பிப்ரவரி 25ஆம் தேதி சிதம்பரத்தில் நடந்த தில்லைப் போராட்டத்தின் வெற்றிப் பொதுக்கூட்டத்தில் தோழர் மருதையன் ஆற்றிய உரை இங்கே சுருக்கி வெளியிடப்படுகிறது.

 

எல்லாம் வல்ல தில்லை நடராசப்பெருமான் எம் கனவில் வந்து ""என் அடியான், ஆறுமுகசாமியை திருச்சிற்றம்பல மேடையேற்றித் திருவாசகம் பாடச்செய்'' என்று ஆணையிட்டார் பாட வைத்தோம். பிறகு, ""தீட்சிதர்களின் கோரப்பிடியிலிருந்து என்னை விடுவிக்க ஒருவழக்குப் போடச் செய்'' என்றார். போடவைத்தோம். தன்னை விடுவிக்கச் சொன்னார், விடுவித்து விட்டோம்.

 

நாத்திகனின் கனவில் கடவுள் எப்படிவர முடியும் என்கிற கேள்வி நம்மில் பலருக்கு இருக்கலாம். கனவு வரையறையற்றது. ஜெயலலிதாவின் கனவில் பிரதமர் நாற்காலி வந்து போகலாமென்றால் என் கனவில் தில்லை நடராசன் வரக்கூடாதா?

 

"நம்பிக்கை உள்ளவனுக்குத்தானே நடராசன், உன் கனவிலே எப்படி நடராசன் வர முடியும்?'' என்று தீட்சிதன் கேட்கலாம். நான் நம்பிக்கையில்லாதவன் என்பது வேறு பிரச்சினை. நடராசன் நினைத்திருக்கிறார் நாங்கள் நம்பத்தக்கவர்கள் என்று. ஆறுமுகசாமி கூட எங்களை நம்பியிருக்கிறார். அதற்கென்ன செய்ய முடியும்?

 

கடந்த வெள்ளிக்கிழமை சுப்பிரமணியசாமியை இங்கே கொண்டு வந்து, விசேட பூஜை நடத்தி, முகமெல்லாம் பல்லாக அவரை ஐகோர்ட்டுக்கு அனுப்பிவைத்தனர் தீட்சிதர்கள். ""அனுப்பாதே சாமியை, அவனுக்கு முட்டையடி காத்திருக்கிறது'' என்று உன் சாமி உன் கனவில் வந்து சொல்லவில்லையே. உனக்கு இறைவன் மேல் நம்பிக்கை இருந்தால்அந்த சாமியிடமல்லவா போயிருக்கவேண்டும். ஏன் சுப்பிரமணியசாமியிடம் போகிறாய்? ஏன் போயஸ் தோட்டத்து மாமியிடம் போகிறாய்?

 

ஊரைக்கூட்டி உண்ணாவிரதம் நடத்துகிறார்கள். யாரெல்லாம் இக்கோயிலில் திருடித் தின்றிருக்கின்றானோ, எவனெல்லாம் இதில் ஆதாயம் அடைந்திருக்கிறானோ, அவர்களெல்லாம் உண்ணாவிரதப்பந்தலிலே இருந்தார்கள். தீட்சிதர்கள் 5,6 மொட்டை நோட்டீசும் அடித்திருக்கிறார்கள். எல்லா நோட்டீசிலும் இருக்கும் ஒரு முக்கிய விசயம், ""அறநிலையத்துறை கோயிலை எடுத்து விட்டது. இனிமேல் ஆலயத்தில் வழிபாடு ஒழுங்காக நடக்காது. நடராசப் பெருமானுக்கு சர்க்கரைப்பொங்கல் தான் பிடிக்கும். ஆனால் ஒருரூபாய் அரிசியில் தாளித்துக் காட்டி விடுவார்கள்'' அறநிலையத்துறை எடுத்தால் நடராசப் பெருமானுக்கு கஷ்டமாம்.

 

அடுத்த கஷ்டம் பக்தர்களுக்காம். நீங்களெல்லாம் நினைத்தபடி சுதந்திரமாக வந்து சாமி கும்பிடுவீர்கள். இனி கியூவில் நின்று கும்பிட வேண்டும். என்கிறார்கள். கியூவில் நின்றால் என்ன நட்டம்? தீட்சிதர்கள் என்ன சொல்கிறார்கள்? சில்லறை இருந்தாலும் நீ முதலில் பார்க்க முடியாது. இப்போது 500, 1000த்துக்கு நடக்கும் ஸ்பெசல் தரிசனம், 5000, 10,000 கொடுத்தால் கருவறைக்குள்ளேயே கொண்டு போய் காட்டுவது போன்ற சிறப்புச் சலுகைகள் தள்ளுபடிகள் எதுவும் இனி நடக்காது. அதுதான் பிரச்சினை.

