து,
சோறு தின்று,
தொந்தி வளர்ப்பவனுக்கு
திரிசூலம் ஆயுதமென்றால்,

ஊரையே வெளிச்சமாக்க,
உயிரைப் பணயம் வைத்து
உயரக் கம்பங்களில்
ஏறும் எமக்கு
செருப்புதான் ஆயுதம்!

கண நேரம்
கடந்து செல்லும் முன்
மூக்கைப் பிடிக்கச் செய்யும்
உன்
மலச்சாக்கடையில்,
மூச்சடக்கி,
மூழ்கி எழும் எமக்கு
மலவாளிதான் ஆயுதம்!

உன் நுகர்வு வெறியின்
எச்சங்களால்,
உன் மனதைப் போலவே
குப்பை கூளமாகிப் போன
சாலைகளை
பெருக்கித் தள்ளும்
எமக்கு,
துடைப்பமே ஆயுதம்!

அனைவரும்
இந்து என்றாய்,
செய்யும் தொழிலே
தெய்வம் என்றாய்,

சேர்த்து வைத்துக்
கொண்டாடு பார்க்கலாம்,
உன் நவராத்திரிக் கொலுவில்,
செருப்பையும்,
மலவாளியையும்,
துடைப்பத்தையும்,
திரிசூலத்தின்
மூன்று முனைகளாய்
நினைத்து!

- விடிவெள்ளி
http://vidivellee.wordpress.com/