சிதம்பரம் நடராசர் கோவிலை அரசு கையகப்படுத்தி தனி அதிகாரி நியமித்ததை எதிர்த்து தீட்சித பார்ப்பனர்களும், சுப்ரமணியசாமியும் தாக்கல் செய்திருந்த அப்பீல் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
மனித உரிமைப்பாதுகாப்பு மையத்துடன் புரட்சிகர அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புகளும் கடந்த பத்து ஆண்டுகளாக நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக நடராசர் கோவிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நிர்வகிக்க நிர்வாக அதிகாரியை தமிழக அரசு நியமித்தது. நீதிமன்றத்திலும், மக்கள் மத்தியில் இப்புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் விளைவாகவும்,நெருக்கடியின் காரணமாகவும் வேறு வழியின்றி அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது.சரியாகச்சொன்னால் அரசின் வாயிலிருந்து அப்படி ஒரு உத்தரவை கடும் போராட்டத்தின் மூலம் வரவழைத்தோம்.ஆனால் தீட்சித பார்ப்பன கும்பல் அதற்கெல்லாம் கட்டுப்படவில்லை அரசின் இந்த ஆனையை ஏற்க முடியாது என்று கூறி அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொது மனு தாக்கல் செய்தார்கள். இந்த வழக்கில் தன்னையும் சேர்க்கக் கோரி, கூமுட்டை சுப்ரமணியசாமியும் மனு தாக்கல் செய்தார். எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய, சு சாமிக்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர். நிர்வாக அதிகாரி நியமனம் செல்லும் எனக் கூறி, சிவனடியார் ஆறுமுகசாமி மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதிகள் ரவிராஜபாண்டியன், ராஜா அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராமசாமி, சிறப்பு அரசு பிளீடர் சந்திரசேகரன், அரசு வக்கீல் கவிதா ஆகியோர் ஆஜரானார்கள்.
"டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: சிதம்பரம் நடராஜர் கோவிலை கட்டியது மனுதாரர்களின் முன்னோர் இல்லை என்பது, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழான சலுகையைப் பெற உரிமையில்லை. சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள், விஜயநகரத்தை ஆட்சி செய்தவர்களால் இந்தக் கோவில் கட்டப்பட்டது என்பது, வரலாற்று ஆவணங்கள் மூலம் நிரூபணமாகிறது. இந்தக் கோவிலில் சைவர்கள், வைணவர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். எனவே, ஒரு பிரிவுக்கு மட்டும் சொந்தமான கோவில் என, பொது தீட்சிதர்கள் கோர முடியாது. மேலும், 400 ஏக்கர் விளைநிலத்தில் இருந்து வரும் வருமானத்துக்கும், தங்க காணிக்கை, உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கும், நன்கொடைக்கும், வாடகைதாரர்களிடம் இருந்து கிடைக்கும் வாடகைக்கும் எந்த கணக்கையும் பொது தீட்சிதர்கள் வைத்திருக்கவில்லை.
கடமையை நிறைவேற்றுவதில் பொது தீட்சிதர்கள் அலட்சியம் காட்டுகின்றனர் என, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் சரியாக முடிவெடுத்தார். நிலங்கள் மற்றும் கட்டளைதாரர்களை கண்டறியவும், கோவிலுக்கு வர வேண்டிய வருவாயை வசூலிக்கவும், கோவிலை மேம்படுத்தவும் நிர்வாக அதிகாரியை, இந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் நியமித்துள்ளார். கோவில் சொத்துக்களை முறையாக நிர்வகித்திருந்தால், திருப்பதி மற்றும் பழநி கோவிலைப் போல் இந்த கோவிலும் பணக்கார கோவிலாக ஆகியிருக்கும். சிதம்பரம் கோவிலின் புராதனம், பழமை, வரலாற்று முக்கியத்துவம் கருதி, இதை புனரமைக்க நிர்வாக அதிகாரி கருதியுள்ளார். இந்து சமய அறநிலையத் துறை இணை கமிஷனரிடம் ஆலோசித்து, கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, 50 கோடி ரூபாய்க்கு திட்டத்தை அளித்துள்ளார். இதில் இருந்து கோவிலை நிர்வகிக்க துறையின் ஆர்வம் என்ன என்பது தெளிவாகிறது. நிர்வாக அதிகாரியை நியமித்து பிறப்பித்த உத்தரவில், அவருக்கும் பொது தீட்சிதர்களின் செயலருக்கும் உள்ள அதிகாரங்கள், கடமைகள் பற்றி தெளிவாக்கப்பட்டுள்ளது. கோவிலில் இருந்து பொது தீட்சிதர்களை நீக்குவதாக அந்த உத்தரவில் குறிப்பிடவில்லை.
