01172021ஞா
Last updateச, 16 ஜன 2021 11am

புலிக்கு "கரையார்" தலைமை தாங்கியதால், அது சாதியற்ற தேசியமாம் : உயிர்மையில் யமுனா ராஜேந்திரன் புலம்பல் 5

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை மறுப்பவர்கள், சமூகத்தின் சமூகக் கூறுகளை பிரித்து அதை மோதவிட்டே கையாள்வார்கள். இங்கு யமுனா புலி அரசியலை தேசிய விடுதலைக்குரிய வழிகாட்டும் தத்துவமாக காட்ட, "கரையார்" தலைமை பற்றி கூறி, வெள்ளாளர் தலைமையை வேர் அறுத்தது பற்றியும் கதை விடுகின்றார். வேறு எப்படித்தான் வரலாற்றை இவரால் திரிக்க முடியும்.

 

எப்போதும் சம்பந்தமில்லாது புலம்பி புளுத்தெழுதும் யமுனா, இங்கும் அதையே செய்கின்றார். புலியை நியாயப்படுத்த ஸ்ராலின் வரை சென்று, புலியை போற்ற ஸ்ராலின் மீது காறி உமிழும் இந்தப் பன்னாடை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான தன் சொந்த அரசியல் காழ்ப்பை அள்ளித்தெளித்துள்ளது.    

       

இதற்கு 'கரையார்' தலைமை பற்றி கூறி, புலிப் பாசிசத்தை வெள்ளையாக வெளுத்து அதை தமிழ்மக்களுக்கு கட்டவைக்க முனைகின்றார். அப்படி யமுனா புலம்பலைப் பாருங்கள். "ஏற்கனவே தலைமை யாழ் வெள்ளாளர்களிடமிருந்து இடைநிலைச் சாதியினரான கரையார்களிடம் வந்துவிட்டது." என்கின்றார். சரி இன்று புலிகள் அழிந்து விட்டதால், தலைமை வெள்ளாளரிடம் சென்றுவிட்டது என்று இனி சொல்வாரோ! பிரபாகரனின் அழிவுக்கு வெள்ளாளர்களின் சதிதான் காரணம் என்று, இந்தப் பன்னாடை நாளை ஆய்வு செய்தாலும் ஆச்சரியமில்லை. பணம் கொடுத்தால் அதையும் எழுதுவார். 

  

சரி தலைமை பிறப்பு ரீதியான பிறந்த "கரையாரிடம்" வந்தால், சாதிய சமூக அடிப்படை மாறிவிடுமா? சாதி ரீதியாக பின்தங்கிய ஒருவர், நாட்டை ஆண்டால் நாடு மாறிவிடுமா? இப்படி கூறியும், காட்டியும் பேசும் "மார்க்சியம்" தான் யமுனாவுடையது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை அம்பேத்கர் எழுதியதால், அது சாதிச் சட்டமல்ல என்பதா? சாதிச் சட்டமல்ல என்பதுதான், புலி தலைமையில் "கரையார்" என்ற யமுனாவின் வாதம் எடுத்துக்காட்டுகின்றது.

 

ஈ.பி.ஆர்..எவ் இயக்கம் பிறப்பால் வெள்ளாளரின் தலைமையில் இருந்த போதும்;, தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் வேலைசெய்தது. இந்த இயக்கத்தை சுருக்கி ஈ.பி என்று அழைத்து, ஈழத்துப் பள்ளர் என்று 1980 களில் புலி அதற்கு எதிராக பிரச்சாரம் செய்ததை நாம் இங்கு மறக்கமுடியாது.

 

"கரையார்" தலைமை என்பது, பிறப்பை அடிப்படையாகக் கொண்ட ஒன்று. இது எந்தவிதத்திலும் சாதிய சமூக அமைப்பை மாற்றவில்லை. புலி பாசிசமாகி, அதன் தனித் தலைவராக பிரபாகரன் மாறிய பின், தன் குடும்பத்தையும் உறவுகளையும்  மட்டும் நம்பும் நிலை உருவானது. தன் சொந்த பந்தங்களையும், ஊராரையும் தலைமையில் அமர்த்தியது என்பது, வெள்ளாளர் தலைமைக்கு எதிராக அல்ல. தனது தனித் தலைமையையும், சர்வாதிகாரத்தையும் பாதுகாக்க, வேறு வழியிருக்கவில்லை. இப்படி தான் கணிசமான "கரையார்" தலைமைக்கு வந்தனர், பிறப்பால் மட்டும் தான் அவர்கள் கரையார், ஆனால் யாழ் மேலாதிக்க சாதிய சமூகத்துக்கு அவர்கள் தலைமை தாங்கினர்.    

