மிழ் பேசும் மக்களது வரலாற்று மண்ணான வடக்கு- கிழக்கு மாகணங்களை கூறு போட்டுத் தமிழர்களைப் பிரித்தெடுத்துத் தனது நோக்கத்தை நிறைவுப்படுத்துவதற்காகவே செல்வநாயகத்தின் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற ஓட்டுக்கட்சியை அமெரிக்க ஏகாதிபத்தியம் நிதியளித்துக்காத்து வந்தது.

 

இத்தகைய கட்சியின் செயற்பாடு இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடு எந்தப் பொழுதிலும் தீர்ந்துவிடக்கூடாதென்பதில் அன்று மிகக் கவனமாகச் செயற்பட்டது.அதன் பாரம்பரியக் காட்டிக் கொடுத்தல்,குழிப்பறிப்புகளின் நீட்சி இன்றைய புலிப்போராட்டமாக நீண்டு மக்களைக்ப் பிளந்து கொன்றபின்,புலிகளை அழித்துக் கருணா-டக்ளஸ்,பிள்ளையான் என மேலும் விரிகிறது.
 
அன்று, இத்தகைய தமிழர் தலைமைகள் சிங்களக் கட்சிகளோடு செய்த ஒப்பந்தங்கள் முரண்பாடுகள் பின்பு அதையே சாட்டுவைத்து அவற்றைச் செயற்படுத்த முடியாத இனவாதச் செயற்பாடுகள்,மற்றும் தமிழ் பேசும் மக்களுக்குள் மிகக் கேவலமாகப் பிரதேசவாத ஒடுக்குமுறை,சாதிய மற்றும் பெண்ணடிமைத்தனத்தையும் மிக நேர்த்தியாக ஊன்றியபடி அந்நியர்களின் கட்டளைகளையேற்று நம்மைக் கழுத்தறுத்த வரலாறு உண்மையானதாகும். இதைத் தொடர்ந்து இருத்தி வைப்பதற்காக இன்றுவரையும் இலங்கை அரசியலில் அமெரிக்காவும்,மேற்குலகமும் மிகக் கவனமாகச் செயற்படுகிறது.

இத்தகைய பார்வை அதன் வெளியுலக நீண்டகால நலன்களின் அடிப்படையிலானது.இங்கே,உலக நாணய நிதியம் மற்றும் உலக வங்கி இலங்கையைத் தமது எஜமானர்களுக்குக் கீழ்படிய வைக்கும் கடன் நிதிகளால் தத்தெடுக்கின்ற சூழலில், இக்கடன் நிதிகளையும் அதைச் சுற்றிய கட்சி-அரசினது சாரங்களையும் புரிவது அவசியம்.இதன் வழி நம்மை மொட்டையடிக்க முனையும் முன்னாள் ஆயுதக்குழுக்களது இன்றைய ஓட்டுக்கட்சி அரசியலை எவர்கள் தீர்மானிக்கின்றனர் என்பதை நாம் புரியமுடியும்.இவர்களது பின்னே நிழலாக விரியும் அதிகார வர்க்கம் மேலும் நமது மக்களை முட்டாளாக்கித் தமிழ்பேசும் மக்களது உரிமைகளை அந்நியர்களுக்குத் தாரைவார்க்கிறது.இது குறித்துச் சற்று நோக்குவோம்.
 
உலக வங்கி-நாணயநிதியக் கடன் நிதிகளும்,அதன் நோக்கமும்:
 
புலிகளது இராணுவ இருப்பை அழித்தபின் இலங்கையில் மாறிவரும் அரசியற் சூழல் மிகவிரைவாகப் புரிந்துகொள்ளத்தக்க சிலகெடுதிகளை உணர்த்துகிறது.இந்தக் கெடுதிகள் யாவும் இனவாத அரசியலின் வெற்றிடத்தை மீள நிறுத்துவதற்கும்,இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் நீறுபூத்த நெருப்பாக இருப்பதற்கான அரசியலாகவும் இருத்தி வைக்கப்படுவதூடாக இலங்கையின் சுயவளர்ச்சி இல்லாதாகப்படுகிறது.இந்தச் சுழற்சிக்கு ஏற்றதான அந்நியக் கடன்கள் இலங்கையை மிகவிரைவாக முற்றுகை இடுகின்றன.உலக வங்கி-நாணய நிதியத்தின் நிபந்தனைகள் பெரும்பாலும் இலங்கையின் எதிர்கால அரசியல்-பொருளாதார முன்னெடுப்பின்மீதான செல்வாக்கை தனக்குள் கொண்டதன் வியூகமாகவே இருக்கின்றது.இதன்படி இலங்கை மக்களது உண்மையான முரண்பாடுகள் மழுங்கடிக்கப்பட்டு இனங்களுக்கிடையிலான ஆதிக்க அரசியல் விருப்புகளைக் கட்சி அரசியலூடாக மக்களைக் கட்டிப்போடும் கபடம் நிலவுகிறது.
 
"ஈழப் போர்"முடிவுக்குக் கொணரப்பட்டதன்பின் மக்கள் தமது உண்மையான முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்கும் சூழல் இதன்படி இல்லாதாக்கப்பட்டு, மக்களை "அபிவிருத்தி-மக்கள் நலத் திட்டம்"எனும் மாயமான்களால் கட்டிப்போடுவதற்கும்,இதனூடாகப் பாராளுமன்றச் சாக்கடையில் நீச்சலடிக்கும் இன்னொரு சுற்றை இனங்களுக்கிடையிலான முரண்பாட்டுக்குத்"தீர்வு"என வகுக்கப்படுகிறது.இதுவரை போரைச் சொல்லி இலங்கையின் பொருளாதார முரண்பாட்டையும்,அன்றாட விலைவாசி உயர்வையும் குறித்த மக்களது அதிருப்தியையும்,அதற்கெதிரான கவனத்தையும் திசைதிருப்பியது இலங்கை ஆளும்வர்க்கம். இப்போது அந்நியக்கடன்களால் தமது இருப்பை மேலும் நிலைப்படுத்த முனைகிறார்கள்.இதுவே, இலங்கை ஆளும் வர்க்கத்து அந்நிய எஜமானர்களதும் நோக்குமாகும்.
 
