தமிழ்மக்களை எப்படி, எந்த நிலையில் பேரினவாதம் சிறை வைத்துள்ளது என்பதை, தம்மைத் தவிர யாரும் அறியக் கூடாது என்பதுதான் இலங்கையில் "ஜனநாயகம்". அப்பாவி மக்களை எப்படிப்பட்ட ஒரு நாசிய முகாமில் வைத்து வதைக்கின்றனர் என்பதை, வெளியில் உள்ளவர்களுக்கு வெளிப்படுத்த முடியாது. மீறி வெளிப்படுத்தினால், அவர்கள் இலங்கையில் உயிர் வாழவே முடியாது.
அப்படிப்பட்ட படங்கள் தான் இவை. இந்த பேரினவாத பாசிச அரசு எதை புலியிடம் இருந்து மீட்பாக அந்த மக்களுக்கு காட்டியதோ, எதை அந்த மக்களுக்கு ஜனநாயகம் என்கின்றதோ, அதை அவர்களை மீறி படம் எடுத்தால் அங்கு மரணம் நிச்சயம். அந்த அளவுக்கு இலங்கையில் "ஜனநாயகம்" உள்ளது "ஜனநாயகத்தின்" பெயரில், புலி "மீட்பின்" பெயரில் மக்களை எப்படி அடைத்து வைத்துள்ளதோ, அந்த உண்மையை வெளிப்படுத்தும் படங்கள் இவை.
தங்கள் உயிர் ஆபத்தையும் மீறி, சமூக அக்கறையுடன் இதை உலகின் முன் அம்பலப்படுத்த முனைகின்றனர். அப்படி கிடைத்த படங்கள் தான் இவை.
இந்த படங்களைக் கண்டே அஞ்சுகின்றது பாசிசம். இவை வெளிவராமல் தடுக்க முனைகின்றது. இதை மீறி வெளிவரும் போது, வெளியிட்டவர்களைக் தேடிக் கொல்லுகின்றது. இந்தப் பாசிச அரசுக்கு தெரிகின்றது, தாம் செய்வது சர்வதேச குற்றம் என்று. அதனால் நாட்டில் சாதாரணமான ஜனநாயகத்தை எல்லாம், குழிதோண்டிப் புதைக்கின்றது.
உங்கள் முன் இவை மிக சாதாரணமான படங்கள் தான்;. நீங்கள் அந்த வாழ்வையும், அந்த கொடூரத்தையும் அனுபவிக்கவில்லை. இந்த உண்மையான நாசிய வாழ்வை வெளியாருக்கு வெளிப்படுத்தும் வண்ணம், இலங்கையில் உள்ள ஒருவர் இதை வெளியிட முடியாது. இப்படத்தை அங்கு வெளியிட அஞ்சுமளவுக்கு, அங்கு ஜனநாயகமோ பூத்து குலுங்குகின்றது.
இந்த மக்களின் வாழ்வை நாம் சித்தரிப்பதைவிட, படங்கள் அதை உங்களுக்கு தெளிவாக எடு;த்துக் காட்டுகின்றது.
பி.இரயாகரன்
15.08.2009