   

யமுனா கூறும் "1980 ஆம் ஆண்டு துவக்கம் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் சாதி ஒதுக்குதலை தடைசெய்திருந்த காரணத்தினால் சாதி தொடர்பான எந்த விவாதங்களையும் அவர்கள் அனுமதிக்கவில்லை." என்பதும், வெள்ளாளருக்கு பதில் "கரையார்" தலைமை என்பது  முரணானது. புலிகள் தலைமையை கரையாரிடம் கொடுக்கவேண்டும் என்று, எந்த அரசியல்  முனைப்பு கொண்டது. கிடையாது. வெள்ளாளர் சாதியிடமிருந்து கரையாரிடம் அதிகாரத்தை கைமாற்றியதாக கூறுவது, வடிகட்டிய அரசியல் அபத்தம். யமுனா தான் நியாயப்படுத்தும் சாதியற்ற புலிக்கு, தன் பிழைப்புக்கு ஏற்ப இதை புனைவதாகும்;. அதிகாரம் என்பது யார், எந்த நபர், எந்த சாதி என்று பிறப்பின் அடிப்படையில் காட்டி அணுகுவது, சமூக ஆய்வுக்குரிய முறையேயல்ல. இது பிழைப்புவாத மற்றும் பணத்துக்கு நக்கி எழுதும் வகையறாக்களின் குறுகிய வக்கிரமான அணுகுமுறை. பொதுவாக மக்களுக்கு இலக்கியம் பேசாத இலக்கியவாதிகளின், குறுகிய இருப்பு சார்ந்த தர்க்கங்களும்;, வாதங்களும் தான்.

 

பிரபாகரன் சரி, கணிசமாக தலைமையில் இருந்த கரையார் சரி, பிறப்பால் மட்டும் கரையார். ஆனால் இவர்கள் நிலவிய யாழ் மேலாதிக்க சாதிய சமூகத்தின் மேல்தான், தங்கள் பாசிச சர்வாதிகாரத்தை நிறுவினர். இங்கு சாதிய மேலாண்மையிலான சாதிய சமூக ஒழுங்கை, இவர்கள் பாதுகாத்தனர். இங்கு கரையார் என்ற சாதி மேலாண்மையை அவர்கள் நிலை நாட்டவில்லை.

 

இங்கு கரையார் என்பவர்கள் கூட, பல பிரிவு கொண்ட பல படிநிலை சாதியாகவே பிரிந்திருந்தனர். இங்கு பிரபாகரன் சாதி கூட, உயர் சாதியாகவே இருந்தது. இங்கு அடிநிலை சாதிகள் பல இருந்தது. யாழில் வெள்ளாளர் – கரையார் இரண்டுமே, உயர் சாதியாகவே இருந்தது. இவ் இரண்டும் தமக்குள், அதாவது தமது சாதிய சமூகம் என்ற முரண்பாட்டுடன் இயங்கவில்லை. ஏனெனின் உற்பத்தி உறவில் ஒன்றுடன் ஒன்று இவை தொடர்புபடாமையால், அவர்களுக்கு இடையில் சாதிய முரண்பாடு இருக்கவில்லை. அவர்கள் தாம் கொண்டிருந்த உற்பத்திக்குள், அவர்கள் அடிநிலைச் சாதிகளை கொண்டு இருந்ததால், தம்மளவில் அவை உயர் சாதியாகவே இருந்தது. இங்கு இது பரஸ்பரம் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. பொருளாதார ரீதியில் கூட, இது பரஸ்பரம் அங்கீகரிக்கப்பட்டு காணப்பட்டது.

