பயங்கரவாதத்திற்கெதிரான போரின் ஒரு கட்டமாக பிலிப்பைன்ஸ்சிற்கு அமெரிக்க இராணுவம் போகின்றது, என அறிவித்த உடனேயே அது பல நினைவுகளைக் கிளறிவிட்டது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்கா ஸ்பெயினுடன் சண்டையிட்டு பறித்த காலனிகளில் பிலிப்பைன்சும் ஒன்று. அதன் பின்னர், 1946 ல், சுதந்திரம் அடையும் வரையில் பிலிப்பைன்ஸ் அமெரிக்கக் காலனியாகவிருந்தது.
சுதந்திரம் பெற்றாலும் அமெரிக்க இராணுவத் தளங்களைத் தொடர்ந்து வைத்திருக்க புதிய அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இராணுவத் தளங்களினால் வாடகைப்பணம் கிடைப்பதையிட்டு பிலிப்பைன்ஸ் அரச அதிகாரிகள் சந்தோஷப்பட்டிருக்கலாம். ஆனால், சாதாரண மக்களுக்குக் கிடைத்ததென்னவோ எய்ட்ஸ், சமுகச் சீரழிவு, அசுத்தமான சுற்றச்சூழல், போன்ற விரும்பத்தகாத விளைவுகள்தான். பத்து வருடங்களுக்கு முன்பு ஒபப்ந்த காலம் முடிந்து அமெரிக்க இராணுவம் வெளியேறியிருந்தது. ஆனால் "உலகை மாற்றிய 11 செப்டம்பர்" மீண்டும் அமெரிக்க இராணுவம் வர வழி சமைத்துக் கொடுத்து விட்டது. போன மச்சான் திரும்பி வந்த கதைதான்.
பிலிப்பைன்ஸின் தென்பகுதித்தீவுகளில் ஓடித்திரியும் ஒரு சிறிய ஆயுதபாணிக் கும்பலான "அபுசயாப்" என்ற இயக்கத்தை அடக்க வந்ததாகக் கூறிக் கொள்கிறது அமெரிக்கா. இந்த இயக்கத்திற்கும் பின் லாடனின் அல்கைதாவிற்கும் தொடர்பிருப்பதாக சர்வதேச நியாயமும் கற்பிக்கின்றது. அபுசயாப்பின் உறுப்பினர்கள் எல்லோரும் முஸ்லீம்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்களுக்குத் தீவிரமான மத-அரசியல் கொள்கைகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆட்களைக் கடத்திச் சென்று பணம் பறிப்பதுதான் அவர்களின் மிகத்தீவிரமான அரசியல் வேலை. இவர்களுக்கு உள்ளூர் மக்கள் ஆதரவுகூட அப்படியொன்றும் குறிப்பிடும்படியாக இல்லை.
உண்மையில், இன்னொரு விடுதலை இயக்கத்திலிருந்து பிரிந்தவர்கள்தான் அபுசயாப் குழுவினர். பிலிப்பைன்ஸின் தென்பகுதியல் இருக்கும் பெரிய தீவான மின்டானாவோ மற்றும் சூலு, பலவான் ஆகிய தீவுகளில் முஸ்லீம்கள் வாழ்கின்றனர். தகலொக் மொழி பேசும் பெரும்பான்மைப் பிலிப்பீனியர்களிடமிருந்து வேறுபட்ட மொழி, இன அடையாளங்களைக் கொண்டுள்ளமை வேறு விடயம். இந்தத் தீவுகள் முன்பு தனியாக ஒரு முஸ்லீம் சுல்தானால் ஆளப்பட்டன. பின்னர் அமெரிக்காவால் பிலிப்பைன்ஸ் என்ற தேசத்துடன் இணைக்கப்பட்டன. அதன் பின்னர் மற்றத்தீவுகளிலிருந்த கிறிஸ்த்தவர்கள் சென்று குடியேற ஊக்குவிக்கப்பட்டு முஸ்லீம்கள் சிறுபான்மையாக்கப்பட்டனர். பொருளாதார ரீதியாகவும் முஸ்லீம்கள் புறக்கணிக்கப்பட்டனர்.