இதன் கெடுதிகள் இலங்கையில் அடுத்த மூன்று தசாப்த காலத்துக்கு மேலும் புரட்சிகர-வர்க்க உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்ட இலங்கையாகவும்-அந்நிய வலையில் வீழ்த்தப்பட்டு ஒட்டச் சரண்டப்படும் இலங்கை மக்களாகவும், அனைத்து இலங்கை மக்களும் தமது எதிர்காலத்தை எதிர்கொள்வதாகவே இருக்கும்.இதன்படி இன்று மையமுறும் சிலவற்றை இங்ஙனம் இனங்காண முடியும்:
 
உலகத்தில் வளர்ச்சியடைந்த கலாச்சாரங்கள் சமீபத்துப் பொருளாதார அதிர்வுகளால் நாசமாகப் போகும் இன்றைய நிலையில்,மேலிருந்து கீழ் பங்கீடு வற்புறத்தப்படுகிறது.உற்பத்திச் சக்திகளைத் தமது கட்டுப்பாட்டில்வைத்திருக்கும் வர்க்கத்திடமிருந்து உழைப்பவர்களுக்குச் சில சலுகைகளை தருவதற்கான முறையில் மேலிருந்து கீழ் நோக்கி செல்வப் பங்கீட்டைக் குறுக்கிறது மேற்குலக உற்பத்தி ஒழுங்கு.இலங்கையை இங்ஙனம் ஒரு திட்டத்துக்குள் அவர்கள் உள் வாங்குகிறார்கள்.இலங்கையின் நிலவும் அரச அமைப்பைக் காப்பதற்கான தெரிவினூடாக, இலங்கையைப் புரட்சிகரச் சூழல் அண்மிக்காது இருப்பதற்கான வியூகங்களே அந்நியக் கடன்களோடு வந்து சேர்கிறது.
 
(அ):இலங்கையின் பெரும் செல்வத்தை-மக்கள்மீது மறைமுக வரிச்சுமையாகக்கொண்டு பெறப்படும் பணத்தைத் தின்று ஏப்பமிடும் இலங்கை இராணுவம்,தொடர்ந்து நிலைத்திருக்க வைத்தல்.இது எப்பவும் அந்நியக் கட்டுபாட்டில் வைத்திருப்பதும்,தேவையானபோது சிதறடிப்பதற்குமான மூல உபாயம்.
 
(ஆ):சுய வளர்ச்சிக்கான பொருளாதார முன்னெடுப்பு இலங்கையில் குறிப்பட்ட வளர்ச்சி நிலையில், அத்தேசத்தின் சுயாண்மையைக் கொண்டியங்கும்.இந்த ஆபத்தைத் தடுத்தல்,அந்நிய ஒத்துழைப்போடு மக்களது பொருளாதார முன்னெடுப்பைத் தமது கட்டுப்பாட்டில் இயங்க அனுமதித்தல். இதனூடக, ஆசியாவினது மூலதனத்தை இலங்கையில் கண்காணிக்கும் பொறியைக் கொண்டியிக்குவதற்கான சரியான தெரிவை வகுப்பது.
 
(இ):இலங்கையின் மீள்கட்டுமானம் மற்றும் பொருளாதார நிர்மாணிப்புகளைத் திட்டமிட்ட உலக வங்கி-நாணய நிதியக் கடன் நிதிகளின் ஒத்துடைப்போடு தமது கட்டுப்பாட்டுக்குள் உள்வாங்குதலுக்குக் கடனுக்கான வட்டியும்,வட்டிக்கு வட்டியுமான சுமையில் இலங்கை தொடர்ந்து சுரண்டி, அதனது அரசியல்-பொருளாதார சுயாதிபத்தியத்தை ஆசியாவிடமிருந்து பறித்து ஐரோப்பிய-அமெரிக்கக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்தல்.சீனா-இந்தியா போன்ற தேசங்களது பிராந்தியச் செல்வாக்கை கடன் நிதிகளால் மெல்லக் குறுக்குதல்.
 
(ஈ): இலங்கை தழுவிய அந்நிய உற்பத்திப் பொருள்களின் படையெடுப்பும்,அதைப் பரவலாக வாங்கும் திறனை இலங்கையில் அதிகரித்தல்.இது,மேற்குலகில் குவியும் உற்பத்தி பொருள்களும்,அந்த மக்களிடம் வாங்கும் திறன் இல்லாத சூழலை மேலும் கட்டுப்பாட்டில் வைத்து, முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறையைப் பேணதலுக்குமான ஊக்கத்தையும் இலங்கை சார்ந்து இயக்குகிறது(இந்திய-தமிழகத்து ரீ.வீ.களில் வரும் விளம்பரங்களைப் பாருங்கள்.அனைத்தும்-பல் துலக்கும் பேஷ்ட் கூட அந்நியத் தயாரிப்பே).
 
