Language Selection

சமர் - 16 : 08 -1995
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மனித உரிமைக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் யாழ் மண்ணில் ஏற்பட்ட மாற்றுக் கருத்துக்கள் மீதான புலிகளின் தாக்குதலுடன் கொழும்புக்குத் தப்பி வந்தனர். கொழும்பு வந்த பின்பும் முற்றாக தலைமறைவாக்கியவர்கள் இலங்கை அரசு, புலிகள் மற்றும் அனைத்துத் தரப்பு மனித உரிமை மீறல்கள்களையும் தொகுக்கத் தொடங்கினர்.

இத்தொகுப்பை இப் புத்திஜீவிகள் இலங்கையிலுள்ள இரு மொழியாகிய தமிழ் , சிங்களத்தில் தொகுத்து அந்த மக்களிடம் எடுத்துச் செல்லவில்லை. மாறாக இதை ஆங்கிலத்தில் தொகுத்த போதும் இதை ஓர் ஆவணத் தொகுப்பாக தொகுத்து இருப்பின் இவர்களின் பணியை நாம் விமர்சிக்க வேண்டி ஏற்பட்டிருக்காது.

 

இவர்கள் முற்றாக மக்களிடம் அன்னியப்பட்ட நிலையில் , முற்றாகத் தலைமறைவாக இருந்த படி .. இத் தொகுப்பை ஆங்கிலத்தில் சர்வதேச ரீதியில் ஏகாதிபத்தியத்திற்கும் , அதன் எடுபிடிகளுக்கும் விநியோகிப்பதில் முழுமூச்சாக கடந்த காலங்களில் செயற்பட்டனர். விடுதலை மீது ஆர்வம் இருந்த பலருக்குக் கூட இதைப் பெற்றுக் கொள்ள முடியாதிருந்தது. அவர்கள் இவ் ஏகாதிபத்திய வெளியீடுகளிலும் , மற்றும் அவர்களின் நூல்களிலும் தான் பார்க்க முடிகிறது.

 

இன்று இவர்கள் ஏகாதிபத்திய பணத்திலும் , அவர்களின் பாதுகாப்பிலும் தங்கி இருப்பதுடன் , இவர்கள் கடந்த 2-3 வருடங்களாக அடிக்கடி ஐரோப்பிய இரகசிய விஜயங்களைக் கூடச் செய்துள்ளனர். சாபாலிங்கம் கொல்லப்பட்டதற்கான முந்திய மாதத்தில் ஐரோப்பிய பாராளுமனறத்தில் மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்களைப் பாராட்டியும், துணிவைப் போற்றியும் , உதவிகள் செய்யவும் இப் பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.

 

இன்று உலகில் யுத்தத்திற்கும் அழிவிற்கும் காரண கர்த்தாவான இந்த ஐரோப்பிய அரசுகளே இலங்கையின் யுத்த நிலைக்கும் காரணமாகும். இது இப் புத்திஜீவிகளுக்குப் புரியாதோ! ஐரோப்பிய பாராளுமன்ற உதவியை, அறிக்கையை , அதன் ஊதாரித்த தணத்தை நிராகரிக்க முடியாத இவ் ‘மனித உரிமை பல்கலைக்கழக ஆசிரியர்கள்’ இந்த நாகரீக ஐரோப்பிய அரசுகளின் கால்களை விழுந்து தொழுது நிற்கின்றனர். இவர்கள் தொடர்ந்தும் இந் நாகரீக ஐரோப்பிய அரசுகளின் கால்களை விழுந்து தொழுது நிற்கின்றனர். இவர்கள் தொடர்ந்தும் இச்நாகரிகக் கனவான்களுக்கு இச் சமாதானப் பிரியர்களுக்கு மனித உரிமையின் பெயரால் சமர்பணம் செய்து, தொண்டூழியம் புரிவதுடன் அண்மைக் காலமாக இவர்கள் கொழும்பிலிருந்து வந்து ஐரோப்பிய அரச பிரதிநிதிகளுடன் கூடிக்குலாவிச் செல்கின்றனர்.

 

இப்படி வந்த பிரதிநிதி , இங்குள்ள மாற்றுக் கருத்தப் பிரதிநிதிகளைச் சந்தித்து வென்றெடுக்க முயற்சி செய்தார். இதன் போது அப் பிரதிநிதியிடம் (தமிழர்) “ஏன் நீங்கள் உங்கள் வெளியீட்டை தமிழில் கொண்டு வர முடியவில்லை? “எனக் கேட்டதற்கு, அவரோ “அது அவசியம் இல்லை. மது மினைக்கெட்ட வேலை , அதில் பிரயோசனமே இல்லை” எனக் கூறியதுடன் இதன் போக்கில் பலதும் கதைத்தார்.

