மக்களுக்கும் பாசிசத்துக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை புரிந்து கொள்வதற்கு, சமூகத்தின் சராசரி அரசியல் மட்டம் என்பது வளர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இதற்கமைய இடதுசாரிய சமூகக் கூறு, அரசியல் தலையீட்டை உருவாக்கியிருக்க வேண்டும். இந்த நிலைமையை அடைய முடியாத வண்ணம், சமூகத்தின் உயிர்த்துடிப்பான சமூகக் கூறுகள் அழிக்கப்பட்ட நிலையில், மீண்டும் பாசிசம் மக்கள் வேஷம் போடுகின்றது.

 

அன்று பாசிசம் மக்களின் அரசியல் மட்டம் வளரவிடாது தடுக்க, இடதுசாரி புத்திஜீவிகளை குறிவைத்து கொன்றது. கடந்த காலத்தில், ஈழத்தில் இதுதான் நடந்தது. பாசிசம் தன்னை நிலைப்படுத்தவும், மக்களின் அறியாமையை ஏற்படுத்தவும், 1980 களில் தொடங்கி 1990 வரை பெருமளவில் இடதுசாரிய அரசியல் புத்திஜீவிகளையும் அதன் உறுப்பினர்களையும் படுகொலை செய்தது. அந்தப் படுகொலை வரலாற்றை தனது பாசிச வரலாறு மூலம், இன்று இருட்டடிப்பு செய்ய முனைகின்றது. இதற்கு தமிழகத்து இடதுசாரிகளை அது பயன்படுத்துகின்றது.

 

கடந்தகால இடதுசாரிய படுகொலை வரலாற்றை மூடிமறைத்ததன் மூலம், வலதுசாரிய பாசிசமே சமூகத்தின் உயிர்த்துடிப்பான சமூகக் கூறாக அன்று காட்டியது, இன்றும் காட்டுகின்றது. தன் வரலாறே தமிழனின் போராட்ட வரலாறாக அது கூறுகின்றது. மனித துயரங்கள், துன்பங்கள், வாழ்வியல் அனுபவங்கள் அனைத்தையும், பாசிசம் தன் சொந்த வரலாறு ஊடாக எமக்கு மீள சொல்ல முனைகின்றது. புதிய தலைமுறைக்கும், இந்தியருக்கும் இதுதான் ஈழத்து வரலாற்று உண்மை என்று, வரலாற்றை காயடித்துக் கூற முனைகின்றது.  

  

அன்று பாசிசத்தை நிறுவ, தன்னை இடதுசாரிய புரட்சியாளனாக காட்டிக்கொண்டது. இடதுசாரிய கோசங்கள், தன் பின்னால் இருப்பதாக காட்டிக்கொண்டது. வலது பாசிசம், தன்னை இடதுசாரியாக காட்டிக்கொண்டது. அதேநேரம் இடதுசாரிகளை அது முழுமையாக படுகொலை செய்தது. இதன் மூலம் தான், பாசிசம் எம் வரலாற்றில் வெற்றிபெற்றது. அதையே தமிழ் மக்கள் வரலாறாக, இன்று மீண்டும் கூற முனைகின்றனர். இன்று அவர்கள் இதைச் சொன்னால், ஏற்றுக்கொள்ள தமிழ் சமூகம் தயாராகவில்லை.

 

மீண்டும் அப்பாவி வேஷம். இடதுசாரி வேஷம். பாசிசம் இன்று தன்னை மூடிமறைத்துக் கொண்டு, இடதுசாரியத்தின் ஊடாக களமிறங்குகின்றது. ஈழத்து இடதுசாரிகள் மூலம் இது சாத்தியமில்லை என்ற நிலையில், தமிழக இடதுசாரிகள் மூலம் இதைச் செய்யத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் அவர்கள் வரலாற்றை திரித்து, பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர். தங்களை மூடிமறைத்துக் கொண்ட சந்தர்ப்பவாதத்துடன் அப்பாவி வேஷம் போடுகின்றனர். மறுபடியும் பாசிசத்தை அதிநுட்பத்துடன், பிரச்சாரத்தை செய்யத் தொடங்கியுள்ளது.  

