கலையரசன்,ஈழநானூறும் புலம்பெயர் படலமும்"என்ற உங்கள் நூலிலிருந்த இந்தத் துண்டை வாசிக்கும்போது,நீங்கள் ஒரு இனத்தின் மீது நிகழ்ந்த இனவழிப்பு அரசியலை மிக மலினப்படுத்தப்பட்ட தலையங்கத்தில் புனைவாக மாற்ற முனைகிறீர்கள் என்று உணர்கிறேன்.


இது தமிழ் பேசும் மக்களது வரலாறு.
 
புலம் பெயர்ந்தது-ஈழப்போராட்டம்-இனக் கலவரங்கள் அனைத்தும் மிக ஸ்த்தூலமான பொருளாதாரத்தை அடைப்படையாகக்கொண்ட முரண்பாடுகளாலும்-அதன் தெரிவில்-இனங்களுக்கிடையிலான மூலதனத் திரட்சி-முதலீடு மற்றும் அதன் பாத்திரம்-இடம் எனப் பற்பல கட்டங்களாக இவை இனங்களுக்கிடையில் முரண்பாடாக விரிகிறது.
 
இத்தகைய வரலாற்றுக் கட்டங்களை மிகவும் குறுகிய புரிதலைக்கொண்டு எவரும் எழுதிவிடமுடியாது.
 
மனித சமூகத்தையும் அதன் பொருளாதார வாழ்வையும்,மானுடவியல் மற்றும் மார்க்சியக் கண்ணோட்டத்தோடு புரிவதற்கு முனையாத எந்த ஆய்வும் சரியான அடைப்படை உண்மைகளைக் கண்டவைதற்கு முடியாது.நாம் வர்க்கச் சமுதாயமாகப் பிளந்து கிடக்கின்றோம்.இங்கே வர்க்க ரீதியான நலன்கள் பற்பல முரண்பாடுகளையும் அதன் வாயிலான கிளை முரண்பாடுகளையும் இலங்கைபோன்ற பல்லின மக்கள் வாழும் தேசத்தில் உருவாக்கிறது.
 
வெறுமனவே,மேலெழுந்த புரிதலை வைத்துத் தமிழ்பேசும் மக்களது வரலாற்று நிகழ்வுகளை எழுதமுடியாது.அதற்குப் பலபேர்களது கூட்டு உழைப்பும்,சுயதிருப்தி-விருப்புக்கடந்த மிக உயர்ந்த ஆய்வு மனப்பாண்மையும்,வரலாற்று பொருள்முதல் வாதமும்-இயக்கவியல் பொருள்முதல்வாதமும் மிகத் திறம்படக் கைவசப்பட்டவர்களே இதைக் குறித்துப் பகுப்பாய்வு செய்ய முடியும்.
 
இனக்கலவரத்தை வெறுமனவே"யாழ்ப்பாணத்தவர்களது"பதவி ஆசையைக் காரணங்காட்டியேதாம் நிகழ்த்தப்பட்டதென்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது?
 
இலங்கையில் 1911 இல் ஏற்பட்ட இஸ்லாமியர்களுக்கும்,சிங்களவர்களுக்கும் ஏற்பட்ட கலவரம் எத்தகையது?இதன் பின் தமிழ் மக்கள்மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள்-கலவரங்கள்,கண்டியச் சிங்களவருக்கும் கரையோரச் சிங்களவருக்குமுள்ள தலைவெட்டல்கள் என்பவையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.இவைகளுக்கான அடிப்படை முரண்பாடுகள் எங்ஙனம் தோற்றம் பெற்றதென்பதை மார்க்சியக் கண்ணோட்டத்தோடு பார்க்கப்பட்டாகவேண்டும்.அங்கே பொருளாதாரம் அடிப்படையாக முன்னிற்கிறது.இனங்களுக்கிடையிலான பொருளாதாரச் சுழற்சியை இனங்கண்டாக வேண்டும்.வளர்ச்சி-பங்கீடு,சந்தைப்படுத்தல் என்பவை இனங்களுக்கிடையில் எத்தகைய முறைமைகளில் முரணாக விரிந்தன என்பதெல்லாம் அவசியமான முறைமைகளில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும்.
  