(உ):இலங்கையினது ஓட்டுக் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் குறிப்பிட்ட சூழலுக்குள் நிதி மூலதனத்தோடு இணைத்து, அவர்களையும் தமது உற்பத்தியை மறு பங்கீடு செய்யும் தரகு முதலாளியத்துக்குள் கட்டிப்போடுவது.இதனூடாக எந்தக் கட்சியும் தேசிய மூலதனத்துக்குத் தலைமை தாங்காதிருக்கத்தக்க முறையில் தேசிய மூலதனம் உருப்பெறாதிருப்பதற்கு முட்டுக்கட்டையிடல்.அண்ணளவான தேசியப் பொருளாதாரக் கொள்கை பெயரளவிலும் நிலைபெறமுடியாதிருப்பது இதன் உள்ளடக்கமாகும்.இதனடிப்படையிற்றாம்,இலங்கையிலுள்ள இனங்களுக்கிடையிலான அரசியற் கட்சிகளைப் பேரினத்தின் பொருளாதார இலக்கில் ஒன்றித்துச் செயற்படும் கட்சிகளது தந்திரமாக(பெருங்கட்சிகளுக்குள் சிறியவற்றை-இனஞ்சார்ந்த கட்சிகளைக் கரைத்தல்) இலங்கையில் திட்டமிட்டுக் காய் நகர்த்தும் அந்நிய நிறுவனங்களால் முன் தள்ளப்படுகிறது.இது பிராந்திய மற்றும் நகர்ப்புறக் குட்டி முதலாளிய வர்க்கத்தின் முற்போக்குப் பாத்திரத்தை இல்லாதாக்கும் செயலோடு தொடர்புடையது.அந்நிய மூலதனத்தால் பழிவாங்கப்படும் இவ் வர்க்கம் இறுதியாகச் சென்றடையும் புரட்சிகரப் பாத்திரத்தை,அவர்கள் இப்போது முன்னிறுத்தும் பிராந்தியக் கட்சிகளைச் செயலிழக்க வைப்பதால் வரலாற்றில் இல்லாதாக்குதல்.
 

 

இன்றைய மேற்குலகத்து உடமை வர்க்கத்துக் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை உலக நாணய நிதியமும்,உலக வங்கியும் மேற்சொன்ன முறைமைகளில் தணிப்பதற்கு முனைகின்றன.இதே அமைப்புகள் தமது எஜமானர்களுக்கு மேலிருந்து கீழ் நோக்கிய பங்கீட்டை வற்புறுத்திக் கென்றி போர்ட்டினது(Henry Ford) மிகப் பெரும் அறிவுறுத்தலை நினைப் பூட்டுகின்றனர்:

"நான் எனது தொழிலாளர்களுக்கு நியாயமான கூலியைக் டுத்தாவேண்டும்.இல்லையேல் எனது கார்களை அவர்களுக்கு விற்க முடியாதுபோகும்.நான் ண்டிப்பாக அரசுக்கு வரி கட்டியே ஆக வேண்டும்.இல்லையேல் அரசிடம் பணம் இல்லாது கும்,எனது கார்கள் ஒடுவதற்கான வீதிகளை அமைப்பதற்கு."

இது,மிகச் சிதறந்த உதாரணம் மேற்குலகப் பூர்ச்சுவா வர்க்கத்துக்கு.இதற்குள் முதலாளித்துவ உற்பத்திப் பொறி முறையின் இன்றைய நெருக்கடிக்கான பல பதில்கள் அடங்கிக் கிடக்கிறது.
 
மார்க்ஸ் பொருளதார விவாதத்தில் ஒரு முறை இப்படி எழுதுகிறார்:
 
"முதலாளித்துவத்தின் முடிவின் இறுதிக்கட்டத்தில் கிட்டங்கிகளில் பொருட்கள் நிறைந்துபோய்க் கிடக்கும்.ஆனால், அதை நுகர்வதற்கு எவரிடமும் பணம் இருக்காது".
 
இதன் அறிகுறியை இப்போது நாம் மேற்குலகில்-குறிப்பாக ஜேர்மனியில் இனங்காண்கிறோம்.இங்கே, கென்றி போர்ட்(Henty FORD) குறித்த அவரது இலக்கு மார்க்சினது சரியான ஆய்வில் இருந்து கட்டப்பட்டதாகும்.இலங்கையினது இன்றைய அந்நியக்கடன்களுக்கு இந்த இலக்கே முதன்மையானது.எனவே,மேற் காணும் பொறிக்குள் இலங்கையை வீழ்த்தும் அந்நியக் கடன் நிதிகள் இறுதியில் இலங்கையின் ஆளும் வர்க்கத்தை காத்துத் தமது இலக்கை எட்ட முனைகிறது.இது புரட்சியையும்,உழைக்கும் வர்க்கத்தையும் இலங்கையில் மிக நேர்த்தியாக ஒடுக்கும் வியூகத்தில் புலிக்குப் பதிலாகக் கடன் நிதியாக வருகிறது.
 
கட்சி ஆதிக்கமும்,அரசினது சாரம்சமும்:
 
ஓட்டுக் கட்சிகள் யாவும் இலங்கையில் முட்டிமோதும் ஆதிக்கமானது இலங்கையில் இருபெரும் கட்சி ஆதிக்கத்துள் இலங்கையின் அரசியல் நடாத்தைகளை முடக்க முனைகின்றன.இருபெரும் சிங்களக்கட்சிகளாக ஆளும் மகிந்த அரசினது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும்,எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் நிலவுகின்ற சிங்களப் பேரினவாதத்துக்குத் தலைமை தாங்க முற்படுகின்றன.இதன் தொடராக மெல்ல அரசியலாகும் இனவாதக் கண்ணோட்டமானது இலங்கைப் பொருளாதார நகர்வுகளுக்குக் குறுக்கே கோடுகிழிப்பதைத் தவிர்த்தபடி எல்லோரையும் உள்வாங்கின்ற கட்சியாதிக்கத்துள் சிறு கட்சிகள்-சிறுபான்மை மக்களது அடிப்படைப் பிரச்சனைகளைப் பேச முற்படுபவையாக இருப்பவைகூடக் கட்சியாதிக்கத்தின் வெறித்தனமான அரசியல்பரப்புரையில் மெலினப்படுத்தப்பட்டுக் பெருங்கட்சிகளோடு கரையும் அபாயமானது இலங்கையின் அரசு குறித்த சாரம்சத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
 
