இந்திய சுதந்திரத்திற்கு
பிறந்த நாளாம்
இந்தியாவே
நீ பிறந்த நாள்தான்
எம் மக்களுக்கு துக்க நாள்…..

இந்தியர்களின் ரத்தம்
கொதிக்கலாம் இன்னும்
எத்தனை டிகிரி வேண்டுமானாலும்
கொதிக்கட்டும் மானத்தை
இழந்து கொதிக்கும் ‘ரத்தம்’ சுடுமா என்ன?…….
எரிவதை பிடுங்கினால்
கொதிப்பது அடங்குமாம்
ஆனால் இங்கு
நடப்பதே வேறு
மனிதத்தை,சுயமரியாதையை
பிடுங்கியதால் தான் இவ்வளவு பிரகாசமாய்
கொதிக்கிறதோ இந்தியம் ….

aug15

 

ஆயிரம் செண்ட் அடித்தாலும்
துரோகத்தின் ரத்த கவுச்சி
போவதில்லை – உழைக்கும் மக்களின்
ரத்தத்தை நக்கிக்கொண்டே
உரக்க பாடுங்கள் ஜெய்ய்ய்ய்ய்ய் ஹிந்த்த்த்……..
பிறந்த நாள் சரி
பிறக்காமலே இறந்து
போன கதை தெரியுமா?

ஒன்பது மாதம் இருட்டுச்சிறையில்
நாளை வெளியுலகம்
பார்க்க ஆவலாயிருந்ததாம்
கரு
மருத்துவச்சியாய் ஆட்லெறி
குண்டுகள் மாற
தாயும் சிசுவும் பரந்த வெளியில்
சிதிலங்களாய்
பிணதிண்ணியாய்
இந்திய மேலாதிக்கம்…..
ஆகத்து 15

எம் உரிமைகள் நசுக்கப்பட்ட நாள்
எம்மினங்களின் கழுத்து நெறிக்கப்பட்ட நாள்

ஈழத்தில் பிறந்த நாளை
இறந்த நாளாய் திருத்தம் செய்யும்
சித்திர குப்தன் தரகு முதலாளிக்கும்
அன்று தான் பிறந்த நாள்

அவன் கதை முடிக்க
ஆண்டாண்டு கால கணக்கு தீர்க்க
பறையடித்து சொல்லுவோம்
ஆகத்து 15 ஒரு கருப்பு நாளென்று.

 

http://kalagam.wordpress.com/2009/08/15/ஆகத்து-15/