"வரட்டுத்தனம்" குறித்த புலிப்பாசிசமும், "ஈழ நினைவு குறித்து" வினவும், தத்துவார்த்த ரீதியாக அதில் முரண்பாடு காணவில்லை. அவரவர் கோசத்தை மற்றவர் அரசியல் ரீதியாக  அங்கீகரித்துதான், எம்மை "வரட்டுவாதிகள்", "இனத்துரோகிகள்" என்கின்றனர். இங்கு சார்புத்தன்மை இன்றி, யாரும் இதை சொல்லவும் எழுதவும் முடியாது.

இந்த எளிய மார்க்சிய உண்மையை முன்னிறுத்தி, மனித குலத்துக்கு எதிராக புலிப்பாசிசம் செய்த கொடூரத்தைப் பற்றி, எதையும் கூறத்தேவையில்லை என்ற "மார்க்சிய" விளக்கத்தை, எம்மீது திணிக்க முனைந்தனர். பாசிசம் கட்டமைக்கும் வரலாற்றுத் திரிபு, அவரின் சார்புக்கு உட்பட்டது. எனவே "அவர் அதை எப்படி பார்த்தாரோ, புரிந்து கொண்டாரோ அப்படித்தானே எழுத இயலும். படிப்பவருக்கும் அப்படித்தானே? இதில் யார் எந்தப்பக்கம் சார்ந்தவரோ அதன்வழியில் தானே ஒரு எழுத்து பிடிக்க, பிடிக்காமல் போகும். நடுநிலை என்று ஒன்று உண்டா?" என்று கூறி, பாசிசப் பிரச்சாரத்தை நாசூக்காக முன்தள்ளுகின்றனர். "வாழ்வின் உண்மைகளை பக்க சார்பின்றி எழுத வாழ்த்துகள்." என்று கூறிய போது, எமக்கு கிடைத்த பதில் தான் இது.

 

இப்படி பாசிசத்தை பாதுகாத்து வாதிட்டவர்கள் "அவர் எழுதுவதில் விவரப்பிழை இருந்தால் சுட்டலாம், அவர் ஒரு நிகழ்வை புரிந்து கொண்ட விதத்தில் தவறு இருந்தால் வாதிடலாம்." என்றனர். வாதிட முற்பட்ட போது, அதை வரட்டுவாதம் என்கின்றனர். இது வெறும் "விபரப்பிழை" அல்ல. அவர் "நிகழ்வை புரிந்து கொண்ட வித"மல்ல. மாறாக பாசிசத்தை தன் கோட்பாடாக கொண்டு, பாசிசப் பிரச்சாரம். திட்டமிட்டு பாசிச சம்பவங்களை நிகழ்வுகளை மூடிமறைக்கின்ற ஒரு சதிக் கும்பல்.

 

தனிப்பட்ட சொந்த வாழ்வு சார்ந்த அனுபவம் என்ற பெயரில், பாசிசம் தன் சொந்த பிரச்சாரத்தை இங்கு "பக்கச்சார்புடன்" எழுத முடியும் என்ற வினவின் துணையுடன், எம் மக்களின் மூஞ்சையில் காறி உமிழ்கின்றனர். மக்கள் மேல் பாசிசம் ஏவிய கொடூரத்தையே, எம்மக்கள் தங்கள் சொந்த வாழ்வாக அனுபவித்ததை மூடிமறைத்து, "பக்கச்சார்புடன்" எழுத இருந்த உரிமையைப் பற்றிதான் வினவின் அரசியல் "பக்கச்சார்"பாக இருந்தது.

 

இந்த "பக்கசார்பு" ரதியின் "பக்கச்சார்புடன்" எப்படி பொருந்திப்போனது என்பதை வினவு பின்னால் வெளிப்படுத்துகின்றார். "ரதி .. ஒரு பாசிஸ்ட்"  என்று "ஆதாரங்கள் எதையும் இரயா வழங்கவில்லை." என்று வினவு குறிப்பிடுகின்றார். பாசிசத்தின் வரலாற்று ஆதாரங்கள் சிலவற்றை அதன் மூலப்பிரதியுடன் முன்வைத்த பின்தான், "ஆதாரங்கள் எதையும் இரயா வழங்கவில்லை." என்று எமக்கு எதிராக முன்வைக்கின்றார். வரலாற்றை திருத்தி புரட்டி மறைப்பது பாசிசமல்ல என்று, அவர் இதன் மூலம் நாசூக்காகக் கூறி விடுகின்றார். அவரைப் பொறுத்த வரையில் இவை "விவரப்பிழை" அவ்வளவுதான். "நிகழ்வை புரிந்து கொண்ட விதத்தில்" உள்ள தவறு. அதை எப்படி பாசிசம் என்று கூற முடியும்? என்கின்றார். சரி புலிப்பாசிசம் இதை எப்படி பிரச்சாரம் செய்யும்? ஈழப் போராட்டத்தில் பாசிசமே இல்லை என்று, நாளை சொன்னாலும் சொல்வார்கள். 