 

இவர்கள் போட்டிருக்கும் நோட்டீஸ் எதிலும் ""கோயிலை அரசு எடுத்ததனால் தீட்சிதர்களாகிய எங்களுக்கு நட்டம்'' என்று ஒரு வரி கூட இல்லை. நோட்டீசில் கடவுளுக்கு ஆபத்து, பக்தனுக்கு பாதிப்பு என்று பேசுபவன், கோர்ட்டுக்கு வந்து "எனக்கு ஆபத்து' என்று பேசுகிறான். அறநிலையத்துறை எடுத்தனால் என்ன ஆகிவிட்டது. இந்த 40 ஏக்கர் கோயிலை இடித்துவிட்டு பொதுக்கழிப்பிடமா கட்டி விட்டான்? உண்டியலை வைத்ததுதான் பிரச்சினை. அப்படியே பதறித் துடித்துப் போனார்கள் தீட்சிதர்கள். தீட்சிதர்களின் வக்கீல் கேட்கிறார். உண்டியல் வைக்க வேண்டுமென்று கோர்ட் ஆர்டர் இருக்கிறதா? விட்டால் உண்டியலுக்குப் பூட்டு போடவேண்டும் என்று ஆர்டர் உள்ளதா என்று கூட கேட்பார்கள்.

 

ஒரு தீட்சிதர் சொன்னாராம் எங்கள் தோழரி ட ம், ""எங்க மேல ஏதாவது கோபமிருந்தால் செருப்பால் அடித்திருக்கலாம். இப்படி வயித்துல அடிச்சுட்டீங்களே'' என்று.

 

இதுதான் உண்மை. வயிற்றில்தான் இருக்கிறது ஆன்மீகம். ஆன்மா மனதில் இருக்கிறது. அங்கே இருக்கிறது இங்கே இருக்கிறது என்று எவ்வளவு பீலா விடுகிறார்கள். அதை வைத்து எத்தனை சாமியார்கள், புத்தகங்கள், டிவி சானல்கள்.. கடைசியில் பார்த்தால் ஆன்மா வயிற்றில் இருக்கிறது.

 

ஆக ஆன்மீகம் என்பது ஒரு பிழைப்பு. வயிற்றுக்குத்தான் இந்தக்கோயில். ஆனால் எங்களுக்கு ஆன்மா வயிற்றில் இல்லை. அப்படி இருந்தால் இப்படி பட்டினியாக இரவு 11 மணிக்கு கூட்டம் கேட்கத் தேவையில்லை. சொந்தக் காசை செலவு செய்து கொண்டு திருநெல்வேலியிலிருந்தும் தூத்துக்குடியிலிருந்தும் கூட்டம் கேட்பதற்கு வரத் தேவையில்லை. சிவனடியாரோடு சேர்ந்து அடிபட்டு கடலூர் மத்திய சிறைக்கு செல்லவும் தேவையில்லை.

 

எதாவது சேய்து கோயிலைத் திரும்பப் பெற்றுவிட வேண்டும் என்ற ஆத்திரம் உள்ளதே தவிர அதை உறுதிசெய்யும் ஆதாரம் எதுவும் அவர்களிடம் இல்லை. அதனால் தான் நீதிமன்றத்தில் "இந்தக் கோயில் எங்களுடையதில்லை என்று நீ நிரூபித்துக் காட்டு' என்று நம்மிடம் கேட்கிறான். இந்தக் கேலிக்கூத்துக்கு அரசாங்கமும் சேர்ந்து வாதம் பண்ணிக்கொண்டிருக்கிறது. இப்படி 20 ஆண்டுகளாய்த் தூங்கும் வழக்கைத் தட்டி எழுப்பியிருக்கிறோம்.

