காஷ்மீர் மாநிலத்தில் அமைதியான முறையில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்திருப்பதையும், அம்மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித் திருப்பதையும் பார்த்து அம்மாநில மக்கள் சுதந்திரம் கேட்பதை விட்டுவிட்டு, மீண்டும் தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டதாக இந்திய அரசு மயக்கம் கொண்டிருந்தது. இந்த மயக்கத்தை அம்மாநிலத்தின் தென்பகுதியிலும் தலைநகர் சீறிநகரிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் போராட்டங்கள் கலைத்துப் போட்டுவிட்டன.
காஷ்மீரின் தென்பகுதியில் அமைந்துள்ள ஷோபியன் என்ற நகரைச் சேர்ந்த 22 வயதான நீலோஃபர் ஜானும் அவரது மைத்துனியும் 17 வயதான பள்ளி மாணவியுமான ஆஸியா ஜானும் மே 29 அன்று அக்கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் அமைந்திருக்கும் தங்களின் ஆப்பிள் தோட்டத்திற்குச் சென்றிருந்தனர். அதிகாலை யிலேயே சென்றுவிட்ட அவ்விருவரும் இரவு 10 மணியாகியும் வீடு திரும்பாததால், நீலோஃபரின் கணவர் இது பற்றி அருகிலுள்ள போலீசு நிலையத்தில் புகார் அளித்தார்.
மறுநாள் அதிகாலை நேரத்தில், நீலோஃபரின் ஆப்பிள் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் ஓடும் சிற்றாறு ஒன்றில் அந்த இரு இளம் பெண்களின் சடலங்கள் போலீசாலும் பொதுமக்களாலும் கண்டுபிடிக்கப்பட்டன. உடலெங்கும் காயங்களோடும் ஆடைகள் கிழிந்த நிலையிலும் அவர்களது சடலங்கள் ஆற்றின் ஓரத்தில் ஒதுங்கிக் கிடந்தன. அகால ‘மரணமடைந்த’ நீலோஃபர் நிறைமாதக் கர்ப்பிணி என்பதும் ஆஸியா ஜான் படிப்பில் கெட்டிக்கார மாணவி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்விரு இளம் பெண்களும் இறந்து கிடந்த நிலையைப் பார்த்த பொதுமக்கள், “அவர்கள் போலீசாராலோ அல்லது இராணுவச் சிப்பாகளாலோ கும்பலாகப் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம்” எனச் சந்தேகம் கொண்டனர்.
இந்த மர்மமான ‘மரணங்கள்’ பற்றி விசாரணை நடத்தி, பிரேதப் பரிசோதனை நடத்தி மக்களின் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டிய போலீசாரோ சடலங்களைப் பார்த்த நிமிடமே, “அவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்து போனதாகத் தெரிவதாகவும், பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரியவில்லை என்றும்” முடிவு செய்தனர். மேலும், இச் சம்பவம் பற்றி உடனடியாக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யவும் மறுத்து விட்டனர். காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லாவும் போலீசாரின் தடாலடி முடிவுக்கு ஒத்தூதினார்.
‘‘அரசாங்கமும் போலீசும் யாரையோ பாதுகாக்க முயலுவதாக’’ச் சந்தேகப்பட்ட பொதுமக்கள், அவ்விரு இளம் பெண்களின் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்கக் கோரி ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். இதனையடுத்து, அப்பெண்களின் சடலங்கள் ஷோபியன் அரசு மருத்துவ மனையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. எனினும், போலீசின் நெருக்குதல் காரணமாக அரசு மருத்துவர்கள் ‘இம்மரணங்கள்’ பற்றி எவ்வித முடிவையும் அறிவிக்காமல் மௌனமாக இருந்துவிட்டனர். எனவே, வேறு நடுநிலையான மருத்துவர்களைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்யக் கோரி பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர்.
