சொல்லில் அடங்காத துயரக்கதைகளைக் கொண்டிருக்கிறது ஈழத்தமிழர்களின் நிலைமை. கண்ணிவெடியை அகற்றுகிறோம் என்ற பெயரில் ஆக்கிரமிப்புக்கு சர்வே எடுக்கவும், ஆட்காட்டிகளை உருவாக்கவும் இராணுவத்தை அனுப்பி வைத்திருக்கிறது இந்திய அரசு.
புலிகள் இயக்கத்தை ஒழித்துக் கட்டவும், சிங்கள இனவெறி அரசின் வெற்றியை உறுதி செய்யவும் இந்திய மேலாதிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், தமிழகத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அனைவர் மத்தியிலும் ஆத்திரத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கோபம் யாரை நோக்கித் திருப்பப்பட வேண்டும்? இந்தப் படுகொலைக்குத் திட்டம் வகுத்துக் கொடுத்த காங்கிரசு அரசை, அதற்குத் துணை நின்ற தி.மு.க.வை, நம்பவைத்துக் கழுத்தறுத்த அ.தி.மு.க.வை, பச்சோந்தி வேடம் போட்ட பாரதிய ஜனதாவை.. இன்ன பிறரை நோக்கித் திரும்ப வேண்டும்.
இவர்கள் மீதெல்லாம் நம்பிக்கை வைக்குமாறு 1983இல் தொடங்கி நேற்று வரை தமிழக மக்களையும், ஈழத்தமிழ் மக்களையும், புலிகளையும் தவறாக வழிநடத்திப் படுகுழியில் இறக்கியவர்கள் யாரோ அவர்கள் மீது கோபம் வர வேண்டும். மாறாக, தமிழ் தேசியம் பேசுவோர் இந்த இலக்கைத் திசை திருப் பி, மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்களுக்கு எதிரான கோபத்தைத் தூண்டுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு "இன உணர்வை' ஊட்டும் திருப்பணியில் இறங்கியிருக்கிறார்கள்.
"தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணனும், வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனனும் மலையாளிகள் என்பதனால்தான் இந்திய அரசைத் தவறாக வழிநடத்தி விட்டார்கள்'' என்று கூறி இந்திய மேலாதிக்க எதிர்ப்பை மலையாளி எதிர்ப்பாக மாற்றுகிறார்கள். இதன் மூலம் இந்திய அரசு, ஆளும் வர்க்கங்களுக்கு மறைமுகமாக நற்சான்றிதழ் கொடுக்கின்றார்கள். அதிகாரிகள் மலையாளிகள் என்றால், அமைச்சர்கள் தமிழர்களாக இருந்தார்களே அதற்கென்ன சொல்கிறார்கள்?
ப.சிதம்பரத்தில் தொடங்கி, தி.மு.க. அமைச்சர்கள், கடைசி நேர விற்பனையை முடித்துக் கொண்டு கல்லா கட்டிய பாமக ஆகிய தமிழர்கள் அங்கே மட்டைக்கு நாலாய் கிழித்தது என்ன? தமிழர்கள் அமைச்சர்களாக இருந்ததனால் தான் ஈழத்தமிழனுக்கு இந்த கதி என்று சொல்லாமல், இவர்களை சந்தர்ப்பவாதிகள், பதவிப் பித்தர்கள் என்று தனிநபர்களாக விமரிசித்து விட்டு, நாராயணன் முதல் டீக்கடை நாயர் வரை என்று அங்கே மட்டும் ஒரு இனத்துக்கு எதிராக நஞ்சு கக்குவது ஏன்?