 

கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். அரசாங்கம் எடுத்த எதுவுமே உருப்பட்டதாக வரலாறு கிடையாது என்று தின மணி தலையங்கம் எழுதுகிறது. தனியார் மயத்தை ஆன்மீகத்துக்குப் பொருத்தி எழுதுவது என்பது இதுதான். தனியார் துறை என்ன செய்யும் என்று அமெரிக்காவில் தெரிந்து விட்டது. நாடே திவாலாகி விட்டது. இனிமேல் கோயில் பணிகள் டெண்டர் விடப்பட்டு அமைச்சர், எம்.எல்.ஏ, காண்டிராக்டர், உள்ளூர் குட்டி அரசியல்வாதி எல்லோரும் தின்றது போக மீதியில் தான் வேலை நடக்கும் என்று தீட்சிதர்கள் நோட்டீஸ் அடிக்கிறார்கள். இது உண்மை என்றே கொண்டாலும் அவன் சொல்வது என்ன? இப்படி 4 பேர் தின்னக் கூடாது. நூறு சதவீதமும் நானே தின்ன வேண்டும் என்கிறார்கள்.

 

இது மன்னன் இரண்ய வர்மன் கட்டிய கோயிலாம். அது அவன் உழைத்து சேர்த்த பணமா? மன்னன் அரசுத்துறையா, தனியார் துறையா? கோயிலுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சொந்தமென்றால் அது யார் அப்பன் வீட்டு சொத்து? மக்களுடைய விருப்பமில்லாமல் கசையடியால், வாள்முறையில் மிரட்டி அபகரிக்கப்பட்ட பணத்தால் மிரட்டி அபகரிக்கப்பட்ட தானியத்தால் எழுப்பப்பட்டவை தான் எல்லாக் கோயில்களும். இதன் மீது உழைக்கும் மக்கள் உரிமை கொண்டாட வேண்டும்.

 

உனக்கு என்ன வேலை தெரியும் மணி ஆட்டுவதைத் தவிர. உனக்கு இந்தக் கோயிலிலே பாரம்பரிய உரிமை உண்டென்றால் ஒரு வாதத்திற்காக அதை ஒத்துக் கொள்வோம். இந்தக் கோயிலுக்கு விறகு கொண்டு வந்தவன், பாலும் மோரும் கொண்டு வந்தவன், பூக்களைக் கொண்டு வந்தவன், கோயிலைச் சுத்தம் செய்தவன், பெரிய மணியை அடித்தவன் இவர்களுக்கெல்லாம் கோயிலில் பாரம்பரிய உரிமை கிடையாதா? தீட்சிதனுக்கு மட்டும்தானா?

 

இந்தப் பாரம்பரிய உரிமை என்ற வாதத்திற்கு சட்டரீதியாக மட்டும பதில் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. ஏதோ ஒரு ஆதாரத்தைக் காட்டிவிட்டால் கோயிலைக் கொடுத்துவிட வேண்டுமா? அப்படிப் பார்த்தால் தலைமுறை தலைமுறையாக உழுது பயிரிடுபவனுக்கு நிலம் சொந்தமா இல்லையா? காமராசர் தப்பாக ஒன்றைச் சொன்னார். உழுபவனுக்கு நிலம் சொந்தமென்றால் வெளுப்பவனுக்கு வேட்டி சொந்தமா என்றார். மணி ஆட்டுபவனுக்கு கோயில் சொந்தமென்றால் உழுபவனுக்கு ஏன் நிலம் சொந்தமாக இருக்கக் கூடாது என்று நாம் திருப்பிக் கேட்போம்.

 

சட்டம் மட்டுமல்ல, உழைக்கும் மக்களின் தரப்பில் நின்று கொண்டு இந்த நியாயத்தைப் பார்க்க வேண்டும்; பேச வேண்டும். ஏனென்றால் இந்த நீதிமன்றம் அவனுக்காக வேலை செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டது. அரசாங்கமும் அப்படித்தான். திமுக அரசு தமிழில் பாடவும் கோயிலை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் ஆணை பிறப்பித்திருக்கிறது என்பது உண்மை. இந்தக் கதையில் மற்றொரு பாதி இருக்கிறது. இரண்டு காலும் இல்லாத ஒரு பிராணியைத் தோளில் தூக்கிக் கொண்டு ஓடி நூறுமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜெயிக்க வைப்பது போல இந்த அரசை ஜெயிக்க வைத்திருக்கிறோம்.

