ன் கர்த்தரே,பிரியத்துக்குரிய ஆண்டவரே!
பரலோகத்திலிருக்கும் பிதாவே!!
ஏனிந்தச் சோதனை உன் தூதுவனுக்கு?
விடுமுறைக்கு மெல்லச் சென்றவன் 
உனது பாதத்துக்குப் பணிவிடை செய்து தானும்
பக்குவமாய்ப் பொழுது ஒன்று போக்குவது
உனக்குப் பொறுக்காதோ?


நீ,மனிதர்களைவிடக் கொடுமை நிறைந்த
ஏதோவொன்று!
உனக்கே பணிவிடை செய்வதற்காய்
எல்லோரையும் வருத்துவதில்
தள்ளாத வயதிலும் உன்னைச் சொல்லி
அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் சுகம் தேடும்
உனது தொண்டனைச் சித்திரவதை செய்யலாமோ?
 
 
உனக்குத் தொண்டூழீயஞ் செய்வதைத் தவிர
மீதியான பொழுதில்தாமே
தனது எஜமானர்களுக்கு அந்த அடிமை தொணடூழியஞ் செய்தது!
இதையும் அநுமதிக்க உன்கென்ன குறை?
எல்லோரது தயவுக்கும் தாட்சண்யத்துக்கும்
நீயே பாத்திரமானதாகக் காட்டுவதில்
நீ பொல்லாதவொரு பிறவி!
 



பிதாவே,என் ஆண்டவரே!
உன் அடிமைக்கும்-தூதுவனுக்குமான வித்தியாசம் என்ன?
உன்னைச் சொல்லி எல்லோருக்கும் ஆசீர்வாதஞ் செய்பவன்
கையை முறித்துவிட்டத்தில் நீ கொடியவன் கர்த்தரே!
 
கால்களில் விழுந்து
கடையர்களாகிய நம்மைக் கடைந்தேற்றக் கேட்கும் நாம்
நீயாகவே கண்டும்,ஏற்றும்
உனது தூதுவனைச் செபிக்கும் என் தலைமுறையை
இப்படி ஏமாற்றலாமோ?
 
என் ஆண்டவரே,
பரலோகத்திலுள்ள பிதாவே!
உனது தூதுவனை ஆசீர்வதித்தருள்வாய்!
உன் தூதுவனுக்கே காலைவாரிவிடும் உன்னை
எவரும் நம்பவேண்டுமென்பதற்காய்
வற்றிக்கானில் வாய் நடுங்கும் வயதிலும்
வார்த்தையாடும் உன் தூதுவனை நீ வருத்தலாமோ?
 

 
கல் நெஞ்சுக் கர்த்தரே,
கையை உடைத்த உன் தூதுவன்
பெனடிக்கு பதினாறுக்குப் பார்த்து இரங்கு!
 
பாதைகளில் தடங்கல்களை வைத்துப்
பார்த்து நடக்கும்படி அவனையும்
அப்பப்ப நீ மனிதனாக்குவதில்
"நீ"
கடவுள்தான் கர்த்தரே!
 
இப்படி எல்லாம்...
கர்த்தரே கனவைக் கலைத்து
மனித நிலைக்குப் போப்பாண்டவரை இறக்கிவிடாதே!
பின்பு
உனக்கான இருப்பு
இந்தப் பூமியில் நிலவுமென்று
கனவு காணாதே கர்த்தரே!
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
19.07.09