03202023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

வீழ்ந்தது ஈழம்! ‘மார்க்சிஸ்டு’ மனமகிழ் மன்றம் கொண்டாட்டம்!!

“இலங்கைத் தமிழர் வாழ்வுரிமைக் கருத்தரங்கம்” என்றொரு பானரை 17.8.09 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தின் வாசலில் பார்த்தேன். “ஈழத்தமிழர் என்று சொல்லக்கூடாது இலங்கைத்தமிழர் என்றுதான் சொல்லவேண்டும்” என்ற கொள்கை உறுதி கொண்ட கட்சிகளில் யார் இந்தக் கருத்தரங்கத்தை நடத்தக் கூடும் என்ற ஆவலுடன் எட்டிப்பார்த்தேன்.

 

 

“இந்த முள்கம்பி வேலிக்குள் எப்போது ரோஜா பூக்கும்?” என்று ரொம்ப கவித்துவமான ஒரு கேள்வியுடன் விளம்பரத் தட்டி வரவேற்றது. சோறும், தண்ணியும், கழிவறையும் இல்லாமல் சேறும் சகதியும் சூழ்ந்த மண்ணில் பன்றிக் கொட்டகைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களின் நிலையை மேற்கண்டவாறு வருணிக்கும் மெல்லிதயம் படைத்தவர்கள் நிச்சயமாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினராகத்தான் இருக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளே கால் வைத்தேன்.

அருணன் பேசிக்கொண்டிருந்தார். “மாநில சுயாட்சிதான் தீர்வு என்று நாங்கள் சொன்னபோது சில நண்பர்கள் தனி ஈழம்தான் தீர்வு என்று சொன்னார்கள். 25 ஆண்டுகளுக்குப்பின் மாநில சுயாட்சிதான் தீர்வு என்பதை காலம் நிரூபித்திருக்கிறதா, இல்லையா?” என்று முழங்கினார். கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக ராஜபக்சே மேடையில் உட்கார்ந்திருக்கிறாரா என்று தேடிப்பார்த்தேன். மார்க்சிஸ்டு கட்சியின் இந்தக் கொள்கையை 25 ஆண்டுகளுக்குப்பின் நிரூபித்துக் காட்டியவரே அவர்தானே! ஆனால் ராஜபக்சேயைக் காணோம். தோழர்.என்.ராமையும் காணோம். செந்தில்நாதன், தமிழ்ச்செல்வன், அ.சவுந்தரராசன் ஆகியோர்தான் அருணன் பேச்சுக்கு தலையாட்டி ஆமோதிப்பு வழங்கிக் கொண்டிருந்தனர்.

Aftermath_IDP_TamilNational_00

“மாநில சுயாட்சியே தராதவன் எப்படி தனி ஈழம் கொடுப்பான்?” என்று தனது அடுத்த கணையை ஏவினார் அருணன். அதானே, குறைந்த பட்சக் கூலியே கொடுக்காத முதலாளி, சோசலிசத்துக்கு எப்படி ஒத்துக் கொள்வான்?

சி.ஐ.டி.யு சவுந்தர்ராஜன் தலையாட்டிக் கொண்டிருந்தார். ஆனால் இந்த கொள்கை பூர்வமான கேள்வியை தேர்தல் பிரச்சாரத்தின்போது புரட்சித்தலைவியிடம் ஏன் இவர்கள் எழுப்பவில்லை என்பது பற்றி அருணன் ஒன்றும் சொல்லவில்லை.

உண்மையை ஊடுருவிப்பார்க்கும் ஆய்வுக் கண் கொண்ட அருணன், நடந்து முடிந்த ஈழப்போர் குறித்த தனது ஆய்வு முடிவை வெளியிட்டார். “ஒரு வேளை புலிகளை ஒழித்து விட்டோம் என்று இந்திய அரசு மகிழ்கிறதோ என்று கூட எனக்கு ஐயம் ஏற்படுகிறது.” அருணன் கண்டுபிடித்துச் சொன்ன இந்த உண்மை இத்தனை நாள் நம்முடைய மண்டைக்கு உரைக்கவில்லையே என்று எண்ணியபோது ரொம்ப கூச்சமாக இருந்தது.

