Language Selection

புதிய கலாச்சாரம் 2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த நிசார் அஹம்மது என்பவரின் 36 வயது மனைவி மும்தாஜ் பேகம், தலைமையாசிரியையாகப் பணியாற்றியவர். மூளைக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருடைய உறவினர்கள் உரிய அனுமதி பெற்று பீட்டர்ஸ் சாலையில் அமைந்துள்ள முசுலீம்களின் நல்லடக்க இடத்தில் மும்தாஜின் உடலைப் புதைத்திருக்கிறார்கள்.

 

அஹமதியா: பிணத்தைக் கூட சகிக்காத இசுலாமிய வெறியர்கள்!

இறந்து போனவர் அஹமதியா பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை உள்ளிட்ட முசுலீம் அமைப்புகள் அங்கே உடலைப் புதைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடினர். தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அய்யூப்பின் கவனத்திற்கு இப்பிரச்சினை வந்தது. அவரது உத்திரவின் பெயரில் மும்தாஜின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு,கிருஷ்ணாம் பேட்டை சுடுகாட்டில் மறு அடக்கம் செய்யப்பட்டது.

இசுலாமிய நாடுகளில் நபிகளை ஏற்றுக்கொள்ளவில்லை, குரானைத் திருத்த முயன்றார்கள்என்றெல்லாம் கூறி அஹமதியா பிரிவினைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பலவிதமான அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றார்கள். இவ்வகையில் பாக். இல் சில அஹமதியாக்கள் அவ்வப்போது கொல்லப்படுவதும் உண்டு. மேலும் அந்நாட்டில் முசுலீம்கள் என்பதற்கு பதிலாக அவர்களைச் சிறுபான்மையினர் என்றே வகைப்படுத்துகிறார்கள். இந்தியாவிலும் மைய நீரோட்ட முசுலீம்கள் அனைவரும் அஹமதியா முசுலீம்களைத் தமது பகைவர்களாகத்தான் பார்க்கின்றார்கள்.

ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய நபிகளையும், குரானையும் இன்றும் மாற்றமின்றி ஏற்க வேண்டும் என்ற மூடநம்பிக்கை முசுலீம்களிடம் வலுவாக இருக்கின்றது. அனால் நடைமுறையில் இந்த நம்பிக்கைகளைக் கள்ளத்தனமாகவோ, பணக்காரனுக்காகவோ இவர்கள் மீறத்தான் செய்கின்றார்கள். இறுதியில் கடுமையான ஒழுக்கத்தின்பாற்பட்ட மதம் என்பது ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்துக்கும் மட்டுமே ஓதப்படுகின்றது. மேலும் இசுலாமியப் பெண்கள் ஏதாவது சில சுதந்திரமாகத் தமது கருத்துக்களைத் தெரிவித்தால் மறுகணமே அவர்கள் மீது பாய்ந்து குதறுவதற்கும் தயாராக இருப்பார்கள் இசுலாமிய வெறியர்கள்.

இசுலாமிய மாற்றுப் பிரிவு ஒன்றினைச் சேர்ந்த பெண்ணின் உடலை புதைத்ததைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத இந்த மதவெறியர்கள், அதைத் தோண்டியெடுத்து அனுப்பியிருக்கின்றார்கள் என்றால் அவர்களது கொலைவெறி மற்றும் மதவெறியை எவரும் புரிந்து கொள்ளலாம். அதுவும் அரசின் தலைமைக் காஜியே இந்தப் பாதகச் செயலுக்கு உத்திரவிட்டிருப்பதால் மற்ற வெறியர்களின் நிலைமையைத் தனியாக விளக்க வேண்டியதில்லை.

இசுலாமிய அடிப்படைவாதம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு இந்தியாவில் பலமாக இல்லை. ஏனென்றால் இங்கே அது சிறுபான்மையினரின் மதம். மற்றபடி இந்து மதவெறியர்களுக்கும், இசுலாமிய மதவெறியர்களுக்கும் மதம் என்ற அளவில் பெரிய வேறுபாடில்லை.

நோய் வந்து இறந்த ஒரு பெண்ணை தமது மதத்தின் மாற்றுப் பிரிவினைச் சேர்ந்தவள் என்பதற்காகவே சகிக்க முடியவில்லை என்றால், இந்த முசுலீம் ஜமா அத்துகள் மற்ற விசயங்களில் எவ்வளவு வக்கிரத்தோடு நடந்து கொள்ளும் என்பதை யூகித்துக் கொள்ளலாம். முக்கியமாக வரதட்சிணைக் கொடுமை வழியே பல ஆண்கள் தமது மனைவிகளைச் சுலபமாக விவாகரத்து செய்வதை இந்த ஜமா அத்துகள் சுலபமாக நிறைவேற்றுகின்றன. இதில் மட்டும் ஆணாதிக்கத்தின் தயவு காரணமாக மதக் கோட்பாடுகளெல்லாம் வீதியில் தூக்கி வீசப்படுகின்றன. எப்போதுமே வறியவர்களுக்கும், எளியவர்களுக்கும் மட்டும்தான் விதிக்கப்பட்டிருக்கின்றன போலும் மதக் கட்டுப்பாடுகள்.

இப்படிப் பெண்களையும், ஏழைகளையும் ஒடுக்கும் இசுலாமிய மதவெறியர்கள் சற்றே மேலோட்டமான சீர்திருத்தம் பேசும் அஹமதியாக்களை முழுமையாக வெறுப்பதற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றது. அதன்படி நாளையே இவர்களது அதிகாரங்களும், வன்முறைகளும்,துஷ்பிரயோகங்களும் செல்லுபடியாகாமல் போய் விடுமோ என்ற அச்சம் காரணமாக அஹமதியாக்களை துரோகிகள் போலச் சித்தரிக்கின்றார்கள்.

சமீபத்தில் தலித் சீக்கியர்கள் நிகழ்த்திய கலவரத்தைப் பார்த்தோமேயானால் அவர்களது சீக்கியக் குருக்களை ஆதிக்கசாதியின் சீக்கியக் குருக்கள் மதம் என்ற பெயராலேயே நிராகரித்தனர். இந்த ஆதிக்கசாதி வெறியர்கள், நாடு கடந்தும் தங்களது குருக்களைக் கொன்றதாலேயே பஞ்சாபில் பெரும் கலவரம் நடந்தது.

இசுலாத்திலும் இப்படி மதரீதீயாக ஒடுக்கப்படும் பெண்களும், ஏழைகளும், அஹமதியாக்களும் ஒன்று சேர்ந்து மதவெறியர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டி போர்க்குணமிக்க முறையில் போராட்டங்களைத் துவக்க வேண்டும். அப்போதுதான் இசுலாமிய வெறியர்களை மக்கள் அரங்கில் வைத்துத் தண்டிக்க முடியும். மதத்தின் உள்ளேயே மாற்றுப் பிரிவினைச் சேர்ந்த ஒரு பெண்ணின் உடலை அடக்கம் செய்ததைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாதென்றால், அது என்ன வெங்காய மதம்?

-புதிய கலாச்சாரம், ஆகஸ்டு -2009