06222021செ
Last updateதி, 21 ஜூன் 2021 11pm

கார்ல் மார்க்சை மீளக் கண்டடைதல்…

முரண்களால் நிரவியிருக்கும் வாழ்வின் கோரம் நமது முகத்தில் ஓங்கி அறைகையில் அதன் வன்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் எத்தனத்தில் தத்துவங்களில் மூழ்கிச் சலிக்கிறது மனது. ஆதிக்கத்துள் நசிவுண்டு போகும் நமது குரல்களை மீட்டுயிர்ப்பிக்க, திராணியூட்ட வேறென்ன தெரிவுகள் நம் முன் உள்ளன – மீளவும் மார்க்சோடு பேசத் தொடங்குவதைத் தவிர?

குருதிச் சிதம்பலும் வியர்வை நெடியும் படிந்த அறியப்பட்ட வரலாற்றின் பக்கங்கள் முழுவதையும் அதிகாரத்தின் ஒற்றைக் குரலே அடைத்துக்கொண்டிருந்த காலத்தில், முன்னுவமையில்லாத் தற்றுணிவோடும், அதீத அறவுணர்வோடும், ஆத்மார்த்த நேர்மையோடும், ஒடுக்கப்படுவோர் சார்ந்த அதிகாரத்துக்கெதிரான குரலை மிகத்தெளிவாக ஒலித்தது மார்க்சியம்.

marx

மார்க்சியம் வரலாற்று நிகழ்வுப் போக்கின் தவிர்க்க முடியாத இடையீடு. நிலவுடமைச் சமூகத்தின் பழமைத் தளைகளைத் தூக்கியெறிந்த படி முன்னோக்கி நகர்ந்த நவீன முதலாளித்துவம், தன்னை மானுட உய்வுக்கான முற்போக்குச் சக்தியாகப் போலியாகப் பிரஸ்தாபித்தபோது, மனித அசமத்துவம் பேணும் பொறிமுறைக்குள் நிலைகொண்டிருந்த அதன் கொடூர முகத்தை களைந்து காட்டுவதற்கு மார்க்சியம் போன்ற உரம்மிக்க தளைநீக்கக் கருத்தியலின் வரவு அவசியமானதாயிருந்தது.

ஒருவகையில், நிலவுடைமைப் பழைமைவாதத்தை நிராகரித்து அதனிடத்தில் நவீன சக்தியாக முதலாளித்துவம் தன்னை நிறுவிக்கொண்டதென்றால், இவ்விரண்டு போக்குகளினதும் மனித விடுதலை மறுப்பைக் கட்டவிழ்க்கும் மூன்றாவது வெளியாக மார்க்சியம் உருவமைந்தது.

மார்க்சியத்தை ‘மூன்றாவது வெளி’யாகப் பார்த்தலென்பது, அக் கருத்தியலை அது தோன்றி வளர்ந்த கால கட்டத்தின் சமூக அரசியற் பொருளாதார நிலைமைகளோடு இடப்படுத்தி வாசித்தலின் பாற்பட்டது. அந் நிலைமைகளின் புறத்தே, காலம், வெளி முதலான பரிமாணங்களையும் தாண்டி விரவி நிற்பது மார்க்சிய நோக்கு.

அல்லாமல், அக்கால உலக ஒழுங்கின் ‘மூன்றாவது வெளி’ என்ற பரிமாணத்துக்குள் மாத்திரம் அதனைக் குறுக்குவது, மார்க்சியத்தின் பிரபஞ்சம் தழுவிய விடுதலை இயல்பை மறுப்பதாகிவிடும்.

இதனை எண்ணத் தவறிய மரபு மார்க்சியர்களின் மறதிப் பிணியின் விளைவுகளே, நிலவுடைமையின் எச்சங்கள் ஏறத்தாழ முற்றாக நீங்கி முதலாளித்துவம் வலுப்பெற்ற காலத்தில் – ‘முதலாவது வெளி’ வரலாற்று நீரோட்டத்தினின்றும் அகன்றுவிட்ட / அகற்றப்பட்டுவிட்ட காலகட்டத்தில் – முதலாளித்துவத்தின் ஒற்றைப் பரிமாண மாற்று முறையாக மார்க்சியம் கற்பனை செய்துபார்க்கப் பட்ட விபரீதமும், அதன் வழி சமைந்த இருபதாம் நூற்றாண்டின் இருதுருவ உலக ஒழுங்கும் பின்சூழ்ந்த பெருவன்முறையும் என்று தோன்றுகிறது – இப்போது நினைந்து பார்க்கும்போது.