புல்வாமா நகரைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் நடத்திய இரண்டாவது பிரேதப் பரிசோதனையும், அப்பெண்கள் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டார்களா இல்லையா என்பது பற்றியோ, அவர்கள் எப்படி இறந்து போனார்கள் என்பது பற்றியோ முடிவான அறிக்கை எதனையும் தரவில்லை என்றே கூறப்படுகிறது. ஆர்ப்பாட்டங்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் மும்மரமாகத் திரிந்த போலீசார், இரண்டாவது பிரேதப் பரிசோதனை முடிந்தவுடனேயே அச்சடலங்களைப் புதைத்துவிடுமாறு கூறிவிட்டனர். புதைக்கப்பட்ட சடலங்களை மீண்டும் தோண்டியெடுப்பது உள்ளூர் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் எனக் கூறி, மூன்றாவது பிரேதப் பரிசோதனை என்ற யோசனையைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டது, மாநில அரசு.
தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க ஏகப்பட்ட உளவுப் பிரிவுகளை வைத்திருக்கும் அரசுக்கு, இந்த ‘மரணங்களுக்கு’ப் பின்னுள்ள மர்மங்களைக் கண்டுபிடிப்பதில் பெரிய சிரமமொன்றும் இருந்திருக்க முடியாது. போலீசும், அரசும், தேசியவாதிகளும் கூறிவருதைப் போல இந்த மரணங்கள் விபத்தினால் நேர்ந்தவை என்பது உண்மையாகவே இருந்தாலும், அவ்வுண்மையை காசுமீர் மக்கள் நம்பக்கூடிய நடுநிலையான அமைப்பின் மூலம் நிரூபிப்பதற்கும் அரசு தயாராக இல்லை. மாறாக, மக்களின் கோபத்திற்கு வடிகால் வெட்டுவதற்காக, வழக்கம் போலவே விசாரணை கமிசன்களை அமைத்திருக்கிறது, அம்மாநில அரசு. மேலும், நியாயம் கேட்டுப் போராடும் மக்களை ஒடுக்குவதற்காக பொது அமைதியைப் பாதுகாக்கும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவருகிறது. இப்பிரச்சினை தொடர்பாக போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்துவரும் மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு சிறுவன் இறந்து போனான். சையத் ஷா கீலானி, ஷாபிர் ஷா, மிர்வாயிஸ் உமர் ஃபாரூக், யாசின் மாலிக், ஜாவேத் மிர் ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலிலும், சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் மக்கள் போதிய ஆதாரங்கள் எதுவுமின்றி போலீசையும் துணை இராணுவப் படைகளையும் சந்தேகிப்பதாக இந்திய தேசியவாதிகள் அலுத்துக் கொள்கிறார்கள். ஒரு குற்றம் நடந்தால், அது பற்றி விசாரிக்க போலீசார் பழைய குற்றவாளிகளை விசாரிக்க ‘அழைத்து’ச் செல்வதில்லையா? அது போலத்தான் காஷ்மீர் மக்களின் சந்தேகத்தையும் பார்க்க வேண்டும்.
ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்பு, வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த பில் கிளிண்டன் இந்தியாவிற்கு வந்த சமயத்தில், காஷ்மீரில் பாதுகாப்புப் படைகளோடு நடந்த ‘மோதலில்’ ஐந்து முசுலீம்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த ஐவரும் எல்லைதாண்டி வந்த பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டனர். இப்படுகொலையை எதிர்த்து காஷ்மீர் மக்கள் போராடி யிருக்காவிட்டால், அந்த ஐவரும் சிட்டிசிங்புரா கிராமத்தைச் சேர்ந்த அப்பாவி முசுலீம்கள் என்ற உண்மை வெளியுலகுக்குத் தெரிந்திருக்காது.
ஜம்மு-காஷ்மீர் போலீசுத் துறையைச் சேர்ந்த சிறப்பு நடவடிக்கைக் குழு பணம், பதவிகளைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அப்துல் ரஹ்மான் பத்தர், ஷௌகத் கான், நஸிர் அகமது தேகா உள்ளிட்ட பல அப்பாவி முசுலீம்களைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்தி சுட்டுக் கொன்ற உண்மை 2007-இல் அம்பலமானது. இப்படுகொலைகளுக்கான ஆதாரங்களை அழித்துவிட்டதாக மப்பில் திரிந்த காக்கிச்சட்டை கிரிமினல்களை காஷ்மீர் மக்களின் போராட்டம்தான் சட்டத்தின் முன் நிறுத்தியது.