இலங்கையின் இனக் கலவரத்தைப் புரிந்து கொள்வதற்குக் குறைந்த பட்சமாவது குமாரி ஜெயவர்தனாவை ஆவது படித்துக்கொள்ள வேண்டும்.இது ஆலோசனை அல்ல.உங்களது கட்டுரை மிகத் தவறான முறையில் வர்க்கங்களுக்கிடையிலான முரண்பாட்டையும்,இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியில், ஆளும் வர்க்கங்களுக்குள் ஏற்பட்ட போட்டிகளையும் புரிய வைக்கிறது.அரச ஜந்திரத்தில் உறுப்புக்களாகவிருந்த யாழ் மேட்டுக் குடிகளது பதவி ஆசையைக் காரணங்காட்டிக் கலவரங்கள் நிகழ்ந்ததென்பது,தனிப்பட்ட இரு இனங்களுக்கிடையிலான பதிவிப்போட்டியாக விளக்கங்கொள்வது மிகக் கொடுமையானது.வரலாறு என்பது கதை எழுதும் வேலை அல்ல.அல்லது தனிநபரது ஆளுமைக்கும் உட்பட்டது அல்ல.அது ஒரு மிகப் பெரும் ஆய்வு மட்டத்துக்குள் பலபேர்களது கூட்டு உழைப்போடு மிகக் கறாரான மார்க்சியப் புரிதலோடு எழுதப்பட்டாக வேண்டும்.
 
இதைக் குறித்து, உலகை இனங்காண மார்க்சினது கூற்றைப் பாருங்கள்: வரலாறு கண்ட யுத்தங்கள் யாவும் வர்க்கங்களுக்கிடையிலானது"என்கிறார்.
 
இன்றைய புலிகளது தோல்வியைப் பாருங்கள்!
  
இதை மனம்போன போக்கில் எழுதிவிட முடியுமா?
 
வரலாற்றில் புலிகளது போராட்டத்தை எழுதுவதற்கு-அதன் காரணங்கள்,தோல்வியினது பாத்திரம்,அவர்கள் கொண்டிருந்த வர்க்க அரசியல்,இவைகளை மிகக் குறுகிய வட்டத்துக்குள் வைத்து எவரும் எழுதிவிட முடியாது.இதைப் போன்றதேதாம் இனக்கலவரங்களுக்குள் நிலவிய முரண்பாடுகளை ஆய்வு செய்வதும்,அதையொட்டிப் படைப்பதும்.
 
"ஈழநானூறும் புலம்பெயர் படலமும்"என்று மிகக் கேலித்தனமாக நமது சமூக வாழ்வியல் பிரச்சனைகளை எழுதுவது மிகக் கெடுதியானது.அக நானூறு-புற நானூறு என்ற பண்டைய இலக்கியத்துள் நிலவிய மானுட தரிசனத்தை மானுடவியற் கண்ணோட்டத்துடன் பார்த்து ஆய்வு செய்யும் இன்றைய மாணவன்,அக் காலக்கட்டத்து சமூக நடிவடிக்கையைப் பொருளாதார வாழ்வோடு இணைத்து, அதற்கு அர்த்தங்கற்பிக்க முனைவதில் கண்டடையும் உண்மை புறநிலையின் தன்மையில் எழுந்த சிந்தனை எங்ஙனம் வாழ்நிலையைத் தீர்மானித்தென்பதும், அங்ஙனமே வாழ்நிலை-எங்ஙனம் உணர்வைத் தீர்மானித்துக் கொண்டதென்பதை வரலாற்றில் மனிதர்களை வைத்துப் பார்க்கும்போது-அங்கே பொருளாதார முரண்பாடுகளையும், மனித வர்க்க நிலைகளையும் கண்டடைய முடியும்.இவ்வண்மையேதாம் இன்றைய மனித வாழ்வையும், இன்னொரு கட்டத்தில் பார்க்க முடியும்.இவற்றைக் குறிப்பது எதற்காகவென்றால்,உங்களது பிழையான-தவறான புரிதல்கள் நாளைய சுமுதாயத்துக்குத் தவறான புரிதல்களை கொடுக்கப்படக் கூடாது என்பதற்கே.
  
அடுத்து,1983 ஆம் ஆண்டுக் கலவரம் என்பது வெறுமனவே சிங்களக்காடையர்களது பங்குபற்றலுடன் நடாத்தி முடிக்கப்பட்டது அல்ல.அதற்குள் பல்லினக் குழுக்கள் பங்குகொண்டுள்ளன.இவற்றை வழி நடாத்திய அரச வன்முறை ஜந்திரத்துக்கு, ஆளும் அரசினது ஒத்துழைப்பு இருந்ததென்றால் அவ்வரசுக்குப் பின்னாலுள்ள ஆளும் வர்க்கத்தினது பாத்திரம் எத்தகையது?
 
