06062023செ
Last updateபு, 02 மார் 2022 7pm

அரச பாசிசத்தைக் கண்டிக்காமல் இருப்பதும் பாசிசத்தின் ஒரு வகைதானோ?

 ஓகஸ்ட் 13ஆம் திகதி பொலிஸாரால் மிருகத்தனமாகப் படுகொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுடைய மரண ஊர்வலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்குலானவில் நடைபெற்றது.

இந்த மரண ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள்  காவற்துறையினரின் இந்த அட்டுழியத்திற்கெதிராகத் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

 

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வஞ்சகத்தனமான பாதாள உலகத்தினருக்கெதிரான போரில் இறுதியாகப் பலியாகியிருந்தனர் இவ்விரு இளைஞர்களும்.

 

22 வயதுடைய டினேஸ் தரங்க பெர்ணாண்டோ, 24 வயதுடைய தனுஸ்க உதயங்கா அபொன்சு ஆகிய இருவரும் அங்குலான காவற்துறையினரால் கடந்த புதன்கிழமை இரவு பத்து மணியளவில் கைது செய்யப்பட்டனர். பெண்மணி ஒருவர் தன்னை இவ்விரு இளைஞர்களும் கிண்டலடித்ததாக முறைப்பாடு மேற்கொண்டதால் தான் தாhம் அவரைக் கைது செய்ததாகப் காவற்துறையினரர் தெரிவித்தனர்.

  

இவ்விரு இளைஞர்களும் அழைத்து வரப்பட்ட போது நான் எனது செல்லில் இருந்தேன். ஐந்துக்கு மேற்பட்ட காவற்துறையினர் அவர்களைத் தாக்கிக் கொண்டிருந்ததை என்னால் காணக்கூடியதாக இருந்தது. பின்னர் காவற்துறை நிலையப் பொறுப்பதிகாரியான நியூட்டன் காவற்துறை நிலையத்திற்கு வந்தார். அவருடைய அலுவலக அறைக்கு இவ்விரு இளைஞர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இவ்விரு இளைஞர்களும் இடுப்புப்பட்டியால்; தாக்கப்படும் சத்தத்தைக் கேட்டேன். காவற்துறை நிலையப் பொறுப்பதிகாரி அங்கிருந்த காவற்துறையினரிடம் நெருப்புக் கொண்டு வருமாறு கத்தினார்.  பின்னர் நேரத்திற்கு நேரம் அவர்கள் தாக்கப்படுவதும் அவர்கள் மீது சூடு வைக்கப்படுவதுமாகன சத்தத்தைக் கேட்டேன் என்கிறார் தமித் குமார என்ற இளைஞர்.

 

தங்களது பிள்ளைகள் காவற்துறையினரால் காவற்துறை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தாக்கப்படுவது தெரிய வந்ததும் இவ்விரு இளைஞர்களுடைய பெற்றாரும் இரவு ஒரு மணியளவில் காவற்துறை நிலையத்திற்குப் பதட்டத்துடன் விரைந்திருக்கிறார்கள். எனினும் காவற்துறையினர் அவர்களைப் பார்வையிட அனுமதிக்கவில்லை. மறுநாள் காலையில் வருமாறு திருப்பி அனுப்பி விட்டார்கள். இரவு இரண்டு மணியளவில் அவ்விரு இளைஞர்களும் காவற்துறை நிலையத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

மறுநாள் காலை டினேஸின் உடல் பாலத்திற்கருகில் கிடக்கக் காணப்பட்டது. அதிலிருந்து ஒரு மைல் தொலைவில் கடற்கரையில் தனுஸ்கவின் உடல் காணப்பட்டது.

 

மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட அதிகாரியான சனில் குமார இவ்விரு இளைஞர்களின் சடலத்திலும் முகம் உட்பட உடலின் பல்வேறு இடங்களிலும் பலமுறை துப்பாக்கியால் சுட்ட அடையாளங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 

 

அங்குலான பெருமளவுக்குத் தொழிலாளர்கள் வாழ்ந்து வரும் இடமாகும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகளின் புதல்வர்களே டினேஸ}ம் தனுஸ்கவுமாகும். அரசாங்கத்தின்  தேசிய இளைஞர் சேவை மன்றத்தினூடாகப் பயிற்றுவிக்கப்பட்ட தனுஸ்க ஜிம் பயிற்றுவிப்பாளராகப் பணி புரிந்து வந்துள்ளார்.

