ஓரிரு வாரங்களாகவே சீனா இந்தியப்பகுதிகளை ஆக்கிரமிப்பதாகவும், உள் நுழைந்து சிவப்பு மையில் அடையாளமிட்டதாகவும், காஷ்மீர் மட்டுமின்றி, உத்ராஞ்சல், அருணாசல பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் ஊடுருவல் நிகழ்ந்திருப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன.
பாதுகாப்புத்துறை இதை கண்டித்து அரசிடம் அறிக்கை கொடுத்திருக்க, வெளியுறவுத்துறையோ இது ஒன்றும் கவலைப்படத்தக்க நடவடிக்கையில்லை, நாலாயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரமுள்ள எல்லையில் அங்கும் இங்கும் வந்து போவது பெரிய அளவில் எதிர்ப்பை தெரிவிக்கவேண்டிய விசமல்ல என்று தெரிவித்திருக்கிறது. இந்திய அரசின் இரண்டு பெரும் துறைகளுக்குள்ளேயே முரண்பட்ட கருத்துகள் வெளிவந்திருக்கின்றன. இதே நேரம் சீனாவும் இந்த ஊடுருவல் செய்திகளை மறுத்திருக்கிறது. ஆனால் இந்திய அரசின் நடவடிக்கைகளையும், அதிகாரியை அனுப்பி விளக்கம் கேட்டிருப்பதையும், பிரமரின் பேச்சையும் வைத்துப்பார்க்கும் போது ஊடுருவும் வேலை நடந்திருப்பதாகவே அனுமானிக்க முடிகிறது. வழக்கம்போல எந்த வாய்ப்பையும் பயன்படுத்த தயங்காதவர்கள் இந்த வாய்ப்பையும் கம்யூனிசத்தை எதிர்க்க பயன்படுத்தியிருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் இந்தியாவைவிட சீனத்தையே நேசிப்பதாக திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்கள். தாங்களால் ஆராதிக்கப்படும் சீனாவின் இச்செயல் குறித்து ஒன்றும் கூற முடியாமல் போலிகள் அமைதிகாக்க; இதைப்பேசும் அவசியம் எழுந்திருக்கிறது.
தேசபக்தி என்பது ஆளும் வர்க்கங்கள் தங்கள் வசதிக்காக பயன்படுத்தும் செரிமான மாத்திரை என்பதை முதலில் புறிந்து கொள்ளவேண்டும். நாடு முழுவதும் உழைக்கும் மக்களிடம் கடைசியாக ஒட்டிக்கொண்டிருக்கும் துண்டு நிலங்களையும் ஆக்கிரமித்து முதலாளிகளுக்கு வழங்கிக்கொண்டிருக்கும் அரசை எதிர்த்து எந்த விவாதத்தையும் கிளப்ப கவனமாக மறுக்கும் ஊடகங்கள் ஆளில்லாத மலை முகடுகளை அங்குலம் அங்குலமாக ஆக்கிரமிப்பதாக பீதி கிளப்பி வருகின்றன. காஷ்மீரிலும் மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் ராணுவத்தின் கொடூர அடக்குமுறைகளால் இந்தியப்பகுதிகளாக தக்கவைக்கப்பட்டிருக்கும் மக்கள் தாங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவே கருதுகிறார்கள். இதை பிறந்த நாடு என்ற ஒரே காரணத்திற்காக ஆதரிப்பவர்களால் எந்த அடிப்படையில் சீனாவை எதிர்க்க முடியும்? நம்முடையா நாடா? எதிரான நாடா என்ற அடிப்படையில் ஆதரிக்கவும் எதிர்க்கவும் செய்வது நேர்மையான செயலாக இருக்க முடியாது. நோக்கத்தையும், காரணங்களையும் ஆய்ந்து சரியானதை ஆதரிப்பதும் தவறானதை எதிர்ப்பதுமே நேர்மையானதாக இருக்கும். அந்த வகையில் சீனாவில் இந்த ஆக்கிரமிப்பிற்கான காரணங்களும் நோக்கமும் என்ன?
விவசாய நாடான சீனாவில் விவசாயம் புறக்கணிக்கப்பட்டு தொழிற்துறை மட்டுமே ஊக்குவிக்கப்பட்டு ஏற்றுமதியை மட்டுமே சார்ந்து நிற்குமாறு பொருளாதாரம் மாற்றப்பட்டது. இந்நிலையில் உலக பொருளாதார நெருக்கடியினால் சந்தையில் போடப்பட்டிருந்த அந்நிய முதலீடு அதிக அளவில் திரும்பப்பெற்றுக்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட மந்த நிலையினாலும் விவசாயம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதினால் விவசாயத்தொழிலாளர்களின் போராட்டங்களாலும் திணறிவரும் சீன அரசு மக்களை திசை திருப்ப ஆக்கிரமிப்பு போன்ற குறுகிய தேசபக்க்தி வெறியூட்டும் செயல்களில் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறது.