கொழும்புக்குப் பறந்து போய் இந்தியாவின் மேலாதிக்கத்தைப் பற்ற வைக்கும் சிவசங்கர் மேனனும், பாதித் தூக்கத்தில் எழுந்து பாய்லர் அடுப்பைப் பற்ற வைக்கும் டீக்கடை மலையாளியும் ஒரே வர்க்கமா? இல்லை இங்கே தமிழர்கள் டீக்கடை வைக்கக் கூடாது என்று யார் தடுத்தார்கள்? மாற்றான் தோட்டத்து மல்லிகை புகழ் சரவணபவன் தமிழ் முதலாளி, மேசை துடைப்பதற்கு தமிழர் அல்லாத மாற்றாரை, நேபாளிப் பையன்களை வைத்திருக்கின்றாரே, அதென்ன தமிழரின் பெருந்தன்மையா? குறைந்த கூலிக்கு ஆள் தேடும் உழைப்புச் சுரண்ட லா?
தமிழனுக்கு ஒன்று என்றால் கேட்க நாதியில்லை என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்கள் இனவாதிகள். பிற இன மக்களைக் குறைந்த கூலிக்கு கசக்கிப் பிழியும் தமிழ் முதலாளிகளை இவர்கள் எப்போதாவது தட்டிக் கேட்டிருக்கிறார்களா? நாமக்கல் தவிட்டெண்ணெய் ஆலையில் தீ விபத்தில் கருகிச் செத்தார்கள் பீகார் தொழிலாளிகள். மலையாளி டீக்கடைக்காரரைப் பார்த்து காயும் தமிழினவாதிகள், கருகிய பீகார் தொழிலாளிகளின் உழைப்பில் பணம் கொழிக்கும் தமிழ் முதலாளியைக் கண்டு காய்வதில்லையே, இது தமிழின உணர்வா, அல்லது முதலாளித்துவ வர்க்க உணர்வா? ஆதிக்க வர்க்கம் மட்டுமல்ல,
ஆதிக்க சாதித்தன்மையும் தமிழினவாதத்தின் உள்ளடக்கமாக உள்ளது. டீக்கடையில் மலையாளி, உணவு விடுதி யில் கன்னடன், உயர் பதவியில் தெலுங்கன், பிற இனத்தான் என்று ஒவ்வொரு துறைக்கும் லிஸ்ட் வைத்துக் கொண்டு சோற்றுக் கையால் சொடுக்கு போடும் இந்தப் பேர்வழிகள் பீ அள்ளும் தெலுங்கன் லிஸ்டை பீச்சங்கையால் கூடக் காட்டுவதில்லையே! "தமிழன் பீயை தெலுங்கன் அள்ளலாமா?'' என்று ஆர்ப்பரிப்பதில்லையே! கக்கூசுக்குள் மட்டும் முக்காமல் முனகாமல் தமிழினவாதம் பக்காவாக வெளியேறும் மர்மமென்ன?
பிற இனமக்களின் ஒடுக்கப்பட்ட பிரிவினர் காலந்தோறும் மலம் அள்ளுவதைக் கூசாமல் ஏற்கும் இனவாதத்தால், டீ போடுவதை மட்டும் தாங்கிக் கொள்ள முடியாதாம்! இனவாதத்திற்குள் ஒளிந் திருக்கும் சாதியக் கண்ணோட்டத்தை, திருப்பூரில் உலகத் தமிழின மாநாட்டில் ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த ஒரு தோழர் மேடையிலேயே சுட்டிக்காட்டிப் பேச, தமிழ்ச் சான்றோர் விருது வாங்க வந்திருந்த பொள்ளாச்சி மகாலிங்கம் என்ற முதலாளித் தமிழரின் மனம் நோகுமென்றும், இது அநாகரிகமென்றும் அங்கேயே மாவீரன் நெடுமாறன் பேசிய தோழரைக் கண்டித்தது மறக்க முடியாத தமிழ்தேசிய நினைவல்லவா?