 

இப்படியிருக்க யமுனா சமூகத்தை திரித்து புரட்டிக் காட்டுகின்றார். "ஏற்கனவே தலைமை யாழ் வெள்ளாளர்களிடமிருந்து இடைநிலைச் சாதியினரான கரையார்களிடம் வந்துவிட்டது." என்கின்றார். இப்படி அங்கு சமூக மாற்றம் எதுவும்  நடக்கவில்லை. அங்கு நிலவிய சாதிய சமூக அமைப்பு முறை பாதுகாக்கப்பட்டதால், சாதி ரீதியான நபரின் தலைமை எதையும் மாற்றிவிடுவதில்லை. தனிப்பட்ட தலைமை சாதிய சமூக அமைப்பில் மாற்றத்தை கொண்டு வராதவரை, அது யாராக இருந்தாலும் அவரின் சாதி ஊடாக தனிநபர்களை சமூகம் அணுகுவது கிடையாது. சமூகம் தன் சாதி சமூக ஒழுங்கின் ஊடாகத்தான் அணுகுகின்றது. பாலசிங்கம் கூறியது போல் "இங்கு மரபு ரீதியாக தமிழ்ச் சமுதாயத்தில் நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை விஞ்சி, ஐக்கியப்பட்ட ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தைக் கட்டியெழுப்பியதற்காகத் தமது மக்களால் பெரிதும் விரும்பி ஏற்று போற்றப்படுபவர் பிரபாகரன்" என்றார். இங்கு யாழ் சாதிய சமூகத்துக்குத்தான், பிரபாகரன் தலைமை தாங்கினார். இதற்கு யமுனா கூறியது போல்  "தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் சாதி ஒதுக்குதலை தடைசெய்திருந்த காரணத்தினால் சாதி தொடர்பான எந்த விவாதங்களையும் அவர்கள் அனுமதிக்கவில்லை." இப்படி யாழ் சாதி சமூக மேலாதிக்கத்தை பிரபாகரன் தன் சர்வாதிகாரம் மூலம் திணித்தான். இந்த உண்மையை  யமுனா போன்று பணத்துக்கு எழுதுபவர்கள் தான், சாதிய சமூகத்தின் இயங்கியலை திரித்துக் காட்டுகின்றனர்.

 

யமுனா கூறுகின்றார் "பிரக்ஞைபூர்வமாக விடுதலைப் புலிகள் சாதி காப்பாளர்கள், சாதி வெறியர்கள், இந்துத்துவவாதிகள் என்பதில் எந்தவிதமான உண்மையும் இல்லை" என்பது, நிலவும் யாழ் சாதிய சமூகத்தை தம் பாசிச சர்வாதிகாரம் மூலம் பாதுகாத்த உண்மையை, திரிப்பதாகும். இவர்கள் யாழ் மேலாதிக்க சாதிய சமூகத்தை பாதுகாத்து, அதன் சமூக விரோத கூறுகளையே கட்டிக்காத்தவர்கள் தான். இதனால் தான் இவர்கள், யாழ் மேலாதிக்க சமூகத்தினரது தலைவராக இருக்கவும் நீடிக்கவும் முடிந்தது. 

 

சமூகத்தில் இருந்து அன்னியமான உதிரிகளை கொண்ட ஒரு அராஜகவாத அமைப்பு, தனக்குள் சமூதாய முறைமைகளை பின்பற்றவில்லை என்பதாலும்;, அதன் தலைவர்கள் பிறப்பால் மாறுபட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அது சமூகத்தை மாற்றிவிடுவதில்லை. அது சமூகத்திற்கு வெளியில், லும்பன் தனத்துடன் இயங்குகின்றது. சமூகத்தின் உற்பத்தி உறவுகள் முதல் அதன் பண்பாடுகளுடன் கூட, தொடர்பற்ற லும்பன் கூட்டமாகவே புலிகள் இயங்கினர். சமூகம் ஒருவிதமாக இயங்க, புலிகள் வேறு விதமாக இயங்கினர். இப்படி மக்களில் இருந்து அன்னியமாகினர். ஆனால் சமூகத்தின் சாதிய ஓழுங்கை மறுக்கவில்லை, மாற்றவில்லை. புலிகளின் அழிவும், இதற்கு உட்பட்டதுதான். சமூகத்தின் நேர் மற்றும் எதிர்மறை அம்சங்களில், புலிகள் முரண்பாடாகவே மக்களுடன் அணுகினர்.

