உயிர்த்தெழு !

மெளனத்தை உடை.
மர உதடு திற.
பேசு!

பூமியின் புன்னகையை
மீட்டுத் தரும்
வேட்கையோடு

முள் முளைத்த மரபுகளை
முறித்தெறியும் வேகத்தோடு
பேசு!

கலைகளின்
ஒப்பனைகளைக் கழற்றி
நிகழ்வின் காயங்களை
வலியின் கணத்தோடு
விவரி!

பூவெறிந்து
பாவெறிந்து
கண்ணீர் எறிந்து

கற்களைக் கரைக்கும்
முயற்சியைத் துற.

அர்த்தங்களின்
அடர்த்தி குறையாத
ஆவேசத்தோடு
வீசு சொற்களை!

வேர்வரை விழட்டும்
மடமைகள்.

இயல்களைத்
தெரிந்து கொள்.
இசங்களைப்
புரிந்து கொள்.

பேசு!

சீழ் பிடித்த
சிகரங்களின் உள்ளழுக்கை
உண்மை விரல்களால்
தொடு.

முகவரிகளின்
அகவரிகளை ஆய்வு செய்!

உன்னை
இயல்பாய் வெளிப்படுத்து.

பேசு!

ஞானவெறி கொள்!
ஞாலவெளி பற.

-மறைந்த தோழர் தீபன், 

http://www.vinavu.com/2009/09/19/saturday-poems-5/