தமிழனுக்கு இனவுணர்வு இல்லை என்பது இவர்களது கவலை. அதைக் கெடுத்தவன் யார் மலையாளியா, தெலுங்கனா, கன்னடனா? தமிழ்ச் சமூகத்தில் நீக்கமற வேரோடியிருக்கும் சாதியல்லவா தமிழின உணர்வின் முதல் எதிரி? தமிழர்களுக்குள்ளாகவே எல்லோரும் ஒன்று கிடையாது, சமம் கிடை யாது என்ற நிலை இருக்கும் போது, இதை நேர்மையாகப் பரிசீலித்து, நேர்மறையில் ஆதிக்க வர்க்க, சாதி எதிர்ப்பு என்ற அடிப்படையில் தமிழர்களை ஒன்றுபடுத்தவும், தமிழின ஓர்மைக்கும் போராடுவதுதான் நேர்மையானது. அதை விடுத்து பிற மாநில, தேசிய இன மக்களைத் தமிழின வளர்ச்சிக்குத் தடையாகவும், பகையாகவும் காட்டிக் கொடுப்பது என்பது ஆளும்வர்க்கத்தின் ஐந்தாம் படை வேலை.
எப்படி ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பாரதிய ஜனதா கும்பல் சாதியப் பிளவுகளைக் கடந்து இந்துக்களை ஒன்றுதிரட்ட முடியாதென்பதால், முசுலீமையும் கிறித்தவரையும் எதிரியாகக் காட்டி மதவெறிக்கு ஆள் பிடிக்கிறதோ, அதே போல தமிழின ஓர்மைக்குத் தடையாக உள்ள உண்மையான காரணிகளை எதிர்த்துப் போராடும் நேர்மையில்லாத இனவாதிகள் பிற தேசிய இன மக்களை எதிரியாகக் காட்டியே தமிழின ஒற்றுமையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
ஈழத் தமிழன் செத்ததற்கு வடநாட்டு தலித் கேட்டானா என்கிறார் மணியரசன். இங்கிருக்கும் தமிழன் (தலித்) செத்ததற்கு சக தமிழர்கள் என்ன செய்தார்கள்? செந்தட்டி தலித் படுகொலைக்கு தமிழகம் குமுறியதா? கயர்லாஞ்சிக்கு முற்றுகை உண்டா?
பாப்பாபட்டி, கீரிப்பட்டி பிரச்சினையில் ஆதிக்க சாதிவெறியைக் கடைபிடிக்கும் சாதிக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு நிர்ப்பந் தத்தை ம.க.இ.க முன்வைத்தவுடனேயே.. ஆகா இது மறைமுகப் பார்ப்பனியம் என்கிறார் மணியரசன். பார்ப்பன தேசிய நாயகன் ராமனை தமிழ் பழங்குடி கடவுள் என்று அவர் கொண்டாடுவதும், பார்ப்பன இந்திய தேசியத்தைக் கட்டிக் காக்கும் ஒரு அம்சமான சாதியமைப்பு முறையை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் பேசுவதும் நேர்முகப் பார்ப்பனியம் அல்லவா?!
ந்த லட்சணத்தில் வடநாட்டு தலித் மாயாவதி போன்றவர்கள் இந்தியா என்பதை ஏற்றதன் மூலம் பார்ப்பனியத்தை ஏற்று விட்டார்கள்.. எனவே இனி தமிழன் யாரையும் நம்பிப் பயனில்லை. உலகெங்கும் உள்ள தமிழன் தானே போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. .. வா.. வா.. தமிழ் நாட்டு விடுதலைக்கு தயாராவோம் என்று துண்டைப் போட்டுத் தாண்டுகிறார் மணியரசன்.
இங்கிருக்கும் தனிச்சுடுகாடு, தனிக்குவளை, தனிக்கோவில், உள்ளிட்டவைகளைத் தகர்க்க கொங்கு வேளாளக் கவுண்டர்களையும், தேவரையும், இன்ன பிற ஆதிக்கசாதி வெறியையும் அகற்றுவோம் வா! அதுவே தமிழ் தேசியக் கடமைக்கு முதற்படி என்று வீதியில் இறங்கத் தயாராக இல்லாமல், வடக்கு முதல் தெற்கு வரை இந்திய தேசியமாகக் காட்சியளிக்கும் சாதிவெறியைத் தகர்க்காமல் பிற தேசிய இன மக்களைப் பகையாகக் காட்டி தமிழ்த் தேசியத்தைக் கட்டித் தூக்குவதற்காக சாதிப் பூணூலையே இனமாகத் திரிப்பதற்கு இவர்கள் படாதபாடு படுகிறார்கள்.
