பிலிப்பைன்சின் சிறையிலிருக்கும் கைதிகள் திரில்லர் பாடலை நடனத்துடன் ஆடி சிறை வளாகத்திலிருந்தே மைக்கேல் ஜாக்சனுக்கு இரங்கல் தெரிவிக்க, மைக்கேலின் இறுதி அடக்கத்திற்கு முன்னர் லாஸ் ஏஞ்செல்சில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கருப்பின, வெள்ளையின பொழுதுபோக்கு, விளையாட்டு நட்சத்திரங்கள் மைக்கேலுடனான தங்கள் உறவை நினைவு கூர, மார்டின் லூதர் கிங்கின் வாரிசுகளும் கருப்பின உலகிலிருந்து மலர்ந்த அந்த கலைஞனை போற்றிப் பேச இறுதியில் மைக்கேல் ஜாக்சனின் நினைவுகள் அவரது பல இலட்சம் ரசிகர்களின் அனுதாபத்தோடு இப்போதைக்கு விடை பெற்றுக் கொண்டன.
அவரது மரணங்கள் பற்றி பல்வேறு வதந்திகளும் செய்திகளும் ஊடகங்களின் பரபரப்பு தீனிக்காக கொட்டப்படுகின்றன. எப்படி இருந்தாலும் அவரது மரணம் சுமூகமாகவோ, இயல்பாகவோ நிகழவில்லை. பல்வேறு சூழ்நிலைகளின் இறுக்கத்தால் கழுத்து நெரிக்கப்பட்டுதான் மூச்சு நின்றிருக்கிறது. அவரது இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதா இல்லை அவரது வாழ்வின் நரம்பாய் இருந்த இசையுலக பயணம், இசை நிறுவனங்களால் புதை குழியை நோக்கி தள்ளப்பட்டதால் இந்த மரணம் சம்பவித்ததா? இறுதி ஆண்டுகளில் மைக்கேல் ஜாக்சன் இடம்பெற்றிருந்த எந்தப் புகைப்படமும் ஏதோ ஒரு துயரத்தை தாங்கியே வெளிவந்தன. யாருடைய துன்புறுத்தலின் காரணமாகவோ, நிர்ப்பந்தத்தின் பொருட்டோ வேறு வழியின்றி மரணம்தான் எல்லாவற்றிலும் விடுதலை தரும் என்பதாக அவர் இறந்து போனாரா?
90ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலேயே மைக்கேல் ஜாக்சனின் நட்சத்திர அந்தஸ்து மரித்து விட்டது. 2000ஆம் ஆண்டுகளில் அவர் மீது தொடுக்கப்பட்ட சிறார் மீதான பாலியல் வன்முறை வழக்குகள் கூட அவரது பழைய நட்சத்திர இமேஜே வைத்து பத்திரிகைகள் பரபரப்பாக செய்தி வெளியிடுவதற்கு மட்டுமே பயன்பட்டன. நட்சத்திர வாழ்க்கைக்காக அவர் உருவாக்கியிருந்த நெவர்லாண்ட் பண்ணை வீட்டை கூட பராமரிக்க முடியாமல் காலி செய்து வாடகை பங்களா ஒன்றில் குடியேறினார். அவரது இறங்குமுக காலத்தில் நடந்த இரண்டு திருமணங்களும் ஒரிரு ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தன. கூடவே பெரும் கடனும் அவரை அச்சுறுத்தி வந்தன. வாழ்ந்து கெட்ட நாயகனைப்போல எல்லாவகை துன்பங்களும் அவரது இறுதி காலத்தில் கெட்ட நனவுகளாய் அவரை கட்டிப் போட்டிருந்தன. இந்த முடிச்சில் சிக்குண்ட மைக்கேல் அவரே வருவித்தும், அதுவே பற்றிக் கொண்டதுமான நோய்கள் வேறு மிச்சமிருந்த நிம்மதியை காலிசெய்தன. உடல் எடை குறைந்து எலும்பு மனிதனாக காட்சியளித்த மைக்கேல் இத்தனை நாள் நீடித்ததே பேறு எனுமளவுக்கு வாழ்வு முடங்கிப் போனது.
ஏதுமற்று கிட்டத்தட்ட தனிமைச் சிறையில் அடைபட்டிருந்த மைக்கேலுக்கு இசை நிறுவன முதலாளிகள் கடைசியாக அளித்த வாய்ப்புதான் இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் நடை பெற இருந்த ஐம்பது இசை நிகழ்ச்சிகள். இவை நல்லவிதமாய் நடந்தேறும்போது அவரது கடன் சுமையிலிருந்து மீளலாம் என்ற உண்மையால் இது ஆலோசனையல்ல ஒரு கட்டளை என்பதை புரிந்து கொள்ள முடியும். ஐம்பதாவது வயலிருந்த மைக்கேல் இந்த நிகழ்ச்சிகளை தனது பழைய மாகத்மியத்துடன் நடத்த வேண்டும் என்பது அத்தனை சுலபமானதல்ல. எல்லாருக்கும் தெரிந்த இந்த உண்மை மைக்கேலுக்கும் தெரியும்தான். எனினும் உண்மைகளை விட வாழ்க்கையின் வன்மையான தருணங்களின் உத்தரவை நிறைவேற்றியே ஆக வேண்டுமென்ற நிலையில் அவருக்கு வேறு தெரிவுகள் இல்லை.
இலண்டனில் தொடங்கி 2010 வரை நடக்க இருந்த இசை நிகழ்ச்சிகள் பன்னாட்டு இசை நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டு டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன. அதற்கென நீண்ட ஒத்திகைப் பயிற்சியில் மைக்கேல் ஈடுபட்டிருந்தார், இல்லை இழுத்து விடப்பட்டிருந்தார். இந்த நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பேற்றிருந்த சோனி நிறுவனம் மைக்கேலின் உடல்நிலையைக் கவனித்துகொள்ள தனியாக ஒரு மருத்துவரையே நியமித்தது. இது உடல்நிலையைக் கவனிக்கவா இல்லை என்ன செய்தாவது அவரது உடலை நிகழ்ச்சிகளுக்கு ‘தயார்’ செய்யும் வேலையா என்பது கேள்விக்குரியது. அந்த உடல்தான் இலட்சக்கணக்கான ரசிகர்களின் இசையாசையை தணிக்கும் என்பதால் நோய் உபாதைகளையும் வலிகளையும் தாங்கிக் கொள்ள அந்த மருத்துவர் தொடர்ந்து வலி நிவாரணிகளை ஏற்றி வந்தார். அசையும் உடலால் ரசிகர்களை வசீகரித்துவந்த நாயகன் கடந்த சில ஆண்டுகளாகவே உடலின் வலியை பொறுக்க முடியாமல் மருந்துகளைத்தான் அதிகம் நாடிவந்தார்.
ஐம்பது நிகழ்ச்சிகளும் முடித்தபிறகு வேண்டுமானால் அவர் செத்துப் போகலாம் என்ற அளவுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டிய ஆயுள் கைதியாக அவதிப்பட்ட மைக்கேல் ஜாக்சன் தனது ஒத்திகை ஒன்றிற்குப் பிறகு தீடிரென்று இறந்து போனார். அவரது உடனடிப் பிரேத பரிசோதனையின் படி அவர் உடலில் ஊசிகள் போடப்படாத இடமில்லை, வெறும் வயிற்றில் மாத்திரைகள் இருந்தன, ஐம்பது கிலோ எடையில் வற்றியிருந்த ஜாக்சனின் விலா எலும்புகள் சில முறிந்திருந்தன, விக் அகற்றப்பட்ட வழுக்கைத் தலையில் மைக்கேல் தனது பிம்பத்திற்கு எதிரான முறையில் பரிதாபமாக இருந்தார். இன்னும் வீரிய வேதியியல் பரிசோதனைகளின் முடிவுகள் சில காலம் கழித்துத்தான் வருமாம். இருக்கட்டும், மைக்கேல் ஜாக்சன் தானாக இறந்து போனாரா, இல்லை கொல்லப்பட்டரா, அவரைக் கொன்றது யார் என்ற பிரதேசப் பரிசோதனையில் நாம் இறங்குவோம்.
2. ஜாக்சனின் வரலாற்றுக் காலம்!
அது கலகத்தின் காலம். உலகெங்கும் பொருமிக்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடி, கீனீசிய மக்கள் நல சீர்திருத்த அரசுகள் நடக்க முயன்று விழுந்திருந்த நேரம், அமெரிக்காவின் வியட்நாம் ஆக்கிரமிப்பு போர், அங்கே கொல்லப்படும் அமெரிக்க வீர்ர்களின் சவப்பெட்டிகளைப் பார்த்தெழுந்த அமெரிக்க மக்களின் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், சே குவேராவின் பொலிவிய மரணம், பாரிஸ் மாணவர் எழுச்சி, இந்தியாவில் நக்சல்பாரி எழுச்சி,தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம், இலங்கையில் ஜே.வி.பியின் கிளர்ச்சி, சீனாவில் கலாச்சாரப் புரட்சி, வியட்நாமில் அமெரிக்காவை எதிர்த்து விடுதலைப் போர் என அன்றைய இளையோர் உலகம் கலகப் பொறியில் கனன்று கொண்டிருந்த நேரம். 1960களின் பிற்பகுதியிலும் 1970களின் முற்பகுதியிலும் இதுதான் நிலவரம்.
