இந்தியா தலைமையிலான தெற்காசியப் பொருளாதாரத்தின் பசி, 50 ஆயிரம் தமிழ் பேசும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சி கொன்றுபோட்டுவிட்டு எதிர்ப்புகள் ஏதுமின்றி வெற்றி கொண்டுவிட்டதாக இறுமாப்படைந்து கொள்கிறது.
அரசியலில் அரிவரி கூடத் தெரியாத அமைரிக்க அங்காடியொன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ரஜபக்ச சகோதர்களை தனது கைப்பொம்மையாக்கிக் கொண்ட இந்திய அரசு, தனது பிராந்திய, அரசியல், பொருளாதார நலன்களுக்காக கொன்று போட்டவர்கள் போக மிஞ்சியவர்களை முகாம்களில் அடைத்து வைத்திருப்பதையும் நியாயப்படுத்துகிறது. இலங்கையின் சந்து பொந்துக்களிலெல்லாம் இந்திய ராட்சத முதலாளிகளின் முதலீடுகள் புற்றுநோய்போலப் பரவிக்கொண்டிருக்கிறது.
வெறித்தனமான பொருளாதார நலனை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கும் இந்திய அரச பாதுகாப்பு ஆலோசகர், புதுடில்லியில் நடைபெற்ற பொலிஸ் உயர் அதிகாரிகள் மாநாட்டில் இராணுவம் மேற்கொண்ட பாரிய நடவடிக்கையினால் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமைத்துவம் அழித்தொழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், பயங்கரமான அந்த இயக்கத்தின் அச்சுறுத்தல் இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். படுகொலைசெய்யப்பட்ட மனித குலத்தின் ஒரு பகுதி குறித்தெல்லாம் நாராயணன் போன்ற மனிதகுல விரோதிகள் துயர்கொள்வார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், புலிகளின் அச்சுறுத்தல் தொடரும் என்பதிலிருந்து, இலங்கைத் தமிழ்ப்பேசும் மக்கள் மீதான அடக்குமுறையும் தொடரும் என மறுதலையான அறிவிப்பை விடுத்துள்ளார்.
தமிழ் நாட்டில் வாழும் ஆறுகோடித் தமிழ் மக்களையும் தாண்டி, உலகம் முழுவதும் அதிர்ந்துபோன மனிதப்படுகொலையால் கோபம் கொண்டிருக்கும் மனிதாபிமானிகளின் உணர்வுகளையெல்லாம் அவமானப்படுத்திவிட்டு, இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களை இந்த நூற்றாண்டின் அடிமைகள் போன்று சித்தரிக்கும் இந்த அறிவிப்பு புதிய ஆசியப் பொருளாதாரத்தின் கோர முகம்! எல்லா முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்களையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, உலக முதலாளித்துவத்தின் பிரதான பகுதியாவதற்கு கோரப்பற்களோடு அலையும் இந்திய முதலாளித்துவத்தினதும், புதிய உலக ஒழுங்கு விதியினதும் உதாரணம்!!
இந்திய அதிகார வர்க்கம் தனது தெளிவான நிகழ்ச்சி நிரலை உருவாக்கி வைத்திருக்கிறது. தன்னுடைய ஒவ்வொரு அசைவுகளும் ஆயிரக்கனக்கான மக்களைக் கொன்றொழிக்கும் என்பதில் அவர்களுக்குச் சந்தேகமில்லை. அந்தக் கொலைகளுக்கெல்லாம் இந்தியா அதிகாரம் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது. நாராயணன் இந்தக் கருத்தை வெளியிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மாவோயிஸ்டுக்களை வெற்றிகொண்டாகவேண்டும் என்று சூழுரைத்திருக்கிறார்.
ஆக, அவர்கள் தங்களது வியாபாரத் தேவைகளுக்காக யாரையும் கொன்றுபோடத் தயாராகிவிட்டார்கள்.
அதற்காக உலகம் மொத்தமும் தமது தந்திரோபாயப் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார்கள். சீனா, இந்தியா, ரஷ்யா என்று உருவாகிக் கொண்டிருக்கும் பொருளாதார அதிகாரங்கள் இலங்கைப் பிரச்சனையில் தான் முதன் முதலில் தமது கூட்டை வெளிப்படையாக முன்வைத்திருக்கின்றன. அதுவும் ஆயிரமாயிரமாய் அப்பாவிகளைப் பலியெடுப்பதனூடாக அந்தக் கூட்டை வலுப்படுத்தியிருகிறார்கள்.
