அகமும்,புறமுமிழந்த ஒரு பொழுதில்,மெய்மையும் புனைவும் இருத்தலை நோக்கி கை அசைக்க...
 

 

 

"மெல்லப் பாடும் தென்றலும்
மேனிசிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்
மெட்டு விரிக்கும் முல்லையும்
மோதிக்கொள்ளுமொரு புயலாய்ப் பொழுகள்
கண்ணைத் திறந்து வைத்துக்
கப்பல் கட்டும் தம்பியும்
கடுப்பாக அவனோடு மல்லுக்கட்டும் தங்கையும்
அடுப்பில் நெருப்பு வைக்கும் அம்மாவும் நிர்க்கதியாய் நினைவில்"
 

து ஒருகாலம்.மழைக்காலத்து வாழ்வு.இளமை முழுதுமாகச் சின்னமடுமாதாவின் வளவுக்குள்ளே அலைந்த வாழ்வு-மகிழ்வும்,கனவும் பொலிந்து உருவாகிய எமக்குள், தொடர்ந்து அலையலையாக எழுந்த எண்ணங்களுக்கு உருப்போட்ட சின்னமடுமாதாவின் குருசுமரத்தடி.இஃது, என்றுமே என்னை உருவாக்கியதில் தன்னை எனக்குள் பெருமைப்படுத்தும் மரத்தடி.
 
எமது வாழ்வும்-சாவும்,காலமெல்லாம் அங்கே இருப்பதற்கானதாகவே நானும், எனது நண்பன் சிவாவும் கனவு கண்டுகிடந்த இந்தச் சின்னமடுமாதா கோவில் எங்களுக்கான சரணாலயம்.எப்பவெல்லாம் எமக்கு வெளியில் உலாவவேண்டுமோ, அப்போதெல்லாம் சின்னமடுமாதாவின் படிக்கட்டுகளில் தஞ்சமடைவோம்.எனக்கான நாணயமான கடவுளாக மாதா இருந்திருக்கிறாள்.

சிவா...
 
எப்படியோ,எதன்படியோ கொல்லப்பட்டான்...

பனிப்பொழுதுகளில் அவளது படிக்கட்டுகளில் நாம் புகைத்திருக்கிறோம்.புதினமாகச் சுருவங்களைக் கண்டிருக்கிறோம்.ஏசுநாதருக்குச் சிலுவை சுமக்கவைக்கும் படங்களை அலுப்பின்றிப் பார்த்துக் கண்ணீர் சிந்தியருக்கிறோம்.பின்னாளில் நாம் இதையே பெறுப்போகிறோமென்ற சிந்தனையின்றி.
 
"சலிப்புத்தான் சாவையும் ஜனனத்தையும்
சகஜமாக்கும் நாட்பொழுதில்
சருமத்தில் நரைபட்ட உரோமம் மேவினும்
சின்னக் குழந்தையாய்ச் சின்னமடுமாதா வளவில் குத்தி விழும் மனம்"
 
நிலாக் காலத்துச் சித்திரை நிலவுக்கு மாதா கோயில் பகற்பொழுதாகவே இருக்கும்.எங்கள் கும்மாளமும், குதூகலிப்பும் அவளது இருப்பையே அசைத்திருக்கும்.எங்களுக்குச் செபம் தெரியாது.நாங்கள் தேவாரம் பாடியும் அவளைத் தரிசித்திருக்கிறோம்.சின்னமடுமாதாவுக்கு ஆடிமாதத்தில் விழாவெடுப்புத் தொடங்கும்.ஆடிக் கொடியேற்றமும்,ஐப்பசிப் பெருநாளும் நம்மைக் குதூகலிக்க வைப்பவை.சின்னமடுமாதாவின் மணியோசையில் ஊர் உறங்கச் செல்லும் பொழுதுகளில் நாம் உலாத்தப் போவது வழமையாகும்.உறக்கம் கலைத்து ஊருக்குள் மடங்கட்ட முனைந்த நமக்கு சொற்பகாலத்தில் சுகம் தொலையுமெனக் கனவிலும் எண்ணாத வயதவை.