வியட்நாமில் மூக்குடைபட்ட அமெரிக்கா துருப்புக்களை திரும்பப் பெற்றது. தீவிர இடதுசாரி இயக்கங்களின் தவறுகளினாலும் அரசு ஒடுக்குமுறையினாலும் பல இயக்கங்கள் முற்றாக அழிக்கப்பட்டன. தீவிரவாதத்தின் தோல்வியை சமரச இயக்கங்கள் அறுவடை செய்தன. அப்படித்தான் தமிழகத்தில் தி.மு.கவும், மத்தியில் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் ஊழல் எதிர்ப்பு இயக்கமும் வெற்றி பெற்றன. ஐரோப்பிய நாடுகளில் கற்பனாவாதம் கலந்த இலட்சியவாதத்துடன் போராடிய மாணவர்கள், இளைஞர்களை தாங்கள் விரும்பிய மாற்றம் சட்டென வரவில்லை என சோர்ந்து போயினர். திசை தேடும் இளையோரின் கலகம் வற்றித் தணிந்த காலம்.
அந்நேரம் அமெரிக்காவில் வளர்ந்து வந்த பொதுமக்களின் இசை என்றழைக்கப்படும் பாப்பிசை மெல்ல ஒரு உலகச் சந்தையை உருவாக்கிக்கொண்டிருந்தது. பீட்டில்ஸ், போனியம், அப்பா முதலிய குழுக்கள் உலக அளவில் புகழ் பெற்றிருந்தன. பீட்டில்ஸ் இசை நிகழ்ச்சிகளுக்கு இலட்சக்கணக்கில் மக்கள் அணிதிரண்டு வந்ததோடு பாடல் நடனத்தோடு சேர்ந்து உணர்ச்சிகரமாக ஒன்றுவது என்ற அளவில் பாப்பிசைக் கலாச்சாரம் ஒரு புதிய மதத்தை இளையோரின் மனதில் விருட்சமாக வளர்த்து வந்தது.
இத்தகைய புறநிலைமைகளின் சூழலில்தான் மைக்கேல் ஜாக்சனின் குழந்தைப்பருவம் கழிந்தது. சாதாரண தொழிலாளியின் குடும்பதில் பிறந்த ஒன்பது குழந்தைகளில் அவரும் ஒருவர். தந்தையின் இசை ஆர்வத்தால் குழந்தைகளும் அதற்கு அறிமுகமாயினர். கருப்பினத்தவர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் ஜாக்சன் சகோதரர்கள் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி நடத்துவது அந்த குடும்பத்தின் வறுமையை போக்குவதற்கு உதவியாக இருந்தது.
3. கருப்பின மக்களின் போராட்டச் சூழலில் ஜாக்சனின் இளமைப் பருவம்!
மைக்கேலின் குழந்தைப்பருவம் தந்தையின் கண்டிப்பான அணுகுமுறையில் கடந்து சென்றதால் மற்ற குழந்தைகளின் வழக்கமான வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் அவர் அடையவில்லை என்பது அவரும் பலரும் ஒத்துக் கொண்ட விசயம். இதனாலேயே சிறு பிராயத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் மனபாதிப்பு பின்னாளில் பல்வேறு வகைகளில் வெளிப்பட்டது என்பதும் பல விமரிசனர்களின் கணிப்பு.
கருப்பின மக்களின் சமத்துவ உரிமைகளுக்கான சிவில் இயக்கம் தீவிரமாக செயல்பட்ட அக்காலத்தில் வறுமையிலும், வாய்ப்பின்மையிலும் ஏழைகளாய் இருந்த கருப்பின மக்கள் இத்தகைய கண்டிப்பான தந்தை, கட்டுப்பாடான குடும்பம் முதலிய பழைய மரபுகளைக் கொண்டிருந்ததோடு உழைத்து முன்னேற வேண்டுமென்ற வகையில் நடுத்தரவர்க்கத்தின் பண்பினையும் கொண்டிருந்தார்கள். ஏழ்மை நிலையை மாற்ற இயலாதவர்கள், அதை மாற்றிக் கொண்டு நடுத்தரவர்க்கமானவர்கள் என்ற வகையினங்களில் கருப்பின மக்கள் பிரிந்திருந்தனர்.
எனவே ஜாக்சன் மட்டுமல்ல எல்லாக் கருப்பினக் குழந்தைகளும் இத்தகைய சூழலில்தான் இருந்தனர் என்பதும் மைக்கேல் மட்டும் பின்னாளில் தான் இழந்த குழந்தைப் பிராயத்தை மீட்டும் வண்ணம் செல்வத்தை அடைந்தார் என்பதே வேறுபாடு. எந்த இசையால் பிரபலமானாரோ அந்த இசையையும், நடனத்தையும் அவருக்கு அடி உதைகளுடன் கற்றுக்கொடுத்தவர்தான் அவர் தந்தை. ஒருவேளை இந்த இசைப்ப்பயிற்சி இல்லையென்றால் மைக்கேல் அவரது குழந்தைப் பருவத்தை இழந்தார் என்பதெல்லாம் செய்திகளில் அடிபடும் விசயமே அல்ல.
ஆனாலும் மைக்கேலின் தந்தை தனது மகன்களை வளர்த்த விதத்தில் வில்லனாக்கப்பட்டார். 1969இல் ஜாக்சன் சகோதரர்களால் வெளியிடப்பட்ட “தி ஜாக்சன் ஃபைவ்” பலரது கவனத்தைப் பெற்றது. அப்போது பதினொரு வயதான மைக்கேல் மற்றவர்கள் குறிப்பிட்டு பாராட்டும் பங்களிப்பை செய்திருந்தான். இதன் மீட்சியாக 1979இல் மைக்கேல் ஜாக்சனது “ஆஃப் தி வால்” முதல் தனி ஆல்பம் வெளியாகி விற்பனையில் சாதனை படைத்தது. 21வயதில் அவர் நட்சத்திரமாக உதித்தார்.
பலரும் நினைப்பதைப்போல குதுகலமான குழந்தைப் பருவத்தை இழந்தததனால் மட்டும் ஒரு அழுத்தமான தனிமையுணர்ச்சிக்கு அவர் ஆளாகவில்லை. சிறு வயதிலேயே மேடை நிகழ்வுக் கலைஞனின் செயற்கையான மற்றவர்களை கவரும் காட்சி நடத்தைகளை அவர் கற்றுக்கொண்டார். பளிச்சென சொல்லவேண்டுமென்றால் பிஞ்சுப்பெண் குழந்தை ஒன்று வயதான, ஆளான பெண் ஒருத்தி அழகுப்போட்டியில் செய்யும் பாவனைகளைச் செய்தால் எப்படி இருக்கும்? எப்படி இருக்கும் என்பதை விட பிஞ்சிலே ஒரு குழந்தையை பழுக்கவைத்தால் என்ன பாதிப்பு ஏற்படுமோ அது மைக்கேலுக்கும் நடந்தது.
மைக்கேலின் குரலையும், காலையும் பயிற்றுவித்த தந்தை இந்த நடத்தை மாறும் மனவளத்தை வலுவாக்கும் பயிற்சிகளை தரவில்லை. இப்படித்தான் மைக்கேலின் இசையும் நடனமும் புத்தாக்க உணர்வுடன் மெருகேறி வளர்ந்த அதே காலத்தில் அவரது நட்சத்திர வாழ்க்கைக்கான பண்புகளும் சேர்ந்தே வளர்ந்தன. இசைத் திறமையும், நட்சத்திர பண்பும் ஒன்றையொன்று சார்ந்தும் விலகியும் விரிந்தன. சகோதரர்களெல்லாம் இசைக் குடும்பமாய் இருந்த போதும் சிறுவன் மைக்கேலின் திறமைகள் தனித்து தெரிந்தன. தந்தையின் இசைப் பயிற்சியை உண்டு செரித்ததில் அவர் மற்ற உடன்பிறப்புகளை விட முன்னணியில் இருந்தார் என்பதையும் மறுப்பதற்கில்லை.
பொதுவாழ்க்கையில் தங்களது சமத்துவத்துக்கான இடத்தை பெருவதற்காக கருப்பின மக்கள் போராடி வந்த காலத்தில் கலைத் துறையிலும் அந்த சவால் நீடித்தது. அரசியல் உலகில் அதிகாரத்தை மறுத்து வந்த வெள்ளை ஆளும் வர்க்கம் கேளிக்கை உலகில் மட்டும் கருப்பின நட்சத்திரங்களை அனுமதித்த்து வேறு விசயம். என்றாலும் கருப்பின மக்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கும் வெற்றியை தமது மைய போராட்டத்தின் வெற்றியாகவே அங்கீகரித்தார்கள். இந்த உளவியல் இப்போது ஒபாமா வரையிலும் அமலில் இருப்பது நமக்குத் தெரிந்த ஒன்று.