 

புலிகள் எந்த சமூக முரண்பாடுகளையும் ஒழித்துக்கட்ட முனையவில்லை. அதை தங்கள் பாசிச சர்வாதிகாரம் மூலம் பாதுகாத்தனர். ஆனால் சமூகம், சமூக முரண்பாடுகளை களையக் கோரியது. புலிகள் அதை முறியடித்தனர். அதன் மேல் தான், தங்கள் பாசிச சர்வாதிகாரத்தை நிறுவினர். 

         

"சாதிய ஒதுக்கம் மற்றும் பெண்கள் தொடர்பான சட்டங்கள் சாதிச்சார்பற்ற மதச்சார்பற்ற தன்மையினையே கொண்டிருந்தன. வரதட்சணை தடைசெய்யப்பட்டது. கருக்கலைப்பு பெண்ணின் உரிமை ஆகியது. பெண்ணுக்கு சொத்துரிமை நிலைநாட்டப்பட்டது. சாதி ஒதுக்குதல் குற்றமாக்கப்பட்டது." இது இலங்கை சட்டமைப்பில் கூட உள்ளதுதான். இந்தியாவில் கூட உள்ளதுதான். இ;ந்தியாவின் சாதிய சட்ட அமைப்பு, புலியின் சட்டத்தை விட முற்போக்கானது. சமூக புரட்சியற்ற சட்டங்கள், சமூகத்தில் சடங்குத்தனமானவை. ஏன், சமூகத்துடன் தொடர்பற்றது கூட. ஏன், ஆதிக்க சமூகப் பிரிவுக்கு சார்பானது கூட. சட்டம் என்பது சமூகப் புரட்சியின்றி, அவை வெறும் சடங்குத்தனமாகவே இயல்பில் உள்ளது. ஊழலுக்கு எதிரான சட்டங்கள் போல் தான் சாதி சட்டங்களும்.    

 

"விடுதலைப் புலிகள் திரும்பத் திரும்பத் தமது தவற்றை, யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமியர் வெளியேற்றப்பட்ட தவற்றை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்." இந்த பாசிசப் புரட்டைதான், சிவத்தம்பி முதல் யமுனா வரை புலிக்காக காவித் திரிகின்றனர். தவறை  ஏற்றுக்கொண்டது உண்மை என்றால், வடக்கு முஸ்லீம்கள் மீளவும் யாழ் சென்று வாழ எது தடையாக இருந்தது. இங்கும் மீண்டும் புலிகள் தான். அவர்கள் தங்கள் தவறை ஏற்றவர்கள் என்றால், அவர்கள் சொத்துகளை திருப்பிக் கொடுப்பது உட்பட, யாழ் மக்களிடம் அவர்கள் வாழ்விடத்தை விட்டு கொடுக்க வேண்டியிருப்பார்கள். அப்போது அங்கு பிடித்து வைத்திருந்த சிலருக்கு, என்ன நடந்தது என்பதையாவது சொல்லியிருப்பார்கள்.

 

அந்த மக்களிடம் திருடிய பணத்தில்  இருந்து ஒரு பகுதியைப் பெற்றுதான், புலிக்காக யமுனா எழுதிக்கொண்டிருந்தவர். இவர்கள் தான், புலிகள் தவறை  ஏற்றுக் கொண்டது பற்றி புலுடா விடுகின்றனர்.

 

புலிகள் தங்கள் தேனிலவுக்காக அமைதி சமாதானத்தை உருவாக்கிய காலத்தில், யாழ்குடாவில் நின்று போட்ட பாசிச ஆட்டத்துக்கு பதில், முஸ்லீம் மக்களை மீள் குடியேற்றியிருக்கலாம். இதைவிட்டுவிட்டு தவறு என்று ஓப்புக்கொள்வது, ஊர் உலகத்தை ஏமாற்றத்தான். புலிகள் எதைத் தான் வரலாற்றில் தவறாக ஏற்று, அதை திருத்தியிருக்கிறார்கள். நடைமுறையில் எதையுமல்ல. இதுதான் புலிகளின் பாசிச வரலாறு. இதற்கு ஏற்ப முக்குவது தான் யமுனாவின் வரலாறு.   

   

பி.இரயாகரன்
16.08.2009