இவற்றைக் குறித்துப் பர்ப்பதே வர்க்கக் கண்ணோட்ட ஆய்வு.
 
இதுதாம் வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்துடன் இயக்கவியல் பொருளாதாரப் புரிதலை சமூக இயக்கத்துள் உண்மைகளைக் காணப் பயன் படுத்துவது.இதை மறுத்தொதுக்கிவிட்டு,எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் இனக் கலவரத்தைப் புனைவது கண்டிக்கத்தக்கது.
 
எமது புலப் பெயர்வைக் குறித்து மலினப்படுத்தப்பட்ட முறையில்"படலம்"போட்டுச் சொல்ல முடியாது.
 
இவைகளுக்குப் பின்னால் நிகழ்ந்த சமூகசீவியச் சிதைவு-வாழ்சூழற்பாதிப்பு அதன் காரணமாகவெழுந்த உயிர் வாழ்வு அச்சம்,அதன் வாயிலாக எழுந்த சமூக அசைவியக்கம் இப்படிப் பல படிமுறைகளைப் புரிந்தே எதையும் எழுத முடியும்.இது பாட்டி வடை சுட்ட கதை அல்ல!
 
மார்க்சியத்தைப் புரிந்து,சரியான ஆய்வைக்கொண்டு எழுதவும்.
 
அடுத்து-
 
இந்துக் கல்லூரியில் திரண்ட அகதிகள் அங்கே கோடு கிழித்துச் சாதியத்தை நிலை நாட்டியது என்பதெல்லாம் வெறுமனவே குறியீடுகளாகச் சொல்ல முடியாது.இதற்குப் பின்னாலுள்ள உளவியற் சூழலையும் அறிந்து எழுத வேண்டும்.அதாவது, பெரு நகரத்தில் எப்படி-எங்கே சாதிகள் இனங்காணப்பட்டன,இவையூடாக கலவரத்துள் சிக்குண்ட மானூடரது உளவியற்றாக்கத்தில் சாதியத்தின் தெரிவு சாத்தியமாகுமா என்ற வரலாற்றுத் தர்க்கம்- உண்மைகள் அவசியமானது.இதைக் குறுகிய அரசியலாக்க முனைவது கபடம் நிறைந்தது.
 
உங்கள் "ஈழநானூறும்,புலப்பெயர்வுப் படலத்தின"; ஒரு சிறு துண்டே இப்படியென்றால் முழு நூலிலும் என்ன அபத்தம் உண்டோ யாரறிவார்?
 
மீளவுஞ் சொல்கிறேன்: வரலாற்று நிகழ்வுகளை தனிப்பட்ட ஒருவர் எழுதிவிட முடியாது.அது, பற்பல ஆய்வுகளுக்குள் உட்படுத்தப்பட்டுக் கூட்டாக எழுதப்பட வேண்டியது.அதுவும் மார்க்சிய-வர்க்கப் புரிதலோடு,அன்றைய சூழலில் இயங்கிய பொருளாதாரப் போக்குகளை மிகக் கவனமாகப் புரிந்தே எழுத வேண்டும்.
 
இல்லையேல் இன்னொரு சாண்டில்யன் பாணியில்தாம் இது முடியும்.
 
இந்தத் துண்டுக் குறிப்பே மிக அபத்தமானமுறையில் வரலாற்றையும், அதன் பாத்திரத்தையும் குறித்துச் சொல்கிறதென்றால்,அச்சில் வரும் முழு நூலது உள்ளடக்கமும் எத்தகைய புரிதலைத் தரப்போகிறது நமது இளைய தலை முறைக்கு?
 
சமூக நடாத்தைகளை பரபரப்பு முறையில் எழுதி விற்க முடியாது.இது சுத்த சிறுபிள்ளைத் தனமானது!இத்தகைய எழுத்து, ஏன்?-என்று கேள்வி கேட்டுக்கொண்டால்,அதன் அவசியம் எதற்கென்று புரியும்.
 
எழுத வேண்டுமென்பதற்காக எழுதி, நமது மக்களை மேலும் மொட்டையடிப்பது சமூகத்துக்குத் தீங்கு விளைவிக்கும்.-அவ்வளவுதாம்.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
26.07.09