இத்தகைய பெருமிதம் கூட மைக்கேல் ஜாக்சனிடம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் கருப்பின மக்களின் தீவிரமான குடியுரிமை இயக்கத்தின் பயனை முதலில் பெருமளவு அறுவடை செய்தவராக ஜாக்சனைக் கருதலாம். அடிமைகளிடம் அடிமைத்தனத்தின் மீது கோபம் கொண்டோர், அந்த கோபத்தை தவிர்த்து எப்படியாவது முன்னுக்கு வருவோர், ஆண்டானின் உதவியுடன் கடைத்தேறுவோர் என பிரிவுகள் வைத்துக் கொண்டால் மைக்கேல் மூன்றாவது பிரிவில்தான் நிச்சயம் இருப்பார். கருப்பின மக்களின் சிவில் உரிமைகளுக்கான போராட்ட அரசியலின் சாயலைக் கூட அவரது இசையுலகில் காணமுடியாது. அத்தகைய குரலுக்கு சொந்தக்காரரான பாப் மார்லேவெல்லாம் அவரது முன்மாதிரி வரிசையில் இல்லை. இருந்தாலும் அவரிடம் திறமையைக் கண்ட இசைத்தொழிலில் உள்ள கருப்பின பிரமுகர்கள் உணர்வுப்பூர்வமாக அவருக்கு ஆதரவையும் வாய்ப்பையும் வழங்கினார்கள். இத்தகைய கூட்டு முயற்சியில்தான் அவரது பிரபல ஆல்பங்கள் வெளியிடப்பட்டாலும் அந்தப் பெருமையனைத்தும் மைக்கேலுக்கு மட்டும்தான் சென்றது. இசையிலும், நடனத்திலும் திறமை கொண்டிருந்த ஜாக்சனை ஒரு நட்சத்திரமாக மாற்றுவதனால் உள்ள ஆதாயங்களை இசை நிறுவனங்கள் தெரிந்து கொண்டன.
4. அறிவியல் தொழில் நுட்பத்தின் இசை !
1982ஆம் ஆண்டு அவரது புகழ்பெற்ற ‘திரில்லர்’ ஆல்பம் வெளியிடப்பட்டு விற்பனையில் உலகசாதனை படைத்தது. இதுவரை இல்லாத அளவில் தோல்கருவிகளின் தாளங்களும், கிதாரின் நரம்பு அறுபடும் வேகமும், மைக்கேலின் புதிய பாணியில் காத்திருந்த மனங்களை பாய்ந்து கவ்விக் கொண்டன. எல்லாவகை இசை வகைகளையும் தேவைக்கேற்ற விதத்தில் கலந்து கொடுத்த மைக்கேல் பாப்பிசையின் உண்மையான பொருளை இரசிப்பவர்களுக்கு உணரச்செய்தார். அவரது வீடியோ ஆல்பங்களில் அவர் பிரத்யேகமாக தயாரித்திருந்த நடன அசைவுகளும் இசையோடு போட்டி போட்டுக் கொண்டு இயங்கியதால் அவரது இசை மற்றவர்களை விட இதயங்களுக்கு நெருக்கமாக சென்றது. 60களின் இறுதியில் கலகங்களுக்காக முன்னணி வகித்த இளைய தலைமுறை இப்போது மைக்கேல் ஜாக்சனது பாப்பிசையின் மூலம் தமது இருப்பை தேட ஆரம்பித்தது.
87இல் BAD, 91இல் DANGEROUS, 95இல் HISTORY, 2001இல் INVINCIBLE முதலிய ஆல்பங்களில் கடைசியைத் தவிர்த்து மற்றவையும் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன. அவர் பிரபலமாகிய அதே காலத்தில்தான் மேற்கத்திய நாடுகளின் அறிவியல் தொழில் நுட்ப புரட்சியும் உச்சத்திற்கு வந்து கொண்டிருந்தது. மைக்கேலின் பாப்பிசை ஒரு உலகச்சந்தையை கைப்பற்றுவதற்கு இதுவும் முக்கிய காரணம். ஒரு ட்ராக் மோனா ஒலிப்பதிவைக் கொண்டிருந்த ரிக்கார்டு பிளேயர் தட்டுக்கள் காலாவாதியாகி பல ட்ராக் ஸ்டீரியா ஒலிப்பதிவில் கேசட்டுகள் வந்திறங்கின. இது இசையின் நுட்பத்தையும், பயன்பாட்டையும் பெரிய அளவுக்கு கொண்டு சென்றது. மைக்கேலின் காலத்தில்தான் ஹாலிவுட் படங்களுக்கிணையாக வீடியோ இசை ஆல்பங்களை பெரும் முதலீட்டில் தயாரிக்கும் வழக்கம் பிரபலமானது. இதிலும் அவரது ஆல்பங்கள் முன்மாதிரியாக இருந்தன என்பதும் மிகையில்லை. வீடியோ க்ராபிக்ஸ், அனிமேஷன், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் என எல்லா நுட்பங்களையும் கையாண்டு ஜாக்சனது வீடியோ ஆல்பங்கள் தயாரிக்கப்பட்டன. வீடியோ கேசட்டுகளும், அதன் ப்ளேயரும் புதிய வீட்டுப் பொருட்களாக வீடுகளை சென்றடைந்தன.
இதே காலத்தில் 24மணிநேர கேளிக்கை தொலைக்காட்சி சேனல்கள் மேற்கத்திய நாடுகளில் தோன்றி பெரிய உலகச்சந்தையை பிடித்து வந்தன. அதில் இசைக்கென வந்த எம்.டி.வி மைக்கேலின் பாப்பிசையோடு சேர்ந்து வளர்ந்தது. ஆரம்பத்தில் கருப்பினக் கலைஞர்களை புறக்கணித்த எம்.டி.வி திரில்லர் ஆல்பத்தின் வெற்றிக்குப்பிறகு அதன் வீடியோவை ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அரைமணி நேரத்திற்கொரு முறை ஒளிபரப்பு செய்தது. மைக்கேல் ஜாக்சன் மேற்கொண்ட உலக இசை நிகழ்ச்சி சுற்றுலாக்களெல்லாம் பிரம்மாண்டமான விளம்பரங்களுடன் இந்த சேனலில் வெற்றி பெற்றன. அவர் சென்ற எல்லா நாடுகளிலும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் காட்சி, ஒலி,ஒளி அமைப்புக்கள் அரங்கில் பார்வையாளருக்கு புதிய உணர்ச்சியை ஆச்சரியத்துடன் அளித்தன. மைக்கேலின் மேடை பொருட்கள் மட்டும் இரண்டு கார்கோ விமானங்களில் எடுத்து செல்லப்பட்டன என்பதிலிருந்து அதன் பிரம்மாண்டத்தைப் புரிந்து கொள்ளலாம். இருப்பினும் பெரும்பாலான கலைஞர்கள் மேடை நிகழ்வுகளில் வெற்றிபெறுவதில்லை என்பதோடு மைக்கேல் ஜாக்சன் அதில் அனாயசமாக வெற்றி பெற்றார் என்பதையும் இணைத்துப் பார்க்கவேண்டும்.
5. ஜாக்சனின் இசை – ஒரு சமூகவியல் பார்வை!
சுரம் தப்பாமல் பாடுவதும், தாளம் தப்பாமல் அதி வேகத்தில் ஆடுவதும் இரண்டையும் ஒருங்கே செய்வதற்கு அசாத்திய திறமை வேண்டும். அந்த திறமையை கடும் பயிற்சியில் மூலம் ஜாக்சன் அடையப்பெற்றார் என்பதில் சந்தேகமில்லை. மேலும் இரகசியக் குரல் அலையில் மெல்லப் பாடுவதும், அதே குரலை வைத்து குதூகலத்தை வரவழைக்கும் வண்ணம் உச்சஸ்தாயில் ரீங்காரம் செய்வதும் அவரால் வியப்பூட்டும் விதத்தில் செய்ய முடிந்தது. எல்லாப் பாடல்களிலும் சோகம், உற்சாகம், மகிழ்ச்சி, கும்மாளம், குத்தாட்டம் எல்லாம் இணைந்து வந்தன. அவர் பெரிய கவிஞர் இல்லையென்றாலும் தாளத்திற்கு உட்காரும் சொற்களை தெரிவு செய்வதிலும், எதுகை மோனைக்காக ஒரே உச்சரிப்பு வார்த்தைகளை சேகரிப்பதிலும் திறமையுடையவராக இருந்தார். பின்னே ஒரு உலக நட்சத்திர நாயகனுக்கு இந்த திறமைகள் கூட இல்லையென்றால் எப்படி?
மேற்கத்திய செவ்வியல் இசையில் ஈடுபாடு உடையோர் இத்தகைய பாப்பிசைகளை வெறும் வித்தை என ஒதுக்கிவிடுவார்கள். இங்கே கர்நாடக சங்கீதம் செய்யும் ஆச்சார வித்வான்களெல்லாம் திரையிசையை மலிவான இசை என ஒதுக்குவது போல. ஆனால் மைக்கேல் ஜாக்சனது இசை இருபது வருட இளைஞர்களை கட்டிப் போட்டு மெய்மறக்கச் செய்தது என்பதையும் அதுவே கேளிக்கை தொழிலை மாபெரும் இலாபத்தை மீட்டும் தொழிலாக தலையெடுத்தற்கு அடிப்படை என்பதையும் நாம் ஏற்கத்தான் வேண்டும். உலகச் சுற்றுலாக்களுக்கு அவர் செல்லும் போது இரசிகர்கள் பைத்தியம் போல பின்தொடர்ந்தார்கள், அழுதார்கள், மயங்கிக்கூட விழுந்தார்கள். வெற்றிகரமான ஹாலிவுட் இயக்குநர் ஸ்பில் பெர்க் தொடங்கி, சிவசேனாவின் கலாச்சாரக் காவலன் பால்தாக்கரே வரை மைக்கேலது இசை சாம்ராஜ்ஜயத்தில் வாழ்ந்து சென்றவர்கள்தான்.
இசை அரூபமானது, சூக்குமமானது, மொழி வரம்பு கடந்தது என்பதோடு கூடவே நமது உயிரியில் இயக்கமும் குறிப்பிட்ட தாளத்தில் இயங்குவதால் பொதுவில் இசை மனிதனின் உயிரியல் தொடர்புடையாதகவும் இருக்கிறது. தத்தித் தவழும் குழந்தை கூட வேகமான தாளகதி வரும் இசையைக் கேட்கும் போது அதற்குத் தகுந்த முறையில் அசைவதற்கு முயற்சிக்கிறது. இதனால் எந்த இசையையும் ரசிப்பதற்கு பெரிய ரசனையோ, அறிவோ, தயாரிப்போ தேவை இல்லையென்று சொல்ல முடியுமா?
