03282023செ
Last updateபு, 02 மார் 2022 7pm

10 வயது மாணவன் தீக்குளித்து சாவு! மொட்டு கருகியது ஏன்?

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஞானபிரகாசத்தின் 10 வயது மகன் பிரதீஷ் ஒரு நடுநிலைப்பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தான். காலாண்டு தேர்வில் தமிழ் பாடத்தை சரியாக எழுதவில்லை என ஆசிரியை விஜயலட்சுமி அவனை கண்டித்தார். இனி சரியாக எழுதவில்லை என்றால் அவனை 4ஆம் வகுப்பு அனுப்பி விடப்போவதாகவும் எச்சரித்தார்.

மதியம் மனமுடைந்த அந்த சிறுவன் அழுது கொண்டே வீடு வந்தான். ஆறுதல் கூறிய தாயார் மேரி லதா இது பற்றி ஆசிரியையிடம் பேசுவதாக தேற்றி அவனுக்கு உணவு வாங்குவதற்காக அருகாமை கடைக்குச் சென்றார்.

அந்நேரத்தில் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்த பிரதீஷின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவனை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவனோ வழியிலேயே இறந்து போனான். பின்னர் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் ஆசிரியை விஜயலட்சுமி கைது செய்யப்பட்டார்.

இது 19.09.2009 தினத்தந்தியில் வந்த ஒரு செய்தி.

ஆசிரியையை உண்மையிலேயே குற்றவாளியா?

10 வயது மாணவன் தீக்குளித்து சாவு! மொட்டு கருகியது ஏன்

அந்த மாணவன் படித்த பள்ளி அநேகமாக அரசுபள்ளியாக இருக்க வாய்ப்பு உண்டு. லாரி ஓட்டுநர் குடும்பத்தில், மண்ணெண்ணை வைத்து சமையல் செய்யும் வீட்டில் அந்த சிறுவனுக்காக சில ஆயிரங்கள் செலவழிக்கப்பட்டு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்திருப்பதற்கு வாய்ப்பில்லை. மேலும் பிரச்சினையே அந்த மாணவன் தமிழ் பாடத்தேர்வு சரியாக எழுதவில்லை என்பதே. தமிழுக்காக மெட்ரிகுலேஷன் பள்ளியில் திட்டு வருவதற்கும் வாய்ப்பில்லை.

ஆங்கிலக் கான்வென்டுகள் காளான்களைப் போல முளைத்து வளர்ந்திருக்கும் இந்த 10 அல்லது 20 வருடங்களுக்கு முன்னர் அநேகர் அரசு பள்ளியில்தான் படித்திருக்கக்கூடும். அரசு பள்ளிகளில் கண்டிப்பும், தண்டிப்பும் அங்கு படித்த எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். அப்போது நாம் அடைந்த பள்ளி தண்டனைகளை மீட்டுப் பார்ப்போம். அதிலென்ன பிரச்சினையை அன்று கண்டோம்?

அரசு பள்ளிகளில் அடிவாங்கி வளர்ந்த முந்தைய தலைமுறை மாணவர்கள் இது போல மனமுடைந்து போவதில்லை. வீட்டிலும், பள்ளியிலும் இப்போதை விட அப்போது கட்டுப்பாடு அதிகம். இந்த தண்டனைகளை கடந்துதான் அநேகம் பேர் வந்திருக்கிறோம்.

அதிலும் ஆரம்ப வகுப்பு பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு ஆசிரியப் பணியாற்றுவது இன்னும் சிக்கலானது. ஏழைப்பின்னணியிலும், உதிரியான குடும்ப வாழ்க்கையிலிருந்தும் வரும் இந்த சிறுவர்களை படிக்க வைப்பதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டும்.

அரசு பள்ளிகளில் சேவை மனப்பான்மையோடு பணியாற்றும் ஆசிரியர்கள் கூட தேவை கருதி மாணவர்களை தண்டிப்பது, அடிப்பது உண்டு. ஆசிரியர்களை விடுங்கள் வீட்டில் சிறுவயது குழந்தைகளின் சேட்டை எல்லை மீறும்போது பெற்றோரே அடிப்பதில்லையா?