"தமிழன் வாழாத நாடில்லை.. ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..'' என்பது இவர்களுடைய முத்திரை முழக்கம். மலையாளிக்கும், தெலுங்கனுக்கும், மராத்தியனுக்கும் எல்லா தேசிய இனமக்களுக்கும் தனித்தனியாக ஒரு நாடு இருப்பது போலவும், தமிழனுக்குத்தான் தனிநாடு தரவில்லை போலவும் என்ன ஒரு பம்மாத்து? இந்தியாவின் எல்லா இனங்களின் மீதும் தான் இந்து தேசிய ஒடுக்குமுறை இருக்கிறது, சுய நிர்ணய உரிமை இல்லை. தமிழன் மட்டுமா, பல்வேறு இன மக்களும் தான் இந்தியா முழுவதும், ஏன் இந்தியாவைத் தாண்டியும் எல்லாத் திசைகளிலும் நாடோடிகளாகப் பிழைப்பு தேடி ஓடுகிறார்கள்.
பீகார், ஒரிசா தொழிலாளிகள் தமிழகத்திலும், தமிழர்கள் மகாராஷ்டிரா கடலை மிட்டாய் கம்பெனிகளிலும், ஆந்திரா, பெங்களூரு குவாரிகளிலும், நேபாளிகள் கொட்டாம்பட்டியிலும், ஆசிய நாட்டு மக்கள் வளைகுடாவிலும் என இனம் கடந்து, எல்லை கடந்து மக்களை விரட்டுகிறது மூலதனம். உலகமயமாக்கத்தால் விவசாயமும் உள்ளூர் தொழில்களும் அழிக்கப்பட்டு உழைக்கும் மக்கள் விசிறியடிக்கப்படுவது தமிழனுக்கு மட்டுமா நடக்கின்றது? இந்த நிலைமையை மாற்ற, யதார்த்தத்தில் வர்க்கமாக மக்களைத் திரட்டுவதற்குப் பதிலாக, "தமிழா.. தமிழா'' என்ற தனியாவர்த்தனம் வாசித்து என்ன பயன்?
"வந்தாரை வாழவைத்த தமிழ்நாடு இது! இன்று தமிழன் கூலிவேலைக்கு கேரளா போகின்றான்'' சொந்த மண்ணில் வாழ முடியாமல் பிழைப்பு தேடி ஓடும்படி தமிழகத்தை விட்டு அவனைப் பிடித்துத் தள்ளியது யாரோ அவர்களை எதிர்த்தல்லவா போராட வேண்டும்? யார் பிடித்துத் தள்ளியது? மலையாளியா, கன்னடனா? கேரளா எஸ்டேட்டுகளுக்கு வேலைக்குப் போகும் தேனி மாவட்ட விவசாயிகளைக் கேட்டுப் பாருங்கள். "இங்கேயை விட அங்கே கூலி அதிகம், தொழிற்சங்கம் இருப்பதால் ஏதாவது ஒன்று என்றால் தட்டிக் கேட்கிறார்கள், மரியாதை இருக்கிறது'' என்று எதார்த்தமாக அவர்களுடைய அனுபவத்தை விளக்குவார்கள். இந்த உழைப்பாளித் தமிழர்களெல்லாம் இனத்துரோகிகளா?
வந்த தொழிலாளிகளையெல்லாம் எந்த மாநிலத்து முதலாளியும் கசக்கிப் பிழிவதுதான் உண்மை. சென்னை பாலம் கட்டும் வேலைகளிலும் வடசென்னை கனரகத் தொழில்களிலும் வாட்டி வதைக்கப்பட்டு, உயிரையும் இழக்கும் நிலை தான் வடநாட்டுத் தொழிலாளர்களுக்கு. இதே நிலைதான் வேறு மாநிலம், நாடுகளுக்குப் பிழைக்கப் போகும் தமிழ்த் தொழிலாளிகளுக்கும்!