நாங்கள் தவமிருக்கும் குருசுமரத்தடியை அண்டியபடி மாதாவுக்கு வானுயரக் கொடியேற்றப்படும்.அந்தக் கொடியோடு எங்கள் குதுகாலத்துக்குக் குறைச்சலே இல்லை.கடலைக்கொட்டகையின் வரவுக்கும்,ஐஸ்கிறீம் வானின் வருகைக்கும்,விளையாட்டுச்சாமான் விற்கும்"சோனக"க்கடைகளின் வருகைக்கும் இக்கொடியேற்றமே காரணமென்பதால் நாம் மகிழ்வோம்.நல்லதே நடக்கும்.நாங்கள் பயணித்த பாதைகளில் இப்போது தம்பியய்யா மாமாவின் லையிட் எஞ்சினது பாரிய உடல் விரிந்துகிடக்கும்.வீட்டில் பாயில் புரளும்போதெல்லாம் இந்த இரைச்சல் எங்களுக்கு மீள மாதா கோவில் வளவுக்குள் இழுத்துவரும் ஆசைகளை.நாம் எழுந்து ஆலமரக்களைகளில் தவம் இருப்போம்.அப்பப்ப "கம்பு"விளையாடுவோம்.காலையில் காகத்தின் கரைவிலும்,குயிலின் கூவலிலும் அறுபடும் தூக்கம் மாதாவின் வளவுக்குள் விழிகளைத் தூக்கி வீசும்.
 

 

 
இந்த மாதாவைக் கொணர்ந்து எங்கள் வீட்டு ஒரு வேலிப்புறத்தில் ஊன்றிய கொலனித்துவம், 1858 ஆம் ஆண்டுகளில் நமது கிராமத்தில் ஐரோப்பியக் கட்டக்கலையையும் சுற்றுப் புறத்தைiயும் நட்டுப்பார்த்திருக்கிறது.சீமை மரங்கள் என்று பலவகை மரங்கள் மாதா கோவிலுக்குள் நிற்கின்றது.நாம் குட்டூறு மரமென்றும் அதன் மாங்காய் வடிவிலான காய்களை உடைத்து, அதன் உள்ளே பொதிந்துள்ள இலைவகைச் செட்டையில் கெலிகெப்றர் பறக்கவிட்டத்தையும் தவிர எங்களுக்குக் கொலனித்துவங் குறித்து எதுவுமே தெரியாதிருந்தது அன்று.விழிகளைத் தூக்கி மீளவும் எமக்குள் ஒட்டும்போது,பாடசாலை மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருந்து கால் நடைக்குக் கட்டளைபோடும்.வேலணை நோக்கி நடக்கும்போது,பையில் சில்லறை இருக்குமா என்ற தேடுதல் கன்ரீன் போண்டாவைக் குறித்ததாகவே இருக்கும்.நான்கு மணிக்கு வீடு மீளுவும்வரை போண்டாவாது உதவுமென்பது, தோட்டக்காரர்களது குழந்தைகளுக்கே வெளிச்சமானது.அம்மாவும்,அப்பனும் தோட்டத்தில் மாரடிக்கும் அதிகாலைப் பொழுதில் அழுவது எமதும் வயிறும்தாம்.
 
 
பின்னாளில்,ஊரும்,உறுவுகளும் அறுத்து அநாதவராக்கப்பட்ட எங்கள் கிராமத்தின் முழு அர்த்தமுமே மாதா கோவிலோடு தொடர்புப்பட்டது.எங்கே விளையாடிக் களித்தோமோ,அங்கே,வருங்கால ஈழத்துக்காகக் கதையாடிப் பார்த்தோம்.கருத்தரித்த கனவுக்குக் காரியத்தை மாதா கோவிற்படிகட்டுகளில் ஆய்ந்திருக்கிறோம்.மெல்லிய நிலாவொளியில் மெலிந்த பல உருவங்களோடு நானும் இருந்திருக்கிறேன்.எங்களுக்கு அரசியல் புகட்டியும்,விடுதலையின் வேட்கையத் தகவமைக்கும் பலர் முனைந்த இந்த மாதா கோவிலுக்குப் பாதர் சிங்கராயர் பிரசங்கம் செய்திருக்கிறார்.
 
 
ஈழத்துவிடுதலைக்கு உண்மையாய் உழைத்தவர்களில் அவர் எப்பவுமே இடம்பெற்றிருக்க வாய்ப்புண்டு.
 
 
"எல்லாத்தையும் இப்படியே வாழ்ந்து
மெல்ல விலகும் வாழ்வோடும்
வேளைக்குக் கிழடுபடும் மேனியோடும்
மெஷினில் சிறைப்பட்டு மெல்லவுடையும் வாழ்வு!"
 
 
நாரந்தனையில் இருந்து நடுப்பொழுதில் மாதாவிடம் ஓடிவரும் வெஸ்லி எனக்கு அண்ணன் வயதுடையவன்.பைபிளைப் படித்துவிட்டு"சாத்தான் வந்தவிட்டான்,சாத்தான் வந்துவிட்டான்"என ஊரெடுபட ஓடிவரும் அவன், எங்களது புகையிலைத் தோட்டத்தை ஊடறுத்துப் புகையிலைகளை முறித்தபடியேதாம் கோவிலுக்குள் வீழ்வான்.
 