 

தீட்சிதர்களிடம் பணம் இருக்கலாம். பெரிய அதிகாரிகள் அவர்கள் கையில் இருக்கலாம். ஆனால் மக்கள் அவர்கள் பக்கம் இல்லை. அதனால் தான் சுனா சாமியிடமும், மாமியிடமும் போகிறார்கள். இவர்களெல்லாம் ஒரே சாதி என்பது ஒரு விசயம். இந்த இரண்டு பேரையும் தேர்ந்தெடுத்ததற்கு முக்கியக் காரணமும் உள்ளது. தொழிலில் தீட்சிதர்களுடன் போட்டியிடும் அளவுக்கு இவர்கள் சம தகுதி உடையவர்கள்.

 

டான்சி நி வழக்கின் முடிவு என்ன? நிலத்தை வாங்கியது தவறு. அதற்கு தண்டனை என்ன? அதைத் திருப்பிக் கொடுத்து விடுவது. இதுதான் நடந்தது. அதேபோல தீட்சிதர்களிடம் நகைக்களவு பற்றிக் கேட்டால், ""தோடு காணோமா, சங்கிலி காணோமா?.. சரி. வெச்சுட்டோம்'' என்கிறார்கள். எப்படிய்யா எடுக்கலாம்? என்று கேட்டால் "அதான் வச்சிட்டோம்ல' என்பதுதான் பதில். ஜெயலலிதாவின் நியாயமும் தீட்சிதர் நியாயமும் எப்படிச் சரியாகச் சேருகிறது பாருங்கள்.

 

அடுத்தது சு.சாமி. அவர் யாரென்றால், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி பாத்திரத்தில் அவர் தான் நடித்திருக்கிறார். அது தான் அவர் தொழில்.

 

நீங்கள் செய்யும் செலவுகளுக்கு ஏது பணம் என்று ஒரு நிருபர் சு.சாமியைக் கேட்கிறார். ""ஒரு பிராமணன் யாரிடம் வேண்டுமானாலும் கை நீட்டிக் காசு வாங்கலாம். அதற்கு சாத்திரத்தில் இடமிருக்கிறது'' என்று பதில் சொல்கிறார் சு.சாமி. இவன் தீட்சிதனுக்கு வராமல் வேறு எவன் வருவான்?

 

இப்படி ஒரு முக்கூட்டு சேர்ந்திருக்கிறது. இந்தக் கூட்டணி இந்தப் பிரச்சினையை ஒரு புதிய பரிமாணத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.

 

இன்று 3 பிரச்சினைகள் பத்திரிகைகளில் விவாதிக்கப்படுகின்றன.

 

1. தில்லை

2. ஈழம், அந்தப் படுகொலைக்கு இந்தியா துணை நிற்பது

3. பிப்19 அன்று உயர்நீதி மன்றத்தில் போலீசுநடத்திய வெறியாட்டம்.

 

மேற்கூறிய மூன்று விசயங்களும்கூட ஒன்றோடொன்று தொடர்புள்ளவை. அந்தத் தொடர்பைப் புரிந்து கொள்வதன் மூலம் தான் இந்தப் பார்ப்பனக் கும்பலைப் பற்றி, அவர்கள் செல்வாக்கு செலுத்த முடிகின்ற இந்திய அரசைப்பற்றி, எந்தத் தரகு முதலாளிகளின் நலனுக்காக இந்த அரசு வேலை செய்கிறதோ அந்த அரசைப் பற்றி ஒருங்கிணைந்த முறையிலே நாம் புரிந்துகொள்ள முடியும்.

 

ஈழப்பிரச்சினைக்கும் தில்லைப் பிரச்சினைக்கும் பொதுவானது என்ன? ஈழத்தமிழ் மக்கள் மரபு வழிப்பட்ட தங்கள் தாயகத்தில் தாங்கள் வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோருகிறார்கள். விரும்பினால் தனி ஈழமாகப் பிரிந்துபோகும் உரிமை வேண்டும் என்று கேட்கிறார்கள். இங்கே தில்லையிலே நமக்கு என்ன கோரிக்கை? இது தமிழ்மண்ணில் கட்டப்பட்ட கோயில். இந்த நடராசப் பெருமானும் தீட்சிதனும் தின்கிற சோறு தமிழ் விவசாயிகள் உழைத்து வருகின்ற சோறு. எனவே இதனைத் தமிழ்மக்களின் உடைமையாக்க வேண்டும் என்று கோருகிறோம். இதுதான் ஒற்றுமை.