போலீசோ அல்லது பாதுகாப்புப் படையினரோ இவ்விரு பெண்களையும் கடத்திக்கொண்டு போ, பாலியல் பலாத்காரப்படுத்திய பின் கொன்றிருக்கக்கூடாதா என்ற கேள்வியை எழுப்ப மறுக்கும் இந்திய தேசிய வாதிகள், இப்படுகொலைகளுக்கு நியாயம் கேட்டு நடக்கும் போராட்டங்களை, அப்போராட்டங்கள் இந்திய இராணுவத்தைக் குற்றம் சுமத்தும் ஒரே காரணத்திற்காகவே, அவற்றை இனவெறியையும், மதவெறி யையும் தூண்டிவிடும் போராட்டங்கள் என அவதூறு செய்து வருகிறார்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்துவிட்ட பிரிவினைவாதிகள் மீண்டும் செல்வாக்குப் பெறவே மக்களைத் தூண்டிவிடுவதாகக் குற்றஞ்சுமத்துகிறார்கள்.
காஷ்மீரின் தென்பகுதியில் போராடிவரும் மக்கள் “குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டி!” எனக் கோரிதான் போராடுகிறார்களேயொழிய, சுதந்திரம் கேட்டுப் போராடவில்லை. ஓட்டுப் பொறுக்குவதற்கு மட்டும் காஷ்மீர் மக்களை அணுகும் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சி இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கட்டுமே, யார் வேண்டாமென்று சோன்னது? பிரிவினைவாதிகளைவிட, காங்கிரசுக் கும்பல் உள்ளிட்ட இந்திய தேசியவாதிகள்தான் காஷ்மீர் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாமல் தனிமைப்பட்டுக் கிடக்கின்றனர்.
நீலோஃபரும், ஆஸியாவும் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுத்தான் கொல்லப்பட்டனர் என்பது நிரூபணமானால், காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதுமே போராட்டங்கள் வெடித்துவிடும் என்பதனால்தான், ஷோபியன் போலீசார் முதல் பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவர்களிடம், “அப்பெண்கள் பாலியல் பலாத்காரபடுத்தப்பட்டிருந்தால் அவ்வுண்மையை மறுக்க வேண்டும் அல்லது மழுப்ப வேண்டும்” என நெருக்குதல் கொடுத்ததாகவும்; இரண்டாவது பிரேதப் பரிசோதனையை நடத்திய மருத்துவர்களுள் ஒருவர் ஷோபியன் நகர மக்களிடம் அவர்கள் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுள்ள உண்மையைச் சோன்னதற்காக மாவட்ட போலீசு கண்காணிப்பாளரால் கடிந்து கொள்ளப்பட்டதாகவும் “தெகல்கா” வார இதழில் (20 ஜூன் 2009) பிரேம் சங்கர் ஜா என்றொரு பத்திரிகையாளர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்திய தேசியவாதிகள் அவதூறு செய்து வருவது போல காஷ்மீர் மக்களின் போராட்டங்கள் உண்மையைக் கண்டுபிடிக்கத் தடையாக இல்லை. மாறாக, அதிகார வர்க்கம்தான், உண்மை வெளியே தெரிந்தால், இந்திய தேசியம் நாறிவிடும் என்பதால், உண்மையை அமுக்கிவிட முயன்று வருகிறது என்று கூற வேண்டும்.
