வார்த்தைகளின்
குவியலில்
பிதற்றலாய்,
ஆவேசக் கூச்சலாய்,
அரற்றலாய்,
செவிமடுக்க மறுக்கும்
ஊளையிடலாய்,
கண்களை இறுக்க
மூடிக் கொள்கிறது,
இறுமாப்பின் நியாயம்.
நீ தாழ்த்தப்பட்டவன்!
உனக்கு சுடுகாடு இல்லை.
நீ அஹமதியா!
உனக்கு சுடுகாடு இல்லை.
நதிகள் பிறக்குமிடம் பலவாகும்.
எல்லா நதிகளும் கலக்குமிடம்
கண்மூடித்தனமான வெறியின்
கடலாகும்.
பிணத்தை தோண்டியெடுத்து
மார்க்கத்தை நிலைநாட்டும்
புனிதத்தின் காவலர்களே,
சுடுகாடுகளை
பத்திரமாக பாதுகாத்து வையுங்கள்.
அங்கேதான்
ஏதோ ஒரு மூலையில்
தோண்டியெடுக்க வழியில்லாமல்,
நீங்கள் ஆழக்குழிதோண்டி புதைத்து விட்ட
நபியின் சகோதரத்துவம்
மரித்துக் கிடக்கிறது.
———————-
தாராளமயம்
பக்கத்து வீட்டுக்காரன்
மிக நல்லவன்!
என் குழந்தைக்கான
என் மனைவியின்
முலைப்பாலை
மலிவு விலையில்
எங்களுக்கே விற்கிறான்.
–இரங்குவோன்.
————————————-
செய்தித்தாட்கள்
அரசுகள் போடும் பிச்சை விளம்பரமும்
சிறுசுகள் நாடும் கொச்சை எழுத்துக்களும்
எங்கள் மூலதனங்கள்.
நாங்கள்
வந்தவருக்கெல்லாம் வால் பிடிப்போம்
கால் பிடிப்போம்
எங்களுக்கு விமரிசிக்கத் துணிவில்லை
வேண்டுமானால் வேண்டுகோள் விடுவோம்.
எங்கள் இலவச இணைப்புக்கள்
மக்களின் மனோதத்துவ அவலங்கள்
நடிகைகளின் அரை நிர்வாணப் படங்கள்
எங்கள் விற்பனையைக் கூட்டும்.
காமதேனுப் பசுக்கள்
எங்கள் போட்டிப் பரிசு – அறிவிப்புக்கள்
உங்கள் ஏமாளித்தனங்களின் எடுத்துக்காட்டுகள்.
நாங்கள் ஆபாசத்தை விதைக்கறோம்
நீங்கள் அறுவடை செய்கிறீர்கள்.
எங்களுக்குள் அடித்துக் கொள்வோம்
உங்கள் வயிற்றிலடித்து
ஓய்ந்த நேரங்களில்.
-ந.அப்துல் ரகுமான், ( புதிய கலாச்சாரம், நவம்பர்’ 1991 )