ஐந்தாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ள கருணாநிதியின் "பொற்கால' ஆட்சியின் சாதனையாக ""உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'' எனும் புதியதொரு திட்டத்தை தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. ""நுரையீரல் புற்றுநோயாளிக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை'' என்றும் ""சென்னை தனியார் மருத்துவமனையில் 15 வயது சிறுமிக்கு மூளைக்கட்டி இலவசமாக அகற்றப்பட்டது'' என்றும் தினசரிகளில் செய்திகள் வந்து குவிகின்றன.
தமிழக அரசின் 26 நல வாரியங்களின் உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என்றும், இதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குக் குறைவாக உள்ள மக்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள் என்றும் இத்திட்டம் கூறுகிறது. ஒவ்வொரு பயனாளிக்கும் ஸ்மார்ட் கார்டு (கிரெடிட் கார்டைப் போன்ற) ஒன்று வழங்கப்படுமாம். மாநிலமெங்கும் அரசு ஊழியர்கள் முகாம்களை நடத்தியும், வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தியும், நல வாரியங்கள் எவற்றிலும் உறுப்பினராக இல்லாத பயனாளிகளை அடையாளம் கண்டு இத்திட்டத்தில் சேர்ப்பார்களாம்.
""ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைடு இன்சூரன்சு'' என்ற பன்னாட்டு காப்பீடு நிறுவனத்திடம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் பட்டியலிட்டிருக்கும் தனியார் மருத்துவமனைகளில் அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டு காலத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் வரைக்கும் சிகிச்சை தரப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொருஅரசு ஊழியரிடமும் மாதாமாதம் ரூ.50ஐ வசூலித்து காப்பீட்டு நிறுவனத்துக்கு இத்தொகையை அரசு வழங்கும். இதன் மூலம் காப்பீட்டு நிறுவனத்துக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் நிரந்தர வருவாயை அரசு உறுதிப்படுத்தியுள்ளது. சிகிச்சை பெற வரும் மக்களிடம் ஒட்டக் கறந்துவிடும் தனியார் மருத்துவமனைகள் திடீரெனக் கருணை பொங்க "இலவசமாக' சிகிச்சை செய்வதன் பின்னணி இதுதான்.
இத்திட்டத்தின்படி ஏழைக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் அரசே ஆண்டொன்றுக்கு ரூ.500 வீதம் காப்பீடு தொகையாக ஸ்டார் காப்பீட்டு நிறுவனத்துக்குச் செலுத்தி வரும். சென்றஜூலை மாதம் சென்னையில் நடந்த இதற்கான தொடக்கவிழாவில்இவ்வாண்டின் முதல் காலாண்டு பிரீமியமாக ரூ.130கோடியை ஸ்டார் ஹெல்த் நிறுவன அதிகாரிகளிடம் கருணாநிதி வழங்கினார்.
உலகின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள், தமிழ்நாட்டுஅரசு மருத்துவக் கல்லூரிகளில் உருவாக்கப்படுகிறார்கள். தலைசிறந்த மருத்துவர்களாக இருக்கும் அரசு மருத்துவர்களைக் கொண்டு மக்களுக்குத் தரமான சிகிச்சை அளிக்காமல் தனியார் மருத்துவமனைகளிடம் அதனை ஒப்படைத்தது ஏன் என்ற கேள்விக்கு, ""முதலமைச்சரின் மருத்துவ நிதி உதவி பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏழைகளுக்கும் தரமான சிகிச்சை கிடைக்கவேண்டும். எனவேதான் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது'' என்று அரசுகாரணம் சொல்கிறது.
ஆண்டுதோறும் இத்திட்டத்திற்கு அரசு வழங்கப்போகும் தவணைத் தொகை மட்டும் ரூ.517 கோடிகளாகும். அதேநேரத்தில், மதுரை அரசு மருத்துவமனையை அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான கழகம் (எய்ம்ஸ்)தரத்திற்கு உயர்த்தப் போவதாக அறிவித்து அரசு ஒதுக்கியுள்ள தொகையோ ரூ. 150 கோடிகள்தான். இதன்படி பார்த்தால், காப்பீடுக்குத் தனியாரிடம் ஒவ்வோராண்டும் போய்ச் சேரும் பணத்தைக் கொண்டு மூன்றுக்கும் மேற்பட்ட நவீன உயர்தர மருத்துவமனைகளைக் கட்டி விடமுடியும்.