மொழியின் இலக்கணத்தை நன்கு கற்றுக்கொண்டு பேசவோ, எழுதவோ முடியுமென்றாலும் ஒரு சிக்கலான தத்துவம் குறித்த கட்டுரையை யாரும் சட்டென்று புரிந்து கொள்ளமுடியாது. அப்பொருள் குறித்த பயிற்சியும், ஆரம்ப அறிவும் இருந்தால்தான் அதைக் கிரகிப்பதும், அறிந்து சொல்வதும் சாத்தியம். ஆனால் அந்துமணியின் வாரமலர் கிசுகிசுவை எவரும் புரிந்து கொள்ள முடியுமென்பதும் இவை போன்ற குப்பைகள்தான் அதிக கண்களால் வாசிக்கப்படுவதும் உண்மை. எல்லா நடவடிக்கைகளிலும் சினிமாவை அறிந்து வாழும் தமிழ் மனத்திற்கு ஒரு சினிமா நடிகையின் கிசுகிசு என்ன சொல்ல வருகிறதென்பது மூளையைக் கசக்கும் விசயமல்ல. அதே நேரம் இந்த உலகில் சிக்கலான அமைப்பையும் பிரமிப்பூட்டும் இயக்கத்தையும் கொண்டிருக்கும் மூளை ஒரு கிசுகிசு செய்திக்காக தனது அபரிதமான சக்தியை பயன்படுத்தும் தேவையில்லாமல் போகிறது. இப்படித்தான் கண்டதையும் உண்டு எல்லாவற்றையும் கழிக்கும் எந்திரப் பண்டங்களாக நம்மை முதலாளித்துவ சமூகம் மாற்றியிருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் எல்லா பிற்போக்குகளையும் அழிப்பதற்கு முன்னோடியாக இருந்த பிரஞ்சுப்புரட்சியும் அதன் மதிப்பீடுகளை போரின் மூலம் அண்மைய நாடுகளுக்கு எடுத்துச் சென்ற நெப்போலியனது காலத்தில் வாழ்ந்த பீத்தோவான் அமைத்த சிம்பொனியை நாம் இரசிப்பதற்கு, வரலாறு, தத்துவம், இசையின் அடிப்படை அறிவு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். அப்போது அந்த சிம்பொனி, மாபெரும் வண்ணக்கலவை கொண்ட பிரம்மாண்டமான ஓவியமாக நம்முன் விரியும். போராட்டத்தின் மூலம் தேவையற்றதை மறுத்து முன்னேற்றப்படிகளில் காலடி எடுத்து வைக்கும் மனித சமூகத்தின் துடிப்பை அந்த ஆழமான இசையின் மூலம் நாம் பெருமிதத்துடன் கேட்டு செரிக்கிறோம். இந்த செரித்தலில் நாம் வெளியுடுவது கழிவையல்லை, மாறாக அந்த போராட்டத்திற்கு என் பங்கு எதுவென்ற கேள்வியும், அந்த கேள்விக்கான நடைமுறை கோரும் வாழ்க்கையும் நம்மிடமிருந்து துளிர் விடுகின்றன.
தமிழ் சினிமாவில் இளையராஜாவின் இடம் காலியானதற்கும் அந்த இடத்தை தாண்டி ரஹ்மான் சென்றதற்கும் பல காரணங்கள் இருந்தாலும் சில நல்ல பாடல்களை ரஹ்மான் தந்திருக்கிறார் என்றாலும் அவரது பாடல் மேலாட்டமான அளவில் எவரையும் சென்றடைந்து விடும். வேகமான விதவிதமான தாளகதியும், குறிப்பிட்ட ராகத்தின் கற்பனைத் திறனையும் தாண்டி ரஹ்மானின் இசை பெரிய வெளியில் பயணிப்பதில்லை. பல உணர்ச்சி, காட்சி தோற்றங்களை கலந்து மாபெரும் சித்திரத்தை தீட்டும் திறன் அதில் இருப்பதில்லை. அவர் கண்ட ராகங்கள் மிகச் சிறிய அளவில் பயணித்துவிட்டு சோர்ந்து குறுகிய தூரத்திலேயே நின்றுவிடுகின்றன. ரஹ்மான் நமக்கு தெரிந்த ரசனையையும், உணர்ச்சியையும் மலிவாகத்தூண்டி விட்டு இரைச்சலான நிறைவைத் தருகிறார்.
பீத்தோவான் போன்ற ஒரு தேர்ந்த இசைக் கலைஞனிடம் பல வண்ண சேர்மங்களையும், தூரிகைகளையும் கொடுத்தால் அவரால் ஒரு கேன்வாசில் பிரம்மாண்டமான ஓவியத்தை வரையமுடியும். ரஹ்மானால் அதைக் கொண்டு பளீர் பளீரென சில வண்ணங்களை மட்டும் காட்ட முடியும். பீத்தோவானின் ஒவியத்தை முதலில் பார்ப்பவர்களுக்கு அதன் வண்ணங்கள் மங்கி இருப்பது போலவும், வண்ணங்களின் வேறுபாடு தெரியாதது போலவும் தொன்றும். ரஹ்மானின் ஓவியமோ யாரை வேண்டுமானாலும் தனது ஃபுளோசரண்ட் பிரதிபலிப்பால் கவர்ந்திழுக்கும். மைக்கேல் ஜாக்சனது இசையும் இந்த பளிர் வண்ணங்கள்தான். அதன் வேகமான தாளமும், வித்தை காட்டும் நடன அசைவும் இரசிக்கப்படுவதற்கு பெரிய ரசனை அறிவோ, தயாரிப்போ தேவையில்லை. ஆனால் இந்த இசை கேட்கப்படுவதன் மூலம் உங்கள் உணர்ச்சி கலந்த ரசனை பண்படுவதற்கு பதில் ஆரவாரத்துடன் கிளர்ந்து அதே வேகத்தில் சட்டென தணிந்தும் போகிறது.
தனது முப்பது வருட இசைவாழ்க்கையில் சுமார் அறுபது பாடல்களை மட்டும்தான், சராசரியாக ஆறு மாதத்திற்கு ஒரு பாடல்தான் மைக்கேல் ஜாக்சன் வெளியிட்டிருக்கிறார் என்பது ஆச்சரியமானதல்ல. அவருக்கென்ற உருவான பாணி வெற்றிபெற்றதும் இசையைத் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் அந்த பாணியைத்தான் மீள் வடிவில் கொண்டு வருவதை விரும்பின. இங்கே தமிழ் சினிமாவில் ஒரு கதையோ, பாடலோ வெற்றிபெற்றால் தயாரிப்பாளர்கள் அதைப் போலத்தான் வேண்டும் என்று கட்டளையிடுகிறார்களே அது போல. ஜாக்சன் ஒரு நட்சத்திரமானதும் அவரது பாடல்கள் மிகுந்த செலவு, பிரயத்துவத்துடன் சந்தைப்படுத்தப் படுவதால் அவர் விரும்பியிருந்தாலும் விதவிதமான பாடல்களை அதிக எண்ணிக்கையில் வெளியிட்டிருக்க முடியாது.
பாப், சோல், ராக், ஹார்ட் ராக், ராப், தற்போதைய ஹிப்ஹாப் வரை எல்லா வகை இசைகளிலும் ஜாக்சன் ஆரம்பித்த பாணிகள் இன்று வரை கோலேச்சுகின்றன என்றாலும் மைக்கேல் ஜாக்சன் தனது புகழின் உச்சியில் நின்ற போது அவருக்கு போட்டியாளர்கள் யாருமில்ல என்பதும் உண்மைதான். பின்னர் இந்த பாணியில் மேலும் தேர்ந்து பல கலைஞர்கள் உதிக்கத் துவங்கியதும் ஜாக்சனது நட்சத்திர சேவை இசைத் தொழில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவைப்படவில்லை. மேலும் இன்று இணையத்தின் மூலம் எந்த புதிய இசையையும் இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம் என்ற தொழில் நுட்ப சாத்தியங்களெல்லாம் ஜாக்சனது காலத்தில் இல்லை. அவரது இசை ஆல்பங்கள் 75 கோடிக்கு மேல் விற்றதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
6. நுகர்வுக் கலாச்சாரத்தின் இசை !
உணவில் சர்க்கரையோ, கொழுப்புச் சத்தோ அதிக அளவில் தீடீரென விழுங்கப்படும்போது குறிப்பிட்ட அளவில் உணர்ச்சிகள் சமநிலையிழந்து மேலடிக்கின்றன. டப்பா உணவு வகைகளில் இந்த மிகை சத்து காரணமாக அவற்றை கொறிக்கும் சிறுவர்கள் அளவு மீறிய கோபம், ஆத்திரம், பிடிவாதம், வெறுப்பு முதலியனவற்றுக்கு ஆளாவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த நிலை இசைக்கும் பொருந்தும் என்பதை வலியுறுத்தத் தேவையில்லை. மைக்கேல் ஜாக்சனின் இசை தொழில்நுட்பத்தின் இசை மட்டுமல்ல நுகர்வுக் கலாச்சாரத்திற்கான இசையும் கூட.