இதையெல்லாம் முதலாளித்துவ ஜனநாயகத்தின் “ஆசிய வடிவம்” என சிக்கனமாக உலகப் பொருளாதார ஆய்வாளர்கள் வர்ணித்துவிட்டு மௌனமாய்ப் அடங்கிப் போய்விடுகிறார்கள்.
புலிசார் தமிழ் வியாபாரிகள் கூட இந்த “ஆசிய வடிவத்திற்குள்” தம்மை உள்நுளைத்துக் கொள்கிறார்கள். ஆசிய ஜனாநாயக முறைமை குறிவத்தது இலங்கைத் தமிழ் பேசும் அப்பாவிகளை மட்டுமல்ல, தனக்கு எதிரான ஒவ்வொரு தனிமனிதனையும், அனைத்து அரசியலியக்கங்களையும், புதிய பொருளாதார அமைப்போடு தம்மை இணைத்துக்கொள்ள முடியாது போகும் சமூகத்தின் கீழணியிலுள்ள ஒவ்வொரு தனிமனித்னையும் அது தனது எதிரியாகப் பிரகடனப் படுத்தியிருக்கிறது.
அப்பாவி மக்களை அழிப்பதில் இலங்கை இந்திய அரசுகள் பெருமிதம் கொள்ளும் வெற்றி என்பது அவர்களின் தோல்விக்கான ஆரம்பத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
இவை எல்லாவற்றையும் மீறி இலங்கை இனப்படுகொலை புதிய மக்கள் எழுச்சிக்கான உரைகல்லாய் அமைந்திருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது. இது தான் இந்திய இலங்கைக் கொலையாளிகளின் முதற் தோல்வி.
தேசிய இனப்பிரச்சனை குறித்து முதன் முதலாக மக்கள் மத்தியிலும், குறிப்பாக ஆசியப் புத்திஜீவிகள் மத்தியிலும் புதிய பிரக்ஞை ஏற்பட்டுள்ளது. சந்தர்ப்பவாதிகள் தங்களை இனம்காட்டிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். முரண்பாடுகள் தெளிவாகத் தெரிய ஆரம்பித்துள்ளன. தமிழகத்தின் வாக்குக் கட்சிகளை மக்கள் நம்பத் தயாரில்லை அதிலும் குறிப்பாக எதிர்ப்பியக்கங்களின் இயங்கு சக்திகளான இரண்டாம் தலைமை இவர்களைப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறது. கருணாநிதி கட்சிக்கு இனிமேலும் இவர்கள ஆதாரத் துண்களில்லை. ஜெயலலிதா, திருமாவளவன், வைகோ, வீரமணி, நெடுமாறன், பாண்டியன், ராஜா,மகேந்திரன் என்ற சந்தர்ப்பவாதப் பட்டியலை புதிய சக்திகள் முற்றிலும் நிராகரிக்க ஆரம்பித்துவிட்டன. இவர்களின் மறுபிரதிகளான பின்நவீனத்துவ வாதிகளின் “குறுங் கதையாடலைக்” குப்பைக்குள் போட்டுவிட்டார்கள்.
புலம்பெயர் தமிழர்கள் குறித்து நாராயனன் எச்சரிக்கை விடுத்து ஒரு வாரத்திற்குள்ளாகவே இந்திய அதிகாரவர்க்கத்தின் இன்னொரு எடான இந்தியன் எக்ஸ்பிரஸ் இலங்கைத் தமிழர்களின் நிகழ்ச்சித் திட்டம் தமிழ் நாட்டில் மறுபடி அரசியல் தளத்திற்கு வர ஆரம்பித்திருப்பதாக முன்னறிவித்திருக்கிறது.