 
அவனது "கத்தலில்" நாங்கள் மாதா கோவிலுக்குள் படையெடுப்போம்.அப்போது, அவன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே மாதாவிடம் மன்றாடுவதைக் கேட்டுக்கொண்டிருப்போம்.அவன் சினிமா நடிகன் ரகுவரனின் தோற்றத்தோடும்,அவரைவிட உயரமாகவும் இருப்பான்.இலண்டனில் கல்விக்காரக் குடும்பத்தின் மூன்றாவது பையன்.அண்ணன் மாரும்,தங்கை மாரும் இலண்டனில் படிக்க இவன்மட்டும் சின்னமடுப் படிக்கட்டுகளில் எங்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தருவான்.
 
 
அற்புதமான ஆங்கில நடையில் பைபிள் கதைகள் சொல்லுவான்.நாங்கள் தமிழில் கதை சொல்லக் கேட்போம்.சின்னமடுமாதாவை நினைக்கும்போது, வெஸ்லியின் உடைந்த தமிழ் ஞாபகத்துக்கு வந்து சிரிப்பைக் கூட்டிவருகிறது.அதே தருணத்தில் அம்மாவின் மடியில் தலைவைத்து முற்றத்தில் நாம் நிலாப்பார்த்த காலத்தில், பாதர் சிங்கராயரின் அற்புதமான தமிழ்ப் பிரசங்கத்தைக் கேட்டிருக்கிறேன்.அம்மா,பாதர் சிங்கராயரின் பிரசங்கத்தை மிகவும் சிரத்தையோடு கேட்பதை உணர்ந்திருக்கிறேன்.அவரது மொழியைத் தமிழ் என்பாள் அம்மா.அறுத்துறுத்துப் பேசும் அவரது கலை நாளாந்தத்தில் என்னையும் அங்ஙனம் பேச வைத்திருக்கிறது.
 
 
இந்தப் புலப்பெயர்வு வாழ்வில் ஜந்திரத்தோடு முடக்கப்பட்ட எனது இளமை தொலைந்து போனது, நீண்ட நாளாக அது எனக்கே தெரியாது போய்விட்டது!மெல்ல நரைத்த தலைமுடி இப்போது முழுமையாக நரைத்துவிடுகிறது.முன்புபோல் நடக்க முடியவில்லை.எனினும், மனம்மட்டும் சின்னமடுவுக்குள் அலைந்த இளமையோடே துடிப்பாய்த் துள்ளுகிறது.இருபத்தி நான்கு ஆண்டுகளின்பின்னே மாதா கோயில் புகைப்படத்தை மருமகனின் பேஸ் புக்கில(Facebook) மெல்லப் பார்க்கக்கிடைத்தது.கண்கள் நெடுகக் கனத்தபடி குமிழ் நீராகக் கனத்த பொழுதுகள்,எனது இளமைத் துடிப்பை உரத்தும் மறுத்தும் உரைத்தன.உளம் மலர்ந்த உன்னதங்களை சின்னமடுமாதா கோவில் வளவுக்குள் மீட்டுப் பார்த்த அந்தப் பதின்ம வயதுக்கு அணிலோடும்,கொக்கோடும்,கிளியோடும் ஆயிரெத்தெட்டுக்கதைகளுண்டு.மாரிகாலத்துத் தவளைகளும்,வெள்ளப்பெருக்கோடு சுருவில் கடலிலிருந்து ஊர் நோக்கிவரும் வெள்ளத்தோடு மீன்களும் மாதா கோவில் வளவுக்குள் வந்த எம்மை மகிழ்வித்துத் தம்மைச் சாகடித்திருக்கின்றன-புலிகளது அடிமட்டப் போராளிகள் போல!
 
