சிங்கள இனவெறி பாசிச ராஜபக்சே கும்பலை போர்க்கிரிமினலாக அறிவித்து தண்டனை வழங்கக்கோரியும்; சிங்கள இராணுவத்தின் வதை முகாம்களிலிருந்து ஈழத் தமிழர்களை மீட்டு மீள்குடியமர்த்தவும், உடனடியாக நிவாரணமறுவாழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்யக் கோரியும்; ஈழப் பகுதியில் சிங்கள குடியேற்றத்தைத் தடுக்கக் கோரியும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு.,பெ.வி.மு., ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் கடந்த இருமாதங்களாகத் தொடர் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகின்றன.

சேலத்தில், பு.ஜ.தொ.மு. சார்பில் கடந்த 22.05.09 அன்று போஸ் மைதானம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர் பழனிச்சாமி, பு.ஜ.தொ.மு., தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.உ.பா.மையத்தை சேர்ந்த தோழர் மாயன் கண்டன உரையாற்றினார். விண்ணதிர எழுப்பபட்ட முழக்கங்களும், இடையிடையே பாடப்பட்ட புரட்சிகர பாடல்களும் பார்வையாளர்களிடத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தின.

 

ஓசூரில் அசோக் லேலண்டு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தொழிலாளர்களிடத்தில் வாயிற்கூட்டங்கள் நடத்தியும்; வெளியீடுகள்,துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும் தொடர்ந்து பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டுவரும் பு.ஜ.தொ.மு.;பாகலூரில் கடந்த 15.06.09 அன்று வி.வி.மு. வுடன் இணைந்து கண்டனப் பொதுக்கூட்டத்தை நடத்தியது.

 

தோழர் இரவிச்சந்திரன் (பு.ஜ.தொ.மு) தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் ம.க.இ.க. மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன் எழுச்சிமிகு உரையாற்றினார். திரளான மக்கள் பங்கேற்புடன் நடந்த இப் பொதுக்கூட்டத்தில் ம.க.இ.க. மையக் கலைக்குழு நடத்திய புரட்சிகர கலை நிகழ்ச்சி, பாசிச ராஜபக்சே கும்பலின் போர்க்குற்றங்களையும் இந்திய மேலாதிக்க சதிகளையும் கண்முன்னே நிறுத்தி, போராட்ட உணர்வூட்டியது.

 

 உத்தமபாளையத்தில் இயங்கிவரும் வி.வி.மு.வினர், மக்கள் கூடுமிடங்களில் நின்று துண்டுப் பிரசுரங்களை வினியோகிப்பது, அவர்களிடையே உரையாற்றுவது என தமது பிரச்சார இயக்கத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

 

இதனை கண்டு ஆத்திரமடைந்த உத்தமபாளைய போலீசு துணை ஆய்வாளர் ஜான் பெஞ்சமின், பிரசுரம் விநியோகித்தத் தோழர்களை போலீசு நிலையம் அழைத்து சென்று, சட்டவிரோதமாக வி.வி.மு. வட்ட செயலர் மோகன் உள்ளிட்ட ஐந்து தோழர்களைச் சிறையிலடைத்தார்.

 

கைது செய்யப்பட்ட தோழர்கள், போலீசின் கருத்துரிமை பறிப்புக்கெதிராக தமது கண்டனத்தை நீதிமன்றம் அதிர முழக்கமிட்டு வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திற்கு மட்டுமல்ல; சுவரொட்டி ஒட்டுவதற்குக் கூட அனுமதி இல்லை என எச்சரித்தது போலீசு.

 

பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டு, போலீசின் அடாவடித்தனத்தை கண்டித்து கடந்த ஜூன் 25ஆம் தேதி உத்தமபாளையம் கிராமசாவடிக்கருகில் கண்டன ஆர்ப் பாட்டத்தை வி.வி.மு. நடத்தியது. ம.உ.பா.மையத்தை சார்ந்த லயனல் அந்தோனிராஜ், வழக்குரைஞர் வாஞ்சிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு இந்திய மேலாதிக்கவாதிகள் மற்றும் ராஜபக்சே கும்பலின் அடியாளாகச் செயல்படும் தமிழகப் போலீசின் முகத்திரையைக் கிழித்து உரையாற்றினர்.

 

சிவகங்கையில் சிங்கள இனவெறியன் ராஜபக்சேவை சர்வதேசப் போர்க்கிரிமினல் குற்றவாளியாக அறிவித்து தண்டனை வழங்கக் கோரியும்; ராகுல் காந்திக்குக் கருப்புக் கொடி காட்டிய தோழர்கள் மீது காங்கிரசு குண்டர்கள் மற்றும் போலீசு நடத்திய கொடூரத் தாக்குதலைக் கண்டித்தும் ம.க.இ.க. மற்றும் பு.ஜ.தொ.மு.வின் சார்பில் அரண்மனை வாசல் அருகே ஜூன் 13 அன்று பொதுக்கூட்டம் நடத்த, ஏற்பாடு செய்து, பகுதி மக்களிடையே பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வந்தனர். ஆனால், சிவகங்கை போலீசோ, "சட்டம் ஒழுங்கை' காரணம் காட்டி, இப்பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி தர மறுத்து விட்டது.

 

இந்நிலையில், பேச்சுரி ø ம, பிரச்சார உரிமையை மறுக்கும் சிவகங்கை போலீசின் இந்த அதிகார அடாவடித்தனத்தை எதிர்த்து உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தோழர்கள் வழக்குத் தொடுத்து, அதில் வெற்றியும் அடைந்துள்ளனர். எதிர்வரும் மாதத்தில் இப்பொதுக்கூட்டத்தை அதே இடத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இவ்வமைப்பினர் செய்து வருகின்றனர்.

 

பாசிச ராஜபக்சே கும்பலைப் போர்க்குற்றவாளியாக அறிவித்துத் தண்டிக்க கோரியும், அகதி முகாம்களில் வதை படும் ஈழத்தமிழர்களை மீட்டு மீள்குடியமர்த்தி நிவாரண மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்யக் கோரியும்; இந்திய மேலாதிக்கத்துக்கு எதிராகப் போராட அணிதிரளுமாறும் தமிழகமெங்கும் இப்புரட்சிகர அமைப்புகள் தொடர்ந்து பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.

 

— பு.ஜ.செய்தியாளர்கள்.