இறுக்கமிக்க எதிர்மைகளுக்குள், முரண்கோட்பாட்டுக்குள் முடங்கிப் போவதன் (எங்கல்ஸ் சொல்வது போல “getting bogged down in antithesis”) அபாயம் பற்றி மார்க்சிய மூலவர்கள் எப்போதும் பிரக்ஞையோடே இருந்துள்ளனர். இயங்கியல்வாத மார்க்சியச் சிந்தனை மாற்றங்களை மறுதலிக்காதது – மாறாக மாற்றங்களினூடாக வரலாற்றின் முன்னோக்கிய பாய்ச்சலைக் காண்பது.

‘முதலாளித்துவ சமூகத்துக்கு எதிர்மாற்றாக கம்யூனிச சமூகத்தை மார்க்சியர்கள் முன்வைத்தனர். கம்யூனிச சமூகத்தின் கட்டுமானம் நோக்கிய விழைவுகள் யாவும் தோல்வியிலேயே முடிவடைந்தன. ஆகவே மார்க்சின் ஆரூடங்கள் பிழையானவை’ என்ற ரீதியில் மொண்ணையாக மார்க்சிய எதிர்ப்புப் பிரச்சாரங்கள் பரப்பப்படுவதுண்டு. இவற்றால் பொய்ப்பிக்கப் பட முடியாத அளவுக்கு மார்க்சிய சிந்தனை விசாலமானது, அறிவு சார்ந்ததென்ற உண்மை என்போன்ற மார்க்சியத்தின் ஆரம்ப நிலை மாணாக்கர்கட்கே தெளிவுற விளங்கக் கூடியவொன்று.. .

முதலாளித்துவத்தின் பகராசுரப் பசி உலகை இன்றைய அவல நிலைக்குக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை மார்க்ஸ் சரியாகவே முன்னுணர்ந்திருந்தார். இத்தகைய அனர்த்தத்தினின்றும் மனித குலம் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட அறம்சார் மாற்றுபாயமே கம்யூனிசம். இன்றும் நம்முன் கம்யூனிசத்தைத் தவிர வேறு ஈடேற்ற வழிகள் கிடையாது. சுரண்டி ஒடுக்கும் ஆளும் வர்க்கத்துக்கெதிராகப் பேசுவதற்கு மார்க்சின் குரலைப் பழகிக் கொள்வதைத் தவிர மார்க்கம் பிறிதேதும் நம்முன் இல்லை.

எனில், மார்க்சியம் போதிக்கும் அறத்தைத் தேர்வதே நமக்கான கடன். வன்முறை வாழ்வின் இன்னல்களுக்குள்ளிருந்து மீண்டெழுந்து, மனிதரை மனிதர் வதையுறுத்தா சமுக ஒழுங்கை அமைப்பதில் மார்க்சை நாம் துணை கொள்வதெப்படி?

***

வாழ்வின் பாடுகள் என்னை அலைக்கழிக்கும் போதெல்லாம், மார்க்சை முறையாகக் கற்பதன் மூலம் இவற்றை வரன்முறையான புரிதலுக்குட்படுத்த முடியும் என்று உள்ளுணர்ந்திருக்கிறேன். யாதொன்றையும் அதன் புறத்தோற்றமாகவன்றி உள்ளீட்டை ஆராய்தலின் மூலம் ஆழ அறியும் வழிமுறையை மார்க்சிய விஞ்ஞானம் தந்திருக்கிறது.

மார்க்சியம் சார்ந்த எனது சிதறலான வாசிப்புக்களை ஒழுங்குமுறைக்குட்படுத்தி முறையாகப் பயில வேண்டும் என்ற எண்ணம் நெடுநாளாகவே இருந்து வந்துள்ளது. நமது காலத்தின் அவலம், இவ்விடயங்களைப கூடிப பகிர்ந்து ஆராய்ந்து பயில்வதற்கான சூழலையும் மனநிலையையும் தருவதாயில்லை..
இனிவரும் நாட்களில் மார்க்சியம் சார்ந்த எனது வாசிப்பின் கற்கைக் குறிப்புக்களை இத் தளத்தில் பிரசுரிப்பதாக உத்தேசம் – ஆரோக்யமான உரையாடல்களுக்கும் அதன் மூலமாகப் புதிய வெளிச்சங்களைக் கண்டடைவதற்கும் வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில்…

இவ்வாக்க முயற்சியின்பால் கரிசனை கொண்டுள்ள உங்கள் ஒவ்வொருவரையும் உரையாடலில் கலந்துகோள்ளக் கோரும் அழைப்பே இது…

(அதிகாலை 2. 40)

http://sajitharan.wordpress.com/2009/08/11/கார்ல்-மார்க்சை-மீளக்-கண/

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்