 
வாழ்வின் பெருமிதம் என்பது நட்பு என்பதே எனது தெரிவு.அப்படியான நட்பை நான் தோழர் சன்னதியிடம் கண்டவன்.எங்கள் கிராமத்தில் நாம் ஒன்றாய் அரசியல் பரப்புரைகளில் ஈடுபட்டோம்.சேரிகளுக்குள் அரசியல்பரப்புரைகள்-கல்வி புகட்டல் என்பதற்கு நாங்கள் புரட்சிகரமான சினிமாக்களை(கண்சிவந்தால் மண்சிவக்கும்,உமை ஜனனங்கள்,உதிரப்பூக்கள் என...)கொண்டு,விளக்கப்படுத்திக்கொள்வோம்.அப்போதெல்லாம்"தோழர் சிறீ,நீங்கள் விளக்கங் குடுங்கோ"என்று அவர் ஒதுங்குவார்.மிகவும் செயற்பாட்டு ஊக்கமுடைய அவர்,சொல்லாற்றல் அற்றவர்.அரசியல் ரீதியாக மிகவும் கூரிய அறிவுடையவர்,எனக்குப் பாதர் சிங்கராயர் போட்ட பேச்சாற்றலால் என்னிடமிருந்து தான் பின் தங்கியதாக உணர்ந்தார்.அவரைத் தோழமையாகக் கொண்ட எனது அரசியலை அவரே பெரும்பாலும் நெறிப்படுத்தினார்.
 
 
மக்களுக்கு மத்தியில் ஆயுதம் எடுத்துச் செல்லப்படாதென்பதில் அவர் மிகவும் கண்டிப்புடையவர்.தீவுப்பகுதிக்கு அவர் பொறுப்பாளராக இருந்தபோது நான் பிரச்சாரத்துக்கு உறுதுணையாக இருந்திருக்கிறேன்.எங்களை ஒருங்கிணைத்தவள் இந்தச் சின்னமடுமாதா.
 
 
வேலைணைச் சங்கக்கடை மனேச்சர் பாலனின் சமூகவிரோதச் செயற்பாட்டை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றதிலும்,அதை அரசியல் போராட்டமாக்கிக் கிராமமட்டத்தில் மக்களை விழிப்படைய வைத்தத்திலும் நாம் ரெலோவுக்கும் அன்று கடமைப்பட்டவர்கள்.அவர்களது ஆயுத ஒத்துழைப்பின்றி,அன்றைய சண்டித்தனக்காரர்களை உடைத்துப் பாலனை சங்கக்கடைக்குள் மடக்கி இருக்க முடியாது.எனினும், இன்னொரு விதமாகப் புளட் செய்த பேரத்தில் இலட்சத்துக்காகப் பாலனை எம்மிடமிருந்து ஆயுத ரீதியாக விடுவித்த புளட், அன்று எமக்குச் சாவு குறித்து எழுதிய புலிகளுக்கு ஒத்தூதியது.இதன் தொடர்ச்சியும் மாதா கோவிலின் படிக்கட்டுகளிலேயே நாம் அடிபிடியாகவும்,கத்திக்குத்துகளாகவும் கண்டபோது, என்றோ ஒரு நாள் தோழர் சன்னதியைக் கத்திக்குத்துக்கு நாம் இரையாக்குவோம் என்பதை நான்மட்டும் அறிந்தே இருந்தேன்.நாரந்தனைச் சன் பேதுருவார் கோயில் கூடுதூக்குவதில் எனது உறவுக்கார நாரந்தனையார்கள் என்னை எச்சரித்தபோது ஊர்காவற்றை பொலிஸ்சில் பரீட்சார்த்தமாக அடைத்தான் என்னை சப் இன்ஸ்பெக்டர் ஞானப் பிரகாசம்.அன்று அவனது திட்டம் சன் பேதுருவார் கோயில் கூடு தூக்கும் அடுத்த ஆண்டு துப்பாக்கிச் சூடாக எமது தோழர்களைப் பதம்பார்த்தபோது, நாங்கள் இன்னுமொரு பொழுதை ஞானப்பிரகாசத்துக்காக ஒதுக்கினோம்.அது,எல்லாம் குழம்பிய குட்டையில் மீன்பிடித்த கதையாகப் புலிகளுக்கு வாய்த்துக்கொண்டது.நாரந்தனை வேளாளக் குடிகள் புலிகளாகித் திரிந்த பொழுதில் சன்னதிக்குச் சமாதிகட்டுவதை நான் அறிந்தே இருந்தேன்...
 
 
"பின்னைய பொழுதொன்றில்
தூங்குவதற்கு முன்
மையைக் கக்கி ஓய்ந்த பேனாவொன்றில்
சுரக்கும்
எமது இருப்புக்காய்
நான் இப்போது தொடர்கிறேன்
உன்னைக் கொல்வதற்கு!"
 
இதற்குப் பின்னாய் காலத்தை அலையவிடுவதில் சின்னமடுமாதாவைத் தரிசிக்க முடியவில்லை.
 
 
நினைத்துப் பார்க்கிறேன்.
 