 
இன்றைய இலங்கை அரசியலில் இலங்கையில் வாழும் பல்லின மக்களது அடிப்படை அரசியல் உரிமைகள் மற்றும் குடிசார் அமைப்புகளை மறுப்பதற்கான அரசியல் நடாத்தையாகப் பெருங் கட்சியாதிக்தின் பிடியுள் சிக்குண்டுபோகும் ஓட்டுக் கட்சி நலனாக இலங்கையின் ஜனநாயகப் பொதுச் சூழல்
மாற்றப்படுகிறது.இதன் தொடராக, ஐக்கிய தேசியக் கட்சியினது அடுத்தகட்டத் தேர்தல் நகர்வுக்குள் பூர்வீகக் குடிகளது பொருளாதார அபிவிரித்திக்கான திட்டமெனும் போர்வையில் "பூர்வீகக் குடிகள் யோசனைத் திட்டம்"எனும் அரசியல் வியூகம் பெருத்த தேர்தல் வெற்றிக்காகச் சிங்கள ஆளும் வர்க்கத்துள் மையங் கொள்கிறது.இது,-மேற்குலகச் சார்புடைய பகுதி-ஐக்கிய தேசியக் கட்சிக்கு முண்டுகொடுத்து எதிர்காலத்தில் தமது நலன்களை எட்டுவதற்கானவொரு ஆட்சியைக் கொணரத் துடிக்கிறது.
 
 
மேற்குச் சார்புடைய இப்பிரிவு,இலங்கையினது உழைக்கும் மக்களை எந்தவுரிமையுமற்ற வெறும் கொத்தடிமைகளாக்கும் இனவாதக் கருத்தமைவுகளுடன், முழுதும் அவர்களது(உழைக்கும் வர்க்கம்) நலனுக்கான அரசியலாகக் காட்டப்பட்டு வருகிறது.பெரும்பான்மையின் ஓட்டுக்களைக் குறிபார்க்கும் கட்சிகளது தேர்தல் வியூகத்தில் சிறுபான்மை மக்களது எந்தவகைக் குரலும் பெருங்கட்சியாதிகத்துள் மூழ்கடிக்கப்படுகிறது.

 

இதைத் தட்டிக் கேட்கத் துப்பற்ற டக்ளஸ் போன்ற மக்கள் விரோதத் தலைமையால் பரப்புரை செய்யபப்படும் பொய்மையானது "அரசோடு பகைக்கப்படாது-பெரும் கட்சிகளோடு முரண்படப்படாது" எனும் சந்தர்ப்பவாதமாக இருக்கிறது.இத்தகைய சந்தர்ப்பவாத அரசியலில் அறுவடையாகும் கட்சியாதிக்கமானது இலங்கையில் இருபெரும் கட்சிகளது தெரிவில் ஆட்சி-ஜனநாயக நடாத்தை மிக மோசமாகப் பாதிப்படைவதில் அனைத்து அதிகாரமும் சில கட்சித் தலைவர்களது குடும்பத்தைச் சுற்றியும் அவர்களது பொருளாதார நலனை முதன்மைப்படுத்தியும் குறுகி,மக்களைக் கொத்தடிமைகளாக்கும் சதிவலைக்குள் வீழ்த்தப் போகிறது.இத்தகைய வலையானது மேலும் சிங்களப் பேரினவாதத்தை மீள் மலர்ச்சியடைய வைப்பதற்கான சாத்தியப்பாட்டை கட்சி அரசியலுக்குள் மெல்ல உள்வாங்குவதாகவே இருக்கிறது.
 
 
இலங்கையின் அரச தந்திரமானது மிக நேர்த்தியாகத் தமிழரின் அரசியல் வாழ்வைப் படுகுழியில் தள்ளித் தமிழ்பேசும் மக்களை மீள முடியாத அரசியல் வறுமைக்குள் இட்டுள்ளது.புலிகளின் அழிவோடு தமிழ்பேசும் மக்களுக்குச் சோற்றுப் பார்சலை வழங்கிப் பெரும் புரட்சிகரமான விடுதலையை மக்கள் பெறுவதற்குத் துணை நிற்கிறது இந்தியா!ஆரம்பத்தில் பற்பல குழுக்களை உருவாக்கி இலட்சம் மக்களைக் கொல்லத் தூண்டிய இந்திய அயலுறுவுக் கொள்கை, இன்று தமிழ்பேசும் மக்களை வெறும் கையாலாகாத இனமாக்கி விடுகிற அதே தளத்தில், இலங்கையின் மற்றைய சிறுபான்மை இனங்களான முஸ்லீம் மற்றும் மலையக மக்களை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தி உளவியல் அச்சத்தைச் செய்கிறது இன்றைய கட்சி ஆதிக்கம்.இத்தகைய ஆதிக்கத்தை நிலைப்படுத்திச் சிறுபான்மை இன மக்களது அரசியல் கோரிக்கைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் சதியில் வல்லாதிக்கத் தேசங்களே இலங்கைக்கு வகுப்பெடுக்கின்றன.
 
இதை ஜனநாயக விரோதமான செயலாகவே நாம் பார்க்கிறோம்!
 