 

இவற்றுக்கு எதிராக அவர்கள் வைக்கின்ற வாதங்கள் என்ன? ""உன்னுடைய உரிமையெல்லாம் தூக்கி ஓரத்தில் வை. இது மரபுக்கு எதிரானது, வேதத்துக்கு எதிரானது, கோயிலை அரசு எடுப்பதும், தமிழில் பாடுவதும் மதத்துக்கு எதிரானது, மதப் புனிதத்துக்கு எதிரானது'' என்கிறார்கள்.

 

 ஈழப்பிரச்சினையில் இலங்கை அரசும் பிரணாப் முகர்ஜியும் கூறுவது என்ன? அது இலங்கையின் ஒருமைப்பாடு குறித்த பிரச்சினை. அந்த நாட்டின் இறையாண்மை குறித்த பிரச்சினை. இறையாண்மை மிகவும் புனிதமானது. ஈழத்து மக்கள் அனைவரையும் உயிரோடு கொளுத்தினாலும் அதில் நாம் தலையிட முடியாது என்கிறார்கள். நீதிமன்றப் பிரச்சினையில் என்ன சொல்கிறார்கள்? புனிதமான இந்த நீதிமன்றத்திற்குள் புனிதமான நீதிபதிகளின் முன்னாலேயே முட்டை வீச்சா என்று நீதிமன்றப் புனிதத்தைக் கண்டு அப்படியே நடுங்குகிறார்கள்.

 

இவர்களுடைய புனிதத்தின் யோக்கியதை என்ன? கோயிலின் புனிதம், வேதாகமத்தின் புனிதத்தின் யோக்கியதை என்ன? அதைத் தமிழ் பாடச் செல்லும்போது கண்ணால் பார்த்தோம். நாம் ஆன்மீக சேவை செய்வதற்காக இருக்கிறோம். நாம் இப்படி காலித்தனம் செய்யக் கூடாது என்று அவன் நினைத்தானா? இவன் கையால் திருநீறு வாங்கினாலே பாவம் என்று தில்லைவாழ் மக்கள் நடுங்கும் அளவுக்கு இருக்கிறது தீட்சிதர்களின் புனிதம்.

 

நீதிமன்றத்தின் புனிதம் குறித்து நான் விளக்கத் தேவையில்லை. முட்டை வீசி விட்டார்கள் வீசி விட்டார்கள் என்கிறார்களே, நீதிமன்றத்தின் உள்ளே ரூபாய் நோட்டை வீசிக்கொண்டேயிருக்கிறார்கள், நீதிபதிக்கு கீழே வாங்குகிறார்கள், உள்ளே, வெளியே எங்கும் வாங்குகிறார்கள்; நீதிபதி வாங்குகிறான். "வாங்குறியே சொத்துக் கணக்கு கொடு' என்று கேட்டால் அதைத் தருவதில்லை. கேட்டால் புனிதமாம். இந்த யோக்கிய சிகாமணிகள் இருக்கின்ற இடம் நீதியின் கருவறையாம், புனிதமாம். அங்கே முட்டை அடித்து புனிதத்தைக் கெடுத்து விட்டார் களாம்.

 

இறையாண்மை புனிதம் என்கிறார் பிரணாப். 1983லே ஈழத்து இளைஞர்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்து அனுப்பி வைத்தது நீதானே? அன்று இலங்கைக்கு இறையாண்மை கிடையாதா? ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள் என்ன சொல்கின்றன? திரிகோணமலையிலே வேறு யாருக்கும் துறைமுகத்தைக் கொடுக்கக்கூடாது, எனக்குத் தெரியாமல் யாரிடமும் ஆயுதம் வாங்கக் கூடாது. என்னுடைய அனுமதி இல்லாமல் உன் கடற்கரையிலே கப்பல் நிறுத்தக் கூடாது. இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற் போன்று இந்தப் படுகொலைக்கு தேவையான ஆயுதங்களை, இராணுவ தொழில்நுட்ப வல்லுநர்களை சப்ளை செய்து கொண்டு, அந்த வகையிலே அந்த நாட்டின் உள் விவகாரத்தில் தலையிட்டுக் கொண்டு, ""கொலையை நிறுத்து தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை அங்கீகரி'' என்று நாம் கேட்டால் ""அது இறையாண்மையில் தலையிடுவது அதை நாங்கள் செய்யவே முடியாது'' என்கிறான்.

