புலிகளின் தோல்விக்கு புலிகளே தான் காரணம் என்பதற்கு அவர்களின் வாயாலேயே அவர்கள் கூறிய தத்துவ விளக்கம். இதை 1985ம் ஆண்டு புலிகளே தமது விடுதலைப் புலிகளின் குரல் 7 இதழில் கூறினார்கள். எதைச் செய்தால் அது போராட்டமல்ல என்று அன்று சொன்னார்களோ, அதை தாமே கடைப்பிடிக்காமல் மரணித்துப் போனார்கள்.

 

அன்று மற்றவனை கொல்லவும், ஒடுக்கவும் இதைச் சொன்னார்கள். அதை அன்றிலிருந்து தாங்களே இன்றுவரை செய்து இறுதியில் தற்கொலை செய்து மரணித்துப் போனார்கள். 

 

- தமிழரங்கம் -    

மூலம் விடுதலைப்புலிகள் இதழ் - 7 பக்கம் - 2

 

உண்மையில் ஒரு விடுதலைப் போராளி என்பவன் யார்? அவனிடம் காணவேண்டிய உயரிய குணாம்சங்கள் என்ன? விடுதலைப் போராளிக்கும் பொதுமக்களுக்கும் உள்ள உறவு எவ்வகையானது? இந்தக் கேள்விகளை நாம் எழுப்புவதற்கு காரணம் இல்லாமலில்லை. ஏனென்றால் இன்று தமிழீழத்தில் மக்களும் இந்தக் கேள்விகளையே எழுப்புகிறார்கள். போராளிகள் யார்? போலிகள் யார்? என்பதை இனம் காணவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு எமது மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

 

"இயக்கம்" என்ற பெயரில் "போராளிகள்" என்ற போர்வையில் " போராட்டம்" என்ற சாக்கில் நாளாந்தம் நடைபெற்றுவரும் சமூகவிரோத நடவடிக்கைகளோ எண்ணற்றவை. தனியார் நிறுவனங்கள் சமூக ஸ்தாபனங்கள் கல்வி நிலையங்கள் மத பீடங்கள் கூட்டுறவுச் சங்கங்கள் சதா சூறையாடப்பட்டு வருகின்றன. ஏழைத் தொழிலாளர்களின் ஊதியங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. வயோதிபர்கள் ஓய்வுப் பணம் அபகரிக்கப்படுகிறது. தனியார் வாகனங்கள் கண்டபடி கடத்தப்படுகிறது. பணமாகவும் பொருளாகவும் மக்கள் சொத்து சதா பறிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக தொழிலாளர்கள் விவசாயிகள் அரச ஊழியர்கள் மதகுருக்கள் மாணவர்கள் வயோதிபர்கள் என்ற ரீதியில் பரந்துபட்ட மக்கள் பாரிய அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். போதாக்குறைக்கு மக்கள் சதா மிரட்டப்படுகின்றனர். உதைக்கப்படுகின்றனர். ஆயுத முனையில் அவமானப்படுத்தப்படுகின்றனர். அசிங்கமான வார்த்தைகளால் இழிவுபடுத்தப்படுகின்றனர். இந்தக் கொடுமைகள் எல்லாம் புரிந்துவரும் மக்கள் விரோதிகள் தம்மை 'மக்கள் போராளிகள்" என்று அறிமுகம் செய்யும் போதுதான் மக்கள் வேதனை அடைகிறார்கள் விரக்தி அடைகிறார்கள்.

 

விடுதலை இலட்சியத்தில் வெறுப்படைகிறார்கள். யார் இந்தப் போராளிகள் ? இவர்கள் யாருக்காகப் போராடுகிறார்கள் ? மக்கள் இயக்கம் என்றும் மக்கள் அமைப்பு என்றும் மக்கள் புரட்சி என்றும் வெகுசன வேதாந்தம் ஓதிக்கொண்டு மக்களை அடக்கி மக்களைச் சுரண்டி மக்களின் இரத்தத்தை உறிஞ்சி வாழும் இந்த சமூக விரோதப் பேய்களின் நோக்கம் தான் என்ன?

 

அரச பயங்கரவாதப் பூகம்பத்தால் இன்று தமிழீழம் கொந்தளித்துக்கொண்டிருக்கின்றது. தமிழினத்தை பூண்டோடு ஒழித்துக்கட்ட எதிரி கங்கணம் கட்டி நிற்கின்றான். எமது மக்களோ வரலாற்றில் கண்டிராத அடக்குமுறையால் நசுக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது நாளாந்த வாழ்க்கை ஜீவமரணப் போராட்டமாக மாறியிருக்கின்றது. தாங்கொணாத் துன்பத்தில் தோய்ந்துபோய் வாழும் எமது மக்கள்மீது மேலும் கொடுமைகளை இழைப்பவர்கள் "மக்கள் போராளிகளாக" இருக்க முடியாது. இவர்கள் மக்கள் விரோதிகள். இனத் துரோகிகள். சிங்கள இனவாத ஓநாய்களைவிட மிகவும் மோசமான பயங்கரவாதிகள்.

 

ஒரு விடுதலைப் போராளியானாவன் மக்களின் விடுதலை என்ற இலட்சியத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கின்றான். இந்த வகையில் அவன் ஒரு மகத்தான இலட்சியவாதி. ஒரு சமூகப் புரட்சிவாதி. முதலில் அவன் தனக்குள் புரட்சி செய்து அந்தப் புரட்சிகர விழிப்புணர்வால் சமூகப் பிரக்ஞையைப் பெறுகிறான். பொதுநலம் என்ற இலட்சியத் தீயில் தனது சுயநலத்தை எறிந்துவிட்டு மக்களுக்காக மக்களின் சுபீட்சத்துக்காக மக்களின் சுதந்திரத்திற்காக அவன் வாழ்கிறான். மனிதமும் மக்கள் நேயமும் மக்கள் அபிமானமும் கொண்ட அவனே உண்மையில் ஒரு மக்கள் போராளி.

 

இந்த உயரிய பண்புகளைத் தழுவிய இந்த உன்னத இலட்சியத்தை வரித்த மக்கள் போராளிகளை அணி திரட்டிக்கொண்ட ஒரு இயக்கமே உண்மையான மக்கள் இயக்கமாகும். அந்தப் புரட்சிகர இயக்கமே மக்களின் விடுதலைக்காக போராடும் அருகதையைப் பெறுகிறது. மக்களும் அந்த இயக்கத்தையே இனங்கண்டு அரவணைத்துக்கொள்வார்கள்.