80களின் காலம் மேற்கத்திய நாடுகளில் நுகர்வுக் கலாச்சாரம் கொடிகட்டிப் பறந்த காலமும் கூட. வீடுகளை மனித உணர்வுகள் நிரப்பும் காலம் போய் விதம் விதமான வீட்டுப்பொருட்கள் நிரப்பும் காலம் வந்தது. அவற்றை வாங்கும் வழி முறைகளும், பேரங்காடிகளும், இசை, டி.வி., சமையல் அத்தனையும் நவீன பொருட்களால் மாற்றம் பெற்றன. இவற்றை விளம்பரம் செய்த சேனல்கள், அந்த விளம்பரங்களை பெறுவதற்கான பிரபலமான நிகழ்ச்சிகள் இரண்டும் ஒன்றையொன்று தேடியறிந்து கருவைக் கட்டியமைத்தன. காதல், பாசம், அன்பு, நேசம் முதலான உணர்ச்சிகளெல்லாம் மனித உறவுகளைத் தீர்மானிப்பதற்குப் பதில் பொருட்களின் சேகரிப்பே அனைத்து வகை உறவுகளையும் கட்டியமைக்கும் வலிமையைப் பெற்றன.
தொழிலாளிவர்க்கம் தனது சமூக அரசியல் கடமைகளை ஆற்றுவதற்காக போராடிப்பெற்ற எட்டுமணி ஒய்வுநேரம் எந்தப் பயனும் அற்று கேளிக்கை உலகில் மூழ்குவதாக மாறிப்போனது. சினிமா, டி.வி, ஷாப்பிங், கேளிக்கைப் பூங்காக்கள் மட்டுமே மனிதனின் சமூக நடவடிக்கைகளுக்கான நிறுவனங்களாக மாற்றப்பட்டன. அரட்டையும், நுகர்வும், சுயநலமும், தனிமனித இன்பத் துய்ப்பும், மக்களின் பண்புகளாக இயல்பாக திணிக்கப்பட்டன. பொதுநலமும், அரசியல் ஆர்வமும், சமூக நடவடிக்கைகளும் கேலிக்குரியதாக யதார்த்தத்திற்கு புறம்பானதாக கருதப்பட்டன. பதிவுலகின் மொழியில் சொல்வதாக இருந்தால் மொக்கைகள் சாகாவரம் பெற்றதாகவும், சமூக அக்கறையைக் கோரும் பதிவுகள் அறுவைகளாவும் நிலை கொண்டன. அல்லது மொக்கை அரட்டை விதிகளுக்குட்பட்டுத்தான் அரசியல் விசயங்களை பேசமுடியும் என்றாக ஆயின.
ஆரம்பத்தில் கடும் உழைப்பிற்காக அமெரிக்க தொழிலாளிகள் அணிந்து வந்த ஜீன்ஸ் பேண்ட் அறுபதுகளின் போராட்ட யுகத்தில் கலகம், கிளர்ச்சி செய்யும் இளைஞர்களது சீரூடையாக குறிக்கப்பட்டன. எண்பதுகளிலோ இந்த ஜீன்ஸ் காலுடை வெட்டி அரட்டை செய்வதையே கலகமாய் கருதும் தலைமுறையின் சீருடையாக அவதாரம் எடுத்தது. இவர்கள் தனிமனித இன்பம் துய்ப்பதற்கு இந்த சமூகம், உறவுகள், தந்தைகள் தடுப்பதாக ஆத்திரம் கொண்டு ‘கலகம்’ செய்யும் புதிய தலைமுறையினர். இன்றளவும் வலிமையுடன் நீடிக்கும் வாரிசுகளின் முன்னோடிகள். மைக்கேல் ஜாக்சனின் ‘பிளாக் ஆர் ஒயிட்’ பாடலில் இசை கேட்பதை தடுக்க நினைக்கும் தந்தையை அந்தச் சிறுவன் பல்லாயிரம் வாட்ஸ் ஒலிப்பான்களை வைத்து தூக்கி எறிவதாக ஒரு காட்சி வருமே அதுதான் இந்த இளைஞர்களை குறிக்கும் சரியான குறியீடு.
அந்தப் பாடலில் மேலோட்டாமான கருப்பு வெள்ளை நிறங்களின் ஒற்றுமை பற்றி மைக்கேல் பாடினாலும் அந்தப் பாடலின் வேகமான தாளமும், கிதாரின் கவரும் நரம்பு மீட்டலும்தான் அதாவது கிளர்ந்தெழும் இசை மட்டும்தான் ரசிகர்களின் இதயங்களுக்குள் நுழைகிறது. ட்ரேசி சாப்மெனின் பாடல்களில் ஜாக்சனது வித்தைகள் எதுவும் இல்லை என்றாலும் அவரது சமூக அக்கறை நமது மனங்களில் கேள்வியாய் இசையுடன் கலந்து முகிழ்விக்கிறது. மைக்கேல் ஜாக்சனின் ‘முற்போக்கு’ பாடல்களைக் கேட்டு சில வெள்ளை நிறவெறியர்கள் கூட திருந்தவில்லை என்றாலும் அவரது பாடல்களுக்கு நிறங்களைக் கடந்த ரசிகர்கள் இருந்தார்கள். அதாவது நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அத்தகைய பிரிவினைகள் எதுவும் தேவையில்லை என்பதும் சமூகத்தோடு முரண்படும் தனிமனினது இன்பத்துய்ப்பை மட்டும் அவனது ஒரே கிளர்ச்சி நடவடிக்கையாய் ஆக்குவதும்தான் அதனது இலக்கு என்பதால் இங்கே வேற்றுமைகள் கடந்த ஒற்றுமையில் குறிப்பாக நடுத்தர வர்க்கம் தனது அடையாளத்தை தேடுகிறது
அவரது சிநேகிதியான எலிசபெத் டெய்லரால் பாப்பிசையின் அரசனென்று அழைக்கப்பட்டு நட்சத்திரமாக நிலைகொண்ட மைக்கேல் ஜாக்சனும் தனது அடையாளத்தை தேட… அல்ல, மாற்றத் துவங்கினார். நடுத்தர வர்க்க இளைஞர்களின் பொருளற்ற அரட்டை வாழ்க்கையையே கலகமென்று பொய்யாய் மெருகூட்டிய நுகர்வுக் கலாச்சாரத்தின் அங்கமாகிப் போன ஜாக்சனது இசைக்கு பொருத்தமாக அப்போது பெப்சி வெளியிட்ட விளம்பரத்தில்தான் “பெப்சி…புதிய தலைமுறையின் தெரிவு” என்ற முத்திரை வாசகம் வெளியிடப்பட்டது. இந்த விளம்பரத்தில் தனது நடனத்துடன் நடித்த ஜாக்சன் அப்போது ஏற்பட்ட விபத்தினால் மூக்கில் அடிபட்டு சிகிச்சை பெறுகிறார். பிளாஸ்டிக் சர்ஜரிக்கும் அறிமுகமாகிறார்.
7. மேடை ஒளியில் உருவான உடலுக்காக…..!
ஜாக்சனை கருப்பின மக்கள் கூடுதல் நேசத்துடன் கொண்டாடினாலும் ஜாக்சன் அதை விரும்பவில்லை. தனது தந்தையின் கெடுபிடிகளை நினைவு கூர்ந்த ஜாக்சன் நிறத்தினால் தான் பட்ட துன்பங்கள் பற்றி எப்போதும் பேசியதில்லை. உலக நட்சத்திரமாக மாற்றப்பட்ட அவருக்கு புதிய முகமும், பாணியும் தேவையென்பதை பன்னாட்டு நிறுவனங்களும் உணர்ந்து கொண்டன. கேவலம் அமெரிக்க அதிபருக்கே எப்படிப் பேசுவது, நடப்பது, கை குலுக்குவது, எந்த கோணத்தில் புகைப்படத்திற்கு முகத்தை திருப்புவது என்பதெல்லாம் ஆள் வைத்துப் பயிற்சியாக கொடுக்கப்படும் போது இசையில் உலக நாயகனுக்குரிய தோற்றத்தை பன்னாட்டு நிறுவனங்கள் தீர்மானிக்காமல் போய்விடுமா என்ன?
இங்கே ரகுமானின் வந்தே மாதரத்தை சோனி நிறுவனம் வெளியிடும் போது அம்பி போல இருந்த ரகுமானது முடியலங்காரம் மேற்கத்திய இசைக்கலைஞர்களது பாணியில் மாற்றப்பட்டதை இங்கே இணைத்துப் பார்க்க வேண்டும். இவையெல்லாம் அவர்களது இசை குறித்த ஒப்பந்தத்திலேயே தெளிவாக கூறப்பட்டு கையெழுத்து பெறப்படும். உலக அழகியாகும் பெண்ணின் உடலளவுகள் குறித்த வரம்பு, எடையின் அளவு, முதலியன விதியாக பின்பற்றப்படும் போது மைக்கேல் ஜாக்சனது அலங்காரம் அவர் மட்டுமே முடிவு செய்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது.
நீக்ரோ என இழிவாக அழைக்கப்படும் கருப்பின மக்களது நிறத்தையும், சுருட்டை முடியையும் ஜாக்சன் மாற்றிக் காட்டினார். வெளிர் நிறமும், நீண்ட முடியும் அவரது உலக நாயகன் இமேஜூக்கு தேவைப்பட்டது. அடுத்தடுத்து அவர் செய்து கொண்ட பிளாஸ்டிக் சர்ஜரிகள் அவருக்கு தேவையான வெள்ளை நிறத்தை வழங்கின. தனக்கு வெளிரும் தோல் நோய் இருப்பதாக ஜாக்சன் தரப்பு கூறினாலும் அவர் கருப்பினத்தை சேர்ந்தவர் போல இல்லை என்று காட்டுவதும் தேவையாக இருந்தது.