நெருங்கிவரும் இந்திய அமெரிக்க உறவும், அணு ஆற்றல் ஒப்பந்தமும் ஆசியப்பகுதியில் தனக்கு போட்டியாக இந்தியாவை அமெரிக்க வளர்த்து வருவதாக நினைக்கிறது சீனா. இந்தியாவும் சீனவுடன் ஆசிய ஆதிக்கப்போட்டியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இந்தியவுக்கு எதிராக சீனாவும் சில நிலைபாடுகளை எடுத்துவருகிறது. பாகிஸ்தனின் குவாடர் துரைமுகத்தை நவீனப்படுத்த ஒப்பந்தம் செய்து புதுப்பித்துவருகிறது. பங்களாதேஷில் சிட்டகாங் துரைமுகத்தை நவீனப்படுத்தவும் அணு உலை அமைத்துக்கொடுக்கவும் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதுபோல் இலங்கையிலும் அம்பந்தோட்டை துறைமுகத்தை நவீனப்படுத்தி வருகிறது. இவைகளெல்லாம் அமெரிக்காவின் புதிய கைக்கூலியான இந்தியாவை எதிர்கொள்ள சீனா செய்து வருபவைகள். பாகிஸ்தான் ஆசாத் காஷ்மீரை அண்மையில் தனது புதிய மாநிலமாக அறிவித்திருப்பதையும் இதோடு இணைத்துப்பார்க்கவேண்டும். இந்தியாவும் இலங்கையை தனது கைக்குள் வைத்திருப்பது, திபெத்தை அங்கீகரித்திருப்பது, சீன எல்லையோரங்களில் சாலை கட்டுமானங்களை ஏற்படுத்திவருவது, நேபாளத்தின் ஆட்சியை புரட்டி சீனாவுடன் ஏற்படுத்தவிருந்த ஒப்பந்தத்தை தடுத்தது என சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆக இரண்டு நாடுகளும் ஈடுபட்டிருப்பது அதன் மக்களுக்கு எந்தப்பயனையும் ஏற்படுத்தாத ஆதிக்கப்போட்டி.
விவசாயிகளின் தற்கொலைகளும், ஏறிவரும் விலைவாசிகளும் மக்களிடம் கொதிப்பை ஏற்படுத்தியிருக்க இவைகளை மீறி நிதிநிலை அறிக்கையில் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடிக்கான வரிச்சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. அமெரிக்காவிலும் வேறு சில ஐரோப்பிய நடுகளிடமும் ஆயுதம் வாங்க ஒப்பந்தம் போட்டுள்ள நிலையில், அவைகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு சீன இந்தியா மீது போர் தொடுக்க ஆயத்தமாகிறது, இந்தியாவைச்சுற்றியுள்ள நாடுகளெல்லாம் இந்தியாவுக்கு எதிரி நாடாக இருக்கின்றன என்பன போன்ற கருத்தாக்கங்கள் மக்களிடம் பரவுவது இந்திய அரசுக்கும் தேவையாக இருக்கிறது.
சீனா ஒன்றும் கம்யூனிச நாடல்ல, அதுவும் ஒரு முதலாளித்துவத்தை ஆராதிக்கும் நாடுதான். “சீனாவே கம்யூனிசக்கொள்கைகளை விட்டுவிட்டது” என்று மேற்கோள் காட்டுவதன் மூலம் இங்குள்ள அறிவுஜீவிகளும் அதை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் கம்யூனிசத்தை தாக்க வேண்டுமென்றால் சீனா கம்யூனிச நாடாகிவிடும். எனவே காரணங்களை ஒதுக்கிவிட்டு செயலை மட்டும் வைத்து சீனாவை எதிர்க்கவேண்டும் என்றால் அதற்கு புரட்சிகர இடது சாரி இயக்கங்கள் தயாரில்லை. வீணான ஆதிக்கப்போட்டியில் ஈடு பட்டு மக்களை வதைக்கும் இரு நாடுகளையும் கண்டிக்கிறோம். இந்தியாவைப்போலவே ஊட்டச்சத்தின்றி வாடும் சீனக்குழந்தைகளுக்காகவும், வேலையின்றி வாழ வழியுமின்றி வாடும் மக்களுக்காகவும், மக்களை ஒட்டச்சுரண்டும் நிதிக்கொள்கைகளை எதிர்த்தும் போராடவேண்டிய கடமை இரு நாட்டு கம்யூனிஸ்டுகளுக்கும் இருக்கிறது. மாறாக ஆதிக்கப்போட்டிக்கு வால் பிடிப்பது கம்யூனிஸ்டுகளின் வேலையில்லை. அப்படிச்செய்தால் அது நம் விரலைக்கொண்டே நம் கண்களை குத்திக்கொள்வது போலாகும்.
http://senkodi.wordpress.com/2009/09/19/சீன-ஆக்கிரமிப்பு-கம்யூன/