சுதந்திரத்திற்குப் பின்னர் "மோரோ தேசிய விடுதலை முன்ணணி" என்ற இயக்கம் மின்டானாவோ தீவு தனி நாடாக வேண்டுமெனக் கூறிப்போராடியது. ஆரசுக்கெதிரான கெரில்லாப் போராட்டம் தீவிரமடைந்து இறுதியில் சமாதானப் பேச்சுவார்த்தையில் முடிந்தது. ஒப்பந்தத்தின்படி, மின்டானோவை விசேட மாநிலமாக்கி அதிகாரப் பரவலாக்கல் நடைமுறைப்படுத்தப்பட்டது. மோரோ தேசிய விடுதலை முன்ணணி ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு அரசியல் நடாத்தப்போய்விட்டது. இந்தத் தீர்வுடன் உடன்படாதவர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடரப்போவதாக கூறினர். அப்படி ஆயதங்களைக் கைவிடாத ஒருசிலரின் அமைப்புத்தான் அபுசயாப்.
மேற்கத்தைய நாடுகளின் உல்லாசப் பிரயாணிகளை கடத்தியதன் முலம் இவர்களுக்குச் சர்வதேசப் பிரபல்யம் கிடைத்தது. அதற்கு முன்னர் பல பிலிப்பைன்ஸ் நாட்டுப்பிரஜைகள் கடத்தப்பட்டிருந்தாலும், வெளியுலகில் யாரும் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால், ஒருசில அமெரிக்க, ஐரோப்பியப் பிரஜைகள் கடத்தப்பட்ட உடனேயே உலகத்தொலைக்காட்சிச் சேவைகளின் கமெராக்கள் அடர்ந்த காடுகளுக்குள் செய்தி சேகரிக்கப் போய்விட்டன. பின்லாடனின் ஆட்களைத் தேடுகிறேன் என்று கூறிக்கொண்டு அமெரிக்க இராணுவமும் காடுகளுக்குள் அபுசயாப்பைத் தேடி வேட்டையாடலாமெனப் போய்விட்டது. உண்மையில், பிலிப்பைன்ஸ் இராணுவம்தான் அபுசயாப்புடன் நேரடி மோதல்களில் ஈடுபட்டது. அமெரிக்க இராணுவம் பின்னால் நின்று ஆலோசனை வழங்கியது.
இராணுவ நடவடிக்கை தொடங்கி சில மாதங்களிலேயே அபுசயாப் தலைவர் மரணமடைய, அந்த இயக்கம் அநேகமாக அழிந்துவிட்டது என்றே பலர் கருதுகின்றனர். அதற்குப் பின்னும் அமெரிக்க இராணுவம் அங்கேயிருப்பது பலரின் கண்களை உறுத்துகின்றது. இந்த ராணுவ நடவடிக்கை ஆரம்பத்தில் இருந்தே பல விமர்சனங்களைக் கிளறிவிட்டிருந்தது. முன்னர் குறிப்பிட்டதுபோல, தெளிவான அரசியற் கொள்ளையற்ற ஒரு கொள்ளைக் கூட்டம் போல செயற்பட்ட சில நூற்றுக்கணக்கான அபுசயாப் ஆயுதபாணிகளைப் பிடிக்க அமெரிக்க இராணுவம் வரவேண்டுமா? சர்வதேசச் செய்தி ஸ்தாபனங்களில் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், இது என்னவோ காடுகளுக்குள் எலிகளைத் தேடி வேட்டையாடுவது போலுள்ளது. இனித்தான் புலிவேட்டை நடக்கப் போவதாக பிலிப்பைன்ஸ் மக்களிடையே கதை அடிபடுகின்றது.
பிலிப்பைன்ஸில் நீண்டகால அமெரிக்க எதிர்ப்புச் சக்தியாகவிருப்பது "புதிய மக்கள் படை" . பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவப்பிரிவான இது முன்பு அமெரிக்க காலனி யாதிக்கத்திற்கெதிராக போராடியது. பின்னர் அமெரிக்க சார்பு மார்க்கோசின் சர்வாதிகாரத்திற்கெதிராக கொரில்லாப் போராட்டத்தைத் தொடர்ந்தது. மார்கோஸ்சிற்கு பின்னர் வந்த ஜனநாயக அரசாங்கங்களுடன் பலமுறை சமாதானப் பேச்சுவார்தைதைகள் நடத்தப்பட்டன. இருப்பினும் இன்னும் பிலிப்பைன்ஸின் பல பகுதிகள் புதிய மக்கள் படை கெரில்லாக்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.