"வந்தாரையெல்லாம் வாழ வைத்தது தமிழகம்'' என்று வசனம் வேறு! படையெடுத்து வந்த மன்னர்களையும், பார்ப்பனர்களையும் ஆதிக்க சாதிகளையும் அவர்களது கலாச்சாரத்தையும் பன்னாட்டு மூலதனத்தையும் வாழ வைத்துவிட்டு இந்த மானக்கேட்டை பெருந்தன்மை போல சித்தரித்துக் கொள்கிறார்கள். அன்றைய மன்னர்கள் மட்டுமா, இன்றைய கல்வி வள்ளல்களும் கூடத்தான் வந்தாரை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள சுயநிதிக் கல்லூரிகளில் தமிழர்களை மட்டுமே சேர்க்காமல், எல்லா இனத்துக்காரனுக்கும், வெளிநாட்டாருக்கும் தாராளமாக சீட்டு கொடுக்கிறார்களே, இது வந்தாரை வாழ வைக்கும் பண்பா, அல்லது "வந்தவரை' இலாபம் என்று பணத்தை அள்ளும் வணிகமா? கல்விக் கொள்ளைக்கு வட நாட்டு மாணவர்களை தமிழ் முதலாளி வளைத்துப் பிடிப்பதில் வெளிப்படுவது வர்க்கமா? இனமா?
சுரண்டும் முதலாளி தமிழனாய் இருந்தால் புரவலர் என்று பல்லைக் காட்டுவது, சுரண்டப்படும் தொழிலாளி வேறு இனம் என்பதால் பல்லைக் கடிப்பது இதுதான் தமிழ்த்தேசிய குடி நாயகப் பண்போ?
தம்மை யாரும் ஆதிக்கம் செய்யலாகாது என்று கருதுபவர்கள், நாம் பிறரை ஆதிக்கம் செய்யலாகாது என்றும் கருதவேண் டும். அத்தகைய ஆதிக்க மரபுகளை இழிவாகவும் கருதி நிராகரிக்கவும் வேண்டும். தமிழன் அன்று கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், இமயத்தில் புலிக்கொடி நாட்டினான்.. என்று ஊரை அடித்து உலையில் போட்டதைப் பெருமையாகப் போற்றுகிறார்கள். யவனப் பெண்களை அடிமையாக வாங்கி அரண்மனை, அந்தப்புரங்களில் "கொண்டி மகளிர்' ஆக்கியதை எண்ணிப் புளகாங்கிக்கிறார்கள்.
"பேராற்றல், பெரும்படை, வாள்வீச்சு, வேல்வீச்சு எல்லாமிருந்தும், ஏங்க பின்னே தமிழன் ஆட்சி வீழ்ந்தது?'' என்று கேட்டால், “பார்ப்பான் பொம்பளையக் காட்டி மயக்கிட்டான்' என்று பதிலளிக்கிறார்கள் "ஆம்பிள சிங்கம்தான்.. ஆனா பொம்பள விசயத்துல வீக்கு!'' என்பது போல. மன்னர்கள் என்றழைக்கப்படும் இத்தகைய திருடர்களையும் பொறுக்கிகளையும் இனப்பெருமையின் நாயகர்களாகச் சித்தரிப்பவர்களிடமிருந்து ஒரு முற்போக்கான இன விடுதலையை எதிர்பார்க்க முடியுமா?
வரலாற்றில் தேசியம், தேசிய உணர்வு என்பதெல்லாம், முடியாட்சியையும் அதன் எச்சங்களை அகற்றி, நிலவுடைமை ஆதிக்கத்தையும் அதன் மரபுகளையும், மத நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் ஒழித்துக் கட்டிய பின்னர்தான் வந்திருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சியைக் கொண்டாடுவோர் லூயி மன்னர் பரம்பரயைத் தமது மரபாகப் போற்றுவதில்லை. அந்த மரபை ஒழித்ததிலிருந்துதான் பிரெஞ்சு தேசியம் வந்திருக்கிறது. இங்கோ தமிழ்த் தேசியவாதிகளின் எண்ணமும், கருத்தும் இன்னும் மன்னராட்சி மயக்கத்திலிருந்து விடுதலை பெறவில்லை. புரட்சிகரமான தேசிய உணர்வைத் தோற்றுவிக்கத் தேவையான சுயேச்சையான முதலாளித்துவம் இந்தியாவில் வளரவில்லை.