இங்கு விஜயலட்சுமி அடித்ததாக செய்தில்லை. சும்மா 4ஆம் வகுப்பிற்கு அனுப்புவதாக மிரட்டியிருக்கிறார். இதை ஒரு பெரிய குற்றமாக கருத முடியாது. மேலும் அவன் இனி நன்றாக எழுதவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் அந்த ஆசிரியை குற்றவாளியில்லை.

இப்போதும் தனியார் பள்ளிகளில் கூட 100 சதவீத வெற்றி ரிசல்ட்டுக்காக மாணவர்களை எந்திரங்கள் போல அடிமைகளாகத்தான் நடத்துகின்றனர். பெற்றோரும் அதை எதிர்மறையாக புரிந்து கொள்வதில்லை. சில சமயம் எல்லை மீறும் தனியார் ஆசிரியர்களால் கூட பல விபரீதங்கள் உடல் காயங்கள் நடந்திருக்கின்றன. பள்ளி நிர்வாகத்தின் வெற்றி விருப்பத்தை நிறைவேற்றியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அதிகம். இதன்படி இவர்களும் இங்கே  அடிமைகளாகத்தான் பணிபுரிகின்றனர். இப்படி ஆசிரியர்களும் அடிமை, மாணவர்களும் அடிமை என்றால் ஜனநாயகம் எங்கிருந்து பூக்கும்?

இறுதியில் தோல்வியுறும் மாணவர்களில் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது முக்கியமாக 10,12 பொதுத்தேர்வுகளின்போது நடக்கிறது.

தேர்வு முடிவு வெளியாகும் காலத்தில் மனமுடைந்த மாணவர்களை பெற்றோர்கள் மருத்துவத்திற்காக அழைத்து வருவது ஆண்டுதோறும் நடப்பதாக மருத்துவர் ருத்ரனும் தெரிவிக்கிறார்.

தனியார் பள்ளிகளின் கல்வி தரத்திற்கு ஈடு கொடுக்கா விட்டால் ஒவ்வொரு அரசு பள்ளிகளும் அதை சாக்கிட்டு மூடப்படலாம், அல்லது வேறு பள்ளியுடன் இணைக்கப்படலாம், அல்லது அந்த ஆசிரியர்கள் இடம் மாற்றம் செய்யப்படலாம். இத்தகைய நிர்ப்பந்தங்கள் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கின்றது.

குறிப்பாக இன்னும் நிலவுடமை பண்பாடு கோலேச்சும் இந்த சமூகத்தில் பெற்றோரும், ஆசிரியரும் வளரும் வாரிசுகளை தமக்கு விதிக்கப்பட்ட அடிமைகளாகத்தான் கருதுகின்றனர். இளையோருக்கு தேவைப்படும் சுதந்திரமும், அரவணைப்பும் இங்கு இல்லை. பயந்து கொண்டு வாழ்வதே சிறுவர்களின் பொது போக்கு. முக்கியமாக கீழ் மட்ட வர்க்கங்களில் இந்த போக்கு அதிகம். மேல் நோக்கிய வர்க்கங்களில் செல்லமும், ஆடம்பரமும் இருப்பதால் அங்கே சிறுவர்களைக் கண்டுதான் மற்றவர் பயப்படவேண்டும்.