 

வியாழன் காலை அங்குலான காவற்துறை நிலையத்தைச் சுற்றி வளைத்த அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இப்படுகொலைகளுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். காவற்துறை நிலயத்தின் மீPது கற்களை வீசித் தாக்குதல் நடாத்திய பொதுமக்கள் கொழும்பு மாத்தறை புகையிரதப் பாதையை மறித்து மறியலிலும் ஈடுபட்டார்கள்.


கலகத்தை அடக்கும் காவற்துறையினர் உடனடியாக வந்து அங்குலான காவல்நிலையப் பொறுப்பதிகாரி ஜி..வி.நியூற்றனையும் ஏனைய காவற்துறையினரையும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளார்கள்.


இவ்விரு இளைஞர்களதும் படுகொலை பாதாள உலகத்தினருடைய வேலை என்று ஆரம்பத்தில் நிறுவ முயன்ற காவற்துறையினர் மக்களுடைய ஆத்திரத்துடனான தொடர் போராட்டம் காரணமாக தாம் இப்படுகொலை தொடர்பில் ஐந்து காவற்துறையினரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இப்படுகொலைகள் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என சிரேஸ்ட காவற்துறை அதிகாரி ஒருவர் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்தே பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளனர்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியைகள் நடைபெறுவதற்கு முன்பாக நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் தனுஸ்க பணியாற்றிய லைப் லைன் உடற்பயிற்சி நிலையத்திற்கு முன்பாக நின்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். கையால் எழுதப்பட்ட சுலோக அட்டைகளைத் தாங்கிய வண்ணம் கோசமெழுப்பியபடி அவர்கள் இருந்தனர்.
அப்பாவிப் பொதுமக்களைக் கொல்வதை நிறுத்து. அவர்களை பாதாள உலகத்தினர் என குற்றம் சாட்டுவதை நிறுத்து என அவர்கள் கோசமெழுப்பினர். காவற்துறையினர் பாதாள உலகத்தினரை ஒழிக்கிறார்களா? அல்லது வளர்க்கிறார்களா? இது தானா நீதிக்கான பாதை? ஏன ஏராளமான சுலோகங்கள் எழுதப்பட்டிருந்தன.

 
அன்றைய ஆர்ப்பாட்டங்கள் வேறு பல இடத்திலும் நடைபெற்றன. உதாரணமாக அங்குலான காவற்துறை நிலையத்திற்கு முன்னாலும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கெனவே வியாழனன்று கோபம் கொண்ட பொதுமக்களால் காவல் நிலையம் தாக்குதலுக்குள்ளானதால் கலகத் தடுப்புப் காவற்துறையினரும் கொமாண்டோப் காவற்துறையினரும் காவற்துறை நிலையத்திற்குப் பாதுகாப்பு வழங்கினர்.


டினேஸின் வீட்டிலிருந்து மரண ஊர்வலம் ஆரம்பமானது. வழியில் பொதுமக்கள் காவற்துறை அதிகாரி நியூட்டனின் கொடும்பாவியை தீயிட்டுக் கொளுத்தினர்.


எமது இந்த இரண்டு பிள்ளைகளும் பாதாள உலகத்தினர் என முத்திரை குத்த காவற்துறையினர் முயல்கின்றனர் என டீனேஸின் தந்தையான எம்.பி.சங்கதாச சொல்கிறார். அவர்கள் அப்பாவிகள். டீனேஸ் சாதாரண தரம் வரை படித்தவர். வேறு வேலை எதுவும் கிடைக்காததால் அவர் மீன் விற்று வந்தார். அவ்வாறான ஒரு பிள்ளை மீது ஏன் காவற்துறையினர் இத்தகைய குற்றச்சாட்டைச் சுமத்துகின்றனர். எமது பிள்ளைகளின் உயிரைப் பறித்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும். இவ்வாறான காவற்துறையினரரின் குற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.  காவற்துறையினருக்குத் தாம் நினைத்தபடி நடப்பதற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன, எனவே அவர்களுக்கு இவ்வாறான அதிகாரங்களை வழங்கிய அரசாங்கம் தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


என்னுடைய மகன் உயர்தரம் வரை படித்தவர். விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர் மேற்கொண்டு அத்துறையிலேயே செல்ல விரும்பினார். நான் அவர் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்வார் என்று பார்த்திருந்தேன். என்னுடைய எல்லாக் கனவுகளும் சிதைந்து விட்டன என்கிறார் தனுஸ்கவின் தந்தையான ஜி.எம்.சமன் உதயகாந்த அபொன்சு.