 

"ரதி .. ஒரு பாசிஸ்ட்"  என்று "ஆதாரங்கள் எதையும் இரயா வழங்கவில்லை." என்று  குறிப்பிடும் வினவு, "புலிகளின் பாசிச நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அவர் எதையும் எழுதவில்லை." என்கின்றார். அப்படியாயின் அவரின் "பக்கச்சார்ப்பு" எது? புலிக்கு ஆதரவாக எழுதவில்லை என்பதன் மூலம், கடந்தகால வரலாற்றை திரிப்பது பாசிசமல்ல என்கின்றார். அதாவது மனிதகுல வரலாற்றை சொல்லும் விதத்தில், பாசிசமாவது மண்ணாங் கட்டியாவது. வரலாற்றை சொல்லும் விதத்துக்கு "பக்கச்சார்ப்பு" இருக்காது என்பது, இதன் அரசியல் சாரமாகிவிடுகின்றது.

 

வரலாற்றை திரித்து சொன்னால், அதையும் நாம் "புலிகளின் அரசியல் தவறுகளை உணராத மக்கள்தான் புலத்தில் அதிகம் வாழ்கின்றனர்." அவர்கள் தான் இவர்கள், என்று நாம் புரிந்து கொள்ளவேண்டும் என்கின்றனர். ரதி ஒரு பாசிட்டல்ல, புலி அனுதாபி என்று நாம் சொல்வதை நீங்கள் எற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றனர். பாசிட்டு என்று சொல்ல எம்மிடம் ஆதாரம் கேட்டீர்கள், சரி அவர் ஒரு பாசிட்டல்ல புலி அனுதாபி என்று சொல்லும் ஆதாரங்கள் எங்கே? அவர் சொன்ன கருத்தில் இருந்து, அதை சொல்ல உங்களால் முடியாது. அவர் சொன்ன கருத்து, புலிப்  பாசிசத்தின் அடிப்படையிலானது. "ஈழத்திலும் பின்னர் தமிழகத்திலும் தற்போது கனடாவிலும் அகதி என்ற பெயரில் வாழ்க்கைய நகர்த்திக்கொண்டிருக்கும் ரதி ஒரு பெண் என்ற முறையிலும் இந்த நாடோடி வாழ்க்கையின் கசப்புகளை கூடுதலாக உணர்ந்திருப்பார்." என்ற உங்கள் அறிமுகம், புலம்பெயர்ந்த அனைத்து புலிப் பாசிட்டுகளுக்கும் கூட பொருந்தும். பாசிட்டுகளை புலி அனுதாபிகள்; என்று கூறி, புலி ரதியை பாதுகாத்தனர். இதைத்தான் அவர் "வினவுகுழு என்னை தேவையற்ற விமர்சனங்களிலிருந்து காத்திருக்கிறார்கள்" என்கின்றார்.

 

இந்த மூடுமந்திரமான பாசிசத்தை இலகுவாக புரிந்துகொள்ள, நாம் உதாரணம் ஒன்றை எடுப்போம். வினவு கூறுவது போல், புலி அனுதாபிக்கு பதில் ஆர்.எஸ்.எஸ் அனுதாபி ஒருவரை எடுங்கள். அவர் இந்துவின் அவல நினைவுபற்றி, வினவு தளத்துக்கு பதில் தமிழரங்கத்தில் எழுதுகின்றார் என்று வையுங்கள். அவர் சொல்லுகின்றார் ஆர்.எஸ்.எஸ் மீது எனக்கு "மதிப்பும் மரியாதையும்" உண்டு என்கின்றார். இந்த ஆர்.எஸ்.எஸ் நிலையை "யாருக்காகவும், எதற்காகவும் மாற்றிக்கொள்ள தயாராகவில்லை. இந்த நிலையிலிருந்து என்னை யாரும் கங்கணம் கட்டிக்கொண்டு மாற்றவேண்டும் என்று நினைக்கவும் இடமளிக்கப்போவதில்லை." என்கின்றார். 

 

அவர் கூறுகின்றார் முஸ்லீம் "பயங்கரவாதிகளால்", "வந்தேறுகுடிகளால்" இந்துகள் பாதிக்கப்பட்டனர் என்கின்றார். பம்பாய் குண்டுவெடிப்பு முதல் பொது மக்கள் மேலான தாக்குதலைக் காட்டி, இந்துகளுக்கு நடந்த துயரத்தைச் சொல்லுகின்றார். "வந்தேறு" குடிகளான முஸ்லீம்களால் தான், இந்துக்களுக்கு இந்த அவல நிலை என்கின்றார்.