 

தேசத்தின் புனிதம், கோயிலின் புனிதம், நீதிமன்றத்தின் புனிதம் இவை ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் தெளிவான இன்றைக்கு நீதிமன்றத்திலே நாம் பெற்றிருக்கும் வெற்றி என்பது வெறும் வாதத்திறமையினாலே பெற்றிருக்கும் வெற்றி அல்ல. மாறாக, ""சமஸ்கிருதம் புனிதம் அல்ல, மந்திரம் புனிதம் அல்ல, தீட்சிதன் புனிதம் அல்ல, இது அவன் கோயில் அல்ல'' என்று மக்கள் மத்தியிலே நாங்கள் நிலை நாட்டியதனாலே கிடைத்த வெற்றி. வர்க்கநலன் இருக்கின்றது. தீட்சிதன் அதைத் தெளிவாகச் சொல்லிவிட்டான். ""என்னைச் செருப்பால் அடித்திருக்கலாம், வயிற்றில் அடித்து விட்டீர்களே'' என்று.

 

ஈழத்திலே இந்தப் படுகொலைக்கு இந்திய இராணுவம் துணைநிற்கக் காரணம் என்ன? காரணம் டாடாவுக்கு அங்கே தேயிலைத் தோட்டம் இருக்கிறது, அம்பானிக்கு எண்ணெய், மகிந்திராவுக்கு கார் சந்தை, பிர்லாவுக்கு சிமெண்ட் ஆலை, ஏர்டெல் முதலாளி மித்தல் ஒரு மாதம் முன்னர் தான் தொலைபேசி சேவை தொடங்கியிருக்கிறான், இந்திய அரசுக்கு இன்னும் ஏராளமாக அங்கே இருக்கிறது. உனக்கு அதெல்லாம் முக்கியம். இவர்களுடைய நலனுக்காக பெரும்பான்மை சிங்கள இனவெறி அரசின் தயவு தேவை அது சிறுபான்மை தமிழர்களைப் படுகொலை செய்தாலும்.

 

இந்த நீதிமன்றத்திலே எவ்வளவோ கேவலங்கள் அரங்கேறியிருக்கின்றன. அதையெல்லாம் புனிதம் கெட்டுவிட்டதென்று சொல்லவில்லை. முட்டை வீசியதைச் சொல்கிறார்கள். இந்துவும் தின மணியும் தலையங்கம் எழுதுகின்றன. நீதி மன்றத்தில் நடந்த போலீசு வெறியாட்டத்தினால் புனிதம் கெட்டுவிட்டது என்று யாரும் பேசுவதில்லை. சுனா சாமி முகத்தில் முட்டை வழிந்தால் புனிதம் கெட்டுவிட்டது. நீதிபதியின் முகத்திலும், வக்கீல்களின் முகத்திலும் ரத்தும் வழிந்தால் அது சட்டம் ஒழுங்குப் பிரச்சினை.

 

 சு.சாமியின் கருத்தை கருத்தால் சந்திக்க வேண்டுமாம். முட்டையால் சந்திக்கக் கூடாதாம். ஈழத்தமிழ் மக்கள், எதற்காகப் போராடுகிறார்கள்? இது எங்கள் தாயகம். இங்கே நாங்கள் சிங்களர்களுடன் சேர்ந்திருப்பதா தனிநாடாகப் பிரிந்து போவதா என்பதை ஒரு இனம் என்ற முறையில் நாங்கள் தீர்மானிப்போம் என்கிறார்கள். இது அவர்களின் வாழ்வுரிமை, கருத்துரிமை. ""பெரும்பான்மைத் தமிழர்கள் என் பக்கம்தான் இருக்கிறார்கள். புலிகள் பக்கம் இல்லை'' என்கிறான் ராஜபக்சே. சரி. ஒரு வாக்கெடுப்பு நடத்து. தமிழ் மக்கள் முடிவு செய்யட்டும். ஆனால் ஈழமக்கள் தம் கருத்தை தெரிவிக்க முடியாத வண்ணம் அவர்கள் மீது முட்டை வீசப்படவில்லை குண்டு வீசப்படுகிறது.

 

அன்று தமிழ் பாடச் சென்ற ஆறுமுகசாமி கையொடித்து வீழத்தப்பட்டபோது பறிக்கப்பட்டது அவரது வழிபாட்டுரிமை. இதுவும் அரசியல் சட்டம் உத்திரவாதம் செய்திருக்கும் அடிப்படை உரிமைதானே! எந்தப் பத்திரிகை நாய்கள் தலையங்கம் எழுதியிருக்கிறார்கள். அடிப்படை உரிமை, புனிதம், இறை யாண்மை என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டம். இதையெல்லாம் நாம் புரிந்து கொள்ளாதவரையில் தான் அவர்கள் ஆட முடியும்.