எங்களுடைய குழந்தைகளின் மரணத்திற்குக் காரணத்தைக் கண்டறியும் நீதியான விசரணை நடபெறுமென்றோ அதற்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை கிடைக்கும் என்றோ எனக்கு நம்பிக்கை இல்லை என்கிறார் அவர்.


தனுஸ்க பெண்ணைக் கிண்டலடித்தார் என்ற குற்றச்சாட்டை அவரது சகமாணவர் ஒருவர் மறுக்கிறார். அவர் மிக ஒழுக்கமான மாணவராக இருந்தார். அவருடைய மரணம் எங்களுக்குப் பெரிய இழப்பு என்கிறார் அவர். பாதாள உலகத்தினரை ஒழிப்பதன் பெயரால் காவற்துறையினருக்கு அரசாங்கம் வழங்கிய அதிகாரத்தை அவர்கள் தாம் நினைத்தபடி பயன்படுத்துகின்றனர். இது நிறுத்தப்பட வேண்டும். இது தொடருமானால் பொதுமக்கள் தமது கையில் அதிகாரத்தை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


இது இம்மாதிரியான முதலாவது சம்பவமோ அல்லது இறுதிச சம்பவமோ அல்ல என்கிறார் உள்ளுர்வாசி. இது காவற்துறைப் பொறுப்பதிகாரியான நியூட்டன் பற்றிய பிரச்சினையல்ல. இது அப்பாவி மக்கள் மீதான இலங்கையின் காவற்துறைப் பயங்கரவாதம் பற்றிய பிரச்சினை. இன்று நாம் இதற்காகப் பலியிடப்பட்டிருக்கிறேன். நாளை பலியிடப்படப் போவது நீங்கள் ஒவ்வொருவராகவும் இருக்கலாம். ஆளும் வர்க்கம் முழுச் சமுதாயத்தையும் அடக்கி ஒடுக்க நினைக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் பெயரால் முழு நாட்டின் மீதே அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. 


நாட்டில் இன்று ஜனநாயம் இல்லை. அண்மைய நாட்களிலும் கடந்த காலத்திலும் எவ்வளவு மக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். காவற்துறையினர் அப்பாவிகளைக் கொன்று விட்டு அவர்கள் பாதாள உலகத்தினர் என்று சொல்லி விடுகிறார்கள். இந்தப் படுகொலைகள் தொடர்பாக ஒருவரும் நீதிமன்றம் செல்லவில்லை. எவ்வளவு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள்? பாரபட்சமற்ற விசாரணை நடாத்தப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால் ஒன்றும் நடைபெறவில்லை. தற்போது மக்கள் அரசாங்கத்தின் உறுதி மொழிகளை நம்பத் தயாராக இல்லை. எனவே மக்களிடையே இந்த சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் பற்றிய கலந்துரையாடல்கள் நடாத்தப்பட வேண்டும். சட்டத்திற்குப் புறம்பான இப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்த மக்கள் முன்வர வேண்டும்.


தனுஸ்க எனது நிறுவனத்தில் தான் பணியாற்றினார். அவர் தனது குறிக்கோளை அடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் இப்போது அவரை நாம் இழந்து நிற்கிறோம் என்கிறார் தனுஸ்க பணியாற்றிய ஜிம் நிறுவனத்தின் உரிமையாளர்.   


உள்நாட்டு யுத்தம் முடிவடைய அமைதி வரும் என்றே மக்கள் நம்பினர்.  அரசாங்கம் தனது அரச பயங்கரவாதத்தை வடக்கிலிருந்து தெற்கிற்கு எடுத்து வந்திருக்கிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த அப்பாவி இளைஞர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றார் அவர்.


இவ்விரு இளைஞர்களின் படுகொலை கண்டுகொள்ளாமல் விடப்படக் கூடியதல்ல. விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தின் போது அரசாங்கத்தின் ஆதரவுடன் படையினருக்குள்ளிருந்தே செயற்பட்ட கொலைக் குழுக்கள் நூற்றுக் கணக்கானவர்களைக் கடத்தியும் படுகொலை செய்தும் வந்தன. ஊடகவியலாளர்கள் எதிர்க்கட்சியினர் என்று அனைவரையும் இக்கொலைக்குழுக்கள் விட்டு வைக்கவில்லை. இப்போது பாதாள உலகத்தினருக்கெதிரான யுத்தம் என்ற பெயரில் அப்பாவி மக்களின் மீது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.