நட்சத்திரங்களின் பலமே குளிர்பதனப்பட்டியில் வைத்து பாதுகாக்கப்படும் இறைச்சி போன்ற அவர்களது கெட்டுப் போகாத உடல்தான். இயல்பான உடலும், அலங்காரமும் அவர்களது வாழ்க்கையில் இனி எப்போதும் இருக்கப் போவதில்லை. ரசிகர்களின் பார்வையில் பட்டு இதயத்தில் பதியப்பட்டிருக்கும் அந்த பூச்சுப் பூசப்பட்ட உருவத்தை பராமரிப்பது வரையிலும்தான் நட்சத்திரங்களுக்கு மரியாதை. இப்படி இவர்களுக்கு உடல் என்பது இல்லாத ஆறாவது விரல் போல சிந்தையில் அழுத்தமாக பதிந்து விடுகிறது. குளிர்சாதனப் பெட்டியில் எப்போதும் அடைந்து கொண்டு உடலை பாதுகாப்பது சாத்தியமில்லை என்றாலும் அதுவே நிபந்தனையாகிவிடுகிறது. மேடை வெளிச்சத்திலும், வீடியோ கிராபிக்சிலும் உருவான ஜாக்சனது உடல் தோற்றம் அவரை துரத்த ஆரம்பித்தது. இந்த உடல் கற்பிதம் பின்னர் ஒரு உளவியல் நோயாக அவருக்கு மாறிவிட்டதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதே நோய் மர்லின் மன்றோவுக்கும் இருந்ததாகவும் தெரிகிறது.
இதை ஒரு சமூகவியல் கோணத்தில் பரிசீலிப்போம். மர்லின் மன்றோவோ அல்லது சிலுக்கு ஸ்மிதாவோ அவர்களது கவர்ச்சியான உடலுக்காக மட்டும் போற்றப்பட்டார்கள். எல்லா வகைகளிலும் இவர்களைப்பற்றிய கவனம், பார்வை, மதிப்பு எல்லாம் உடல்களைப் பற்றியே பேசப்படும். இந்த உடல்தான் பெரும் பணத்தை சம்பாதித்துக் கொடுக்கிறது என்பது உண்மையானாலும் இதனுள் இருக்கும் உள்ளத்தை எவரும் சீண்டுவதோ அங்கீகரிப்பதோ இல்லை. இதனால் இந்த உடல் நட்சத்திரங்கள் உளவியல் ஆறுதலின்றி உடலை ரசிக்கும் கூட்டத்தின் மத்தியில் விரைவிலேயே தனிமைப்பட்டு போகிறார்கள். இறுதியில் தற்கொலையும் செய்கிறார்கள். இந்த முரண்பாடு முற்றாதவர்கள் தங்களது நட்சத்திர வாழ்வை தக்கவைத்துக் கொள்கிறார்கள். கவர்ச்சி நடிகை தீபா பின்னர் இயேசுவின் நற்செய்தியாளராக மாறியதும் கூட இந்த வகைதான்.
மைக்கேல் ஜாக்சனும் தனது உடலுக்கு ஏதோ அதீத திறனுள்ளதாக நினைத்துக் கொண்டார். இந்த உடல்போதை ஒவ்வொரு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையிலும் அதிகரித்தது. மேடையில் தன்னைப் பார்த்து கதறி அழும் ரசிகர்களின் உணர்ச்சி தரும் மிதப்பில் இந்த ரணகளமான சிகிச்சையை அவர் விரும்பியே சகித்துக் கொண்டார். வெள்ளை நிறத்தின் தயவில் ஜாக்சன் நிலைபெறுவது இசையில் கோலேச்சும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தேவையாக இருந்தது. கருப்பை வெளிரவைக்கும் அழகுசாதனப் பூச்சுப்பொருட்களின் விற்பனைக்கு ஜாக்சனும் ஒரு காரணம். கருப்பர்களின் மத்தியில் கூட அட்டைக் கருப்பை சற்றே மாநிறமாக்கும் ஆசையை மைக்கேலின் வெள்ளை அவதாரம் ஏற்படுத்தியது. கருப்பினத்தவரின் போராட்டத்திற்கு இப்படித்தான் ஜாக்சன் எதிர்மறைப் பங்காற்றினார்.
8. கலை உணர்ச்சியின் வடிகால் எது?
பொழுதுபோக்குத் தொழிலில் இருக்கும் வேறு எவரையும் விட ஜாக்சன் மிகுந்த பணம் சம்பாதித்தார் என்பது உண்மையே. இதில் குறிப்பிடத்தக்க பணத்தை அவர் சமூக சேவைக்கு பயன்படுத்தினார் என்று கூறிவிட்டு அவர் ஆடம்பரமாக செலவழித்த விடயத்தை பலரும் கவனிப்பதில்லை. தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் பத்து காட்சிகளிலும் ஐந்து பாடல்களிலும் வந்து போகும் நடிகைக்கே கார், பங்களா, தனி உதவியாளர்கள் என பந்தா தேவைப்படும்பது உலக நாயகனின் சாம்ராஜ்ஜியம் பற்றி விரித்துரைக்க தேவையில்லை. அவரது விலையுயர்ந்த ஆடைகள், 2500 ஏக்கரில் விரிந்திருக்கும் நெவர்லாண்ட் அரன்மனை வீடு, அதில் கேளிக்கைப் பூங்காக்கள், நூற்றுக்கணக்கான பணியாளர்கள், அங்கு நடக்கும் புகழ்பெற்ற இரவுநேர விருந்துகள் என்று ஏராளமிருக்கின்றன. இப்படி பணத்தை வாரியிறைத்த நபருக்கு சமூக சேவை குறித்து என்ன தெரிந்திருக்கும்?
நல்லது, இத்தகைய பிரம்மாண்டங்கள் இன்றி மைக்கேல் ஒரு ஓலைக்குடிசையில் வாழ்ந்திருக்க விரும்பினாலும் அவரது இமேஜூம், அதற்கு கடிவாளம் வைத்திருந்த இசை நிறுவனங்களும் அதை அனுமதித்திருக்காது. மேலும் தனது புகழையும், பணத்தையும் ஒரு முதலாளத்துவ சந்தையால் கைவரப்பெற்ற கலைஞன் வேறு எப்படி செலவு செய்ய முடியும்? அவனது விற்பனைக்குரிய கலை உணர்ச்சி தனது வடிகால்களை எங்கு தேடும்?
பாடலோ, நடனமோ, ஓவியமோ அதில் தோய்ந்து கரையும் கலைஞர்களை நாம் பார்த்திருப்போம். கலையின் சுபாவம் அது. இதுவே பல மக்கள் ரசிக்கும் மேடையேன்றால் அந்த கலைஞனின் பேரகன் அல்லது உயர்வு நிலையில் வெளிப்படும் நான் என்ற உணர்வு அல்லது பேரகந்தை பல மட்டங்களில் உயர்ந்து செல்லும். கலைஞன் தனது நிகழ்ச்சியை முடித்து கொண்ட பிறகு இந்த உயர்வு எண்ணத்தை விட்டு எவ்வளவு வேகமாக சகஜநிலைக்கு வருகிறானோ அந்த அளவுக்கு அவன் காப்பாற்றப்படுவான். இல்லையேல் உயர்ந்து விட்ட அந்த பேரகந்தை வாய்ப்பு கிடைக்கும் சிற்றின்பங்களில் அபரிதமாக மூழகத் துவங்கும். கலைஞர்கள் பலர் பெண்பித்தராகவோ, குடிகாரராகவோ, இல்லை போதை பொருளுக்கு அடிமையாகவோ இருப்பது நாம் அறிந்ததே.
செல்லுமிடமெல்லாம் ரசிகர்கள் வெறியுடன் துரத்திய ஜாக்சனது பேரகந்தையின் பரிமாணத்தை எப்படிப் புரிந்து கொள்வது? ஒரு கிராமிய சமூகத்தில் இருக்கும் ஒரு நாட்டுப்புறக் கலைஞனுக்கு அவனது ரசிகர்களும், வெகுமதியும் கண்முன்னே முடிந்து விடும் என்பதாலும் முழு கிராமமும் அவனைப் பாரமரிக்கும் என்பதால் அவன் தனது கலை உணர்ச்சியிலிருந்து அன்னியப்படுவதில்லை. பெரிய அளவு பிரச்சினையும் அவனுக்கில்லை. ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் உருவாகும் கலைஞன் சந்தையைக் கட்டுப்படுத்தும் நிறுவனங்களால் பராமரிக்கப்படுகிறான். கூடவே அவனது கலை எப்படி நுகரப்படுகிறது என்பதும் அவனது கவனத்துக்கு அப்பாற்பட்டதாக ஆகிவிடுகிறது. இப்படி அன்னியமாகும் கலைஞன் தனது கலைத் திறமையை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கும், தனக்கு செல்வத்தை தரும் நிறுவனங்களின் விதிகளுக்கு உட்பட்டு வாழ்வதற்கும் மிகுந்த பிரயத்தனம் செய்கிறான். இங்கே கலைக்காக வாழ்வா, வாழ்க்கைக்காக கலையா என்று தெளிவாக இருப்பதில்லை. கலைஞனுக்கும் மக்களுக்கும் அப்பாற்பட்ட முதலாளிகள் மூன்றாவது கடவுளாக இருந்து கலையை கட்டுப்படுத்துகிறார்கள். கலைஞனையும் அவனது விருப்பத்தோடு கட்டிப்போடுகிறார்கள்.
