புதிய ஜனநாயகம் இதழின் சாத்தூர் நகர முகவராகவும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஊக்கமிகு முன்னணி ஊழியராகவும் செயல்பட்ட தோழர் கணேசன், கடந்த ஜூலை 22ஆம் தேதியன்று மாரடைப்பினால் தனது 46வது வயதிலேயே மரணமடைந்து விட்டார்.

வாகன ஓட்டுநராகப் பணியாற்றிய தோழர் கணேசன், 80களின் இறுதியில் நக்சல்பாரி புரட்சிகர அரசியலால் ஈர்க்கப்பட்டு, விருதுநகர் மாவட்டத்தில் இப்புரட்சிகர அரசியலை மக்களிட ம் கொண்டு சென்று அமைப்பாக்குவதில் முக்கிய பங்காற்றினார். எட்டாண்டுகளுக்கு முன்பிருந்தே அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட போதிலும், புரட்சியின் மீது அவர் கொண்ட பற்றுறுதி சற்றும் குறையவில்லை. கடுமையான வேலை நிலைமை மற்றும் குடும்பத்தின் பொருளாதாரச் சுமைகளுக்கிடையிலும் அவர் பிரச்சாரஅமைப்பு வேலைகளை உற்சாகத்துடனும் உறுதியுடனும் செய்து வந்தார். தன்னந்தனியாகவே பல ஆண்டுகளாக பு.ஜ. இதழை விளம்பரப்படுத்தி, மக்களிடம் பிரச்சாரம் செய்வதிலும், தனது புரட்சிகர கடமைகளைச் சுயமாகத் திட்டமிட்டுக் கொண்டு நிறைவேற்றுவதிலும் அவர் எப்போதுமே முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

 

 நோய்வாய்ப்பட்ட போதிலும், நோயின் வேதனை வெளியே தெரியாமல் இன்முகத்துடன் அனைவரிடமும் தோழமை கொண்டு தொடர்ந்து பிரச்சாரஅமைப்பு வேலைகளில் ஈடுபட்டு வந்த தோழர் கணேசன், இன்று நம்மிடையே இல்லை. பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு நடுவிலும் புரட்சிகர அரசியலைப் பிரச்சாரம் செய்வதில் அவர் கொண்ட சளையாத ஆர்வம், கடின உழைப்பு, எளிய வாழ்வு, புரட்சிகரக் கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்றும் ஆற்றல் ஆகிய அவரது உயரிய கம்யூனிசப் பண்புகளைப் பற்றி நின்று, அவரது இலட்சியக் கனவை நிறைவேற்ற புரட்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறுவோம்!

 

— புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,

விருதுநகர் மாவட்டம்.