இதனால் ஒரு மாணவனை நண்பனைப் போல மதிப்பு கொடுத்து கற்றுக் கொடுக்கும் பார்வையெல்லாம் நமது ஆசிரியர்களிடம் இருக்காது. அப்படியே ஒரு சிலர் முயன்றாலும் மாணவர்களின் சமூகச் சூழல் அதை மறுப்பதாகி விடுகிறது. பெரிதாகி வரும் வர்க்க முரண்பாடுகளுக்கேற்ப மாணவர்களும் தமது வர்க்கங்களைத் தாண்டி இப்போது இணைய முடிவதில்லை. முந்தயை தலைமுறைக்கு அந்த வாய்ப்பு இருந்தது. தனிமைப்படும் மாணவர்களின் பண்புகள் பிரச்சினை வரும்போது அதீதமாக வெளிப்படுவதும், அதை கட்டுப்படுத்த பெற்றோரும், ஆசிரியர்களும் திணறுவதும் இப்போது முகத்திலடிக்கும் உண்மை.

5ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன் ஒரு ஆசிரியையின் நடத்தையால் தற்கொலை செய்து கொண்டான் என்ற அதிர்ச்சியும், வேதனையும் நம்மை தாக்குகிறது என்றாலும் ஆய்ந்து பார்த்தால் அந்தப் பெண்மணி அப்படி ஒன்றும் பெரிதாக தவறிழைக்கவில்லை.

பத்தாம் வகுப்பிலும், +2விலும் வருடந்தோறும் நடக்கும் தற்கொலைகள் இப்போது ஐந்தாம் வகுப்பிற்கே வந்து விட்டது என்பதைத்தான் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை.

முழுக்குடும்பமும் வேலைக்கு போனால்தான் வாழ முடியுமென்ற நிலையில் மேற்படிப்பில் ஏதாவது தேறினால்தான் உருப்படியாக ஏதும் ஒரு வேலை கிடைக்கும் என்ற சூழலில் குறிப்பாக தோல்வியுறும் பள்ளி இறுதியாண்டு மாணவிகளின் தற்கொலைகளைக்கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால் பிரதீஷின் தற்கொலையை என்னவென்று சொல்வது?

பத்து வயதிலேயே அவன் வாழ்க்கை குறித்த அச்சத்தை அடையும் அளவுக்கு முதிர்ந்த சிந்தனை அவனிடம் வர வாய்ப்பில்லையே? பின் ஏன்? அறுபது வயது ரஜினியின் சேட்டைகளையோ, விரகதாபத்துடன் ஆடும் ஒரு குத்தாட்ட நடிகையையோ பார்த்து ஆடும் நடிக்கும் குழந்தைகளைக் கண்டு பெற்றோர்கள் மகிழ்வர். பள்ளி ஆண்டு விழாக்களிலும் இவை சாதாரணம். தனது உலகிற்கு எது அதிகம் தெரிகிறதோ அதைப் போலச்செய்யும் இந்த பாவனை பொருளறிந்து செய்யப்படுவதில்லை. உலகை, சமூகத்தை எளிமையாக அறியும் குழந்தைகள் உலகில் பெரியவர்களின் பாவனைகளே முக்கியமானதொன்றாக மாறிவிட்டால் பிஞ்சு பழுப்பதால் வரும் பிரச்சினைகளை நாம் எதிர் கொள்ளவேண்டும்.

பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் விலங்கு நிலையிலிருந்து பின்னர் படிப்படியாக மனித நிலைக்கு வளருகிறது. இன்று இந்த மாற்றத்தை கையில் வைத்திருப்பவர்கள் பெற்றோர்களா, இல்லை மற்றவர்களா?

சக்திமான்/பவர் ரேஞ்சர் சாகசங்களைப் பார்த்து அப்படியே செய்தும் சில சிறுவர்கள் இறந்திருக்கிறார்கள். இதுவும் போலச்செய்தல்தான். நிழலை நிஜமென்று நம்பி உண்மையை மறுக்கும் சிந்தனை இத்தகைய தொடர்களைப் தொடர்ந்து பார்ப்பதால் ஏற்படுகிறது. ஆனால் இவையெல்லாவற்றையும் விட அதிக வேறுபாடு கொண்டது பிரதீஷின் தற்கொலை. இங்கே போலச்செய்தல் மட்டுமல்ல, கருத்து ரீதியாகவும் பல அலைக்கழிப்பிற்கு ஆளாகி அந்த சிறுவன் இந்த முடிவை எடுத்திருக்கிறான். இது எப்படி சாத்தியம்?