இந்தக் கட்சி ஆதிக்க இராஜ தந்திமானது தமிழ்பேசும் மக்களின் அனைத்து வளங்களையும் நிர்மூலமாக்கும் பாரிய அழிப்பு அரசியலை முன்னெடுப்பதாக இருக்கிறது.இதன் உள்ளார்ந்த நடவடிக்கையாக ஜனநாயகத் தற்கொலை இலங்கையில் நடந்தேறுகிறது. இதைத் தேச ஒருமைபாடு என்ற கோதாவில் பிரிவினைக்கு எதிரான அரசியல் நடாத்தையாகச் செய்யக்கூடிய நிலையில், இலங்கை அரசியல் உள்ளது.இலங்கையின் இராணுவமானது தவிர்க்க முடியாத அனைத்துக் குடிசார் உரிமைகளையும் தனது நேரடியான கண்காணிப்பின்கீழ் கொணர்ந்து, மக்கள் மத்தியில் தீர்க்கமானவொரு அடக்குமுறைய நிரந்திரமாக விதைத்து பாசிசமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது இலங்கை அரசு.
 
இந்நிலையில்,பெரும் கட்சியோடு பகமையை வளர்க்காத அரசியலைச் செய்வதாகவும்,இதன்மூலம் "தம்மையும் காத்துத் தமது மக்களையும் காக்கும்" வியூகத்தைக் கொண்டிருப்பதாக டக்ளஸ் ஒரு பேடித்தனமான சந்தர்ப்பவாத அரசியலைத் தொடக்கி வைத்துப் பேசுகிறார்.இவர்களுக்குத் தமது தலையைக் காப்பதில் பெரும் வேட்கைகொண்ட இலாப நோக்கு இருப்பதால், இங்ஙனம் பேச வைக்கிறது அவர்கள் பின்னாலுள்ள மூலதனம்.
 
கட்சி அரசியல் பகமையைக் காரணமாக வைத்துத் தமிழ் பேசும் மக்களுக்கு எந்தவுரிமையையும் பெரும் கட்சிகள் தந்துவிடாதுபோகும் சூழலைத் தடுப்பதற்குப் பெரும் கட்சிகளோடு இணைந்து அவர்களது தயவில் பாராளுமன்றஞ் சென்றுவிட்டால் தமிழுர்களுக்குத் தீர்வு முன்வைக்கப்பட்டு,அவர்களது அரசியல் வாழ்வும் சிறந்து-உரிமையும் எட்டப்பட்டு விடுவதுமாகத் தமிழ் தலைமைகளெனும் போர்வையில் உலாவரும் மாற்றுக் குழுக்கள்-கட்சிகள் சிங்கள அரசிற்குத் துணைபோகிறது.இந்த அரசியலில் தமது கட்சி-இயக்க நலன்களை எட்ட முனைதல் முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களுக்கும் எதிரான வரலாற்றுத் துரோகத்தை மீளச் செய்வதைத் தமிழ் பேசும் மக்களுக்கு "ஜனநாயகம"; கொணர்வதாகச் சொல்வது முற்று முழுதான சுத்துமாத்து அரசியலாகும்.இதை டக்ளஸ்-கருணா போன்ற மிகக் கெடுதியான பதவி-பணவெறிபிடித்த முன்னாள் ஆயுததாரிகள் மக்களது பெயரால் தமது துரோகத்தனத்தை ஒப்பேற்றி வருகின்றார்கள்.இந்த நிலையில் ஓட்டுக்கட்சிக்கும் அரசுக்குமான உறவுகள்,இலங்கைச் சூழலில் மிக நேர்த்தியாக அறியப்பட்டாகவேண்டும்.
 
எனவே,இன்றைய இலங்கை அரசினது சாரம்சத்தை வெளிப்படுத்துவது மிகமிக அவசியமானது.அதாவது, அதன் நடவடிக்கைகள் மற்றும் ஸ்தாபனத்தின் மிகவும் முக்கியமான-பிரதானமானகூறுகளைச் சுட்டிக்காட்டுவதே அதன் சாரம்சமாகும்.சிங்களப் பூர்ச்சுவாக்கள் தமது அதிகாரத்தை நிலைப்படுத்துவதற்காக அரசினது பாத்திரத்தை நியாயப்படுத்துவதற்கான கருத்தியலைச் சதா திணித்து அதை அம்பலப்பட்டுப்போகாதபடி காத்துவருகின்றார்கள்.இதற்கு ஓட்டுக்கட்சி அரசியலானது மிகப்பெரும் ஒத்துழைப்பை நல்கி மக்களது ஓட்டுப்போடும் சுதந்திரமே இந்த அரசினது மக்கள் சார்புக்கு ஒரு எடுத்துக்காட்டாகப் பொய்யுரைக்கின்றனர்.இவர்களது பின்னே அந்நிய மூலதனம் வழி காட்டுகிறது.
 
இதனால்தான் நாம் இந்தப் பாராளுமன்றச் சாக்கடையை நம்பி ஏமாறுகிறோம்-அரச சட்ட நிர்ணயத்தை நம்பியும்,நீதிமன்றங்கைளை நம்பியும்"சட்டத்தின் முன் அனைவரும் சமம்"என்று கனவுகாண்கிறோம்.இந்தக் கனவை இன்னும் ஒருபடி மேலே இலங்கையில் எடுத்துச் செல்லும் மகிந்தாவினது கட்சிக்கும் அதற்குப் பின்னாலுள்ள அதிகார வர்க்கத்துக்கும் ஒத்தூதுவதையே கருணா-டக்ளஸ் போன்றவர்கள்அரசோடு இணைந்து புதிய இலங்கையைப்படைப்பது என்று பூசிமெழுகிவிடப்பார்க்கின்றனர்.இந்தப் பிராடுகள் செய்யும் அரசியலானது இனிவருங்காலத்தில் இலங்கைச் சிறுபான்மை இனங்களை அரசியல் ரீதியாகப் பலமற்ற மக்கள் கூட்டமாக்கும்.
 