ஆங்கிலக் காலனியாதிக்கவாதிகளால் மேலிருந்து திணிக்கப்பட்ட முதலாளித்துவ அரசு வடிவமும், வெள்ளையனுக்குத் துணை நின்ற தரகு முதலாளித்துவ வர்க்கமும், அவர்களுடைய இந்து தேசியமும் எந்த இனத்திலும் ஜனநாயகப்பூர்வமான இன உணர்வைத் தோற்றுவிக்கவில்லை. இதனை இனிமேல்தான் உருவாக்க வேண்டியிருக்கிறது என்பதே உண்மை. அதன் எதிரிகளான ஏகாதிபத்தியம், தரகு முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடாமல், மலையாளி.. கன்னடன் என்று இனவெறியைத் தூண்டி விடுவதுதான் இவர்களது அரசியலாக இருக்கிறது.
தமிழினம் தனது உரிமைகளை ஒடுக்கும் அரசுக்கு எதிராகப் போராடுவதன் மூலமும், பிற தேசிய இன மக்களிடம் தங்களது நியாயத்தை வலியுறுத்தி அய்க்கியப்படுவதன் மூலமுமே தன்னை பலப்படுத்திக் கொள்ள முடியும். "இதைச் செய்யத் தவறுவதுடன் மலையாளி, கன்னடன், தெலுங்கன் என்று மக்களுக்கு இடையிலான பிளவையும், பிரிவையும் அதிகப்படுத்துவது ஆளும் வர்க்கத்துக்கு உதவுவதாகும்'' என்று நாம் கூறினால், உடனே, "தமிழன்னா இளிச்சவாயனாடா! பட்டத்து யானையை அவுத்து விடுங்கடா'' என்று ஆர்ப்பரிக்கிறார்கள். எப்போது வாயைத் திறந்தாலும் "அவன் மலையாளி, இவன் கன்னடன், அதோ பாரு தெலுங்கன்'' என்று உசுப்பேற்றி விட்டு அடிவாங்கும் போது மட்டும் "அவன் கேட்டானா? இவன் கேட்டானா?'' என்று பேசுவதில் அர்த்தமுள்ளதா?
இன்னும் ஒருபடி மேலே போய், "ராஜ் தாக்கரே பாணிதான் சரி. அவன் பீகாரிகளை அடிச்சு துரத்தியது மாதிரி இங்கேயும் நடக்க வேண்டும்'' என்கிறார்கள். இந்த மனநிலை ஒரு குட்டி பாசிசம் இல்லையா? மும்பைக்குப் பிழைக்க வரும் பீகார் தொழிலாளிகளை பிய்த்து உதறும் சண்டியர் ராஜ் தாக்கரே யார்? பால் தாக்கரேக்கு போட்டியாக முகேஷ் அம்பானியால் வளர்த்து விடப்படும் ஏவல் நாய். குஜராத்திலிருந்து வந்த பனியாவும், இந்தியாவையே கொள்ளையடிக்கும் தரகு முதலாளியுமான அம்பானியை அனுமதித்து விட்டு, அவனிட ம் காசும் வாங்கிக்கொண்டு குரைக்கும் இந்தப் பிராணி, மராத்திய இனவுணர்வின் எடுத்துக்காட்டா, தரகு முதலாளியின் கைக்கூலியா? ராஜ் தாக்கரேயைப் பார்த்துப் புல்லரிக்கும் இவர்களுக்கு வட்டாள் நாகராஜுவப் பார்த்தும் புல்லரிக்குமா?