பிரிவினைவாதத்தையோ, பிரிவினைவாத அமைப்புகளையோ ஏற்றுக் கொள்ளாத காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முசுலீம் அறிவுத் துறையினர்கூட, இராணுவமும், போலீசும் வரைமுறையின்றி நடத்திவரும் மனித உரிமை மீறல்களும், இராணுவமும், துணை இராணுவப் படைகளும் திரும்பப் பெறப்படாமல் காஷ்மீரை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதுதான் மக்களின் சந்தேகங்களுக்கும் போராட்டங்களுக்கும் அடிப்படையாக அமைகின்றன எனச் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இவையனைத்தும் காஷ்மீர் அமைதியாக இல்லை என்பதைத்தான், இந்திய தேசியத்தைப் பிரதிநிதித் துவப்படுத்தும் எந்தவொரு அமைப்பையும் அம்மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. அதனால்தான் சந்தேகத்திற்கிடமான ஒவ்வொரு மரணமும், சந்தேகத்திற்கிடமான அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் (அமர்நாத் கோயில் நில மாற்றம் போன்றவை) அம்மாநிலத்தில் பெரும் கொந்தளிப்புகளை உருவாக்கிவிடுகிறது. இப்போராட்டங்களை அவதூறு செய்தோ அடக்குமுறைகளை ஏவியோ ஒடுக்கிவிட இந்திய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. அம்முயற்சிகள் அனைத்தும் எரிகிற நெருப்பில் எண்ணெ வார்ப்பது போலவே அமைந்து விடுகின்றன.
குட்டு உடைகிறது!
காஷ்மீர் மக்கள் நடத்திய போராட்டங்களையடுத்து, அம்மாநில அரசு, “நீலோஃபர் ஜானும், ஆஸியா ஜானும் இறந்து போனதற்கான உண்மையான காரணத்தையும், சூழ்நிலையையும் மற்றும் இப்பிரச்சினையை யொட்டி நடந்த போராட்டங்களை அரசு அணுகிய விதம் குறித்தும்” விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற ஜம்மு-காஷ்மீர் உயர்நீதி மன்ற நீதிபதி முஸாபர் ஜான் என்பவர் தலைமையில் விசாரணை கமிசன் ஒன்றை அமைத்தது. அக்கமிசன் அளித்துள்ள இடைக்கால அறிக்கையில், “அப்பெண்கள் பாலியல் பலாத்காரப் படுத்தப்பட்டுப் பின் கொல்லப்பட்டுள்ளதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக”ச் சுட்டிக் காட்டி யிருக்கிறது. மேலும் போலீசார், பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவ அதிகாரிகள், தடய அறிவியல் நிபுணர்கள் ஆகியோரின் திறமையின்மையாலும், நிர்வாகக் குளறுபடிகளாலும் இந்த ஆதாரங்கள் அழிந்து போவிட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. இதனையடுத்து, போலீசு மற்றும் மருத்துவ துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் இடைக்காலப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
“ஆதாரங்கள் ‘அழிந்து’ போகும் அளவிற்கு திறமைக் குறைவாக நடந்து கொள்ளக் காரணம் என்ன?” என்ற கேள்விக்கான பதிலை இடைக்கால பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளிடமிருந்து வாங்கிவிட்டால், இந்த ‘மர்ம’ மரணங்களுக்குப் பின்னுள்ள பெரிய மனிதர்களின் பெயர்கூட அம்பலமாகிவிடாதா? அந்த இரு பெண்களுள் ஒருவர் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை போலீசார் மறைக்க முயன்று முடியாமல் போன பிறகும், தேசியவாதிகள் இக்கேள்வியை எழுப்ப மறுத்து வருகிறார்கள். மாறாக, இக்கமிசன் புதிய ஆதாரங்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை எனக் கூறி, இந்த இடைக்கால அறிக்கையை ஒதுக்கித் தள்ளுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். அப்பெண்களைப் பாலியல் பலாத்காரப்படுத்திக் கொலை செய்த பெரிய மனிதர்களே ‘மனசாட்சிக்குப் பயந்து’ குற்றத்தை ஒப்புக்கொண்டால்கூட, “அதற்கும் ஆதாரம் ஏதாவது வைத்திருக்கிறாயா?” என இவர்கள் கேட்டாலும் ஆச்சரியப்பட முடியாது!
-புதிய ஜனநாயகம், ஜூலை-2009