அரசு மருத்துவர்களோ, ""சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் இருக்கும் 30 அறுவைசிகிச்சை மையங்களில் 25 மையங்கள் தினமும் காலை 8 முதல் மதியம் 2 வரை மட்டுமே இயங்குகின்றன. 24 மணி நேரமும் இயங்குபவையோ அவற்றில் வெறும் ஐந்துதான். இவற்றை முறைப்படுத்தி 24 மணிநேரமும் இயங்குபவையாக மாற்ற எந்த நடவடிக்கையும் இல்லை'' என்று புலம்புகின்றனர். ஏற்கெனவே இருக்கும் அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பையும் நிர்வாகத்தையும் சீரமைத்தாலே தரமான சிகிச்சையினை அரசே தரமுடியும் என்றும் மருத்துவர்கள் சொல்கின்றனர்.
ஆனால் இதனைச் செய்யாத அரசோ, கருணாநிதியின் திட்டத்தில் இடம்பெற்றுள்ள இதயநோய்க்கான பலூன் வால்வு சீரமைப்பிலும் இதய வால்வு சீரமைப்பிலும் நிபுணத்துவம் மிக்க சென்னை ரயில்வே மருத்துவமனையை தனியாருக்குத் தாரைவார்த்துத்தரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதில் முதல்கட்டமாக, ரயில்வே மருத்துவமனையையும் தனியாரையும் சேர்த்து மருத்துவக்கல்லூரி தொடங்க முடிவு செய்துள்ளது.
மருத்துவ சேவையை தனியார்மயப்படுத்தினால் ஏற்படும் பேரவலத்துக்கு அமெரிக்கா சரியான முன்னுதாரணமாகும். அங்கு மருத்துவம் முழுக்க தனியார் காப்பீடு நிறுவனங்களின் பிடிக்குள் இருப்பதால், காப்பீடுத் தவணை செலுத்த முடியாத ஏழைகளுக்கு மருத்துவசேவையே முற்றிலும் மறுக்கப்படுகின்றது. காப்பீடு நிறுவனங்களின் கொள்ளையால் அங்கு 5கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவசிகிச்சை பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர்.
இந்தியாவும் அதே பாதையில் உலகவங்கியின் வழிகாட்டுதலின் கீழ் ""அனைவருக்கும் ஆரோக்கியம்'' எனும் சுகாதாரக்கொள்கையை 2002ஆம் ஆண்டு அறிவித்து, அதன்படி மருத்துவநலத்திட்டங்களில் அரசின் பங்களிப்பைக் கொஞ்சம்கொஞ்சமாக குறைத்து வருகிறது. தனியாரின் காப்பீடுத் திட்டத்திற்குள் பொது மருத்துவத்தைத் தள்ளிவிட உத்தரவு போட்டிருப்பது, உலகவங்கி. அதற்கு தனது பெயரைச் சூட்டியிருப்பதுதான், கருணாநிதியின் மூளை.
தொடக்கவிழாவில் பேசிய கருணாநிதி, கோபாலபுரத்தில் இருக்கும் அவரின் வீடு, அவரின் மரணத்திற்குப் பின்னர் இலவச மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார். மருத்துவத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டங்கள் எதிர்ப்பே இன்றி நடைமுறைப்படுத்தப்படுமானால், அவருக்குப் பின், சென்னையில் கருணாநிதி வீடு ஒன்றில் மட்டும்தான் இலவச மருத்துவம் கிடைக்கும்.
இப்போதைக்கு கருணாநிதியின் காப்பீடுத் திட்டம், ஏழைகளிடமிருந்து கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. ஆனால் அரசின் நேரடி மருத்துவ சேவைகள் படிப்படியாக ஒழிக்கப்பட்ட பின்னர், அனைத்துத் தரப்பினரையும் தனது வியாபார வலைக்குள் காப்பீடு நிறுவனம் வீழ்த்தத் தொடங்கும். அதன் பிறகுமருத்துவக் காப்பீடு வைத்துள்ளவர்கள் மட்டுமே நோய்க்குச் சிகிச்சை பெற முடியும் ஆபத்தான நிலை உருவாகும்.
