ஓரின ஈர்ப்பும் விவாதங்களும் என்ற தலைப்பில் இடப்பட்ட இடுகைக்கு வந்த எதிர்வினைகளுக்கு பதிலளிக்கும் முகமாக இந்த இரண்டாம் பகுதி இடப்பட்டுள்ளது. பின்னூட்டமிட்ட தோழர் பென் அவர்களுக்கும், குடும்பக்கட்டுப்பாடு குறித்து மின்னஞ்சலில் கேள்வி கேட்ட நண்பர் சூ.பிரகாஷ் அவர்களுக்கும் நன்றி
ஓரின ஈர்ப்பு பற்றிய விவாதங்களையும் விமர்சனங்களையும் கிளப்பிவிட்டதில் தில்லி உயர்நீதி மன்றத்திற்கு பெரும்பங்குண்டு. ஓரினச்சேர்க்கை என்ற சொல்லை உச்சரிப்பதே ஒழுக்கக்கேடான ஒன்று, அதைப்பற்றி பேசுவதே அபத்தமானது என்ற நிலையில் அது சரியா தவறா என்று பேசவைத்திருக்கும் அந்த நீதிமன்றத்தீர்ப்பு தன் வேலையை சரியாக செய்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். பைபிளில் இந்தப்பாவத்தில் ஈடுபட்டதற்காக ஒரு நகரையே அழித்ததாய் ஒரு கதை இருக்கிறது. இது குரானிலும் உண்டு. கடவுளுக்கு கோபத்தை ஏற்படுத்தி ஒரு நகரை அழிக்கவைத்த பாவத்திற்கு ஒரு நீதிபதி அனுமதி கொடுப்பதா என மதவாதிகளுக்கு கோபம், அதனால் கலாச்சாரம் என்றும் நோய் பரவும் என்றும் பொழிப்புரை வழங்குகிறார்கள். ஆனால் இதை எப்படி ஆதரிப்பது? எந்த நோக்கில் இதை ஏற்றுக்கொள்வது? என்பதற்கு பதில் ஒன்றுமில்லை.
இதில் யாருக்கும் பாதிப்பில்லை என்பதால் ஏற்றுக்கொள்வது தான் நாகரீகம், முற்போக்கு என்று நிலைப்படுகிறார்கள் சிலர். யாருக்கும் பாதிப்பில்லை என்பது மட்டுமே ஒன்றை ஏற்றுக்கொள்வதற்கு போதுமானதாக ஆகிவிடுமா? ஒருவர் ஒரு மதத்தை பின்பற்றுகிறார் என்பது யாருக்கும் பாதிப்பில்லாத ஒன்றுதான், ஆனாலும் ஏன் கடவுள் போன்ற கற்பிதங்களை எதிர்த்து பரப்புரை செய்யவேண்டும்? ஒரு பாப்பான் பூனூல் அணிவது யாருக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? ஆனாலும் அதன் நோக்கம் பற்றி நுணுக்கமாக ஆராய்வதில்லையா? தந்தை பெரியார் ஒருமுறை கேட்டார், “ஒரு தெருவில் இருக்கும் வீடுகளில் ஒரு வீட்டில் மட்டும் இது பத்தினி வாழும் வீடு என்று சொந்த செலவில் எழுதிவைத்தால் அதை ஏற்க முடியுமா என்று?” இதை பாதிப்பில்லை என்றுதானா புரிந்து கொள்வது. பாதிப்பில்லை என்பதை இன்னும் நீட்டிக்கொண்டே போனால் விபச்சாரத்தைக்கூட ஏற்றுக்கொள்ள நேரிடும்.
தனி மனிதனை முன்னிலைப்படுத்துவதா? சமூகத்தை முன்னிலைப்படுத்துவதா? என்பதை எப்படி கையாள்வது? சமூகம் என்பது தனிமனிதர்களின் சமரசம் என எண்ணுகிறார்கள். தனி மனிதர்களின் கூட்டு தன் சமூகம் என்பது சமூகம் உருவாகத்தொடங்கிய காலகட்டத்தில் தான் சரியானது. அப்போதும் தனிமனிதர்களை ஒன்றிணைக்க வேண்டிய தேவை என்று ஒன்றிருந்தது. வேட்டையாடு அல்லது வேட்டையாடப்படுவாய் என்றிருந்த அன்றைய நிலையில் ஒன்றிணைவது அவசியத்தேவையாக இருந்தது. அந்தத்தேவையின் அடிப்படையில் ஒன்றிணைந்தார்கள் சமூகம் உருவானது. ஒன்றிணையவில்லையென்றால் சமூகம் உருவாயிருக்காது அதேநேரம் தனிமனிதர்களும் அழிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் இன்று தனிமனிதர்களின் கூட்டினால் சமூகம் இல்லை, சமூகத்தின் அங்கங்களாகவே தனிமனிதர்கள் இருக்கிறார்கள். அங்கங்களாக இருக்கும் தனிமனிதர்களிடையே பேதங்களை தனி மனித உரிமை தீர்மானிக்கக்கூடாது என்பதால் தான் ஓரின ஈர்ப்பின் சமூகத்தேவை கோரப்படுகிறது. அப்படி ஒன்று இல்லாத நிலையில் அது எதிர்க்கப்படவேண்டியதே. அன்றியும் யாருக்கும் பாதிப்பில்லை என்பதால் ஆதரிக்கலாமே என்பதுதான் சமரசம் என்பதன் கீழ் வரும். தேவை என்றில்லாமல் வெறும் சமரசத்தினால் கூட்டுச்சேர்வதை சமூகம் என்ற தகுதியில் மாற்றுக்குறைவானதாகவே கருதப்படும்.