 

ஆர்.எஸ்.எஸ் பற்றி எழுதினால், இது ஆர்.எஸ்.எஸ் பற்றி விவாதிக்குமிடமில்லை என்கின்றார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் "மீது எப்பொழுதுமே எங்கள் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் என்ற மதிப்பும் மரியாதையும் உண்டு." என்கின்றார். இதை மீறி விவாதித்தால், தமிழரங்கமாகிய நாங்கள் "மார்க்சிய" விளக்கம் கொடுத்து தடுக்கின்றோம். அவர் தன் பக்க சார்பில் நின்றுதான் எழுதுவார். எப்படி சார்பில்லாமல் எழுத முடியும். ஆர்.எஸ்.எஸ் ஜ உணராத மக்கள்தான், இந்துக்களாக பெரும்பான்மையாக வாழ்கின்றனர். எனவே ஆர்.எஸ்.எஸ் அனுதாபியை முழுமையாக சொல்லவிடுங்கள். யாரும் இதைக் குழப்பக் கூடாது. அதை நாங்கள் விடமாட்டோம். ஏனென்றால், நாங்கள் அவர்கள் சொல்வதை கேட்டு, அவர்கள் தவறுகளை "பொறுமையாக விவாதம்" மூலம் கற்றுத் தர முனைகின்றோம். இதை இந்து பாசிசம் தனது பாசிச பிரச்சாரம் செய்வதாக கருத வேண்டாம். அவர் இந்து பாசிசத்துக்கு பிரச்சாரம் செய்வதாக கூற, உங்களிடம் என்ன ஆதாரம் உண்டு. அவர் பாசிட்டல்ல. அவர் ஆர்.எஸ்.எஸ் அனுதாபி தான். நாங்கள் சொல்வதை கேட்கவேண்டும்.

 

முஸ்லிம் மக்களுக்கு எதிரான இந்து பாசிசத்தை மூடிமறைப்பதையோ, இந்தியாவில் மூஸ்லீம்கள் மட்டும் தான் "வந்தேறு குடிகள்" என்று திரிப்பதையோ, பாசிசமாக பார்க்க முடியாது. இது "விவரப்பிழை", "ஒரு நிகழ்வை புரிந்து கொண்ட விதத்தில் தவறு", இதை வைத்துக்கொண்டு, நாம் எப்படி ஆர்.எஸ்.எஸ்சின் இந்து பாசிசம் என்று சொல்லமுடியும்.

 

அப்படி நீங்கள் பார்த்தால், நாங்கள் அதை வரட்டுவாதம் என்போம். அவர் ஆர்.எஸ்.எஸ்  அனுதாபி, இந்து பாசிட் அல்ல. இதை உங்களால் நிறுவ முடியுமா? என்போம்.

இப்படி ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் எவருக்கும், மார்க்சியம் தன் தளத்தில் பாய் விரித்து படுக்க இடம் கொடுத்தால், வெற்றிகரமாகவே பாசிசப் பிரச்சாரம் செய்வார்கள். அவர் காஸ்மீரிலும், பின்னர் பம்பாயிலும் தற்போது அமெரிக்காவிலும் அகதி என்ற பெயரில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட அபலைப் இந்துப் பெண். மூஸ்லீம் வன்முறையால் நாடோடி வாழ்க்கையின் கசப்புகளை கூடுதலாக உணர்ந்திருப்பார் என்று நம்புவதால், அவரின் இந்துத்துவத்தை தொந்தரவு செய்யாதீர்கள். அவரை சொல்லவிடுங்கள். அவரின் மனக்குமுறலை இந்துத்துவமாக பார்க்காதீர்கள். இந்தியாவே இந்துத்துவமயமானது. அவரை பேசவிட்டு, அவரின் இந்துத்துவத்தை பொறுமையாக விளக்கி  களைய நாங்கள் முனைகின்றோம். அதை எப்படி என்று கேட்டுவிடாதீர்கள். இப்படி கேட்பது, வரட்டுவாதமாகும்;;. ஆர்.எஸ்.எஸ் அனுதாபியை பேசவிடாது தடுத்தது, வரட்டுவாதம். அறிவிப்பு, இனி " தொடரும்….. வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!!" ஏனெனின் ஆர்.எஸ்.எஸ் இந்துவின் மனம் புண்படும்படி அவரை இந்து பாசிட் என்று கூறி, அவரின் துயரத்தை ஆர்.எஸ்.எஸ் பாசிசப் பிரச்சாரமாக கூறி, அதை நாங்கள் தெரிந்து கொள்ள முடியாது தடுத்த வரட்டுவாதம், "மார்க்சியத்தைக் கொல்லும்" என்பதை  நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இனி " தொடரும்….. வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!!". வாங்க, ஆர்.எஸ்.எஸ் அனுதாபியை பாசிட் என்று கூறிய இரயாகரனின்  வரட்டுவாதத்துக்கு எதிராக, எங்கள் தளத்தில் வந்து கும்மி அடியுங்கள்.

 

பி.இரயாகரன்
30.08.2009                          

தொடரும்