இப்படி மக்களின் சமூக வாழ்க்கைக்கும் கலைஞனுக்கும் பெரிய இடைவெளி ஏற்படுகிறது. இந்தப்பிரச்சினை சோசலிச சமூகத்தில் இருக்கும் கலைஞனுக்கு இருப்பதில்லை. ஏனெனில் அங்கே அவன் கூட்டுழைப்பில் ஈடுபடும் சமூகத்தை உற்சாகப்படுத்தும் வேலையை தனது சமூகக் கடமையாக உணர்கிறான். இங்கே கற்றுக்கொள்வதற்கும், வளர்வதற்கும், தனது கலையை ரசிக்கும் ரசிகர்கள் அல்லை நேசர்களுடன் எளிமையாக பழகுவதற்கும் வாய்ப்பு அதிகம். மக்களுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டிருக்கும் வரைக்கும் ஒரு கலைஞனுக்கு பேரகந்தை என்ற கலையுணர்ச்சி நோய் அண்டாது.
9. கலைஞன் – இரசிகனின் உறவு
இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் மைக்கேல் ஜாக்சனது கலையுணர்ச்சியின் அபாயத்தை புரிந்து கொள்ளலாம். பெப்சியின் நொறுக்குத் தீனியை குதறி, கோக்கை முழுங்கி, ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை வெறியுடன் வெற்றியை மட்டும் எதிர்பார்த்து அலறும் ஒருவன் அந்த விளையாட்டின் ரசிகனா இல்லை ருசிகனா? இங்கு இருப்பது ரசனையல்ல, வெறி கொண்ட ஆத்திரம். மைக்கேல் ஜாக்சனின் ரசிகர்களில் பெரும்பானோர் இப்படித்தான் இருந்தனர் என்பதில் ஆச்சரியமேதுமில்லை. அவர்களுக்கு அந்த இசை ஊட்டிய கிளர்ச்சிதான் முக்கியமே ஒழிய அதன் கவிதை வரிகளல்ல. உள்ளடக்கத்தை நிராகரித்து வடிவத்தின் பின் ஓடும் இந்த ரசனை தோற்றுவித்திருக்கும் பிரம்மாண்ட ருசிகர் கூட்டத்தின் அன்பை அல்லது வெறியை ஏற்றுக் கொண்டிருக்கும் ஜாக்சன் அதை எப்படி எதிர் கொண்டிருக்க முடியும்?
கற்பிப்பது, கற்றுக் கொள்வது, மீண்டும் கற்பிப்பது என அறிவுத்துறையின் ஆசிரியனும், மாணவனும் இணைந்து செயல்படும்போது கலைஞன், ரசிகனின் உறவு எப்படி இருக்க வேண்டும்? கலைஞனின் கலைத்திறனை நுகரும் ரசிகனின் நுகர்திறனும், அதிலிருந்து கலைஞன் பெறும் எதிரொலியும், இதை வைத்து அவன் தனது கலையை செம்மைப்படுத்துவதும் ஒரு சங்கிலித் தொடராய் நடக்க வேண்டும். மக்களின் சமூக நடவடிக்கைகளுக்கு உணர்ச்சிரீதியாக உற்சாகத்தை அளிக்கும் ஒரு கலை தனது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அந்த மக்களிடமிருந்து புதிய உரத்தைப் பெறுகிறது. ஆகவே கலை என்றாலே அது மக்கள் கலையாக இருந்தால்தான் இந்த படிக்கட்டு வளர்ச்சி சாத்தியம். ஆனால் முதலாளித்துவத்தின் கலையோ இதற்கு நேரெதிராக வினையாற்றுகிறது. ரசிகனின் மேலாட்டமான உணர்ச்சியை மலிவாகத் தூண்டிவிட்டு பிறகு அதற்கு அவனை அடிமையாக்கி அதே விசயத்தை எந்த நோக்கமின்றி மீண்டும் எதிர்பார்க்கவைத்து அதற்கு பணியவைத்து ஒரு எந்திரமாக ஒரு விலங்காக பழக்குகிறது.
இப்பொது தமிழ் திரையில் ஆதிக்கம் செலுத்தும் குத்தாட்டம் இதை பளிச்சென புரியவைக்கும். ஜெயலலிதாவின் பாசிச ஆட்சியில் மாணவர்கள், நெசவாளிகள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் எல்லோரும் போராடி அடிபட்ட நிலையில் மொத்த தமிழகமும் மன்மத ராசாவில் லயித்திருந்தது. வேலையிழந்த கோலார் தமிழ் மக்களின் களத்தில் வைத்து எடுக்கப்பட்ட இந்த பாட்டு அன்றைய தமிழ் மக்களின் கலை உணர்ச்சியின் மையமாக இருந்தது உண்மையென்றால் அந்த மக்களின் அரசியல், சமூக உணர்ச்சி எப்படி இருந்திருக்கும் என்பதை விரிக்கத் தேவையில்லை.
அறிவியல் தொழில்நுட்பத்தின், நுகர்வு கலாச்சாரத்தின் அங்கமாக முன்னிருத்தப்பட்ட மைக்கேலின் பாப்பிசையும் ஒரு வகையில் இப்படித்தான் பிரபலமானது. மைக்கேலின் பிரபலம் காரணமாக அப்போது இருந்த அமெரிக்க குடியரசுத் தலைவர் ரீகன் ஜாக்சனை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்தளித்தார். ரீகனின் காலத்தில்தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ மேலாதிக்கம், அரசியல் சதிகள் உச்சத்தில் இருந்தன. ஆனால் ஜாக்சனின் நிலவு நடனத்தை பார்த்து ரசிகர்கள் உலகமெங்கும், அமெரிக்க ஆக்கிரமிப்பின் இலக்காக இருந்த நாடுகளையும் சேர்த்து கதறி அழுதார்கள்!
ரசிகர்களை ஒரு ரசனைக்கு பழக்கப்படுத்திய இசை நிறுவனங்கள் ஜாக்சனை அதற்கு நன்கு பயன்படுத்திக் கொண்டன. இப்படி சந்தையின் வலிமையால் மக்களிடம் கொண்டு செல்லப்பட்ட கலை எப்படி வளரமுடியும்? இந்தப் புள்ளியில்தான் தனது உலகநாயகன் இமேஜை மைக்கேல் ஜாக்சனால் ஜீரணிக்கமுடியவில்லை. அதற்குரிய தார்மீக பலம் அவரிடம் இல்லை. உலகமெங்கும் ரசிக்கப்படும் ஒரு கலைஞன் அந்த புகழை பணிவுடன் ஏற்று உரமாக்குவதற்கு அவன் மக்களுடன் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். இங்கே ஜாக்சன் திணிக்கப்பட்டிருந்தார். அதனால் கலைஞனுக்குரிய பேரகந்தை அவரிடம் எதிர்மறைப் பங்கையே ஆற்றியது. உலகப் பிரபலம் என்ற புகழை பெறுவதற்கு சிந்தையில் போதிய இடமில்லாத மைக்கேல் அதற்குரிய இடமாக வேறு இன்பங்களை நாடத்துவங்கினார். சிம்பன்சி பாசம், குழந்தைகள் நேசம், வலி நிவாரணிகளுக்கு அடிமையாதல் என கிட்டத்தட்ட ஒரு வித்தியாசமான சைக்கோவாக மாறிப்போனார்.
10. மங்கிய நட்சத்திரம் !
கூடவே குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றச்சாட்டிற்கு ஜாக்சன் ஆளானார். ஒரு வழக்கில் நீதிமன்றத்திற்கு வெளியே பணம் கொடுத்து சமரசம் செய்யப்பட்டது. மற்றொரு வழக்கில் ஆதாரம் இல்லை என புகார் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே இந்த குற்றச்சாட்டு உண்மையானதா என்று நம்மால் உறுதி செய்ய முடியாதென்றாலும் இதைச் செய்வதற்குரிய பலவீனம் ஜாக்சனிடன் இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. மேலும் இந்த பலவீனம் சந்தையினால் திணிக்கப்பட்ட கலைஞனிடம் துருத்திய விளைவு என்பதையும் நாம் ஒத்துக் கொண்டாக வேண்டும்.
எப்படி புகழை ஜாக்சனால் எதிர்கொள்ள முடியவில்லையோ இந்த குற்றச்சாட்டுகளையும் அவரால் எதிர்கொண்டிருக்க முடியாதென்பதையும் இதனால் அவர் நிலை குலைந்திருக்க வேண்டும் என்பதையும் நாம் யூகிக்கலாம். முக்கியமாக 90களின் பிற்பகுதியிலேயே ஜாக்சனுக்குரிய உலக பாப்பிசையின் அரசன் எனும் இடம் தேவையில்லை என்றாகிவிட்டது. அவரை வைத்து கல்லாக் கட்டிய இசை நிறுவனங்களெல்லாம் அவரை சீண்டக் கூட இல்லை. அவர் நட்சத்திரமாக இருந்த போது அவரை பாப்பராசிகள் விடாமல் துரத்தினார்கள். அவரைக் குறித்த அற்ப விசயங்கள் கூட ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக கொட்டப்பட்டன. நட்சத்திர ஒளி மங்கிய காலத்திலும் கூட பாப்பராசிகள் விடுவதாக இல்லை.