இந்த அரச அமைப்புச் சொல்லும் "தேசிய ஒருமைப்பாடு,இன-மத ஒற்றுமை" என்பதெல்லாம் நம்மை அடிமைப்படுத்திச் சுரண்டி ஒடுக்கும் கருத்தியல்களே!நாமிதில் கவனமாக இருப்பது உழைக்கும் வர்க்கத்தின் விடுதலையைத் துரிதப்படுத்தும்.
 

இலங்கையினது நீண்டகாலக் கனவானது தற்போது பொதுவரங்கத்தில் நிசமாகிறது!
 
அரசியல் ஆதாயங்கள் மக்களின் அழிவுகளில் எட்டப்படுவதாக மாறிப்போனது இன்று நேற்றல்ல, இலங்கையில்.எனினும், இத்தகைய சூழலில் இழப்புக்குள்ளாகும் அப்பாவி மக்கள்தம் வாழ்வும் சாவும்,நேர்மையற்ற முன்னாள் இயக்கங்களால்-இந்நாள் கட்சிகளால்,அந்நியத் தலையீடுகளால்- அரசியல் வாதிகளால் மீளரசியலாக(ஓட்டுக் கட்சி அரசியல்) மாற்றப்படும்போது நாம் பொறுமையிழக்கிறோம்.மாறிமாறிப் பதவிக்குவரும் கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்து அப்பாவி மக்களை ஏமாற்றும் அரசியலை முன்னெடுப்பதற்குப் புதிய புதிய விளக்கங்களை பூர்ச்சுவாக்கள் தமது ஏவல் நாய்களான கட்சிகள் மூலம் தருகிறார்கள்.இலங்கையின் கட்சியாதிகத்துள் நேரடியாகவே பூர்ச்சுவாக்கள் தமது அதிகாரத்தை நிலைப்படுத்தி இலங்கையிலிருந்த பெயரளவிலான மனிதவிழுமியங்களையும் இல்லாதாக்கி, இந்தத் தேசத்தை மக்கள் விரோதத் தேசமாக்கியுள்ளார்கள்.
 
இங்கே, அரசின் செயற்பாட்டை விளங்க முற்படும்போதுஅதன் எடுபிடி அரசியல் பிழைப்புவாத நாய்களையும் புரிந்திட முடியும்.
 
வர்க்க உணர்வு குறித்த புரிதல்:
 
இந்த மனித சமூகமானது வர்க்க சமுதாயமாகப் பிளவுண்டு கிடக்கிறது.எனவே, இந்த மனிதக்கூட்டு வர்க்கச் சமுதாயமாக இருக்கிறது. வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அடிப்படை.இதை முதலில் புரியாதவர்கள் "தாம் சார்ந்த" குட்டிமுதலாளிய இயக்கங்களை,மற்றும் தேசிய விடுதலை,தனிநாடு என நீலிக் கண்ணீர் விடுவது அவர்களது அறிவிலிப்போக்கால்தான்.இல்லையென்றால் புலம் பெயர்ந்து வாழும் மேற்குலகில் புலிகள் எடுக்கும் இப்போதைய புதிய வேடங்களையும் "தேசத்தினதும்-ஈழத்தினதும்" பெயரால் நம்புவதற்கும் ஒரு கூட்டம் தயாராகவே இருக்குமா?இதை நோக்கித் தேசபக்தர்கள்(அன்றைய தமிழீழச் சஞ்சிகையினது இன்றைய பாத்திரம் இஃது) கட்டுரைகளை எழுதிப் புலிகளுக்கு மீளவும் ஒரு இருப்பு உணர்த்த வெளிக்கிடுகிறார்கள்.இதன் மூலம் அனைவரையும்-அனைத்துத் தரப்னையும் ஐக்கியப்படுத்தி "தேசிய விடுதலையை"ச் சாதிக்க முனைய வேடங்கள் தயாராகிறது.இங்கே,இவர்களுக்குப் பின்னால் பெரும் நிதியும் அதைக் குறித்த அரசியலும் இருக்கிறது.இவர்களது பின்னணி தமிழ் பேசும் மக்களது நலனைக் காயடிப்பதாகவே இருக்கும்.
 
இந்த நிலையில்,சுரண்டுபவர்களுக்கும்,சுரண்டப்படுபவர்களுக்கும் சமமாக எந்த அரசும் காரியமாற்றுவது உண்டா?
 
கிடையாது!
 
இதை மனிதில் இருத்தும்போதே அடுத்த கட்டத்தைப் புரிவீர்கள்.
  
அரசு மக்கள் சமூகத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை ஒடுக்கும் ஒரு மாபெரும் வடிவம்.இதைப் பூர்ச்சுவா அரசு என்பார்கள் சமூக விஞ்ஞானிகள்.அரசினது வர்க்கத் தன்மையைப் புரியாதவர்களே குட்டி முதலாளிய இயக்க-ஓட்டுக் கட்சி அரசியல்வாதியை நம்பி ஏமாறும் இளிச்சவாயர்களாக இருக்கிறார்கள்.இதனாற்றாம் இலங்கையில் கருணாவையும்-பிள்ளையானையும்கூட மக்கள் தமது மீட்பர்களாகக் கருதும் ஒரு இருண்ட அரசியல் விரிகிறது.இத்தகைய அரசியல் இப்போது முன்வைக்கும் தீர்வு-அரசியல் உரிமை என்பதெல்லாம் வெறும் ஏமாற்று முடிச்சுகளாக முன் தள்ளப்பட்டு மக்களை ஏமாற்றும் தந்திரங்களாக இவை இலங்கைச் சூழலில் நடந்தேறுகிறது.இதைச் சட்வாக்கத்துள் திணித்து வசதியாக மறைத்து நாட்களை நீடித்தபடி காலத்தை ஓட்ட முனைவதில் சிங்கள ஆளும் வர்க்கத்தின் கனவுகள்(இலங்கையில் சிறுபான்மை இனங்களை அடிமை கொள்ளல்-அரசியல் அநாதைகளாக்குதல்.) மெல்ல நிறைவேறுகின்றது.
 