ஓகஸ்ட் ஆறாம் திகதி மாலபேயில் வைத்து தகவல் தொழில்நுட்பக்கல்லூரி (Sri Lanka Institute of Information Technology (SLIIT)) மாணவனான நிபுண ராமநாயக்கவை ஒரு காவற்துறைக்; குழு கடத்திச் சென்றது. பின்னர் நிபுண அளித்த வாக்குமூலம் ஒன்றில் காவற்துறையினர் பலர் இணைந்து தன்மீது தாக்குதல் நடாத்தியதாகத் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடாத்தியவர்களில் கொழும்பு குற்றத்தடுப்பு காவற்துறைப் பணிப்பாளர் வாஸ் குணவர்த்தனவின் மகன் ரவிந்து குணவர்த்தனவும் இருந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.  


அதன் பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட அம்மாணவர் பாதாள உலகப் புள்ளி ஒருவருடன் தொடர்பு கொண்டவர் எனக் குறிப்பிட்ட வாக்குமூலம் ஒன்றில் கையொப்பமிடுமாறு பலவந்தப்படுத்தப்பட்டார். நிபுணவின் தாயார் தலையிட்டு அந்த வாக்குமூலத்தில் நிபுண ஒப்பமிடாமல் தடுத்துள்ளார். ஓகஸ்ட் 10ஆம் திகதி தகவல் தொழில்நுட்ப மாணவர்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமது நிறுவனத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனையடுத்து இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார். அதன்படி இதனுடன் சம்பந்தப்பட்ட காவற்துறையினர் வேறிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்கள். ஆனால் ஒருவர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 

இச்சம்பவங்கள் குறித்து ஆசிரிய தலையங்கம் எழுதியுள்ள அரசாங்கப் பத்திரிகையான டெய்லி நியூஸ}ம் தனியார் பத்திரிகையான ஐலண்டும் காவற்துறைத் திணைக்களத்துள் இருக்கும் இப்படிப்பட்ட சிலரால் காவற்துறையினரின் பெயரே பாழாகிறது. அவர்களுக்கு இடமளிக்கப்படக் கூடாது எனக் குறிப்பிட்டிருந்தன.


ஆனால் கடந்த வியாழனன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறான சட்டத்திற்குப் பறம்பான படுகொலைகளை நியாயப்படுத்திய அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன நாட்டின் நல்லதுக்காக மேற்கொள்ளப்படும் பல நடவடிக்கைகள் வழமையான வழிகளில் மேற்கொள்ளப்பட முடியாதவை. சில நடவடிக்கைகள் அசௌகரியமானவையும் கூட எனினும் அவை தவிர்க்கப்பட முடியாதவை எனத் தெரிவித்திருக்கிறார்.


அவருடைய கூற்று படுகொலைகள் இத்துடன் நிற்கப் போவதில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றன.  


விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை சட்டத்திற்குப் பறம்பான நடவடிக்கைகள் என்று கண்டித்த நிராகரித்த மாற்றுக் கருத்தாளர்களும் விளிம்பு நிலைமக்களின் உரிமைக் காப்பாளர்களும் இந்த அப்பாவிச் சிங்கள இளைஞர்கள் அதுவும் விளிம்பு நிலை இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி வாய் திறப்பதாக இல்லை. அவர்களுடைய வாய் திறப்பதெல்லாம் இலங்கையின் தேசிய கீதத்தைப் பாடுவதற்குத் தான் என்று தெரிகிறது.


கொல்லப்பட்ட இளைஞர்கள் மார்க்ஸிஸ்டுகள் இல்லை என்பதால் தம்மை மார்க்சிஸ்டுகள் என்று அழைத்துக் கொள்வோரும்  இத்தகைய படுகொலைகளைக் கண்டு கொள்ளப் போவதில்லை.


அரச பாசிசத்தைக் கண்டிக்காமல் இருப்பதும் பாசிசத்தின் ஒரு வகைதானோ?

 

உலக சோசலிச இணையத் தளத்தின் உதவியுடன் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ராவணா: 

http://www.globaltamilnews.net/tamil_news.php?nid=13479&cat=5


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்