இங்கே குற்றவாளிக் கூண்டில் அந்த ஆசிரியை மட்டுமல்ல தமிழும் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆங்கிலப்பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம் என்பது நவீனபாணியாக ஏற்கப்பட்ட காலத்தில், தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும், மக்கள் உரையாடல்களிலும் தமிங்கிலீஷே அதிகராப்பூர்வமான மொழியாக மாறிவிட்ட நேரத்தில் அந்த சிறுவன் தமிழை நல்லமுறையில் எப்படி எழுத முடியும்? விரைந்து சாகும் தமிழை ஒரு பிஞ்சு மனதில் துளிர வைக்கமுடியுமா என்ன? சுற்றியுள்ள உலகில் தமிழ் வழக்கழிந்து வரும் நேரத்தில் ஒரு மாணவனை அதுவும் ஐந்தாம் வகுப்பு மாணவனை தமிழ் பாடத்தில் தேற வைப்பது எப்படிப்பார்த்தாலும் கடினம்தான். எனில் தமிழை தின்று வரும் ஆங்கிலம்தான் இங்கே வில்லனா? இல்லை ஆங்கிலம்தான் இனி வாழ்க்கை மொழி என தீர்மானித்திருக்கும் சமூக சக்திகள் காரணமா?

இயற்கை உலகை தமிழாலும், செயற்கை உலகை ஆங்கிலத்தாலும் அறிய நேரும் சூழலில் ஆங்கிலத்தை அறிய முடியவில்லையே என குற்ற உணர்வு கொண்ட தமிழக இளைஞர்கள்தான் ஆகப்பெரும்பான்மையினர். தாய் மொழியால் வாழ முடியாது என்பது விதியாகி சகலத்திலும் கோலேச்சும் அன்னிய மொழியை கற்க முடியாமலும் திக்கி திணறியபடிதான் வாழ்க்கை நகர்ந்து வருகிறது. இதையெல்லாம் விஜயலட்சுமி போன்ற ஆசிரியப் பெண்கள் அறிய வேண்டும். அப்போதுதான் தமிழை ஒழுங்காக எழுத முடியாத சூழலைப் புரிந்து கொண்டு வேறு முயற்சிகளை எடுப்பதற்கு அறிவு ஆயத்தப்படும். இன்றைய சமூகத்தின் நவீன சூழல் குறித்து எந்த ஆசிரியருக்கும் அப்படி ஒரு புரிதல் இல்லை என்பதும் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பாடத் திட்டம் என்ற அளவுகோலின்படி கற்றுக் கொடுப்பதே என்பதும்தான் யதார்த்தம்.

விவரம் புரியாத குழந்தைகளை விட்டுவிடுவோம். விவரம் தெரியவேண்டிய இந்த ஆசிரியர்களுக்கு இதை யார் கற்றுக் கொடுப்பது?

ஐந்தாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்புக்கு அனுப்பப்படுவோமோ என்பது அந்த சிறுவனை அப்படி ஏன் பாதித்திருக்கிறது? அந்த வகுப்பில் தமிழை சரியாக அதுவும் பாடத்திட்டத்தின்படி எழுதாமல் இருப்பதில் வேறு சில மாணவர்களும் இருந்திருக்கக்கூடுமே? எட்டாம் வகுப்பு வரை ஃபெயில் என்பதே இல்லை என்பது கூட இந்த சிறுவர்களுக்கு தெரியாமல் போயிருக்கிறது. எல்லாம் ஆசிரியர் தீர்மானிப்பதே பள்ளி வாழ்க்கை என்பதே இந்த மாணவர்களின் பொது அறிவாக இருக்கிறது.