அடுத்து வந்தார் வழக்குரைஞர் செந்தில்நாதன். “சில தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள் பெரிய துரோகம் செய்கின்றன. இங்கிருந்து இலங்கைக்கு சென்றுவந்த ஒரு பத்திரிகை ஆசிரியர் அதை சொர்க்கம் என்கிறார். அவர் நினைத்தால் ராஜபக்சேவுக்கு போன போட்டு பேசுவார்” என்று ஆரம்பித்தார். சரி, இந்து ராமை உண்டு இல்லை என்று பிரித்து மேயப்போகிறார் நம்ம வக்கீல் என்று ஆவலாக எதிர்பார்த்தேன். அந்த மேட்டரை அப்படியே விட்டு விட்டு அங்கே இங்கே என்று கொஞ்ச நேரம் போக்கு காட்டினார். பிறகு, திடீரென்று “இந்து போன்ற பத்திரிகைகள் மாற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். இந்து தான் ஏற்கனவே கெட் அப்பை மாற்றி, டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்குப் போட்டியாக பொம்பளை படமெல்லாம் போட ஆரம்பித்து விட்டதே, இன்னும் என்ன மாறச்சொல்கிறார் செந்தில்நாதன் என்று யோசித்தேன். அப்புறம்தான் விசயம் புரிந்தது. கட்சியின் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு ஜாடையாக இந்து பத்திரிகையை ஒரு குத்து குத்தியிருக்கிறார் செந்தில். மாநிலக்குழு கேட்டால் “இல்லை” என்று நிரூபித்து விடலாம். சக தோழர்களிடம் “பார்ப்பானை ஒரு பிடி பிடித்துவிட்டதாக பெருமையும் பேசிக்கொள்ளலாம்” வக்கீலா கொக்கா?

அப்புறம் ஜெயவர்த்தனா எப்படி ராஜீவ் காந்தியை ஏமாற்றினார் என்று விளக்கினார் செந்தில்நாதன். அடுத்து, ராஜீவ் காந்தி புலிகளை எப்படி ஏமாற்றினார் என்பதையும் விளக்காமலா போய்விடுவார் என்று காத்திருந்தேன். “80 களில் அமைதிப்படை சென்றதைப் போல இப்போதும் இந்தியா அங்கே போகவேண்டும். அதற்கு முழு நியாயமும் உண்டு” என்றார். முல்லைத்தீவில்தான் கடைசி வரை இந்திய இராணுவம் களத்தில் நின்றதே, இவருக்கு மட்டும் எப்படி தெரியாமல் போனது?

“இந்தியா தலையிட வேண்டும். அதற்கு கருணாநிதி அழுத்தம் கொடுக்க வேண்டும். கருணாநிதிக்கு நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றார் செந்தில்நாதன். கூட்டணிக் கட்சித்தலைவி அம்மாவுக்கு அழுத்தம் கொடுப்பதைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. காரியம் நடக்க வேண்டுமென்றால் எங்கே, எவ்வளவு அழுத்த வேண்டும் என்பதையெல்லாம் மார்க்சிஸ்டுகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்கவா வேண்டும்?

அடுத்து வந்தார் ச. தமிழ்ச்செல்வன். “ஓராண்டாக எங்களை எவ்வளவெல்லாம் அவதூறாகப் பேசினார்கள்? ஆனால் நாங்கள் வார்த்தைகளைப் பார்க்கவில்லை, அந்த உணர்ச்சிகளை மதிக்கிறோம்” என்றார். அடேயப்பா, எப்பேர்ப்பட்ட ஜனநாயகப் பண்பு! நம் காதில் விழும் சொற்கள் உண்மைதானா? காதை கசக்கி விட்டுக் கொண்டேன்.