என்றபோதும்,எவ்விதமான அரசினது சாரம்சமும் அதன் பொருளாதார மற்றும் சமூக அடிப்படையினால் மட்டுமே நிர்மாணிக்கப்படுகிறது.இதன் வெளியில்தான் அதன் சாரம்சம் தீர்மானிக்கப்படுகிறதென்பதை மறைப்பதுதான் இன்றைய இலங்கைத் தரகு முதலாளியத்தின் சூழ்ச்சியாகும்.இங்கேதான் "சமஷ்டி,அரசியல் யாப்பு,குடியரசு,பாராளுமன்றம்,நீதிமன்றங்கள்-ஜனநாயகம்,மனிதவுரிமை"என்ற முகமூடிகளோடு தரகு முதலாளித்துவக் கட்சிகள் நம்மை ஏமாற்றி வருகின்றன.இன்றைய கட்சிகளே-இயக்கங்களே பெரும் உடமை வர்க்கமாக மாற்றப்பட்டு இலங்கை-இந்தியப் பூர்ச்சுவா நலன்களைப் பேணும் நம்பத்தகுந்த அடியாளக இருக்கிறது சிங்கள மற்றும் அந்நிய ஆளும் வர்க்கங்களுக்கு.
 
பூர்ச்சுவா அரசானது உடமை வர்க்கத்தின் நலனைக் காக்கும் வடிவமாக இருக்கும்போது,அதை அங்ஙனம்மின்றி மொத்த மக்களுக்குமானதாகக் காட்டும் கைங்காரியத்தைச் செய்வதுதான் இந்த வலைப் பின்னலுடைய ப+ர்ச்சுவாக் கட்சிகள்-இயக்கங்களின் வேலை.இன்றைக்குக்-டக்ளஸ் வகையறாக்கள் பேசும் கருத்துக்களும்,கட்டமுனையுங் கருத்தும்-கட்சி அரசியலும் இதன் பன்முகத்தன்மைகளைத் தொடர்ந்து கயமைத்தனத்துடன் விளக்கித் தமது எஜமானர்களுக்கு இசைவாகச் செயற்படுகிறது.இது நல்ல உதாரணம் நமக்கு.அரசின் சிக்கலான பன்முக நிகழ்வுப்போக்கைப் புரிந்து கொள்வதற்கு அதைப் பற்றிய தெளிவான விஞ்ஞானப் புரிதல் அவசியமாகும்.இந்த அறிவைப் பெறாத பெரும்பான்மையான மக்கள், கட்சி அரசியல்வாதிகளை நம்பி அவர்களால் தமக்கு நல்லது நடப்பதாக ஏமாந்துபோகிறார்கள்.
 
இலங்கையின் மகிந்த தலையிலான அரசு இலங்கை மக்களின்-சமூகத்தின் வளர்ச்சியை மட்டுப்படுத்துகிறது,சமூக முரண்பாட்டைத் திசைதிருப்பி சமூக வளர்ச்சிக்கட்டத்தை மட்டுப்படுத்துவதில் பூர்ச்சுவா வர்கத்துக்குத் துணைபோகிறது.அதன் தாக்கத்தால் பொருளாதார உறவுகளில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.உற்பத்திச் சக்திகளுக்கும்,உற்பத்தி உறவுகளுக்குமிடையிலான முரண்பாடு தீவிரமாக ஒடுக்கப்படுகிறது.இது வலு கட்டாயமாக உற்பத்தி உறவுகளை அந்த உற்பத்திச் சக்திகளோடு ஜந்திரத் தனமாக இணைத்து அடிமைகளாக மக்களைக் கட்டி வைத்திருக்கிறது.இங்கே, தொழிலாள வர்க்கத்தைப் பற்பல கூறுகளாகக் கூறுபோட்டுத் தமது வக்கிரமான அரசியலைக் காத்துவருகிறார்கள்.இனங்களுக்கிடையிலான பிரத்தியேகக் கூறுகளை(அதீத தேசியவாத முனைப்புகள், மொழிசார்ந்த,பண்பாடு சார்ந்த,மதம் சார்ந்த மதிப்பீடுகள்) முன் தள்ளி ஒருவரையொருவர் மோதவிட்டுத் தமது எஜமானர்களைக் காப்பதிலிருக்கும் கயமைத் தனத்தைப் புரிவது அவசியம்.
 
இலங்கை அரசுப் பொறிமுறையென்பதே அரசுச் செயற்பாட்டை நிறைவேற்றுவதற்கு நிறுவப்பட்ட அரசு உறுப்புகளான இந்த வடிகட்டிய பொறுக்கி அரச தலைவர்,நாடாளுமன்றம்,அரசாங்கம்,அமைச்சர்கள்,பொது ஒழுங்கை நிலைநாட்டுவதாகக் கூறப்படும் அரச சட்ட நிர்ணயம்- வன்முறை வடிவங்கள்(பொலிஸ்,இராணுவம்,(அ)நீதி மன்றங்கள்...)இப்படி அதன்கட்டுப்பாட்டிலுள்ள செய்தித்துறை,மற்றும் புலம் பெயர் அரச சார்ப்பு எடுபிடிகளென இது நீண்டுகொண்டே போகிறது.இவைகளைக் கட்டுப்படுத்தித் தமது இலக்குக்குள் வீழ்த்துவதே அந்நியக் கடன் நிதிகளது உள்ளார்ந்த இலக்கு.இதை வெற்றிகொள்ளும் கருத்தியல் யுத்தம் இப்போதைக்கு இதன் பாதகங்களை அலசுவதில் மையமுறும்.இதை மறுத்துவிட்டு இலங்கையினது புரட்சிகர அரசியல் இலக்குக் குறித்து நகர முடியாதென்பது எனது தீர்மானகரமான நம்பிக்கை.
 