தந்தையின் கடின வாழ்க்கையை அந்த சிறுவனும் அறிந்திருக்க வேண்டும். லாரி ஏறினால் இறங்குவதற்கு சில நாட்கள் ஆகிவிடும். குடும்பத் தொடர்பே மாதத்தில் சில நாட்கள்தான். இத்தகைய கடின வாழ்வுதான் நமக்கும் இறுதியில் கிட்டிவிடுமோ என அவன் எண்ணியிருப்பானோ? தேவாலயத்தில் பளீர் உடைகளுடன் வரும் மற்ற சிறுவர்கள் போல தானும் வாழமுடியாமல் போய்விடுமோ என்றும் அவன் சிந்தித்திருப்பானோ?

இன்பத்தையும், துன்பத்தையும் பகிர்ந்து கொள்ளும் தோழமைகள் அவன் வாழ்க்கையில் ஒரு வேளை சில விசேட காரணங்களினால் இல்லாமல் போயிருக்குமோ? நட்பு வட்டத்தில் வளைய வரும் சிறுவர்கள் இப்படி எளிதில் உணர்ச்சி வசப்படமாட்டார்கள். நட்பு வட்டத்திற்கு ஒதுக்க வேண்டிய நேரத்தை டி.வி எடுத்துக்கொண்டிருக்குமோ? ஏழைக் குடும்பமென்றாலும் டி.விதான் தமிழகத்தின் தேசியப் பொருளாகிவிட்டதே. கனாக்காணும் காலங்களும், சன் டி.வியின் தொடர்களும் எல்லா வகை வாழ்க்கை சதிகளையும், சம்பவங்களையும், திட்டமிடுதலையும் கற்றுத்தருகின்றன. பருவத்திற்கு வராத வயதிலேயே பாலியல் வேட்கை, பணத்திற்காக கொலை செய்ய திட்டமிடுதல், சக மாணவனை பணையக் கைதியாக்கி கொல்லுதல் போன்றவையெல்லாம் சமீபத்திய சிறுவரது வன்முறைகளில் சேர்ந்திருக்கின்றன. அப்படித்தான் தீக்குளிப்பையும் அந்த டி.வி பெட்டியைப்பார்த்து பிரதீஷ் பயின்றிருப்பானோ?

பிஞ்சிலே பழுக்கவைக்கும் முயற்சிகளில் தொலைக்காட்சி ஊடகம் பாரிய பங்களிப்பதன் மூலம் இன்றைய சிறுவர்களது ஆளுமை கூட டி.விதான் கட்டியமைக்கிறதா?

இல்லை அவனது தாய் மற்ற சிறுவர்களோடு பழகுவதை கண்டிப்புடன் நிறுத்தியிருப்பாரோ? இதெல்லாம் ஒரு நடுத்தர வர்க்கத்தில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் சமூகமாக வாழ்வது அத்தியாவசியமாகத்தானே இன்றும் இருக்கிறது? இல்லை அதுவும் மாறி வருகிறதா?

இந்தப் பிரச்சினையை தாய் தனது ஆசிரியையிடம் பேசுவாதக கூறினாலும் அதில் அவனுக்கு நம்பிக்கை இல்லை. இந்த உலகில் தனது பிரச்சினையை தாயால் கூட தீர்க்க முடியாது என்ற தனிமைச் சிந்தனை அந்தச் சிறுவனுக்கு எப்படி வந்தது? யார் அதைக் கற்றுக் கொடுத்தது?

அந்த மாணவனது பெற்றோர் தனது மகனது யாரும் எதிர்பார்த்திராத சாவு குறித்து இன்னமும் அழுது கொண்டிருப்பார்கள். அந்த செய்தியைப்படித்தவர்கள் அதை மறக்க முயற்சித்திருப்பார்கள். என்றாலும் குழந்தைகளும், சிறார்களும் ஏதோ ஒரு வீட்டில் மட்டும் வாழ்பவர்கள் அல்ல. அதனால் அடுத்த அதிர்ச்சிக்கு நாம் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

http://www.vinavu.com/2009/09/22/child-suicide/


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்