அமெரிக்க அரசு வெளியிட்ட வெளிநாட்டுப் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் புதிய மக்கள் படையும் இடம்பெறுகின்றது. அதனால் அவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் பிலிப்பைன்ஸிலும் வெளிநாடுகளிலும் எடுக்கப்படுகின்றன. இந்த இயக்கத்தினதும், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியினதும் சில உறுப்பினர்கள் நெதர்லாந்தில் தஞ்சம் புகுந்து அங்கிருந்து செயற்படுவதாகவும் கூறி, இவர்களின் வங்கிக்கணக்குகளில் உள்ள பணத்தை பறிமுதல் செய்யுமாறு அமெரிக்க அரசு கேட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் புதிய மக்கள் படை வெளியிட்ட அறிக்கையொன்று அமெரிக்க இராணுவம் தமக்கு எதிராகத் திரும்பினால் தாம் கடுமையான பதிலடி கொடுப்போம் என்றும், அமெரிக்க இராணுவ நிலைகள் மட்டுமன்றி பொருளாதார இலக்குகளும் தாக்கப்படுமெனவும் எச்சரித்துள்ளது.
இவற்றைவிட, அமெரிக்க இராணுவம் பிலிப்பைன்ஸில் நிரந்தரமாகத் தங்குவதற்கு பல அரசியற் பொருளாதாரக் காரணங்களும் இருப்பதாகக் கருதப்படுகின்றது. முதலாவது பூகோள அமைவிடம்: சீனாவிற்கும், இந்தோனேசியாவிற்கும் நடுவில் பிலிப்பைன்ஸ் தீவுகள் அமைந்துள்ளன. குறிப்பாக இந்தோனேசியாவில் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின் நடவடிக்கை கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை அமெரிக்கா கண்காணிக்க விரும்புகின்றது. மேலும் இந்தோனேசியா எண்ணை உற்பத்தி செய்யும் நாடென்பதால் பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இதைவிட அமெரிக்கப் பாராளுமன்ற ஒப்புதலுடன் பிலிப்பைன்ஸ்க்கு ஆயுத, இராணுவ உதவிகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்க இராணுவ வல்லுனர்களின் ஆலோசனையால் பிலிப்பைன்ஸ் இராணுவமயப்படுத்தப்படுகின்றது. ஒரு ஏழை நாடான பிலிப்பைன்ஸ் அமெரிக்காவிடமிருந்து இராணுவ உபகரணங்களையும், தொலைத்தொடர்புக் கருவிகளையும் வாங்கவுள்ளது. மறுபக்கமாகப் பார்த்தால், அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு ஒரு ஆசிய சந்தை கிடைத்துள்ளது. அமெரிக்க அரசின் இராணுவ நிதி உதவிகூட இதுபோன்ற விற்பனையைக் கருதிச் செய்யப்படுவதுதான்.
முன்புகூட அமெரிக்க அரசாங்கம் பல மூன்றாம் உலக நாடுகளுக்கான இராணுவ நிதியுதவித்திட்டத்தை முன்வைத்திருந்த போதிலும் அதற்குப் பாராளுமன்ற ஒப்புதல் கிடைக்கவில்லை. செப்டம்பர் 11 ற்குப்பின் தாராளமாகவே ஒப்புதல் வழங்கப் படுகின்றது. பிலிப்பைன்சுடன் சேர்ந்து பாகிஸ்தான், கொலம்பியா போன்ற நாடுகளுக்கும் இராணுவ நிதியுதவி வழங்கப்படுகின்றது. இந்த நாடுகளில் நிலைமை எப்படிப் போகிறதென அவதானித்து வருங்காலத்தில் பிற நாடுகளுக்கும் உதவி வழங்கப்படும்.
சுருக்கமாகப் பார்த்தால், அமெரிக்க இராணுவம் தனது (வெளிநாட்டு) துணைப்படைகள் மூலம் பலத்தைக் காட்டுகின்றது. கடந்த கால அமெரிக்க இராணுவ வரலாற்றில் மனித உரிமைகளை மீறும் அரசுகளுடன் துணை நின்றதைத் திரம்பிப் பார்த்தால், எதிர்காலம் ஒளிமயமாக இருப்பதற்கான காரணங்கள் தென்படவில்லை.