செலிபிரிட்டிகள் என்றழைக்கப்படும் மேன்மக்களது வாழ்க்கை செய்திகள் பன்னாட்டு ஊடகங்களை நிரப்பும் முக்கியமான ஒன்றாகும். அரசனையும், ஆண்டையையும் பற்றிக் கொள்ளும் இன்ப துன்பங்களின் வழியே மக்கள் தற்கால உலகத்தை நினைத்துப்பார்க்க வேண்டும் என்பதால் இது எப்போதும் அமலிலிருக்கும் ஊடக தந்திரமாகும். தங்களது வாழ்க்கை நிலைமைகள் குறித்து மக்கள் நினைத்துப் பார்க்க தெரியாமல் இருப்பதற்கு செல்வச்சீமான்களது வாழ்க்கை திரும்பத் திரும்ப ஓதப்படுகிறது. மற்றொரு புறம் சீமான்களுக்கு இப்படி செய்திகளில் நைந்து போகுமளவு அடிபட்டால்தான் அந்த வாழ்க்கையின் இருப்பு உறுதி செய்யப்படும் என்பதால் பேஜ் 3யில் வருவது என்பது அவர்களைப் பொறுத்தவரை போற்றற்கரிய பேறு. எதோ மாபெரும் உலகப் பிரச்சினை போல கிளிண்டன்-மோனிகா விவகாரம் பல மாதம் காலம் மேற்கத்திய ஊடகங்களில் வலம் வந்த கதையெல்லாம் இப்படித்தான்.
புகழின் உச்சியில் இருந்த போது தனது செய்திகள் அடிக்கடி வருவதை போதையாக அருந்திய ஜாக்சன் இப்போது நேரெதிரான காலத்தில் வரும் செய்திகளுக்காக இடிந்து போயிருப்பார் என்றால் மிகையில்லை. ஜாக்சன் இருந்தாலும் ஆயிரம் பொன் அவர் ஒழிந்தாலும் ஆயிரம் பொன் என்று சிறார்கள் மீதான பாலியல் விவகாரத்தில் ஊடகங்கள் நடந்து கொண்டன. நீதிமன்றத்திற்கு முன்பாகவே அவர்கள் தீர்ப்பு வழங்கி ஆயுள் சிறையிலிருக்கும் ஜாக்சனது வாழ்க்கை குறித்தெல்லாம் அலசி ஆராய்ந்தார்கள். இங்கு வெள்ளை நிறவெறியும் சற்று கூடுதல் அக்கறையுடன் செயல்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இப்படித்தான் உலகை ஒரு காலத்தில் ஆடவைத்த கலைஞன் ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்யப்பட்டார்.
வழக்கிற்காக மனநிம்மதியை இழந்த ஜாக்சன் அதற்காக பெரும் செல்வத்தையும் இழந்தார். பண்ணை வீட்டையும் காலி செய்தார். ஆடம்பரத்தில் உழன்று கொண்டிருந்த நேரத்தில் பிற்காலத்தில் இப்படி ஒரு நிலை வரும் என அவர் கனவிலும் கருதியிருக்க முடியாது. உலக நாயகனுக்காக அவர் ஏற்றிருந்த லவுகீக சமாச்சாரங்கள் ஒவ்வொன்றும் பராமரிக்க முடியாமல் உதிர்ந்து கரைந்தன. வீட்டில் நிம்மதி இல்லை, வெளியே நடமாடினால் பாப்பராசிகளால் நிம்மதி இல்லை, தொழில் இல்லை, கலை இல்லை என்றால் அவர் எதை வைத்து வாழ்ந்திருக்க முடியும்? போதை மருந்துகள், வலி நிவாரணிகள் மூலம்தான் அவரது இறுதி காலம் வேறு வழியின்றி நகர்த்தப்பட்டது. இப்போது வந்திருக்கும் செய்திகள் படி அவரது உடலில் இருந்த அளவுக்கு அதிகமான மருந்துகளே அவரது உயிரைப் பறித்திருக்கலாம் எனவும கூறப்படுகிறது.
11. ஜாக்சனைக் கொன்றவர்கள் யார்?
ஆனாலும் ஆயுள் கைதியாக மருந்துகளின் உதவியால் ஒரு பைத்தியக்காரனைப் போல வாழ்ந்து வந்த ஜாக்சனை இசை பன்னாட்டு நிறுவனங்கள் அப்போதும் விடுவதாக இல்லை. ஒரு சிறிய காலம் அந்த நிறுவனங்களை ஆட்டிப்படைத்த அந்த கலைஞன் இப்போது அந்த நிறுவனங்களுக்கு மறுப்பேதும் சொல்லும் நிலைமையில் இல்லை. ஐம்பது வயது, முடி இல்லாத தலை, உரியும் தோல் துணுக்குகள், மருந்தின்றி நடமுடியாத நிலை, உடல் எடை குறையும் நோய், இப்படி ஆயிரத்தெட்டு பிரச்சினைகளோடு இருந்த அந்த கலைஞனை ஐம்பது நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என உத்திரவிடுவதற்கு எத்தனை கொடூர மனம் வேண்டும்? வந்த வரை இலாபம் என்பதால் முதலாளிகள் ஜாக்சனது கையறு நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். பொழுது போக்கு தொழிலில் அங்கமாகிப் போன இசைச் சந்தையை விரிப்பதற்கு, புதிய தலைமுறைக்கு பழையதை அறிமுகம் செய்து ஈர்ப்பதற்கு முதலாளிகள் நினைத்திருக்கலாம்.
இந்த இசை நிகழ்ச்சிகளுக்கான ஒப்பந்தத்தில் என்னென்ன விதிகள் இருந்தன என்பது நமக்கு தெரியாது. ஒருவேளை இந்த விவரங்கள் பிரேதப் பிரிசோதனையைவிட முக்கியமானது என நமக்குத் தோன்றுகிறது. நோய்வாய்ப்பட்டிருக்கும் சிங்கத்தை அடித்து வேலை வாங்கும் ரிங் மாஸ்டர் வேலையை முதலாளிகள் செய்தனர். ஆனால் சிங்கமோ வேலை செய்ய இயலாமல் செத்துப் போனது.
நிகழ்ச்சிகள் நடந்தால் கடனிலிருந்து மீளலாம், அதற்கு நலிவிலிருக்கும் உடலை எப்படி தயார் செய்வது? எப்படியும் தயார் செய்தே ஆகவேண்டும். மருந்துகள், இன்னும் அதிக மருந்துகள், புதிய நிவாரணிகள், மயக்க மருந்து எல்லாம் பயன்படுத்தி எப்படியாவது உடலை தயார் செய்ய வேண்டும். நிவாரணிகளின் தயவில் புகழ்பெற்ற அந்த இரகசியக் குரல் தனது பொலிவை எடுத்து வரவேண்டும். மூளையை ஏமாற்றியாவது இரசிகர்களை சொக்கவைத்த நிலவு நடனத்தை ஆட வேண்டும். எதாவது செய்ய வேண்டும். மைக்கேலின் இறுதிக்காலம் இப்படித்தான் மிகப்பெரிய சித்திரவதையுடன் இருந்திருக்க வேண்டும். நல்ல வேளையாக இறந்ததன் மூலம் அவர் தன்னைக் காப்பாற்றிக் கொண்டார்.
இதுதான் முதலாளித்துவம் ஒரு கலைஞனை உருவாக்கி கொன்ற கதை. இந்த இலட்சணத்தில் கம்யூனிஸ்ட்டுகள்தான் கலைஞனுக்குரிய சுதந்திரத்தை வழங்கமாட்டார்கள் என்று புரளி பாடுவார்கள். இருக்கட்டும், மைக்கேல் பிரபலமான காலத்திலும், புகழ் சரிந்த காலத்திலும் அவர் சுதந்திரமாக இல்லை. சந்தையால் கட்டுப்படுத்தப்பட்டு ஆடினார், பாடினார். அதே சந்தைக்காக ஆடவும், பாடவும் முடியாமல் இறந்து போனார். அவரை வைத்து வளர்ந்த எம்.டிவியும், சோனி நிறுவனமும் இன்று பகாசுர பலத்தில் வளர்ந்துள்ளன. அவர்களது விளம்பர வித்தைப் பலகையில் இப்போது புதிய நட்சத்திரங்கள் மின்னுகிறார்கள். நட்சத்திரங்கள் மாறலாம், விளம்பர பலகையின் முதலாளிகள் மாறமாட்டார்கள். தரையிலிருந்து அந்த பிரம்மாண்டமான விளம்பரப்பலகையை பார்க்கும் இரசிகனுக்கு மேலே நடக்கும் சூட்சுமங்கள் புரிவதில்லை. அவனுக்குத் தேவை நரம்பை நிமிட்டும் இசையும் நடனமும்தான். அப்படித்தான் அவன் பழக்கப்பட்டிருக்கிறான்.
ஒரு இருபதாண்டு காலம் உலக மக்களை இசையிலும் நடனத்திலும் சற்றே மெய்மறக்கச் செய்த மைக்கேல் ஜாக்சன், கம்யூனிசம் தோற்று விழுந்த காலத்தில் முதலாளித்துவத்தின் வெற்றியை பறைசாற்றும் அமெரிக்காவின் தூதனாக உலகை வலம் வந்த நாயகன், அமெரிக்காதான் இந்த உலகின் மையம், துவக்கம் என நம்பிய கலைஞன், இப்போது அமெரிக்காவின் சூதாட்டப் பொருளாதாரம் வீழ்ந்த காலத்தில் தனது மாயவலைப் புகழை இழந்து மறைந்திருக்கிறான். உவமைகள் பொருத்தமாகத்தான் சேருகின்றன.
அடுத்த நாயகன் யார்? அடுத்த திவால் எது?