இவர்களின் பய உணர்வும், முன்னெச்சரிக்கை அறிவுப்புகளும் புதிய சமூக உணர்வுள்ள சக்திகளின் அரசியல் வரவை நோக்கியதே. மக்கள் மத்தியில் தம்மைத்தாமே அம்பலப்படுத்திக்கொண்ட சந்தர்ப்பவாதிகளிடமிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளும் மக்கள் புதிய சமூக சக்திகளை நோக்கி அணிதிரள்வார்கள்.
தமிழகத்தில் மட்டுமல்ல இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்த மேற்கு நாடுகளிலெல்லாம் சந்தர்ப்ப வாதிகள் தமது நிலைப்பாட்டை தெளிவாகவே முன்வைக்கிறார்கள், இந்திய அரசின் கைப்பொம்மையான ராஜபக்ச அரசை ஆதரிக்கும் பல முன்னை நாள் “மாற்று” அரசியல் சக்திகளெல்லாம் இன்று இலங்கை அரசின் கிரிமினல் வலைப்பின்னலுடன் தம்மை இணைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். ஒரு நாளைக்கு குறைந்தது 40 பேர் முகாம்களில் சாகடிக்கப்படுகிறார்கள் என்று இலங்கை மங்கள சமரவீர கூறும் அதேவேளை இன்னும் இரு தினங்களில் பண்டாரநாயக்க சர்வதேச மண்டபம் என்கிற இலங்கை அரசுக்குச் சொந்தமான, சாமான்யன் கால்வைக்கவே கூச்சப்படுகின்ற கொழும்பின் இதயப்பகுதியில் அமைந்திருக்கும் மாளிகையில் ராஜினி திரணகமவின் நினைவஞ்சலியை கொண்டாடுகிறார்கள் முன்பு “மாற்று அரசியல்” பேசிய புலம்பெயர் தமிழர்கள்.
இவர்களையெல்லாம் மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.
புலிகளின் முன்னை நாள் நிதிவழங்கும் பிரதானியான அமரிக்க வர்த்தகர் ராஜ் ராஜரட்ணம் இலங்கை அரசிற்கு மில்லியன்களை வழங்கியிருக்கிறார். பிரித்தானியாவின் ஹரோப் பகுதி புலிகளின் பிரமுகர் அம்சாவுடன் இணைந்து மறுபடி ஒரு அரசியலுக்குத் தயாராகிறார். புலிகளை ஆதரித்த புலம்பெயர் தமிழர்கள் பாசிஸ்டுக்களல்ல! இலங்கை அரசின் தொடர்ச்சியான இனச்சுத்திகரிப்பை எதிர்க்கும் குறியீடாகவே புலிகளை ஆதரித்தவர்கள். இவர்களும் சந்தர்ப்பவாதிகளை இனம்கான ஆரம்பித்திருக்கிறார்கள்.
நேற்றய தினம் பூந்தோட்டம் முகாமில் ஆயுதங்களே இல்லாமல் மக்கள் இராணுவத்திற்கெதிராகப் போராடியிருக்கிறார்கள்.
அதுவும் ஒரு அப்பாவியை இரணுவம் ஆயுதங்களோடு கொலைசெய்ய எத்தனித்த பின்பும் கூட! தமிழ் பேசும் இலங்கை மக்களை இந்த நூற்றாண்டின் இந்திய அடிமைகளாக, ஆசியப் பொருளாதாரத்தின் பலிகடாக்களாக உபயோகித்துக்கொள்ள அவர்கள் அனுமதிக்கப்போவதில்லை என்பதை முதல் தடவையாக அறிவித்திருக்கிறார்கள்.
புதிய உலக ஒழுங்கு விதி ஆசியாவின் கொல்லைப் புறத்தில் நடத்தி முடித்த படுகொலைகள் அதிகாரத்திற்கு எதிரான புதிய கருத்துக்களின் ஆரம்பமாகியிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் மக்களைத் திரளாகக் குவித்து கொன்று போட்ட இந்திய அதிகாரவர்க்கதின் அரசியல் தமிழ் நாட்டின் வாக்குக் கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது. ஆசியப் பொருளாதாரத்தின் கோரத்தை வேரறுக்கும் புதிய அரசியல் சக்திகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
இவர்களெல்லாம் பிரபாகரன் மறுபடி வருவார் எனக் கண்களை மூடிக் கனவு காண்பவர்களல்ல. விழித்தே இருக்கிறார்கள்.