07282021பு
Last updateபு, 28 ஜூலை 2021 10am

தமிழ்மக்களை கேனயர்களாக காட்டும் புளாட் சித்தார்த்தனும், பேரினவாத மகிந்த கும்பலும்

புலி இல்லாது நடந்து முடிந்த தேர்தல் மூலம், தமிழ்மக்கள் ஒரு செய்தியை முகத்தில் அறைந்து கூறியுள்ளனர். எல்லாம் புலியினால் வந்த வினை, புலிகள் அழிந்தால் எல்லாம் சரி என்று கூறி வந்த, எல்லா புலியெதிர்ப்பு பன்னாடைகளுக்கும் மக்கள் தெளிவாக பதிலளித்துள்ளனர்.

 

மக்களாகிய தாங்கள் என்ன நினைக்கின்றோம் என்பதை மட்டுமின்றி, ஏன் புலியின் பின் கடந்தகாலத்தில் நின்றோம் என்பதையும், மண்டையில் கொத்தி பதிலளித்துள்ளனர். மக்கள் கோரியது அரசியல் உரி;மையையே. இந்த உண்மையை மறுத்து வந்தவர்களை, பிரபாகரனின் மரணம் போல் அனாதையாகவே மக்கள் சாகடித்துள்ளனர். 

 

மக்கள் மத்தியில் இயங்காத கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்கு, மகிந்தாவையும் மகிந்த எடுபிடிகளையும் மட்டுமல்ல, புளாட் போன்ற கூலிக்குழுக்களையும் கூட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆளுக்காள் அறிக்கைகள், நியாயங்கள், ஆய்வுகள் ஒருபுறம், மகிந்த அரசு இந்த நிலைமை ஏன் என்பதை தனியாக கூடியும் ஆராய்ந்துள்ளது.

 

மகிந்தாவின் எடுபிடியும், பாதம் நக்கியுமான டக்ளஸ், அரசுடன் தான் சேராது இருந்திருந்தால் இதைவிட அதிகம் வாக்கு பெற்றிருக்க முடியும் என்று, நாக்கை தொங்கவிட்டுக் கொண்டு தனக்குள் தான் புலம்புகின்றார்.

 

1980களில் முதல் 5 ஆண்டுகளில் அதிகளவு உட்படுகொலைகளை நடத்திய புளாட்டின்  தலைவரான சித்தார்த்தன் கூறுகின்றார் "வவுனியா நகரசபைத் தேர்தலில் சிறிலங்கா அரசுடன் சேர்ந்து போட்டியிட்டிருந்தால் இப்போது கிடைத்த வெற்றிகூடக் கிடைத்திருக்காது;" என்கின்றார். அத்துடன் "பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் விடுதலைப் புலிகளின் அனுதாபிகளாக இருக்கிறார்கள். அவர்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள். ஏனெனில் கூட்டமைப்பே புலிகளின் அரசியல் முன்னணி. நாங்கள் அரசுடன் சேர்ந்திருந்தால் எங்களுக்கு வாக்களித்தவர்கள்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே ஆதரித்திருப்பார்கள் என்றார்"

 

அரசுடன் சேர்ந்து நின்றால், கிடைத்ததும் கிடைத்து இருக்காது என்கின்றார். அரசியலில் கூலிக் குழுவாக, அதன் தயவில் 20 வருடமாக மக்களுக்கு எதிராகவே வவுனியாவில் புளாட் கூடாரமடித்து உயிர் வாழ்ந்தது. எத்தனை கொலைகள். கடத்தல்கள், கப்பம் முதல் எல்லாவிதமான மாமா வேலையையும் செய்து வந்த குழு. வவுனியாவில் செயல்;பட்ட சட்டவிரோதமான, அரசியல் நாட்டாமைகள் தான் இவர்கள். 1980 களில் மக்கள் அரசியலைக் கோரிய 500 பேரை உட்படுகொலை செய்தவர்களை, தங்கள் தலைவர்களாக போற்றி நிற்கும் கொலைகாரக் கும்பலின் அரசியல் என்பது, மக்கள் விரோத அரசியல்தான்.   