 

மக்கள் பற்றி பாசிசம் மீண்டும் அழுது புலம்புகின்றது. பாசிசம் தன்னை மக்களுடன் சதையும் நகமும் போல் இருப்பதாக காட்ட முனைகின்றது. மக்களுக்காகவே தான் செயல்படுவதாக காட்ட முனைகின்றது. மக்களின் கோரிக்கைகளுடன், மக்களின் உணர்வுகளுடன் ஓன்று கலந்து நிற்பதாகக் காட்டிக்கொண்டு, அதை தன் சொந்த பாசிச வழியில் எடுத்துச்செல்ல முனைகின்றது. இப்படி வலதுசாரிய பாசிசம், இடதுசாரிய வர்க்க அடிப்படையை தன் சொந்த பாசிச வழியில் தீர்க்க முடியும் என்கின்றது. இந்த வகையில் இடதுசாரிய அரசியல் செயல்பாட்டை அரசியல் ரீதியாக செயலற்றதாக்க, வலது பாசிசம் மக்களைப் பற்றி வலிந்து பேசுகின்றது. தமக்கு மட்டும் மக்கள் பிரச்சனையில் அக்கறை உள்ளதாக காட்ட முனைகின்றது.

 

மக்கள் அனுபவிக்கின்ற வாழ்வியல் கொடுமைகளை பற்றி எல்லாம் அது பேசுகின்றது. தனது கடந்தகால மக்கள் விரோத வரலாற்றையும், அதன் அரசியல் அடிப்படையையும் அது பேசுவதில்லை. அதைப் பற்றி எதுவும் தமக்கு தெரியாத மாதிரி வேஷம் போடுகின்றது. அரச தரப்பை மட்டும் குற்றம்சாட்டும் பாசிசம், தன்னை புரட்சியாளனாக, மக்களில் அக்கறை உள்ளவராக காட்டிக் கொள்கின்றது. இப்படி இதைப் பேசாமல் பாசிசம் அதிகாரத்துக்கு வரமுடியாது என்பதை, நன்கு புரிந்து செயல்படுகின்றது. இதன் மேல் தீவிரமாக செயலாற்றுகின்றது. தன்னால் தான் இதைத் தீர்க்க முடியும் என்பதை நிறுவ, தனிமனித செயலை முன்னிலைப்படுத்துகின்றது. மக்களை அரசியல் மயப்படுத்துவதை மறுத்தபடி, குறுகிய கோசத்துக்குள் இது தன்னை செயலுள்ளதாக காட்ட தனிமனித பயங்கரவாதச் செயலை முன்னிலைப் படுத்துகின்றது. குறிப்பாக தனிமனிதனை முன்னிலைப்படுத்துகின்றது. இதன் மூலம் தன்னை செயல் சார்ந்த ஒன்றாக மாற்றுகின்றது, காட்டுகின்றது. ஒடுக்கப்பட்ட சமூகங்கள், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் அரசியல் கோரிக்கைகளை மறுத்து, ஏதோ ஒன்றை தூக்கி நிறுத்தி அதனூடாக பாசிசம் தன்னை சமூக வர்க்க முரண்பாட்டுக்குள் நுழைக்கின்றது. இதன் மூலம் சமூகப் பிரச்சனையை தன்னால் தீர்க்க முடியும் என்கின்றது.

 

இன்று வலதுசாரிய பாசிசம் இடதுசாரியத்தின் துணையுடன், குறுக்கு வழியில் மீண்டும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியுள்ளது. இந்த அபாயத்தை எதிர் கொண்டு போராட அழைக்கின்றோம்.     

 

பி.இரயாகரன்
29.07.2009