ஏனெனில், அந்நிய நிதிக்கடன்கள் யாவும் தமக்குச் சார்பான குழுக்களைப் "பிரேதச நலன்,சாதிய நலன்,பெண்ணடிமை விலத்தல்-விடுதலை,ஊடகவியலாளர்களைக் காக்கும் அமைப்பு,தலித்துவ முன்னேற்றம்-உரிமை வென்றெடுத்தல்" என வகைப்படுத்தி இயங்க அனுமதித்தே இலங்கைப் புரட்சிக்கு ஆப்பு வைக்கிறது.மேற் சொன்ன முரண்பாடுகளை ஒரு புரட்சிகரக் கட்சி தனக்குள் உள்வாங்கித் தனது தலைமையில் இதை வழிநடாத்தும்போதுதாம் அந்நிய நலன்களைத் தடுத்துவிடமுடியும்.இல்லையேல் இத்தகைய அவசியமான போராட்டங்களுக்கூடாக அவை நம்மை மொட்டை அடிக்கும் சாத்தியமே நிலவும்-இப்போது அதுவே உண்மையாகவும் இருக்கிறது.இது வர்க்க உணர்வைச் சிதைத்தே மேலும் அரசியல் அமுக்கத்தைக் கொண்டியங்குகின்றன.இது புரட்சிகரச் சூழலை மிக நேர்த்தியாக மறுப்பதில் நியாயத்தை உரைக்கும்-நண்பர் சுகன் இலங்கையின் தேசிய கீதத்தை மெட்டுக்கட்டிப் படிப்பது போன்றென்றும் வைத்துக்கொள்ளுங்களேன்.
 
இறுதியாக...
 
இந்த இலங்கை அரச அமைப்பில் எந்த உழைப்பாளிக்கும் எதுவும் கிடையாது என்பதை வன்னிக்குள் மூன்று இலட்சம் மக்களை நாயிலும் கேவலமாகக் கட்டிவைத்து அடிமைப்படுத்தும் சிங்களவெறித் தனமிக்க இலங்கை அரசு நிரூபித்தே வருகிறது.இதைத்தாம்"நாங்கள் புதிய இலங்கையைக் கட்டி அமைக்கிறோம் மகிந்தா தலைமையில்"எனக் கருணாவென்ற பொறுக்கி பல முறைகள் ஓலமிடுகிறான்.இதையே டக்ளஸ் இன்னும் சதி மிக்க அரசியல் மொழியில்"தமிழ்பேசும் மக்களது உரிமைகளை பெரிய கட்சிகளோடு பகைக்காமல் அரசியல் செய்து"நம்மையும் காத்து,நமது மக்களையும் காப்பது"என்று தமிழர்கள் சார்பாக தனது இருப்பை-வர்க்கச் சார்பை மிகத் திட்டமிட்டபடி மறைக்கின்றார்.இது,அரசை நேரடியாக ஆதரிக்கும் கருணாவைவிட மிகக் கெடுதியானவொரு சூழ்ச்சிமிக்க போக்கு.நம்மைக் கருவறுக்க நமக்குள்ளேயே முரண்பாடுகளை வளர்த்து அவற்றைத் தமது அரசியல் அறுவடைக்காகக் காரியமாற்ற அந்நியர்கள்-அவர்களது கடன் நிதிகள் நமது மக்கள்சார்ந்து இயங்கும் அரசியலை அழித்துள்ளார்கள்.இதற்கு, இத்தகைய அரசியலில் பல முரண்பாடான விளக்கங்களை இத்தகைய மக்கள்விரோதிகள் சதா எமக்குள் விதைக்கிறார்கள்.
 
தமிழர்களுக்குக் கால்வயிற்றுக்குக் கஞ்சியே மேலென்பதுதான் இன்றைய அந்நியத் தேசங்களதும், இலங்கையில் மகிந்தா அரசினதும் பதிலாகும்!இந்த அந்நிய மயப்படுத்தப்பட்ட இலங்கை அரச அமைப்பில் தமிழர்களுக்குச் சேவை செய்வதா தமிழ் ஓடுகாலி அரசியல்வாதியன் வேலை? இவர்களை ஒட்ட வேரறுக்க வேண்டுமானால் முதலில் அந்நியக் கடன் நிதிகளையும் அவர்களது அரசியல் இலக்ககளையும் தோற்கடிக்கும் அரசியலைப் புரட்சிகரக் கட்சிகளென்பவை முன்னெடுத்தாக வேண்டும்.ஆனால்,புரட்சிகரக் கட்சிதாம் இப்போதைக்கு நம்மிடம் இல்லை.எனவே,தனிநபர்கள் தமது எல்லைக்குட்பட்ட கதையாடல்களாக இவ்வுண்மைகளைக் குறுக்கிச் செல்வதும்தாம் இன்றைய துர்ப்பாக்கியம்.இதனால் பிரபாகரனை நம்பிய தமிழர்கள் டக்ளஸ்-கருணா,பிள்ளையானையும் நம்புவது மட்டுமல்ல அவர்களால் முன் தள்ளப்படும் அரசியலையும் நம்பிக்கொள்வது வருங்காலத்தில் நடைபெறும்.இதுதாம் அந்நியக் கடன்களதும் இலக்கு.அவர்களுக்கு விரும்பிய இலங்கை இதனூடாகத் தகவமைக்கப்பட்டும் விடும்.இந்த அபாயம் அவசியமாகக் கவனத்தில் எடுக்கப்பட்டு புரட்சிகரமாகப் போராடுவது அவசியமானது.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
23.07.09