     

இப்படி தங்கள் மக்கள் விரோத அரசியல் வங்குரோத்தில் இருந்து கொண்டு, மக்களுக்கு புலி முத்திரை குத்துகின்றார். மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்தது, மக்கள் புலி என்பதால் தானாம். இப்படிக் கூறித்தான் பேரினவாத அரசு, வன்னி நாசிய முகாமில் மக்களை  சிறைவைத்துள்ளது. இந்த நாசி முகாமில் உள்ள மக்கள் கூட, அரசுக்கு வாக்களிக்கமாட்டார்கள். வாக்களிக்க விடாமால் அவர்களின் பிரஜாவுரிமையைப் பறித்தால், இந்த மக்களை தேர்தலில் வெலல்லாம். 

 

மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்தது, தாங்கள் புலி என்பதாயல்ல. மாறாக வேறு மாற்றின்றி,

 

1. இந்த அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

 

2. தமிழ்மக்களின் உரிமையை கோரி வாக்களித்தனர்.

 

தமிழ்மக்கள் பேரினவாத அரசுக்கு எதிராகவும், தமிழரின் உரிமையை வலியுறுத்தியுமே கூட்டமைப்புக்கு வாக்களித்தனர். இங்கு புலிக்கு வாக்களிக்கவில்லை. கூட்டமைப்பு மீதான மக்களின் தெரிவு, வேறு மாற்று வழியின்றிய ஒன்று. இந்த இடத்தில் தமிழ்மக்களின் உரிமையை வலியுறுத்தி, நேர்மையாக யார் நின்றிருந்தாலும் வாக்களிக்காத மக்கள் கூட சேர்ந்து வாக்களித்து இருப்பார்கள்.

 

புலிகள் இருந்த போது மக்கள் புலிக்கு பின் நின்றது என்பது, புலிகளின் அடக்குமுறைக்கு பயந்தல்ல. மாறாக சிறுபான்மை தமிழ்மக்களின் அடிப்படையான அரசியல் உரிமையை, அவர்கள் பெற்று தருவார்கள் என் நம்பிக்கையில்தான்.

 

"ஜனநாயகத்தின்" பெயரில் புளாட்டும் சரி, "ஜனநாயகத்தை" மீட்டுக்கொடுத்த அரசையும் சரி,  மக்கள் நிராகரிக்கின்றார்கள் என்றால், மக்கள் கோரும் ஜனநாயகம் இதுவல்ல என்பதே உண்மை. மக்கள் கோருவது என்ன? ஒரு நாட்டில் சிறுபான்மை இனங்கள் பெரும்பான்மையுடன் சேர்ந்து வாழும் ஜனநாயக உரிமையை, தமக்கு வழங்கும் படித்தான் கோருகின்றனர்.

 

மக்களுக்கு எதிரான பொறுக்கிகளுக்கும், ரவுடிகளுக்கும், கைக்கூலிகளுக்கும், பாசிட்டுகளுக்கும் வாக்கு போட்டு தெரிவு செய்யும் உரிமையை மக்கள் ஜனநாயகமாக கருதவில்லை.

 

டக்ளஸ், கருணா போன்ற பொறுக்கிகள், தம்மைப்போல் தான் மக்களும் என்று நினைக்கின்றனர். தாங்கள் எப்படி எலும்புக்கு விசுவாசமாக காலை நக்கி குலைக்கின்றோமோ,  அப்படி மக்களுக்கு எலும்பைப்போட்டால் தமக்கு வாக்கு போடுவார்கள் என்று நம்புகின்றனர். மக்கள் சேவை என்ற பெயரால் அந்த மக்களின் அரசியல் உரிமைகளை மறுத்தபடி, மக்களுக்கு எலும்பைப் போடும் அரசியலைச் செய்து வந்தனர். அதை மக்கள் எட்டி உதைத்துள்ளனர்.

 

எல்லாம் இன்று அம்மணமாகவே கிழிந்து போச்சு. மக்களின் அரசியல் உரிமையை மறுத்து, தமிழ்மக்களை வெல்ல முடியாது என்பதை தமிழ்மக்கள் அறைந்து சொல்லியுள்ளனர்.

 

இந்த பொறுக்கி அரசியல் செய்யும் இந்தக் கும்பல், தேர்தலில் இனி மக்களை வாக்களிக்காமல் தடுத்து வென்றால் சரி. அதையே "ஜனநாயகமாக" போற்றி தொழும்படி மக்களை அடிபணிய வைத்து, அதை "ஜனநாயகமாக" காட்டினால் சரி.

மக்களின் அரசியல் உரிமைகளை மறுத்து, மக்களை வெல்ல முடியாது. இதுமட்டும் தான் உண்மை.   

 
 
பி.இரயாகரன்
16.08.2009


பி.இரயாகரன் - சமர்