 

இன்றைக்கு நீதிமன்றத்திலே நாம் பெற்றிருக்கும் வெற்றி என்பது வெறும் வாதத்திறமையினாலே பெற்றிருக்கும் வெற்றி அல்ல. மாறாக, ""சமஸ்கிருதம் புனிதம் அல்ல, மந்திரம் புனிதம் அல்ல, தீட்சிதன் புனிதம் அல்ல, இது அவன் கோயில் அல்ல'' என்று மக்கள் மத்தியிலே நாங்கள் நிலைநாட்டியதனாலே கிடைத்த வெற்றி. மக்கள் புரிந்து கொண்டு விட்டதனால்தான் தீட்சிதர்களை ஆதரிக்க யாருமில்லை. அரசாங்கமும் கோர்ட்டும் தான் இருக்கின்றன.

 

அரசாங்கம் இன்று போட்டிருக்கும் ஆணை ஒரு அரை ஆணை. தனியொரு அரசாணை மூலம் முழுமையாக இந்தக் கோயிலை அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். தீட்சிதர்கள் மீதான கிரிமினல் புகார்கள் விசாரிக்கப்பட்டு அவர்கள் சிறை வைக்கப்படவேண்டும். நந்தன் நுழைந்த தெற்கு வாயிலைத் தகர்த்தெறிய வேண்டும்.

 

"அவர் தெற்கு வாயில் வழியாகத்தான் நுழைந்தாரா?'' என்று கேள்வி எழுப்பப்படுகிறது. தீட்சிதன் கைலாசத்திலிருந்தான் வந்தான் என்றால் நந்தன் தெற்குவாயில் வழியாகத்தான் நுழைந்தான் என்று நாங்கள் நம்புகிறோம். இதை நிரூபிக்கத் தேவையில்லை. அத்வானியே சொல்லியிருக்கிறார், ""இராமன் இங்கே பிறந்தார் என்பது எங்கள் நம்பிக்கை. அதைக் கோர்ட் தீர்மானிக்க முடியாது'' என்று. எந்த நம்பிக்கை பெரியது, பெரும் பான்மையின் நம்பிக்கையா, தீட்சினின் நம்பிக்கையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யுமாறு நாங்கள் நிர்ப்பந்திப்போம். கண்ணில் விரல் விட்டு ஆட்டுவோம். நீ பேசும் இந்து ஒற்றுமையை இரண்டாகப் பிளந்து காட்டுவோம். அப்போது நீதிமன்றத்தைச் சொடக்கு போட்டு கூப்பிடுவோம். வாய்தா வாங்க மாட்டோம்.

 

அரசாங்கத்தை வைத்தே சுவரை இடிக்கச் செய்யலாம். ஆனால் இன்னாரு முறை இந்த அரசைச் சுமந்து கொண்டு ஓட எங்களால் முடியாது. அதே நேரத்தில் சுவரை என்றைக்கு அகற்றுவோம் என்பதை நானே சொல்லிவிடவும் முடியாது. எப்படிச் சொல்ல முடியும்?

 

"என் அருமை அடியான், திருநாளைப் போவான் நுழைந்த தெற்குத் திருவாயிலை அடைத்து நந்தி போல் சுவரெழுப்பியிருக்கிறார்கள் இந்தத் தீட்சிதர்கள். தோழர்களே, அந்தச் சுவரை அகற்றுங்கள்!'' என்று தில்லை நடராசன் எம் கனவில் வந்து கூறக் கூடும். அய்யனின் ஆணையைத் தட்ட முடியாமல் நாங்களும் அப்பரின் உழவாரப்படையை, அதைவிடச் சற்று நீளமான ஒரு உழவாரப்படையை, ஏந்த வேண்டியிருக்கும். உழவாரப்பணி உண்டா இல்லையா என்பதைத் தில்லைவாழ் அந்தணர்களும், அவர்களைக் கீறல் படாமல் பாதுகாக்க எண்ணும் இந்த அரசும் முடிவு செய்து கொள்ளட்டும். நாங்கள் தில்லை நடராசன் திருவருளுக்குக் காத்திருக்கிறோம். திருச்சிற்றம்பலம். நன்றி. ·

 

மருதையன்