ராஜ் தாக்கரேயும், வட்டாள் நாகராஜுவும் ஒரு வகையில் யோக்கியர்கள். தங்களைப் பச்சையான ஆளும்வர்க்க இனவெறியர்களாக மட்டும்தான் அவர்கள் அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் படத்தை வைத்துக் கொண்டு தங்களைப் பொதுவுடைமைக் கட்சி என்று கூறிக்கொள்வதில்லை. வர்க்க அரசியலுக்கு நேர் எதிரான இனவாத அரசியலைப் பேசிக்கொண்டே, பொதுவுடைமைக் கட்சி போல பம்மாத்துப் பண்ணும் இந்த வேலையைத்தான் இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுன செய்கின்றது.
இடதுசாரி வேடமிட்ட இந்த இனவாதிகளுக்கு ஈழம் உட்பட எந்த ஒரு விவாதத்திலும், நாம் வர்க்கம் என்று சொன்னா எரிச்சல் வருகிறது. ஈழ விடுதலையை நசுக்குவதில் இந்திய அரசின் வர்க்கநலன் இருக்கிறது என்றால், இது போகாத ஊருக்கு வழி என்று நம்மைப் புறம் பேசி விட்டு, ஈழ விடுதலையை வாங்கிவர இவர்கள் போகும் வழி கடைசியில் போயஸ் கார்டனில் போய் முடிகிறது. ஈழமாக இருக்கட்டும், காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சினையாக இருக்கட்டும், தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டம் நம்மைப் போல உரிமைகள் மறுக்கப்படும், ஒட்டச் சுரண்ட ப்படும் பிற தேசிய இன மக்களையும் விலக்காத தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். தமிழகத்தின் நீர் உரிமையைப் பிடுங்கும் பிற மாநில அரசுகள், அரசியல் நோக்கத்துக்காக இனவுணர்வை விசிறி விட்டாலும், அந்தத் தண்ணீரை மக்களுக்கு வாரி வழங்குவதில்லை.
மாறாக அந்த மாநில தொழில் முதலைகளும், பன்னாட்டுக் கம்பெனிகளுமே இதனை உறிஞ்சுகிறார்கள் என்பது எதார்த்தம். இங்கே சென்னைக் குடிநீருக்கு என்று கொண்டுவரப்படும் வீராணம் தண்ணீர் ஐ.டி பார்க்குகளுக்கும், புதிய பணக்கார சாடிலைட் நகரங்களுக்கும் திருப்பி விடப்படுவதைப் போலத்தான்.
வர்க்க ஒடுக்குமுறையின் மருவிய வடிவமாக இன ஒடுக்குமுறை வெளிப்படுவதை இனவாதிகள் அங்கீகரிப்பதில்லை. பன்னாட்டு தேசங்கடந்த மூலதனத்தின் கொலைக்கருவியாக உள்ள இந்த அரசை, ஏகாதிபத்திய அடிமைத்தளையை அழித்தொழிக்கு ம் பாட்டாளி வர்க்க அரசியல் கண்ணோட்டத்தையும் அவர்கள் ஏற்பதில்லை. அதனால்தான், ஒபாமாவிடம் பூங்கொத்து தந்தோ, ஜெயலலிதா, அத்வானியின் காது கடித்தோ இன விடுதலையைச் சாதிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.
தமிழன் ஒன்றுபடத் தடையாக இருக்கும் சமூகத் தடைகளான சாதி ஆதிக்கம், பார்ப்பன மதவெறி, குறுந்தேசிய இனவாதம் ஆகியவற்றுக்கு எதிராக மக்களைத் திரட்டாமல், "போதையில் கொஞ்சுவானாம், சுதி இறங்குனா புள்ளையப் போட்டு அடிப்பானாம்'' என்ற கதையாக, ஒரு மூச்சு பழம்பெருமையும் சவடாலும் பேசுகிறார்கள், பிறகு " தமிழனுக்கு சூடு இல்லை, சொரணையில்லை'' என்று வசை பாடத் தொடங்குகிறார்கள்.
· பரிதி