புத்தளம் மாவட்டத்தில் மட்டும் அரச அங்கீகாரம் பெற்ற 1,600 ஏக்கர் இறால் பண்ணைகள் உள்ளன. ஆனால் அதன் உண்மையான பரப்பளவோ 3,000 ஏக்கர்களுக்கு மேலாகும். இவ் இறால் பண்ணைகளின் மூலம் நன்னீர் உவர் நீராக மாறுவதுடன் அன்றாட சீவியத்துக்கு மீன் பிடியில் ஈடுபட்டு வந்த ஆயிரமாயிரம் மீனவர்கள் தொழிலை இழந்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமால் இப் பண்ணைகளின் மூலமாக நுளம்புகள் பெருகி மலேரியா நோய் பரவியும் வருகிறது.

இப் பண்ணைகள் ஒரு சில போகத்தின் பின்னர் இறால் உற்பத்தியில் ஈடுபட முடியாது போய் விடுவதால் நன்ணீர் விவசாய நிலங்கள் உவர் நிலம் ஆக்கப்பட்டு அழிக்கப்பட்டும் வருகின்றன. ஏன் இந்த இறால் பண்ணைகள்? ஏகாதிபத்தியத்திலுள்ள மேட்டுக்குடி பிரிவினருக்கு இறால் என்றால் குசியாம். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இலங்கை போன்ற நாடுகளில் இவற்றை உற்பத்தி செய்கின்றனர். இவற்றால் அழிந்து சீர்கெட்டு போவது எம்மண் தானே, அவர்களுக்கு என்ன? அதனால் தான் இங்கே வந்து உற்பத்தி செய்கின்றனர். இதைத் தடுத்து நிறுத்துவதன் மூலமே எம் மண்ணை பாதுகாக்க முடியும். இதை நாமல்லவா செய்ய வேண்டும்.