“நமக்கும் மற்றவர்களுக்கும் ஒரே ஒரு கருத்து வேறுபாடுதான். இலங்கைப் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதில்தான் கருத்து வேறுபாடு. மாநில சுயாட்சிதான் நமது தீர்வு” என்று பிரச்சினையின் இதயத்தைத் தொட்டார் தமிழ்ச்செல்வன்.

மாநில சுயாட்சி X சுய நிர்ணய உரிமை  போயும் போயும் இந்தச் சின்ன கருத்து வேறுபாட்டுக்காகவா மார்க்சிஸ்டுகளை எல்லோரும் கரித்துக் கொட்டினார்கள்? அநியாயம்தான். சிங்குர் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் இப்படித்தான். ஆலைக்கு நிலம் ஒதுக்க வேண்டும், தொழில் வளம் பெருக வேண்டும், வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று எல்லா விசயங்களிலும் சிங்குர் விவசாயிகளுக்கும் மார்க்சிஸ்டு அரசுக்கும் கருத்தொற்றுமை இருந்த்து. மூணு போகம் விளையும் அந்த ஆயிரம் ஏக்கரை டாட்டாவுக்கு கொடுக்கலாமா, கூடாதா என்ற சின்ன விசயத்தில்தான் அங்கேயும் கருத்து வேறுபாடு. இது சின்ன விசயம் என்பது அந்த முட்டாள் விவசாயிகளுக்கும் புரியவில்லை. இங்கே ஈழத்தமிழ் மக்களுக்கும் புரியவில்லை.

“மே 18 அன்று நடந்த மனித அவலம் துயரம் தருகிறது. அதைவிட துயரம், புலிகளும் மக்களைக் கொன்றார்கள் எனபதை அறிந்த போது ஏற்பட்டது. ஒரு எழுத்தாளன் என்கிற நிலையிலிருந்து யோசிக்கும்போது, அமைப்புகள், அதிகாரங்கள் எல்லாம் மக்களைக் கொல்வதாகத்தான் இருக்கிறது என்கிற விரக்தி ஏற்படுகிறது” என்றார் தமிழ்ச்செல்வன். கட்சி,அதிகாரம் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு எழுத்தாளன் இதற்கு மேல் என்ன பேச முடியும்? இலக்கியவாதிகளும், என்.ஜி.ஓக்களும், பின் நவீனத்துவவாதிகளும் யோசிக்கவேண்டும். நந்திக்கிராம், லால்கர் சம்பவங்களின் போதும் இதே மாதிரியான விரக்தி தமிழ்ச்செல்வனுக்கு ஏற்பட்டிருக்கும். அதைத்தான் இப்படி சூசகமாகச் சொல்கிறார் என்பது புரிந்தது. “லால்கர்: சி.ஆர்.பி.எஃப் துப்பாக்கிகளில் எப்போது கேப் வெடிக்கும்?” என்ற தலைப்பில் த.மு.எ.ச ஒரு கூட்டம் போட்டிருந்தால் நிச்சயமாக தமிழ்ச்செல்வன் தனது விரக்தியை வெளியிட்டிருப்பார்.

இப்படிப் பேசியதற்காக “கட்சிக் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக” யாரேனும் தலைமைக்கு போட்டுக் கொடுத்து விடுவார்களோ என்ற ஐயம் தமிழ்ச்செல்வனுக்கு வந்திருக்கும் போலும். மாநில சுயாட்சியில் தொடங்கியவர் மாநில சுயாட்சியிலேயே முடித்துடன், தமிழ் ஈழம் தீர்வல்ல என்பதையும் அழுத்தமாக வலியுறுத்தினார். கொள்கை பிறழ்ந்து விட்டதாக யாரும் அவரைக் குற்றம் சாட்டவே முடியாது.