 

புரிகிறது புத்தி ஜீவிகளே ! நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பது. அது சரிநிகர் 74 , 75 கள் புரிய வைத்தன. சரிநிகருக்கு நடக்கும் உட்பூசல் , அதை அரசு சார்பாக மாற்ற முயலும் கூட்டமான இவ் மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் எடுபிடிகள், தொண்டுகளின் விலாவாரியான முகத்தை சரிநிகர் 74, 75 ல் வெளிப்படுத்தினர்.


அண்மையில் ஏற்பட்ட யுத்தமும் அதன் தொடர்ச்சியில் புலிகளின் மீது ஏறிப் பாய்ந்துள்ளனர். புலிகள் வேறு மக்கள் வேறென (சந்திரிகா அல்ல) இந்த யாழ் மனித உரிமை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் திடீரெனகண்டுபிடிப்பாக ஒப்பாரி வைத்துள்ளனர். அதாவது அரசும் இன்று அப்படித்தான் சொல்கிறது. இவர்களும். அப்படித்தான் சொல்கின்றனர். என்ன வேறுபாடு எல்லாம் ஒன்று தான். புலிகள் அழிக்கப்பட வேண்டும் என ஓலம் இடுகின்றனர். யார் அழிப்பது? அரசு, அல்லது இந்த ஏகாதிபத்திய படைகள். (இவர்கள் இப்படி நேரடியாகக் கூறவில்லை ஆனால் அதைத்தான் மறைமுகமாகச் சொல்கின்றனர்.)

 

இல்லை மக்கள் போராட வேண்டும் எனின்: என்ன அடிப்படையில் என்பதுவும் இவர்களுக்குக் கிடையாது. புலிகள் மக்களுக்கு எதிராக உள்ளனர் என்பது உண்மையே ஆனால் அதைக் காட்டி அரசுக்கு சாமரம் வீசும் உங்கள் முயற்சிக்கு ஐரோப்பிய பாராளுமன்றம் முதல் ஏகாதிபத்தியங்கள் வரை துணை நிற்கின்றன. இதைச் செய்ய ‘மனித உரிமைக்கான …’ என்ற பெயர் ஓர் அவமானச் சின்னம். ஏமாற்றுக்காரர்களும், மோசடியில் ஈடுபடுபவர்களும் , துரோகிகளுமே இப்படிச் செய்ய முடியும்.

 

நீங்கள் துரோகிகளின் இராணுவ உடுப்பைப் போட்டு, அவர்களுக்கு மேல் இருந்து மனித உரிமை பற்றி பிரச்சாரம் செய்து, புலிகளை அழிப்பது எப்படி என வகுப்புக்கள் எடுப்பது நல்லது என நாங்கள் சிபார்சு செய்கின்றோம். அதை நேரடியாகச் சொல்லிச் செய்வது உங்கள் நேர்மைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும். உங்களது மனித உரிமையின் மீது எமது கேள்விகள்.

 

நாங்கள் புலிகளுடன் இணையாது இருப்பது ஒரே ஓர் அடிப்படையில் மட்டுமே அது ஒடுக்கப்பட்ட மக்களின், அதன் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடவில்லை. அதனால் அது சார்ந்த வன்முறையை எதிர்க்கின்றோம்.

 

உங்களுக்கும் துரோக குழுக்களுக்கும் என்ன வேறுபாடு உண்டு? (செயலுக்கு அப்பால் கேட்கின்றோம்) கொள்கை ரீதியில் புலி அழிப்பு, அரசின் மனித உரிமை மீறல் பற்றிய வாய்ப்பந்தல் , தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு இதுவே உங்கள் இருவருக்கும் அடிப்படை.

 

நாங்கள் புலிகளுடன் இணையாது இருப்பது ஒரே ஓர் அடிப்படையில் மட்டுமே அது ஒடுக்கப்பட்ட மக்களின் , அதன் அடிப்படை உரிமைகளுக்காகப் போராட வில்லை. அதனால் அது சார்ந்த வன்முறையை எதிர்க்கின்றோம்.

 

அரசுக்கும் உங்களுக்கும் செயல்களுக்கு அப்பால் உள்ள உடன்பாடு


• புலிகள் வேறு , மக்கள் வேறு


• அரசியல் தீர்வு மக்களுக்கு அவசியம்


• புலி முதலில் அழிக்கப்பட வேண்டும்.