கோவிலை திறமையாக நிர்வகிக்க, நிர்வாக அதிகாரியும் பொது தீட்சிதர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, நிர்வாக அதிகாரி, பொது தீட்சிதர்களுக்கு உள்ள அதிகாரம் என்ன என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. கோவிலில் பணம் முறைகேடு செய்யப்பட்டது, 400 ஏக்கர் நிலத்தின் நிலைமை என்னவென்றே நூறாண்டுகளுக்கும் மேல் தெரியாமல் இருப்பது, நிர்வாக அதிகாரியின் நியமனத்துக்குப் பின் ஏற்பட்ட மேம்பாடுகள் எல்லாம் கருத்தில் கொண்டு, நிர்வாக அதிகாரியின் நியமனத்தில் இந்த கோர்ட் தலையிட்டால், பழமைவாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க கோவிலை பாதுகாக்கும் கடமையில் இருந்து தவறிவிடுவது போலாகும். நிர்வாக அதிகாரி நியமனத்தில் கோர்ட் குறுக்கிட்டால், இந்து கலாச்சாரத்துக்கும் பண்பாட்டுக்கும் சான்றாக திகழும் இந்த பழமைவாய்ந்த கோவில் சிதைந்துவிடும். எனவே எனவே, அப்பீல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
நிர்வாக அதிகாரி நியமனம் செல்லும்,கோவிலை அரசு எடுத்துக்கொண்டது சரியே இதில் வேறு பேச்சுக்கே இடமில்லை என்று உத்தரவிட்டு இறுதி தீர்ப்பை வழங்கிய பிறகும் தீட்சித பார்ப்பன கும்பல் அந்த தீர்ப்பையெல்லாம் நாங்கள் மதிக்க முடியாது என்று கூறி உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல முடிவெடுத்துள்ளதாம். போகட்டும் போகட்டும் அந்த உச்ச நீதிமன்றத்தின் யோக்கியதை தான் ஊர் அறிந்த விசயமாயிற்றே, அது சுப்பிரமணியசாமியின் அக்கிரகார தின்னையாகத் தான் செயல்படுகிறது. 'ராமன்' பாலம் விசயத்தில் இந்த உச்ச நீதிமன்றம் எப்படி யோக்கியமற்று புராணப்புளுகான ராமாயணத்தை நம்பி தீர்ப்பளித்தது என்பதை நாம் அறிவோம். அடுத்து 'நடராசன்' விவகாரம் வந்துள்ளது. இந்த வழக்கில் 'தீட்சிதர்கள் தான் நடராசன்,தான் நடராசன் தீட்சிதர்கள்' என்கிற வரலாற்று ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த 'உச்சிக்குடுமி மன்றம்' தீர்ப்பளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கும் தயாராகவே இருப்போம்.மக்கள் மன்றங்களில் போராட்டங்களை கட்டியமைப்போம். இதை மாபெரும் மக்கள் திரள் கோரிக்கையாக மாற்றுவோம். பற்றிய பார்ப்பன கும்பலின் குடுமியை இன்னும் தளரவிடாமல் இறுகப்பற்றி நின்று நீதிமன்றங்களில் போராடும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்திற்கும் நீதிமன்றத்திற்கு வெளியே மக்கள் மன்றங்களில் இந்த போராட்டங்களை முன்னெடுக்கும் புரட்சிகர அமைப்புகளுக்கும் உங்களால் இயன்ற அனைத்து வகை உதவிகளையும் செய்யுங்கள்.இது நம்முடைய போராட்டம்.தமிழுக்கும்-பார்ப்பனீயத்திற்குமான போராட்டம். இந்த போராட்டம் தோற்கக்கூடாது. இந்த போராட்டம் தளர்ந்து விடாமல் தாங்கிப்பிடியுங்கள்.