சேமநல அரசினை இலாபகரமாக இயங்கும் அரசாக மாற்றுதல் எனும் போக்கைத் தாராளமயமும் தனியார்மயமும் துரிதமாகச் செயல்படுத்தி வருகின்றன. இந்த அயோக்கியத்தனம் மக்களிடம் அப்பட்டமாகத் தெரிந்து விடாதிருக்க அதற்குச் சில பூச்சுவேலைகளும் கவர்ச்சியான பெயர்களும் தேவைப்படுகின்றன. ஓட்டுப்பொறுக்கும் அரசியலுக்கு இந்தக் கவர்ச்சியும் தேவையாக இருக்கின்றது. இப்போதைய எதிர்க்கட்சி அடுத்தமுறை ஆளும் கட்சியாகும்போது, இதே திட்டத்தை மாற்றமின்றி செயல்படுத்தும் என்பதால் எந்த எதிர்க்கட்சியுமே இத்திட்டத்தை தீவிரமாக எதிர்ப்பதில்லை.
இத்திட்டத்திற்கு தமிழக அரசு தேர்ந்தெடுத்துள்ள ""ஸ்டார்ஹெல்த்'' நிறுவனம் தான் ""ஆரோக்கியஸ்ரீ '' எனும் பெயரில் ஆந்திர அரசோடு கைகோர்த்துக் கொண்டு, வாரங்கல் மாவட்டத்தில் சில பினாமி மருத்துவமனைகளை உருவாக்கி, அறுவைசிகிச்சையே தேவைப்படாத பெண்களுக்கும் கூடக் கருப்பைகளை அகற்றிப் பல கோடிகளைச் சுருட்டியிருக்கின்றது.
கருணாநிதியின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயனாளிகளுக்கு 4 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை மட்டுமே செலவிடப்படும். ஆனால், இன்றைக்கு இதயஅறுவை சிகிச்சை மட்டும் ஒன்றரை இலட்சத்தில் இருந்து இரண்டு இலட்சம் வரை செலவு பிடிக்கக் கூடியதாக உள்ளது. இத்திட்டம் பட்டியலிட்டிருக்கும் 150 தனியார் மருத்துவமனைகளில் சென்னையில் மட்டும் 63 உள்ளன. காய்ச்சல், இருமல் என்று போனாலே எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கவைத்து குறைந்தது ரூ 5 ஆயிரத்தைக் கறந்து விடக்கூடிய லைஃப் லைன் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும், அப்பல்லோவை விட அதிகமாகப் பணம் பறிக்கும் பில்ரோத் மருத்துவமனையும் கொலைகார கொள்ளைக்கார மருத்துவமனைகளாகப் புகழ் பெற்றுள்ள ஓசூரின் அகர்வால், அசோகா, விஜய் முதலானவையும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவரின் புற்றுநோய் சிகிச்சைக்கென அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அண்மையில் ரூ.2 லட்சத்து இருபதாயிரத்தைக் கோரியிருந்தது. ஆனால் காப்பீடுத் திட்டம் அவருக்கு அனுமதித்ததோ ஒரு லட்சத்து இருபதாயிரம்தான். அவர் முழுப் பணத்தையும் மருத்துவமனையில் முதலிலேயே கட்டிவிடுமாறும், இத்தொகையை அவருக்கு ஆறு தவணைகளில் பிரித்துத் தருவதாகவும் காப்பீடுநிறுவனம் கூறியது. இதற்கு எதிராக வழக்குத் தொடுக்கப்போவதாக அவர் எச்சரித்த பிறகுதான், அந்நிறுவனம் இறங்கிவந்து காப்பீடு தொகையை ஒரே தவணையில் தரச் சம்மதித்திருக்கிறது. விவரம் தெரிந்தவர்களையே மொட்டையடிக்கப் பார்க்கும் காப்பீடு திட்டம், சாமானியர்களை என்ன பாடுபடுத்துமோ! ஆரம்பமே இப்படி அமர்க்களமாக இருப்பதிலிருந்தே, இத்திட்டம் மக்களைக் காக்குமா, அல்லது காப்பீடு நிறுவனங்களைக் காக்குமா என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
· அழகு