இதுவே உங்களுக்கும் அவர்களுக்குமான அடிப்படை. புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்ற உங்களின் கண்டு பிடிப்பு என்பது , பேரினவாத அடிப்படையிலான குரலேயாகும். புலிகள் தமிழ் மக்களின் சரியான போராட்டத்திற்கு எதிரானதாக இருந்த போதும், இ;ன்று தமிழ் - மக்கள் - புலிகள் வேறு வேறு என்பது இனவாத யுத்த நோக்கில் வேறுபட்டது அல்ல. இனவாத அழிப்பில் அரசு, இராணுவம், துரோகிகள், யாழ் பல்கலைக்கழக மனித உரிமைப் போரை ஆசிரியர்கள், புலிகளையும் மக்களை அதன் உரிமைப் போரை வேரோடு ஒழித்துக்கட்ட முயற்சிக்கும் செயலாகும்.

 

இனவாத யுத்த நோக்கில் அரசு உள்ளவரை தமிழ் மக்களையும் , புலிகளையும் வேறுபடுத்த முடியாது. இன்றுள்ள நிலையில் தமிழ் மக்கள் இனவாதத்திற்கு எதிராக புலிகளாகவே தம்மை வெளிப்படுத்தி வருகின்றனர்;. இதை சமர் அங்கிகரித்து நிற்கின்றது. இது நாளை மாற முடியும். அது சுயமான அரசியலில், சொந்தக் கால்களில் போராட முனைவது மட்டுமே ஒரே ஒரு வழியாகும்.

 

மனித உரிமைக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று இனவாதத்திற்கு எதிரான இவ் யுத்தத்தில் தமிழ் மக்களையும் , புலிகளையும் வேறுபடுத்துவது என்பது: சந்திரிகா அரசை அதன் இனவெறி தாக்குதலை ஊக்குவிக்கவும், ஏகாதிபத்தியத்தின் இன்றைய உலகை ஒழுங்கை கட்டிப் பாதுகாக்கவும் செய்யும் மாபெரும் சதி முயற்சியாகும். இறுதியாக சரிநிகர் 75 ல் நாசமறுப்பான் பல்கலைக்கழக ஆசிரியர்களின் கருத்தை விமர்சிக்கும் போது ‘ஆவணத்தை தயாரிப்பு அவசியம்’ என பாராட்டுகின்றார். இங்கு இவர் தடுமாறி விடுகின்றனர். எப்படி அவர்களின் செயலைக் கொச்சைப்படுத்த முடியும் என்ற ஆதங்கம் போலும் ஆவணப்படுத்தல் அவசியம். ஆனால் அது இன்று யாருக்கு ஆவணப்படுத்தப்படுகின்றது?

 

ஏகாதிபத்தியத்தின் தேவைக்கு ஆவணப்படுத்தும் எம் முயற்சியையும் ஏற்க முடியாது. ஆவணப்படுத்தியதன் வெளிப்பாடு, அரசியலற்ற புலி எதிர்ப்பாக மாறி , ஐரோப்பிய பாராளுமன்றத்தை திருப்தி செய்ய முயல்வதுடன் இன்று சந்திரிகா அரசுக்கு சேவை செய்ய தொடங்கியுள்ளனர். அதற்கு ஜனநாயக, சமாதானம், மனித உரிமை.. போன்ற தேவையான எந்த சொல்லடுக்குகளையும் பயன்படுத்தத் தயாராக இருப்பர்.


இன்றுள்ள நிலையில் தமிழ் மக்கள் இனவாதத்திற்கு எதிராக புலிகளாகவே தம்மை வெளிப்படுத்தி வருகின்றனர். இதை சமர் அங்கிகரித்து நிற்கின்றது.


இவர்கள் இதைத் தொடங்கிய போது இதை யாரும் சொல்லவில்லைத் தான். ஆனால் சமர் அதை இடைக்காலத்தில் அதன் விளைவுகளைச் சுட்டிக் காட்டியது. இன்று அதைப் பலரும் ஏற்கும் நிலைக்கு வருவது கண்கூடு. வெறும் ஆவணப்படுத்தல் புரட்சியாக மாறிவிடாது. அது எங்கே? யாருக்கு? சேவை செய்ய ஆவணப்படுத்தப்படுகிறது என்பது மிகவும் முக்கியமானதாகும்.