மதமாற்றத் தடைச்சட்டமும் ஓரின ஈர்ப்பும் வேறுவேறு தளத்தில் இயங்குபவைகள். ஓரின ஈர்ப்பு தனிமனித உரிமை எனும் அடிப்படையில் எழுந்தது. ஆனால் மதமாற்றத் தடைச்சட்டம் என்பது ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறையின் அடிப்படையில் வந்தது. ஒருவன் ஒரு மதத்தில் இருப்பதும், வேறொரு மதத்திற்கு மாறுவதும் அவனின் தனிப்பட்ட உரிமை என்பதால் அச்சட்டத்தை எதிர்க்கவில்லை, சரியாகச்சொன்னால் மதங்களின் பிடியிலிருந்து மனிதன் விடுபடவேண்டும் என்பதே அவசியம் மாறாக மத மாற்றத் தடைச்சட்டம் ஆளும் வர்க்கத்திலிருந்து பார்ப்பனீயத்திலிருந்து சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்களின் மீது பாய்ந்த வெறிநாய்ச்சட்டம் என்பதாலேயே அது எதிர்க்கப்பட்டது.
ஓரின ஈர்ப்பு சமூக அடையாளம் இல்லை, எங்கோ ஓரிவர் ஈடுபடுவது என்பதெல்லாம் அதன் விரிவாக்கத்தன்மையை திரையிட்டு மறைப்பதாகும். ஒரு வாதத்திற்க்காக அப்படிக்கொண்டாலும் சமூக அடையாளமாக மாறும்வேளை எதிர்ப்பதா? ஆதரிப்பதா? நாளை விலங்குகளிடம் ஈர்ப்புகொண்ட ஒரு குழு அங்கீகாரம் கோரினால் அதை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாமா? இது ஒன்றும் எங்குமே நடக்காத ஒன்றல்ல, இதற்கும் இலக்கியங்களிலும் புராணங்களிலும் ஆதாரமிருக்கிறது. இல்லாத ராமர்பாலத்திற்கு ராமாயணத்தை ஒரு நீதிபதி ஆதாரமாக கொண்டதைப்போல், இதற்கும் ராமாயணத்தை ஆதாரமாகக்கொண்டு சட்ட அங்கீகாரம் வழங்கினால் அதை எதிர்ப்பதா? ஆதரிப்பதா?
ஓரின ஈர்ப்பால் சமூகத்திற்கு பாதிப்பில்லை என எப்படி தீர்மானிக்கமுடியும்? பரவலாக இது பின்பற்றப்பட்டு மனித உற்பத்தி பாதிக்கும் நிலை வந்தால் தான் எதிர்க்கவேண்டும் அதுவரை சிறிய அளவில் ஆதரிக்கலாம் என்பது வரட்டுத்தனமாகவும் மால்தூஸ் கொள்கையை நினைவு படுத்துவதாகவும் இருக்கும். இப்போது குடும்ப அளவில் குடும்பக்கட்டுப்பாடு நிலவில் இருக்கிறது, இதனாலும் மனித உற்பத்தி பாதிக்கப்படத்தான் செய்கிறது அது போல இதையும் கொள்ளலாமே என்பதும் ஏற்கப்படமுடியாததே. ஏனென்றால் குழந்தை வளர்ப்பு சமூகப்பொறுப்பாக மாறாத வரை அதை ஏற்பது தான் சரியானதாகும்.
தனியொரு மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகளை விட சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் முதன்மையானவை. சில நேரங்களில் சமூக ரீதியான பாதிப்பு நுட்பமானதாக இருக்கலாம், அதை தெளிவாக உணர்ந்து சரியான நேரத்தில் எதிர்ப்பது தான் காலத்தேவை. அந்தவகையில் ஓரின ஈர்ப்பை எதிர்ப்பது தான் இன்றைய காலத்தேவையாக இருக்கிறது.
http://senkodi.wordpress.com/2009/08/19/ஓரின-ஈர்ப்பும்-பகுதி-இரண/