கடைசியாகப் பேசிய சி.ஐ.டி.யு தலைவர் சவுந்தரராசன்தான் ஈழப்பிரச்சினையில் மார்க்சிஸ்டு கட்சியின் வர்க்கப்பார்வையைத் “தெளிவு” படுத்தினார். “அண்டை நாட்டில் அமைதி நிலவவேண்டும் என்ற அடிப்படையில் கூட இந்தியா தலையிடக் கூடாதா? இதனை சீனா பயன்படுத்திக் கொள்ளவோ, பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளவோ வாய்ப்பு தரலாமா? இதையெல்லாம் நாம் பேசவே தேவையில்லை. இது அடிப்படையில் இந்திய முதலாளிகளின் பிரச்சினை. தலையீடு செய்வதற்கு தனக்குள்ள ராஜீய வாய்ப்புகளை இந்தியா முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்” என்றார்.

இதைவிட வெளிப்படையாகவும் நேர்மையாகவும் யாராவது பேச முடியுமா? இந்திய மேலாதிக்கம் என்பது இந்திய முதலாளிகளின் நலனுக்கானதுதான். ஆனால் இந்திய முதலாளி வர்க்கமோ தன்னுடைய நலனைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடத் துப்பில்லாமல் சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் கோட்டை விடுகிறது. இந்திய முதலாளி வர்க்கத்துக்கு நாம்தான் வேட்டி கட்டி விட வேண்டியிருக்கிறது என்ற தனது குமுறலைப் பதிவு செய்தார் சவுந்தரராசன்.

கருணாநிதியைக் கேலி செய்து பேசியபோது மட்டும் கூட்டத்தினர் கை தட்டி ஆர்ப்பரித்தனர். மார்க்சிஸ்டு கட்சி இன்னமும் திமுக கூட்டணிக்கு மாறவில்லை என்பதை அதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. மற்றப்படி த.மு.எ.ச வின் கலை இரவுக் கூட்டத்தில் காணும் களிப்பையும், சலசலப்பையும் இந்தக் கூட்டத்திலும் காண முடிந்தது.

கூட்டம் முடிந்து வெளியே வந்த போது எனக்கு ஒரு குழப்பம். “மாநில சுயாட்சி, மாநில சுயாட்சிங்கிறாய்ங்களே, அத்த ராஜபக்சே தமிழர்களுக்கு ஏற்கனவே கொடுத்துட்டாரா? அத்த வாங்கிக்காம எங்களுக்கு ஈழம்தான் வேணும்னு சண்டித்தனம் பண்ணினதுனாலதான் இவ்வளவு பிரச்சினையா?” என்று மார்க்சிஸ்டு கட்சிக்காரர் ஒருவரிடம் கேட்டேன்.

“என்ன தோழர் புரியாம பேசறீங்க, இவுங்க ஈழம், ஈழம்னு கேட்டுகிட்டிருந்தா அவர் எப்படி மாநில சுயாட்சியை கொடுக்க முடியும்? என்றார்.

“அப்டீன்னா இப்பொ கொடுத்துடுவாரா?” என்றேன்.

“படிப்படியா தானேங்க போக முடியும். அகதி முகாம் கொடுத்திருக்காரு, அப்பறம் குடியேற்றம், அப்பறம் ஊராட்சி தேர்தல், அப்பறம் நாடாளுமன்றத் தேர்தல், அப்பறம்தான் மாநில சுயாட்சி தர முடியும். முள் கம்பி வேலியையே எடுக்கல. நீங்க மாநில சுயாட்சி கேட்டா எப்பிடி?” என்றார்.

“அப்டீன்னா கம்பி வேலிக்குள்ள ரோஜாப்பூன்னு எழுதியிருக்கே அது என்ன?”

அதான் மாநிலசுயாட்சி. எழுத்தாளர் சங்கமில்லையா, கவித்துவமா சொல்லியிருக்காங்க” என்றார். 

http://www.vinavu.com/2009/08/20/tmaks/


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்