 
"கடுமழையில் விழுதுடையும் வேம்புபோல்
கொடும் இயக்கக் கொலைகளில் சிரசுடையும் சின்னதுகளையும்
கூன் விழுந்த குமரியளையும் பல்லுப்போன பாலகர்களையும்
பாழுமிந்து இயக்க முரண் அரசியல் விட்டு வைக்காது"
 
 
எங்களுக்குப் புளியம் பழம் தந்த சின்னமடுமாதப் புளியமரத்தடியில் சின்னதாகவும்,பெரியதாகவும் நாம் கூடியிருக்கிறோம்.நடுநிசிப் பொழுதுகளில் சாதியத்தின் கொடுமைகளுக்கு எதிராகப் பாடங்கள் எடுத்திருக்கிறோம்.அன்றைய சில பொழுதுகளிலேயே சேரிகளை புளியங்கூடலார் தீயிட்டுக் கொளுத்தி மகிழ்ந்தனர்.இராமனும்,கீத மங்கலமும்,எம்மிடம் ஆலோசித்தபோது,இழவு வீட்டுக்கு மேளம் அடிப்பதை நிறுத்தும்படி ஆலோசனை பகிர்ந்தவர்களுள் கனகசபையும்,நானும் முதன்மையாய் இருந்தோம்.சன்னதி,சேரி மக்களின் உணவுக்கு ஆதாரமான தொழிலை நிறுத்துவதில் முரண்பட்டிருந்தார்.மேளம் அடித்தவர்கள் பின்னாளில் உணவுக்குச் செத்தபோது,வெளிநாடுகளில் வேலை பார்த்த"சேரிப் பொடியன்கள்"தயவு அதிகமாகவிருந்தது.
 
 
இயங்கங்கள் சாதி ரீதியாகச் செயற்பட முனைந்தபோது,அராஜகமான அழிப்புகளும் சாதிரீதியாகவும் பிரயோகிக்கப்பட்டது.
 
 
பெரியவர்களின் எத்தனையோ சாதிச் சண்டைகளையும்,சின்னக் குழந்தைகளின் துள்ளித் திரிந்த பாதங்களையும் சின்னமடுமாதா வளவு தரிசித்திருக்கிறது.காதலர்கள் கோவிலுக்குள் குடியிருந்ததையும்,அதைக் கண்ட விடலைகளின் விஷம அடிகளை எதிர்கொண்ட அப்பாவிக் காதல் ஜோடிகள் கண்ணீர் சிந்தியதையும் மாதா தரிசித்தே இருக்கிறாள்.அப்போதெல்லாம் நான்கா பக்கமும் திறந்து கிடந்த மாதா கோவில் அரைச் சுவர்கள், இப்போது மூடிக்கட்டி,புகுமுக வழியும் இரும்புக் கேற்றுப்போட்டு,மாதவையும் சிறைப்படுத்திவிட்டார்கள் நாரந்தனை வேளாளப் பெருமக்கள்.கொலனித்துவ வாதிகளிடமிருந்த மனதுகூட நமது சாதியப் பெருங்குடிகளிடமில்லை என்பதை சின்னமடுமாதாவைச் சிறை வைத்ததில் நான் உணருகிறேன்.
 
 
ஏதோ ஒருபொழுதில், எனது இருப்பை இழக்கும் கணமானது சின்னமடுமாதக் குருசு மரத்தடியிலென்றால்,நான் பெருந்தவப் பேற்றாளன் என்பது என்வரையில் உண்மையானதே.
 
 
இளமையின் வலி?
 
 
சுருங்கக் கூறிவிடலாம்,சுண்ணத்துஞ் செய்துவிடலாம் விடுதலையில் பெயரில்.சில வெற்றிகளில் யுத்தமுனைகள் இரண்டும்சிலகாலம் உயிர்த்திருக்கிறது!
ஒரு தரப்பின் இழப்பில் மறுமுனையின் இருப்பு வலுக்கும்பொழுது இஃது.மறுபடியும்,ஒருநாள் விடுதலையின் பெயரால் "ஏலங்கள் விடப்படும்"குத்தகையை வேண்டுவதற்காக,அது இன்னொரு கொலைக்களத்தை அந்நியருக்காக செய்விப்பதில் எமது வாரீசுகளே வழியெடுத்துக்கொடுப்பர்.
 
 
இதற்கு-ஈழ மண்ணும் விதிவிலக்கல்ல,
சின்னமடுமாதாவும் விலக்கல்ல.
 
 
 
"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு."-
குறள்
 
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
13.09.2009

http://srisagajan.blogspot.com/2009/09/blog-post_13.html